நிறைவேறும் தறுவாயில் இந்திய-அமெரிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம்

பிசினஸ் டுடே - -தமிழில்: வெண்பா

நிறைவேறும் தறுவாயில் இந்திய-அமெரிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம்

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது; வரிகள் குறைக்கப்பட உள்ளன, இந்திய அரசு சோயாபீன், சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்யவுள்ளது.

தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை இரு தரப்பும் இறுதி செய்து வரும் நிலையில், சோயாபீன், சோளம், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றை  வரியின்றி இறக்குமதி செய்ய அமெரிக்காவுக்கு இந்திய சந்தையைத் திறந்துள்ளது.

‘டெக்கான் க்ரோனிகல்’ இதழ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், அபராத வரிகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியாவும் அமெரிக்காவும் இம்மாத இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளன.

சோயாபீன், சோளம், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான சந்தையை இறக்குமதி வரியின்றி  இந்திய அரசு திறந்துவிடவுள்ளதாகவும், தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை இறுதி செய்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு  வரும் அதிகாரிகள் ‘டிசி’-யிடம், "இந்த ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் ட்ரம்ப்பும் ஏற்கெனவே இதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகையால், அபராத வரிகள் திரும்பப் பெறப்படக் கூடும்" என்று கூறினர்.

அதற்கும் முன்னதாகவே, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டணிகளை விரிவாக்கும், அமெரிக்க எரிசக்தி ஏற்றுமதி உள்ளிட்ட முதலீடுகளை இந்தியாவில் அதிகரிக்கும் வகையிலானதொரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழாவின்போது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இது ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தமாக நமக்கு அமையவுள்ளது" என்று தெரிவித்தார். "நாம் இந்தியாவுடன் மேலும் ஒரு ஒப்பந்தம் செய்து வருகிறோம், இது கடந்த காலத்தில் நாம் கொண்டிருந்த ஒப்பந்தங்களை விட முற்றிலும் வேறுபட்டது" என்றும் அவர் கூறினார்.

இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்ததனால், அதிகரித்த வர்த்தக மோதல்களைத் தீர்க்கும் நோக்கில் இரு தரப்பினரும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதில், 25% வரி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காகவே விதிக்கப்பட்டது. ஏற்கனவே, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அக்டோபரில் குறைந்துள்ளது, மேலும் நவம்பர் மாதத்திலும் கணிசமான சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பரஸ்பர வரிகளை இறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிக்கை தெரிவித்தது. 12 மற்றும் 15 சதவிகிதத்திற்கு இடையில் அல்லது 15 மற்றும் 19 சதவிகிதத்திற்கு இடையில் என இரண்டு விகிதங்கள் அளவில் குறைப்பதாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

வரியற்ற அல்லது மிகக்குறைவான வரியுடனான இறக்குமதி பற்றி இரு தரப்பினரும் முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க சோயாபீன், சோளம் இறக்குமதிக்கு அனுமதித்திருப்பது இந்தியாவின் முக்கிய சலுகையாகும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்படாத சோயாபீன் வகைகளைத் நேரடியாக கொள்முதல் செய்ய இந்திய அரசு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது சீனா அமெரிக்காவிடமிருந்து சோயாபீனை வாங்கிக்கொண்டிருப்பதால், அமெரிக்கா அதிகளவிலான சோயாபீன் கொள்முதல் குறித்து அதிக அழுத்தம் கொடுக்கவில்லை.

பால் பொருட்களை (Dairy products), பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட இறக்குமதிகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. "சில நிபந்தனைகளின் அடிப்படையில், பால் பொருட்களை அனுமதிக்கலாம், ஆனால் திரவ பாலை அனுமதிக்காது" என்று அதிகாரி ஒருவர் கூறினார். விவசாயப் பொருட்களின் இறக்குமதி—குறிப்பாக பால் பொருட்களின் இறக்குமதி—பேச்சுவார்த்தைகளின்போது மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஒன்றாக இருந்தது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.businesstoday.in/india/story/india-us-trade-deal-in-final-stage-tariffs-to-be-cut-new-delhi-to-import-soyabean-corn-502367-2025-11-16

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு