புதியகாலனிய முப்பெரும் குற்றவியல் சட்டம் : காங்கிரசின் இரட்டை நிலைபாடு

செந்தளம் செய்திப்பிரிவு

புதியகாலனிய முப்பெரும் குற்றவியல் சட்டம் : காங்கிரசின் இரட்டை நிலைபாடு

புதியகாலனிய பாசிச சட்டமான புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் - பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதிநியாயம் - என்ற 3 கொடிய சட்டங்களை இன்று முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தியுள்ளது பாஜக அரசு. சென்ற ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடரில் 146 எம்பிக்களை அவைநீக்கம் செயதுவிட்டு அச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தேர்தலுக்காக அதை அமல்படுத்தாமல் இருந்தது.  3வது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் மீண்டும் நிலுவையில் வைத்திருந்த பாசிச சட்டங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது. 

இன்று அச்சட்டம் நடைமுறைக்கு வந்தவுடனேயே சாலையோர வியாபாரியின் மீது பாய்ந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் கடை அமைத்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளது. இதைக் கூட மாபெரும் குற்றமாக பொய்வழக்கு பதிந்துள்ளது. ஊபா, பொடா போன்ற கருப்புச்சட்டங்களில் இருந்த வழக்காடு நடைமுறைகளையும் தண்டனைகளையும் குற்றத்தில் ஈடுபடாதவர்கள் மீதும் சுமத்துவதற்கு இச்சட்டம் வழிவகுத்துள்ளது. 

பழைய காலனியத்துவ சட்டங்களை நீக்குவதாக கூறிவிட்டு அதைவிட கொடூர ஷரத்துகளை கொண்ட சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட இணைப்பில் இச்சட்டத்தின் அபாயங்கள் குறித்து விரிவாக படிக்கலாம் : https://senthalam.com/909

இந்நிலையில் பிரதான எதிர்கட்ட்சியாக இன்று நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காங்கிரசு இச்சட்டம் குறித்து இரட்டை நிலைபாட்டை எடுத்துள்ளது. 

காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, “இது புல்டோசர் சட்டம், இச்சட்டம் எதிர்கட்சிகள் எம்.பிக்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதனால் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்து மீண்டும் இது குறித்து விவாதிக்க வேண்டும்” என்கிறார். 

சண்டிகர் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி, “இந்த சட்டம் அமல்படுத்தபட்ட முறை இந்திய அரசியலமைப்பு முறைக்கு எதிரானது. இதுகுறித்து அனைவரும் சேர்ந்து முடிவெடுக்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்” என்கிறார்.

காங்கிரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இச்சட்டம் பழைய காலனிய சட்டங்களை நீக்குவதாக கூறிவிட்டு 90% -99% வரை அப்படியே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதாக உள்ளது. இருப்பினும் இதில் சில நல்ல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை வரவேற்க வேண்டும்” என்கிறார்.  

இச்சட்டம் போலீஸ் ராஜியத்தை கட்டியமைக்கும் பாசிச சட்டமாகும் எனக்கூறி   நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்தான் தன்னை பாசிச எதிர்ப்பின் நாயகர்களாக காட்டிக் கொள்ளும் காங்கிரசுகாரர்கள் இச்சட்டத்தை வரவேற்று பேசி வருகின்றனர். இவர்கள் இச்சட்டத்தின் கொடிய அம்சங்களை எதிர்ப்பதற்கு மாறாக இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய முறை பற்றி மட்டுமே கருத்து தெரிவித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இச்சட்டத்தின் அமலாக்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இச்சட்டத்தின் மீது இரட்டை நிலைபாடு எடுத்து நாடகமாடுகின்றனர். 

எனவே காங்கிரசு கட்சியினர் பாசிச பாஜகவுக்கு மாற்றாக என்றைக்கும் இருக்கப்போவதில்லை. உழைக்கும் மக்கள்,  வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு இச்சட்டத்திற்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.

- செந்தளம் செய்திப்பிரிவு