சமூக நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் மோடி அரசு!
-செந்தளம் செய்திப்பிரிவு
“ஓ! ஓ! செல்வம்
உடைய பெரியீர்
உங்களால்தாம்
பாரி ஆக
முடிய வில்லையே…
அதுகளேனும்
நக்சல்
பாரி ஆகிப்
போனால் என்ன?” என்று கவிஞர் மீரா தனது ‘ஊசிகள்’ என்ற கவிதை தொகுப்பில் நன்நயமாக ஆளும் வர்க்கத்தின் உயிர் நரம்பில் ஊசியேற்ற முயன்றிருப்பார்.
மோடி ஆட்சிக்கு வந்தாண்டு முதல் சமூக நலத் திட்டங்களுக்கு முன்பிருந்ததைவிட பாய்ச்சல் வேகத்தில் மூடுவிழா நடத்தி வருகிறார் என்று இடது சாரி இயக்கங்கள் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றன. ஏன் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும், சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் இளைஞர்கள் கூட ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை வெளிவந்தப் பிறகு இதுபோன்ற கருத்துக்களை கூறியிருப்பதை நாம் ஒருமுறையாவது பார்த்திருக்கக்கூடும்.
இந்தமுறையும் ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தயாரித்து, தனது மக்கள் விரோத பாரம்பரியத்தை நிர்மலா சீத்தாரமன் உயர்த்தி பிடித்துள்ளார்.
மக்கள் விரோத பட்ஜெட்டை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்
2015-16ல், உணவு மானியங்களுக்காக 7.79 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்தது; 2024-25 பட்ஜெட்டில் வெறும் 4.26 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கு 1.7 சதவீத்ததிலிருந்து 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கு 3.75 சதவீதத்திலிருந்து 2.61 சததவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு 1.91 சதவீதத்திலிருந்து 1.85 சதவீதமாக குறைத்துள்ளனர். உர மானியத்திற்கு 4.04 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து 3.4 சதவீதம் என்றளவிற்கு குறைத்துள்ளனர்.
நூறு நாள் வேலைத் திட்டம்(MGNREGA)
ஏழை, எளிய கிராமப்புற மக்களின், ஆதரவற்றவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு உத்திரவாதமான வேலைவாய்ப்பை வழங்கி வந்த MGNREGA திட்டத்திற்கு 2015-16ம் நிதியாண்டில் மொத்த செலவினங்களுக்காக 2.09 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்தது. 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 1.78 சதவீதமளவிற்கு குறைத்துள்ளனர். நூறு நாள் வேலை என்றிருந்த காலம் மறைந்து, 40 நாள், 50 நாள் கூட வேலைக் கிடைக்காதா என்று ஏங்கும் நிலைக்கு மக்களைத் தள்ளி, நிதியைக் குறைப்பதற்கான காரணத்தை உருவாக்கிக்கொண்டனர்.
தேசிய சமூக நல உதவித்தொகை திட்டம்(NSAP)
முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம், அன்னப்பூர்னா போன்ற திட்டங்களுக்கான நிதியை 0.48 சதவீதத்தலிருந்து 0.20 சதவீதமாக குறைத்துள்ளனர்.
சமக்ரா சிக்ஷ அபியன்
தொழிற்கல்வியை ஊக்குவிக்கப்போவதாகச் சொல்லி 2018ல் அனைவருக்கும் கல்வித் திட்டம்(SSA), இடைநிலைக் கல்வித் திட்டம்(RMSA), ஆசிரியர் கல்விப் பயிற்சித் திட்டம்(TE) எனத் தனியாக இருந்த திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டது. இதற்கான மொத்த செலவினமும் 1.46 சதவீதத்திலிருந்து 0.78 சதவீதமளவிற்கு குறைந்துள்ளது.
PM போஷான்
மத்திய அரசு சார்பில் மதிய உணவுத் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியும் 0.51 சதவீதத்திலிருந்து 0.26 சதவீதிமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியத் திட்டம்
யூரியா அல்லாத உரங்களை ஊக்குவிப்பதாகவும், மண் வளத்தின் சமநிலையை பேணுவதற்காகவும் ஊட்டசத்து அடிப்படையில் உழவர்களுக்கு உர மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான நிதியும் 1.23 சதவீதத்திலிருந்து 0.93 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
யூரியா உர மானியம்
உழவுத் தொழிலில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் உரங்களில் யூரியாவும் ஒன்று. இதற்கான நிதி 2.82 சதவீத்ததிலிருந்து 2.47 சதவீதமளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பிட்டுத் திட்டம்
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்(NCRB) சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையின்படி மோடி ஆட்சியில் தினந்தோறும் 30 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையிலும்கூட பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 2015 ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒன்பது ஆண்டுகளில் 0.12 சதவீதமளவிற்கே நிதியை அதிகப்படுத்தி வழங்கியுள்ளது.
பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா(PMSSY)
நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு 0.09 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமளவிற்கு குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்(PMEGP)
கிராமப்புற, நகர்ப்புறங்களில், விவசாயம் சாராத துறைகளில், குறுந்தொழில் துவங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்கு 0.07 சதவீத த்திலிருந்து 0.05 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
PM கிஷான்
தகுதியுடைய விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2,000 என்ற அளவில் ஆண்டிற்கு 6,000 ரூபாய் வழங்கி வரும் பிரதம மந்திரியின் கிஷான் சம்மன் நிதி(PM-KISAN) திட்டத்திற்கு 2019-ம் ஆண்டில் 1.8 சதவீதம் ஒதுக்கப்பட்டதென்றால் 2024-25 பட்ஜெட்டில் 1.2 சதவீதம் என்றளவிற்கு குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட புள்ளிவிவரத் தகவல்கள் Cenfa.com வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
- செந்தளம் செய்திப்பிரிவு