அதானிக்கும் சீன நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய விரிவான செய்தி தொகுப்புகள்

தமிழில்: விஜயன் - வெண்பா

அதானிக்கும் சீன நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு  பற்றிய விரிவான செய்தி தொகுப்புகள்

பகுதி - 1

வடகொரியா மீது ஐ.நா சபை விதித்த தடைகளை மீறியுள்ளாரா அதானியின் சீனக் கூட்டாளி

2017 ஆம் ஆண்டு வட கொரியா மீது விதிக்கப்பட்ட தடையை மீறும் வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட எண்ணெய்க் கப்பலுடன் தொடர்புடைய நபர்களுடனும், கம்பெனிகளுடனும் அதானி குழுமத்திற்கு தொடர்புள்ளது என்று ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் நிதியுதவியில் இயங்கக்கூடிய ஒரு கம்பெனி ஜ.நா சபையின் பாதுகாப்பு மன்றம் வட கொரியா மீது விதித்த பொருளாதார தடைகளை மீறியுள்ளது தொடர்பான ஆதாரம் சிக்கியுள்ளது. அதானி குழுமத்தின் சீனக் கூட்டாளியான சங் சுங்-லிங் என்பவருடைய இரு மகன்களுக்கு சொந்தமான கம்பெனியே இந்தத் தடையை மீறியுள்ளது, அதானி குழுமத்தில் உள்ள சில நிறுவனங்களுக்கு இந்த சங் சுங்-லிங் என்பவர் இயக்குநராக இருந்தது பற்றியும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. டிசம்பர் 2017 ஆம் ஆண்டு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்து கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்று வட கொரிய பொருளாதார தடையை மீறும் வகையில் சரக்கை கைமாற்றியுள்ளது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தால்(UNSC) 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தடையை மீறி சட்ட விரோதமாக வட கொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கப்பல் பற்றியும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கம்பெனிகள் பற்றியும் கண்டறிந்துள்ளதாக கூறியிருந்தது. அதானி குழுமத்துடன் சீனக் கூட்டாளிகளும் அவர்களது கம்பெனியும் கொண்டுள்ள தொடர்புகள் பற்றி வெளிவந்துள்ள பிற அதிகாரப் பூர்வ ஆதாரங்களை இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கிறது.

வடகொரியாவுடன் தடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட கோட்டி கப்பல் கைப்பற்றப்பட்டது. இக்கப்பல் அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் என்ற பகாசுர நிறுவனம் நீண்ட காலமாகவே சீனாவுடன் தொழில் தொடர்புகளை கொண்டுள்ளது. 1980களில் ஒரு வர்த்தகராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய காலம் முதல் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனது வரையிலும் சீன நிறுவனங்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணி வருகிறார். மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக சீனாவிலிருந்து வாங்கப்பட்ட எந்திரங்களுக்கு அதிக விலை வைத்து விற்கும் வகையில் போலி விலைப்பட்டியல்(over-invoicing) ஒன்றை அதானி குழுமம் தயார் செய்துள்ளது. மோடி மே 2014 –ல் பிரதமராக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI) இரண்டு முறை விளக்கம் கேட்டு அதானி குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதானியின் சீனக் கூட்டாளி பற்றி சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் மேலதிகமான சர்ச்சையையே கிளப்ப வாய்ப்புள்ளது.

சுருக்கம் 

அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் சங் சுங்-லிங் என்கிற லிங்கோ – சங் என்பவர் இயக்குநராக பதவி வகித்துள்ளதோடு மிக நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்து வருகிறார். லிங்கோ சங் என்பவரின் மகனான சியாங் – திங் சங்(மோரிஸ் சங் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் தைவானில் உள்ள அதானி குழுமத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.(குறை கடத்தி உற்பத்தியில் பல்வேறு பங்களிப்புகளை தந்துள்ள நன்கு அறியப்பட்ட முதலாளியான அமெரிக்காவில் வசிக்கக்கூடிய தைவானியர் மோரிஸ் சங் அல்ல இவர்.) சியான்-யுவான் சங் என்கிற நோரிஸ் சங் என்ற மற்றொரு மகனும் லிங்கோ சங் என்பவருக்கு உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வட கொரியாவுடன் தடையை மீறி கப்பல் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது அதானி பிராண்ட் பெயரில் இயங்கக்கூடிய கப்பல் கம்பனிகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதானி குளோபல் லிமிடட் (அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமாக இருந்து வரக்கூடிய அதானி என்டர்பிரைசஸ் லிமிடட் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிற ஒரு துணை நிறுவனம்) மற்றும் ஹை லிங்கோ லிமிடட்(லிங்கோ சங் என்பவருக்கு சொந்தமான வர்த்தக நிறுவனம்) முதலான நிறுவனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வாறு அதானி பிராண்ட் பெயரில் இயங்கி வருகிற அதானி கப்பல் (சீனா) நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது பற்றி தங்களது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதானி குழுமத்திற்கு சொந்தமான ஷாங்காய் அதானி கப்பல் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடபட்டதற்காக மூடப்பட்டது. அதற்கு முன்பு வரை அந்நிறுவனம் சீனாவில் உள்ள அதானி கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்து வந்தது. இந்த ஷாங்காய் அதானி கப்பல் நிறுவனம் Firstec Maritime என்று நிறுவனத்தை உடைமையாக வைத்திருந்தது. இதில் கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில், Firstec Maritime என்ற நிறுவனம் மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் ஆகியோரே அந்நிறுவனத்தின் 80% பங்குகளுக்கு உரிமையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பிட்ட காலத்திற்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக, பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த எம்.டி. கோட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கோட்டி(Koti) என்ற எண்ணெய் கப்பலை இந்த Firstec Maritime என்ற கம்பனி வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த கோட்டி கார்ப்பரேஷனின் மூன்று இயக்குநர்களில் இரண்டு பேருடைய பதிவு செய்யப்பட்ட விலாசமும், லிங்கோ சங் என்பவருக்கு சொந்தமான ஹை லிங்கோ நிறுவனத்தின் விலாசமும் ஒன்றாக இருப்பதோடு, அந்த இரண்டு இயக்குநர்களும் மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் என்பவர்கள் தான் என்பது ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வட கொரியாக மீது 2017 ஆம் ஆண்டு விதித்த தடையை மீறியதற்காக கோட்டி கப்பல் கைப்பற்றப்பட்டு, சிறைவைக்கப்பட்டு இறுதியில் கழிபொருளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

டிசம்பர் 2017 ஆம் ஆண்டு, ஏற்பாடு செய்யப்பட்ட பயணத் திட்டத்திற்கான சரிபாதி செலவை பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டது. வடகொரிய நாட்டு எண்ணெய்க் கப்பலுக்கு கள்ளத்தனமாக பெட்ரோலியப் பொருட்கள்/எரிவாயு எண்ணெய் நிரப்பியது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தென் கொரிய அதிகாரிகள் கோட்டி கப்பலை பறிமுதல் செய்தனர். வட கொரியா மீது ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் விதித்த தடைகளை இந்த சரக்கு பரிமாற்றம் மீறியுள்ளது. கோட்டி, பர்ஸ்டெக், மோரிஸ் மற்றும் நோரிஸ் சங் என்று பெயரிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தடைமீறல் பற்றிய விவரங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன. தென்கொரிய அரசாங்கம் கோட்டி கப்பலை கழிபொருளாக உடைப்பதற்கு முன்பு இரண்டாண்டுகள் வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்றங்கள் மூலமாக கோட்டி கப்பலின் உரிமையாளர்கள் எவரும் அக்கப்பலை மீட்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2017ஆம் ஆண்டு, அதே மாதத்தில் தான், ஷாங்காய் அதானி ஷிப்பிங் கம்பெனியும் மூடப்பட்டது.

மேரிடைம் எக்சிக்யூடிவ் என்ற செய்தி தளத்தில் வெளியான வரைபடத்தின் மூலம் கோட்டி கப்பல் எந்த பகுதியிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை கைமாற்றியிருக்கலாம் என்று காண்பிக்கிறது.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் விதித்த தடையை மீறிய நிறுவனத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் பின்வருமாறு:

1. இந்த கப்பல் பயணத்திற்கு பகுதியளவு நிதியுதவியளித்த Firstec Maritime நிறுவனம் ஷாங்காயில் உள்ள அதானி கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானதாக உள்ளது. இந்த ஷாங்காய் நிறுவனமோ அதானி குளோபல் நிறுவனத்திற்கும், ஹை லிங்கோஸ் நிறுவனத்திற்கும்(லிங்கோ சங்’க்கு சொந்தமானது) தேவையான சேவைகளை செய்து வருகிறது.

2. மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் ஆகியோரே கோட்டி கார்ப்பரேஷனின் இயக்குநர்களாக இருந்துள்ளனர். கோட்டி எண்ணெய் கப்பல் மூலம் சட்ட விரோத கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர். தைவான் நாட்டிற்கான அதானி குழுமத்தின் பிரதிநிதியாக மோரிஸ் சங் இருந்து வருகிறார்.

3. இவர்கள் இருவருமே லிங்கோ சங் என்பவரின் மகன்களாவர். அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக லிங்கோ சங் இருந்து வந்துள்ளார். இயக்குநர் பொறுப்புகளை கவனித்து வந்தது பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

4. இந்த லிங்கோ சங் என்பவர் ஹை லிங்கோஸ் என்ற கம்பனியின் முதலாளியாக உள்ளார். இந்த ஹை லிங்கோஸ் கம்பெனிக்கும் சீனாவில் உள்ள அதானி கப்பல் நிறுவனம் தான் கப்பல் தொடர்பான பணி ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது. தடையை மீறிய கோட்டி எண்ணெய் கப்பலுக்கு சொந்தமான கோட்டி கார்ப்பரேஷனின் பதிவு செய்யப்பட்ட விலாசமும், ஹை லிங்கோஸ் நிறுவனத்தின் விலாசமும் ஒன்று தான். 

இந்த கள்ளக் காவியம் தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன் விரிவாக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

லிங்கோ – சங் 

இக்கட்டுரை எழுதிய முன்னணி ஆசிரியர் ரவி நாயர்  அவர்கள் அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FPI) பற்றி இரண்டு பாகங்கள் கொண்ட விரிவான ஆராய்ச்சி கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரைகளும் அதானிவாட்ச்(Adaniwatch.org) தளத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவந்த கட்டுரை ஒன்றில், லிங்கோ – சங் என்று அறியப்படும் சீனாவைச் சேர்ந்த சங் சுங் – லிங் என்பவருக்கும் அதானிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது என்பதை அம்பலப்படுத்தியிருப்பார். மேலும், இந்த லிங்கோ – சங் என்பவர் அதானியின் மூத்த சகோதரரான விநோத் அதானியின் நிறுவனங்களிலும் பல்வேறு இயக்குநர் பதிவிகளையும் வகித்து வந்துள்ளார் என்பதும் அக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. விநோத் சாந்திலால் அதானி என்றும் விநோத் சாந்திலால் ஷா என்றும் அழைக்கப்படுகிற விநோத் அதானியும் கடந்த ஆறு வாரங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

லிங்கோ – சங் என்பவருக்கும் விநோத் அதானிக்கும் இடையில் மிக நெருக்கமான தொழில் உறவுகள் இருப்பது தொடர்பான ஆதாரங்கள் வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI) கைபற்றிய ஆவனங்கள் வழி தெரியவந்துள்ளது. நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான குடாமி இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கும், லிங்கோ – சங் மற்றும் அதானி குழுமத்திற்கும் இருந்த தொடர்பு பற்றி ரவி நாயர் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதாவது இந்திய அரசாங்கம் சார்பாக வி.வி.ஐ.பிகளுக்காக வாங்கப்பட்ட ஹெலிக்காப்படரில் நடந்த ஊழலில் இந்த குடாமி நிறுவனத்திற்கும் முக்கிய பங்கு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கமே அந்த நிறுவனத்தின் தொழில் உரிமையை பறித்துள்ளது.

ஜனவரி 24, 2023 அன்று வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூட லிங்கோ – சங் மற்றும் அதானி குழுமத்திற்கு இடையிலான மிக நெருக்கமான தொழில் உறவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. லிங்கோ சங் மற்றும் அதானி குழுமத்திற்கு இடையிலான தொடர்பு என்பது 1990களின் பிற்பகுதியிலிருந்தே இருந்து வருகிறது என்று 2018 ஆம் ஆண்டில் தைவானில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ளதாக ஹிண்டனபர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடாமி இன்டர்நேஷனல் மட்டுமல்லாது, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Adani Virginia Inc. என்ற அதானியின் மற்றொரு நிறுவனத்திற்கும் லிங்கோ – சங் தான் இயக்கநராக இருந்துள்ளார். துபாயில் பதிவுசெய்யப்பட்ட Adani Global FZE என்ற நிறுவனமே இந்த விர்ஜீனியா துணை நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இந்த Adani Global FZE என்ற நிறுவனமும் கூட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Adani Global Pte என்ற நிறுவனத்தின் சொத்தாக இருந்து வருகிறது. மொரிசியஸில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியாருக்கு மட்டுமே பங்குகளை விற்கக்கூடிய கம்பெனியான Adani Global Ltd, என்ற நிறுவனம் தான் Adani Global Pte. Ltd. என்ற நிறுவனத்திற்கும் அதிபதியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடட் தான் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய தாய் நிறுவனமாக இருந்து வருகிறது என்று 2006-07 ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Adani Global FZE என்ற நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட 2006-07 ஆம் நிதியாண்டிற்கான இயக்குநர் அறிக்கையில் விநோத் அதானி கையெழுத்தும் இடப்பெற்றிருந்தது.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், 2003-04ல் வெளியிட்ட ஆண்டறிக்கையில் Adani Global Pte. Ltd. நிறுவனத்தின் சங் சுங் லிங் (லிங்கோ – சங்) மற்றும் பிரபல விநோத் அதானியைத்தான் இயக்குநர்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

லிங்கோ - சங் என்பவர் தான் Adani Virginia Inc என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்று  Open Corporate(உலக கம்பெனிகள் பற்றிய கட்டற்ற தகவல்களை வழங்கக்கூடிய வலைதளம்) என்ற வலைதளத்தில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கும் லிங்கோ – சங் என்பவருக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆதாரங்கள் முதன்முதலாக adaniwatch வலைதளத்தில் ஜீலை 2021-ல் வெளியானதை தொடர்ந்து அக்கம்பனி மூடப்பட்டது.

வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக விளங்கக்கூடிய நாடுகளில் எந்தெந்த நிறுவனங்கள் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளன, அவை எப்படி உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பண பலமும், அதிகார பலமும் படைத்தவர்களின் நிறுவனங்களாக இருக்கிறது என்பது பற்றிய உண்மை விவரங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் 2017-18 ஆண்டு வெளியான ஆவனங்களில் லிங்கோ – சங் என்பவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. சர்வதேச புலனாய்வுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின்(ICIJ) சார்பாக இப்பட்டியல் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட Freeman Holding Investment Co. Ltd நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருந்ததன் பேரில் லிங்கோ – சங்’ன் பெயர் இந்த ஊழல் பட்டியலில் இடப்பெற்றது. 9F, எண்.65, ஜியாங்குவோ வடக்கு தெரு, ஜாங்ஷான் மாவட்டம், தைபே, தைவான். என்பதே லிங்கோ – சங்கின் விலாசம் என்று இந்த கூட்டமைப்பு(ICIJ) வெளியிட்டிருந்தது.

படவிளக்கம்: லிங்கோ – சங் உடன் கௌதம் அதானியும் உடனிருப்பது போன்ற படம் ஹிண்டன்பர்க் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங்

சீனா மற்றும் தைவானில் உள்ள ஊடகங்களில் வந்த ஆய்வுகள் ஹிண்டனபர்க் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. லிங்கோ – சங்கின் மகன் மோரிஸ் சங் என்கிற சியான்-திங் சங் என்பவரே தைவானிற்கான அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருந்து வருகிறார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டிருந்தது. 1992 முதல் அதானி குழுமத்தில் வரும் மலாய் மகாதேவ் என்பரால் உருவாக்கப்பட்ட பிஎம்சி பிராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை மோரிஸ் சங் வைத்துள்ளார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறிகிறது. மலாய் மகாதேவா என்பவர் தற்போது அதானி துறைமுகம் மற்றும் அதானி சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முழுநேர இயக்குநராகவும், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும்(CEO) இருந்து வருகிறார். கௌதம் அதானியும் மகாதேவாவும் நீண்டகாலமாகவே நெருங்கிய நண்பர்களாகவும், தொழில் கூட்டாளியாகவும் இருந்து வருகிறார்கள்.

சமூக ஊடகத் தளமான முகநூலில் அதானியின் குடும்பமும், சங் சுங் – லிங் அவர்களின் குடும்பமும் தொடர்பில் தான் இருந்து வருகிறார்கள். சியான் யுவான் சங் என்கிற நோரிஸ் சங் என்பவரின் மகன் பிரீத்தி அதானி மற்றும் கரன் அதானி (கௌதம் அதானியின் மனைவி மற்றும் மகன்) உட்பட அதானி குடும்பத்தில் உள்ள நான்கு பேரிடமும் முகநூலில் நண்பராக இருக்கிறார். மோரிஸ் சங் என்பவரின் மகளும் பிரீத்தி அதானி உட்பட அதானி குடும்பத்தில் உள்ள பலரிடமும் முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து வருகிறார். 

கௌதம் அதானியின் டிவிட்டர் பதிவுகளை மறுடிவீட் செய்வதோடு, அதானி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதானி குழும நிறுவனத்தின் டிவிட்டர் பக்கங்களையும் நோரிஸ் சங் லைக் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிந்த டிவிட்டர் பதிவுகளைக் கூட நோரிஸ் சங் லைக் அல்லது மறுடிவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோட்டி(Koti) கப்பல் மூலமாக வடகொரிய கப்பலுக்கு சட்ட விரோதமாக கைமாற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள்

ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம்(UNSC) விதித்த தடையை மீறி வடகொரிய கப்பல் ஒன்றிற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கோட்டி எண்ணெய் கப்பல் மூலமாக பெட்ரோலியப் பொருட்கள் கைமாற்றப்பட்டது தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தென் கொரியா அரசு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோட்டி கப்பலை பறிமுதல் செய்யப்பட்டது என்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் மற்றும் தி கார்டியன் பத்திரிக்கைள் செய்தி வெளியிட்டிருந்தன. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை வடகொரியாவுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வடகொரியா மீது 2017 ஆம் ஆண்டு தடைகளை விதித்தது.(இந்தத் தடைகளை மீறியதன் காரணமாகவே 2020 ஆம் ஆண்டு கோட்டி கப்பல் கூறுபோடப்பட்டு காயலான் பொருளாக்கப்பட்டு தென் கொரிய அரசாங்கம் விற்பனை செய்தது)

ஒவ்வொரு கப்பலுக்கும் தனித்தனியான அடையாள எண்கள்(IMO Number) பன்னாட்டு கடல்வழி அமைப்பின்(IMO) மூலமாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் IMO எண் 9417115 என்று பதிவு செய்யப்பட்ட கோட்டி கப்பல் சட்ட விரோதமாக ‘கும் உன் சுன் 3’(IMO எண்: 8705539) என்ற வட கொரியா நாட்டு எண்ணெய்க் கப்பலுக்கு பெட்ரோலியப் பொருட்களை கைமாற்றியுள்ளது என்று 2018 ஆம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஜ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

வடகொரியா மீது விதித்த தடைகளை மீறியது தொடர்பாக ஐ.நா.சபையின் பாதுகாப்பு மன்றம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட்.

இந்தக் கோட்டி கப்பல் M.T. கோட்டி கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது என்பதோடு பனாமாவில் ‘பெயரறியப்படாத அநாமதேய நிறுவனமாக’ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓர் அநாமதேய நிறுவனமாக பதிவு செய்ய வேண்டிய தேவை என்ன?

பனாமாவில் சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனம், “ஓர் அநாமதேய நிறுவனமாக” பனாமாவில் பதிவு செய்யப்படுவது என்றால் என்வென்பது குறித்து இவ்வாறு விவரிக்கிறது:‘பனாமாவில் நீங்கள் எப்போது தொழில் தொடங்க வேண்டுமென்றாலும், முதற்படியாக நீங்கள் உங்கள் நிறுவனத்தை ஓர் அநாமதேய நிறுவனமாக அல்லது S.Aவாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்பானிய மொழியில் Sociedad Anónima என்பதன் சுருக்கமாக பதிவு செய்யப்படும் நிறுவனம் S.A என்று பெயரிடப்படுகிறது. அதன் பிறகு அந்நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது அவரைப் போன்றவர்களின் விவரங்கள் முழுமையாக மூடிமறைக்கப்படுகிறது. இதனால் அரசின் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இடம்பெறுவதில்லை. ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள பங்குதாரர்களின் தனிப்பட்ட பார்வைக்கு மட்டுமே காண்பிக்கப்படக்கூடிய ஆவணங்களில் மட்டுமே இந்த உரிமையாளர் பற்றிய விவரங்கள் இடம்பெறும்.

கோட்டி நிறுவனத்தின உண்மையான உரிமையாளர்கள் தைவானைச் சேர்ந்தவர்கள் என்றும், 7F, எண்.85, செக்டார் 2, செங்காங் சாலை, தாயோன் மாவட்டம், தாயோன் நகரம், தைவான் என்பது தான் அவர்களின் விலாசம் என்றும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சியான் – டிங் சங், சியான் – யுவான் சங்(நோரிஸ் சங்) மற்றும் சிஃக் – சுவான் கவோ ஆகிய மூவரும் தான் கோட்டி நிறுவனத்தின் மூன்று இயக்குநர்கள் என்று அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. முதலில் சொல்லப்பட்ட இருவரும் லிங்கோ – சங் என்பவரின் மகன்களான மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் ஆகியோர்களாவர்.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டியலில் கோட்டி கார்ப்பரேஷனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தகத் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த தடை பட்டியலில் கோட்டி கப்பலின் பெயரும், கோட்டி கார்ப்பரேஷனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சியான் – திங் சங்(மோரிஸ் சங்), சியான் – யுவான் சங்(நோரிஸ் சங்) மற்றும் சிஹ் – சுவான் கவோ ஆகியோரே பனாமாவில் பதிவு செய்யப்பட்ட M.T. கோட்டி கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் என்று Open Corporate வலைதளமும் விவரிக்கிறது.

பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime)

ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையின் படி, சமோவாவில் பதிவு செய்யப்பட்ட ஆவ்ரியா ரிசோர்ஸ் கோ. லிமிடட்(Auria Resource Co. Ltd) நிறுவனம் குத்தகை முறையில் கோட்டி கப்பலை கோட்டி கார்ப்பரேஷனிடமிருந்து பெற்றள்ளது. இந்த ஆவ்ரியா நிறுவனத்தின் அலுவலகம் தாய்பே(Taipei)யில் 6F-2, எண்.51 ஹெங்கியாங் சாலையில் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக பெட்ரோலியப் பொருள் கடத்தல் நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்பே செய்லிங் பெட்ரோகேமிக்கல் இன்க்கார்ப்பரேஷன்(Sailing Petrochemical Inc.) என்ற நிறுவனத்திடம் “கால ஒப்பந்த முறையில்”(Time charter) அக்கப்பல் குத்தகைக்கு விடப்பட்டுவிட்டது என்று ஆவ்ரியா நிறுவனம் கூறுகிறது. அதே அறிக்கையின் அடிக்குறிப்பு 58-ன் படி, பர்ஸ்டெக் மேரிடைம்(Firstec Maritime) மற்றும் ஜின் மியோ கோ. லிமிடட்( Xin Miao Co. Ltd.) என்ற இரண்டு நிறுவனங்களிடமிருந்தே இந்த கடத்தல் பயணத்திற்கான கட்டணச் செலவானது செய்லிங் பெட்ரோகேமிக்கல் இன்க்கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறி வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்களின் ஸ்கிரீன்ஷாட். இதில் மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் என்பவர்கள் யார் எவர் என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதோடு, கோட்டி கார்ப்பரேஷனுக்கும் அவர்களுக்கு இடையிலான தொடர்பும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கால ஒப்பந்த முறை என்பது கப்பல் ஊழியர்கள், பழுது வேலைகள் மற்றும் பராமரிப்பு, கப்பல் இயங்குவதற்கு தேவையான சரக்ககங்கள், கப்பல் அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கான கூலிகள், கப்பலின் உடற்பகுதி மற்றும் இயந்திரங்களுக்கான காப்பீடு செலவு போன்று கப்பல் இயங்குவதற்கு தேவையான செலவுகளை கப்பல் உரிமையாளர் ஏற்றுக்கொள்வார். அதாவது தொழில்நுட்ப ரீதியாக கப்பலை இயக்குவது அதன் சொந்தக்காரராக இருந்தாலும், வணிக நோக்கில் இயக்குவதற்கான உரிமை குத்தகை உரிமையாளருக்கு உண்டு. சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு வேண்டிய செலவுகளை கப்பல் உரிமையாளர் தலையில் விழுவதில்லை என்பதால் அவர் அதற்கான பணியாளர்களையும் நியமிப்பதில்லை.

பர்ஸ்டெக் மேரிடைம்(Firstec Maritime) நிறுவனம் என்று கூகுள் தேடுபொறியில் தேடுகிற போது ‘சாங்காய் அதானி ஷிப்பிங் கோ, ஹையா வில்லா, 46, லைன் 97, சோங்லின் லு, புடோங் சின்கு, ஷாங்காய், 200120’ என்பதே அந்நிறுவனத்தின் முகவரி என்று காட்டுகிறது.

Balticshipping.com என்பது கப்பலோட்டிகளுக்கான சேவைகளை வழங்குவதோடு, கப்பல் துறையில் வேலைவாய்ப்புகள் தொடர்பான தவல்களையும் வழங்கக்கூடிய வலைதளமாக இருந்து வருகிறது. பர்ஸ்டெக் மேரிடைம்(Firstec Maritime) என்ற நிறுவனம் ஹாங்காங்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சீனா ஷாங்காய்-ல் உள்ள ஷாங்காய் அதானி ஷிப்பிங் கோ.லிமிடட் நிறுவனமே அதன் உரிமையாளர் என்றும் அந்த வலைதளம் கூறுகிறது. சீனாவில் ‘அதானி’ யின் பெயர் தாங்கிய கப்பல் நிறுவனம் இது ஒன்று மட்டுமல்ல. மாறாக அதானி ஷிப்பிங்(சீனா) கோ. லிமிடட்(ASCCL) என்கிற தாலியன் அதானி ஷிப்பிங் கோ லிமிடட் நிறுவனத்தின் பெயரிலும் ‘அதானி’யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய எந்தவொரு நிறுவனங்களின் அதிகாரப் பூர்வ ஆவணங்களிலும் இந்த மூன்று நிறுவனங்களின் பெயர்கள் குழும நிறுவனங்களாகவோ அல்லது துணை நிறுவனங்களாகவோ கூட இடம்பெறவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்க விசயமாகும்.

இந்த நிதி பரிவர்த்தனை ஒன்றும் அதானி நிறுவனத்திற்கும், பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) இடையில் நடந்த முதல் பரிவர்த்தனை அல்ல. அதிக விலை வைத்து விற்கும் வகையில் போலி விலைப்பட்டியல்(over-invoicing) ஒன்றை தயார் செய்த குற்றத்திற்காக அதானி பவர் நிறுவனத்திடம் விளக்கும் கேட்டு வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI – மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய சுங்கப் புலனாய்வுப் பிரிவு) 2014, மே மாதத்தில் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) பதிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் நிறுவனமான எலக்ட்ரோஜன் இன்ஃப்ரா FZE(Electrogen Infra FZE) என்ற நிறுவனத்திற்கும், பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) என்ற நிறுவனத்திற்கும் இடையில் 2011 முதல் 2013 வரையில் 3,72,000 அமெரிக்க டாலர்கள் பரிவர்த்தனை நடந்துள்ளது என்று DRI அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.(கீழ்க்கண்ட ஸ்கிரீன்ஷாட்டை காண்க) 

ஆக, மேற்சொன்ன நிறுவனங்கள் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய நிறுவனங்கள் தான் என்பதை நாம் எவ்வாறு நிறுவுவது? ஹாங்காங்-ல் உள்ள அதிகாரப்பூர்வ கம்பெனி பதிவேட்டில் லிங்கோ – சங்கின் மகன்களான மோரிஸ் சங் மற்றும் நோரிஸ் சங் ஆகியோர்கள் தான் பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) என்ற நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளுக்கு சொந்தக்காரர்கள் என்பது உறுதியாகிறது.(இந்த நிறுவனத்தின் சீனப் பெயர் Shoutianke Shipping Co., Ltd., என்பதாகும்; அதன் நிறுவன எண் 909529 ஆகும்.

சீன நிறுவனங்கள் குறித்து தகவல் பெறுவதற்கான qcc.com என்ற தேடுதளத்தில் தேடியபொழுது, அதானியின் பெயர் தாங்கிய சீனாவில் உள்ள இரண்டு கப்பல் நிறுவனங்களுக்கும்(SASCL & ASCCL) ஒரே இயக்குநர் தான் என்றும் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இரண்டு கம்பெனிகளுக்கமான வலைதள இணைப்பு www.dasco.com.cn என்பதாகும். எனினும், தற்போது இந்த லிங்க் செயல்பாட்டில் இல்லை.( ASCCL என்பதன் மற்றொரு பெயரான ‘dasco’ என்பது தாலியன் அதானி ஷிப்பிங் கம்பெனியை குறிக்கிறது). மேற்சொன்ன நிறுவனங்கள் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் தான் என்றும், ஆசியா முழுவதம் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய அதானி குளோபல் லிமிடட் மற்று ஹை லிங்கோஸ் கோ. லிமிடட் நிறுவனத்துடனும் தொடர்பிலிருந்துள்ளது என்று இந்த வலைதளத்தின் சேமிக்கப்பட்ட பக்கங்கள் சுட்டிக்காட்டுகிறது.

அதானி ஷிப்பிங்(சீனா) வலைதளத்தின் சேமிக்கப்பட்ட பக்கங்களின் ஸ்கிரீன்ஷாட்.

அதானி குளோபல் லிமிடட் என்பது அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமாக விளங்கக்கூடிய அதானி என்டர்பிரைசஸ்-ன் நேரடி துணை நிறுவனம் தான் என்று நாம் முன்னமே கூறியுள்ளோம்.

ஹை லிங்கோஸ் கோ. லிமிடட் நிறுவனம் பற்றிய விவரங்களை தைவான் தொழில் தரவுத்தளம்(https://tw.bizdirlib.com/node/12258) வழங்குகிறது. 7F, எண்.85, செக்டார் 2, செங்காங் சாலை, தாயோன் மாவட்டம், தாயோன் நகரம், தைவான் என்பது அந்நிறுவனத்தின் விலாசம் என்று இத்தளம் கூறுகிறது. தடையை மீறி பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கோட்டி கப்பலின் உரிமையாளர் விலாசம் பற்றி ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விலாசமும், தைவான் தொழில் தரவுத்தளத்தில் கூறப்பட்டுள்ள விலாசமும் ஒன்று தான். ஹை லிங்கோஸ் என்பது லிங்கோ – சங் என்பவரின் நிறுவனம் என்பதை பல்வேறு தொழில் தரவுத் தளங்கள் உறுதிப்படுத்துகின்றன.

qcc.com என்ற தரவுதளத்தின் படி, சீனாவில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களை தடை செய்வதற்கு தொழில் மற்றும் வணிக செயலகம் உள்ளது. இந்த செயலகம் ஷாங்காய் அதானி ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடட்(SASCL) மீது விதிமீறல்களுக்கான அபராதம் விதித்தது. மேலும், ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் தொழில் உரிமமும் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்நிறுனம் மூடப்பட்டது.

பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கோயா அல்லது ஹாட்ச்(IMO:9396878)  என்ற கப்பல், 2017 ஆம் ஆண்டு நவம்பர் 19 வாக்கில், வட கொரியாவைச் சேர்ந்த(சோன் மா சன் – IMO:8660313) மற்றும் கும் உன் சன் 3) இரண்டு கப்பல்களுக்கு எண்ணெய் பொருட்களை கள்ளத்தனமாக கடத்தியுள்ளது என்று மார்ச் 4, 2021 அன்று ஐ.நாவின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 அல்லது 16 அன்று(அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பயன்படுத்தக்கூடிய நேரப்படி) தென்கொரியாவின் யோசு துறைமுகத்திற்கு கோயா(Koya) கப்பல் வந்து சேர்ந்தது. தைவானில் உள்ள தைசுங் என்ற இடத்திற்கு அடுத்து செல்லவிருப்பதாக தானியங்கி முறையில் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அருகாமையில் இருக்கக்கூடிய கப்பல் மற்றும் அரசுகளுக்கு கப்பலின் அடையாளம், இருப்பிடம் மற்றும் பிறத் தகவல்களை தானியங்கி முறையில் வழங்கக்கூடிய ஏ.ஐ.எஸ் சாதனம்(Automatic Information System)  நிறுத்தப்பட்டதோடு, நோக்கப்படி பெட்ரோலியப் பொருளையும் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு கடத்தியுள்ளது. யோசு துறைமுகத்தின் அறிக்கையின்படி, ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு கைமாற்றும் பொருட்டு கோயா கப்பலில் 5,999.151 டன் அளவிலான எரிவாயு எண்ணெய் ஏற்றப்பட்டது என்று 16 நவம்பர் 2017 தேதியிட்ட கப்பல் சரக்கேற்றுப் பட்டியலில்(Bill of lading) குறிப்பிடப்பட்டிருந்தது. எரிவாயு எண்ணெய் அனுப்புநராக தென் கொரியா நாட்டில் பதிவு  செய்யப்பட்ட ஒரு கம்பெனியும், அதை பெறுபவராக சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனியும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் வல்லுநர் குழு எழுப்பியிருந்த கேள்விக்கு பனாமா அரசின் சார்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. கோயா கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு கள்ளத்தனமாக எண்ணெய் எரிவாயு கடத்தப்பட்ட போது அக்கப்பலின் உரிமையாளர், தொழில்நுட்ப ரீதியாக அக்கப்பலை வழிநடத்தியது, வணிக ரீதியாக அக்கப்பலை இயக்கியது என்ற அத்துனை பொறுப்பும் கோயா(Koya) கார்ப்பரேஷனையே சாரும். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கும் உன் சன் 3(IMO:8705539) என்ற வடகொரிய கப்பலில் கள்ளத்தனமாக எரிவாயு எண்ணெய் நிரப்பிய கோட்டி கப்பலின்(IMO:9417115)  பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கோயா கார்ப்பரேஷனின் இயக்குநர்களும் ஒரே நபர்கள் தான் என்பது வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது. கோட்டி கப்பல் தென் கொரியா அரசாங்கத்தால் 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு, 2020-ல் கழிபொருளாக்கப்பட்டது.

கோட்டி கார்ப்பரேஷன் மற்றும் கோயா கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே 2017, ஏப்ரல் 19 அன்று பனாமாவில் பதிவு செய்யப்பட்டவை என்று open corporate வலைதளம் கூறுகிறது. சர்வதேச அளவில் விதிக்கப்பட்ட தடைகளை மீறியதில் இந்த இரண்டு நிறுவனங்களின் பெயர்களும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் அறிக்கையில் அழுத்தமாக இடம்பெற்றதனால் கூட இந்த இரு நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கலாம்.

மூன்று முக்கியமான கேள்விகள் எழுகிறது:

ஐ.நா.வின் தடைகளை மீறும் வகையில் பெட்ரோலிய பொருட்களை வடகொரியா கப்பலுக்கு கள்ளத்தனமாக கடத்திய தைவானைச் சேர்ந்த செய்லிங் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு அதானி குழுமத்துடன் தொடர்புடைய பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) நிறுவனம் எதற்காக நிதியளிக்க வேண்டும்?

அதானி குழுமத்தின் நீண்ட கால தொழில் கூட்டாளியாக இருக்கக்கூடிய சங் சுங் – லிங் மற்றும்/அல்லது அவரது குடுபத்தினர்கள்(அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதி மோரிஸ் சங் உட்பட) சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டடுள்ளார்களா?

செய்லிங் பெட்ரோகெமிக்கல் இன்க் நிறுவனம் கோட்டி கப்பல் எங்கு செல்லவிருக்கிறது, எந்த வழியில் செல்லவிருக்கிறது என்பது குறித்தான தகவல்களை முன்கூட்டியே பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) நிறுவனத்திடம் தெரிவிக்க தவறியதாக வைத்துக்கொண்டாலும் கூட, இதை காரணம் காட்டி பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) நிறுவனம் ஏன் நீதி மன்றங்களில் தென் கொரியா அரசு தங்களது கப்பலை சிறைபிடித்ததற்கு ஏதிராக முறையிட்டு கப்பலை மீட்கவில்லை?

அதானி குழுமத்தின் கார்ப்பரேட் செய்தித் தொடர்பு துறையிடம் பிப்ரவரி 22, 2023 அன்று மின்னஞ்சல் வழியாக சில கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது. இக்கட்டுரையை வெளியிடும் வரை எந்த பதிலும் வரவில்லை; கேள்விக்கான பதில்கள் வரும்போது இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

கேள்விப் பட்டியலில் எழுப்பப்பட்ட கேள்விகள்

  1. திரு. சங் சுங் – லிங் என்கிற திரு. லிங்கோ சங் என்பவருக்கும் அதானி குழுமத்திற்கும் என்ன மாதிரியான தொடர்பு உள்ளது?
  2. துபாயில் உள்ள அதானி குளோபல் FZE நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அதானி விர்ஜீனியா இன்க் நிறுவனத்தின் தலைவர் திரு. லிங்கோ – சங் என்பவர் தானா?
  3. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட் ஃப்ரீமேன் ஹோல்டிங் இன்வெஸ்ட்மண்ட் கோ. லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர், நிறுவனப் பங்குதாரர் என்பதன் அடிப்படையில் பன்னாட்டு புலனாய்வுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட பனாமா ஆவணங்களில் லிங்கோ – சங்கின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
  4. லிங்கோ சங்-ன் மகன் சியான் – திங் சங் என்கிற மோரிஸ் சங் என்பவர் தைவானில் அதானி குழுமத்தின் பிரதிநிதயாக செயல்படுகிறாரா?
  5. ஷாங்காய் அதானி ஷிப்பிங் கோ. லிமிடட், பர்ஸ்டெக் மேரிடைம்(Firstec Maritime)லிமிடட் மற்றும் அதானி ஷிப்பிங்(சீனா) கம்பெனி லிமிடட் ஆகியவை அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களா?
  6. அவை அதானி குழுமத்தின் நிறுவனங்கள் தான் என்றால், மேற்சொன்ன நிறுவனங்கள் அதானி குழுமத்தின் தனி நிறுவனங்களா அல்லது ஏதெனும் அதானி நிறுவனத்தின் துணை நிறுவனங்களா?
  7. மேற்சொன்ன நிறுவனங்கள் அதானி குழும நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் தான் என்றால், எதனால் அவைகளின் பெயர்கள் அதானி குழும நிறுவனங்களில் பட்டியலில் இடம்பெறவில்லை?
  8. ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம்(UNSC) விதித்த தடைகளை மீறும் வகையில் வடகொரியாவுடன் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட செய்லிங் பெட்ரோகெமிக்கல் கம்பெனிக்கு பர்ஸ்டெக் மேரிடைம்(Firstec Maritime) லிமிடட் நிறுவனம் நிதியளித்துள்ளது என்று UNSC வெளியிட்ட அறிக்கையில் வெளிவந்துள்ளது பற்றி அதானி குழுமத்திற்கு தெரியுமா?
  9. வட கொரியாவுடன் அதானி குழுமம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதா? அவ்வாறு ஈடுபடவில்லையென்றால் எதற்காக செய்லிங் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு பர்ஸ்டெக் மேரிடைம் (Firstec Maritime) நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும்?
  10. தைவானுக்கான அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருந்து வரும் சியான் – திங் சங் என்கிற மோரிஸ் சங் என்பவரும் அவரது சகோதரருமான சியான் – யுவான் சங் என்கிற நோரிஸ் சங் என்பவரும் தான் வடகொரியாவுடன் சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தால் தடை செய்யப்பட்ட கோட்டி கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் என்பது அதானி குழுமத்திற்கு தெரியுமா?

===============================================

பகுதி - 2

அதானி குழுமத்தின் நிலக்கரி கொள்முதல் ஊழலில் சீனாவும் தொடர்பிலுள்ளது

இந்தியாவின் சிபிஐயின் விசாரணையில் அதானி எண்டர்பிரைசஸின் போலியாக செயல்படும் நிறுவனம் சாங் சுங்-லிங்குடன் தொடர்பு கொண்டுள்ளது, இவர் அதானியின் பல்வேறு போலி (proxy) நிறுவனங்களுடன் தொடர்புடையவர்.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மூன்று ஆண்டுகளாக குற்றவியல் விசாரணையில்  ஈடுபட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இதற்கென நியமிக்கப்பட்ட சிபிஐ அலுவலகம் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்தது. ஆந்திரப் பிரதேச மின் உற்பத்திக் கழகத்திற்குச் சொந்தமான நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களில் வியோம் டிரேட்லிங்ஸ் (Vyom Tradelinks) எனும் போலி நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் நாட்டிற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரகு வேலைகளில் தொடர்புடையது. இந்நிறுவனம் சீனாவைச் சார்ந்த சாங் சுங்-லிங்கினுடையது. இவர் அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநருமாவார். சர்வதேச அளவில் வரி ஏயப்புக்காக குற்றஞ்சாட்டப்பட்ட - வினோத் அதானி நிர்வகிக்கும் - அதானி குழுமத்தின் பல்வேறு கடல்சார் ஷெல் நிறுவனங்களின் வலையமைப்புடன் இந்த வியோம் டிரேட்லிங்ஸ் பிணைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 26, 2010 அன்று, ஆந்திரப் பிரதேச மின் உற்பத்திக் கழகம் (APGENCO) 600,000 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதன் மூன்று அனல்மின் நிலையங்களுக்கு வாங்க டெண்டரைத் தொடங்கியபோதை இந்த கதையும் தொடங்குகிறது. ஆறு நிறுவனங்கள்—மகேஸ்வரி பிரதர்ஸ் கோல் லிமிடெட், ஸ்வரனா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், குப்தா கோல் இந்தியா லிமிடெட், கியோரி ஓரேமென் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ('அதானி எண்டர்பிரைசஸ்') மற்றும் வியோம் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (விடிபிஎல்)-ஏலத்தில் பங்கேற்றன. அதானி எண்டர்பிரைசஸ் ஏலத்தை வென்றது.

ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ஜனவரி 15, 2020 அன்று, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் கோஆப்பரேட்டிவ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இந்தியாவின் முதன்மைக் காவல் புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது. கூட்டமைப்பு (NCCF). புதுதில்லியில் உள்ள சிபிஐயின் நீதிமன்றத்தில் எப்ஐஆர் தாக்கல் செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதானி எண்டர்பிரைசஸ் ஏலத்தில் வெற்றி பெறுவதற்காக டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

சிபிஐயானது, பணியாளர் கீழ் வருகிறது, இது பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்கான இணை அமைச்சர் தலைமையில் செயல்படுகிறது. இதனால், சிபிஐயின் செயல்பாடுகள் நேரடியாகப் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. கீழே அதன் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.

APGENCO மூலம் நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தத்தில் மோசடி செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் எஃப்ஐஆர் புதுதில்லியில் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டது.

APGENCO விற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸுக்கு வழங்கியதற்காக 2010 ஆம் ஆண்டில் டெண்டர் நடவடிக்கைகளை கையாண்டதாக NCCF இன் மூன்று மூத்த அதிகாரிகள் மீது சிபிஐன் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் பரவலாக வந்தன. அதானி குழு அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸுக்கும் பிறருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று:

முதல் தகவல் அறிக்கை புத்தகத்தின் ஸ்கிரீன்ஷாட் எண். 922, 15 ஜனவரி 2020, மத்திய புலனாய்வுப் பிரிவு.

அதானி வில்மர் லிமிடெட் ஆகஸ்ட் 3, 2021 அன்று செபிக்கு தாக்கல் செய்த முதலீட்டு திட்டங்களுக்கான வரைவு அறிக்கையிலும் (Draft Red Herring Prospectus-DHRP) எஃப்ஐஆர் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதானி வில்மர் லிமிடெட் என்பது தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி விவசாய வணிகக் குழுக்களில் ஒன்றான அதானி குழுமம் மற்றும் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்).

DHRP இன் பக்கம் 301, 'புரமோட்டர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு' என்ற தலைப்பின் கீழ் : "சிபிஐ அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் NCCFக்கு எதிராக 15 ஜனவரி 2020 அன்று நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் முறைகேடு தொடர்பான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அந்த எஃப்ஐஆர்-ன்படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆந்திரப் பிரதேச மின் உற்பத்திக் கழகம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய மூன்றும்  டெண்டர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் மேல் விசாரணை நடந்து வருகிறது" என்றுள்ளது..

வியோம் டிரேட்லிங்ஸ் அதானி எண்டர்பிரைசஸுக்காக டெண்டரில் போலியாக பங்கெடுத்து மோசடியில் ஈடுபட்டதானது எப்.ஐ.ஆரின் முக்கிய அம்சமாகும். அது அதானி வில்மர் சமர்பித்த DHRPயில்  குறிப்பிடப்படவில்லை. 

சிபிஐ விசாரணையில் அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் வியோம் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (விடிபிஎல்) இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கீழே உள்ள பகுப்பாய்வு இதை உறுதிப்படுத்துகிறது. உண்மையில், 2006-07 இல், அதானி எண்டர்பிரைசஸ் VTPL ஐ துணை நிறுவனமாக அடையாளப்படுத்தி கொண்டது.. இந்த நிலை பின்னர் மாற்றப்பட்டாலும், சாங் சுங்-லிங் (லிங்கோ-சாங் என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் வினோத் அதானி வழியாக அதானி குழுமத்திற்கும் அதற்குமான இணைப்புகள் இன்றும் உயிரோட்டமாக உள்ளன..

வியோம் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வினோதமான வழக்கு

அதானி குழுமத்தில் உள்ள பல நிறுவனங்களுக்குள்ளது போல, அவற்றின் தொடர்புகள் சிக்கலானவை. ஆகவே அதை நிறுவ முயலும் வழியும் அதனோட்டத்திலே இருப்பதால் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அதானி குழுமம் உள்ள அதே  அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டே  VTPL ஆனது  ₹1,00,000 (சுமார் $1200) பங்கு மூலதனங்களுடன் 24 மார்ச் 2005 அன்று நிறுவப்பட்டது என்று பதிவுகள் காட்டுகின்றன. செப்டம்பர் 2006 இல் VTPL நிறுவனங்களுக்கான பதிவாளரிடம் சபர்மிக்கப்பட்ட படிவத்தில், ஜுவெனில் ஜானி, பிரதீப் மிட்டல் மற்றும் பாவிக் ஷா ஆகிய மூன்று நபர்கள் அதன் இயக்குநர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் மிட்டல், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராக இருந்தார். ஷா, அதானி எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட், அதானி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் அதானி குழும நிறுவனமான அலோகா ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராக இருந்தார்.

27 மார்ச் 2007 அன்று, VTPL அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ஐந்து மடங்கு அதிகரித்து ₹500,000 ஆக உயர்த்தியது. அடுத்த 2நாட்களில் - மார்ச் 29ல், நிறுவனம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ₹10 மதிப்புடைய 40,000 பங்குகளை ஒதுக்கியது. இதன் மூலம் VTPL இன் 80% பங்குதாரராக அதானி எண்டர்பிரைசஸ் ஆனது.

அதானி எண்டர்பிரைசஸின் 2006-07 ஆண்டு அறிக்கை VTPL ஐ 100% துணை நிறுவனமாக விவரிக்கிறது. அதை ஆண்டில் VTPL தனது வணிக செயல்பாடுகளை தெரிவிக்கவில்லை; நிறுவனம் எந்த பணத்தையும் சம்பாதிக்கவில்லை அல்லது இழக்கவில்லை.

இருப்பினும், அதானி எண்டர்பிரைசஸின் 2008-09 ஆண்டு அறிக்கையில், VTPL இனி தனது துணை நிறுவனமாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸின் 2008-09 ஆண்டு அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட்

இது எப்படி நடந்தது?

இந்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் VTPL தாக்கல் செய்த ஆவணத்தில், அதானி எண்டர்பிரைசஸ் VTPL இல் உள்ள தனது பங்குகளை தீபக் அம்பாலால் ஷா மற்றும் யோகேஷ் ராமன்லால் ஷா ஆகிய இரு தனிநபர்களுக்கு மாற்றியுள்ளது தெரிகிறது.

உண்மையில் அதானி எண்டர்பிரைசஸின் இணைப்பு வேறு இடத்தில் உள்ளது. இந்திய நிதியமைச்சக சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவான வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), வைரங்கள் மற்றும் தங்க நகைகளை வர்த்தகம் செய்யும் போது ஏற்றுமதி மோசடியில் ஈடுபட்டதாக அதானி நிறுவனங்களுக்கு இரண்டு வெவ்வேறு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 30 மார்ச் 2007 மற்றும் 11 செப்டம்பர் 2009 அன்று வழங்கப்பட்ட நோட்டீஸ்களில் தீபக் ஷா (டிஆர்ஐ நோட்டீஸ்களில் தீபக் ஷா என்று எழுதப்பட்டவர்) அதானி எண்டர்பிரைசஸ் (முன்னர் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்) உடன் தொடர்புடையவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொருவர் கவுதம் அதானியின் மைத்துனர் சமீர் வோரா.

மார்ச் 2007 டிஆர்ஐ ஷோ-காஸ் நோட்டீசின் ஸ்கிரீன்ஷாட்.

VTPL இல் பங்குகளை வைத்திருந்த மற்றொரு நபரான யோகேஷ் ஷாவுக்கும் கூட அப்போது அதானி குழுமத்துடன் தொடர்பு இருந்தது. அவர், ஷங்கேஷ்வர் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் என்ற குழும நிறுவனத்தில் இயக்குநராகவும் அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான கட்ச் பவர் ஜெனரேஷன் லிமிடெட்டின் இயக்குநராகவும் இருந்தார்.

அதானி ரெனியூவபுல் எனர்ஜி ஹோல்டிங் ஃபைவ் லிமிடெட், பிரயத்னா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், அதானி விண்ட் எனர்ஜி (குஜராத்) பிரைவேட் லிமிடெட், பரம்புஜ்யா சோலார் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் இந்தியா) லிமிடெட், கோல்டன் வேலி அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட், அதானி பவர் தஹேஜ் லிமிடெட் மற்றும் சத்ய சாய் அக்ரோயில்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற அதானி குழும நிறுவனங்களின் குழுவில் 2015 முதல், யோகேஷ் ஷா அங்கம் வகித்தார்,

31 மார்ச் 2021 அன்று அதானி இன்ஃப்ரா (இந்தியா) லிமிடெட்டின் ₹1500 கோடி (தோராயமாக 182 மில்லியன் டாலர்) மதிப்புள்ள சிசிடி கடன் பத்திரங்களை (சிசிடி) வைத்திருந்த ரெஹ்வார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் அவர் இருந்தார்.

அதானி இன்ஃப்ரா (இந்தியா) லிமிடெட் ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் இருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட்

டெண்டரில் VTPL ன்  மோசடியான நடவடிக்கை

10 ஜூலை 2010 அன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான NCCF க்கு டெண்டர்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, திரைக்குப் பின்னால் நிறைய விஷயங்கள் நடந்தன.

அதானி எண்டர்பிரைசஸ் VTPLக்கு 16.88கோடி ரூபாய் (தோராயமாக 2 மில்லியன் டாலர்) பாதுகாப்பற்ற கடனை வழங்கியதாக CBI FIRல் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் டெண்டரில் பங்கேற்பதற்காக அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் VTPL ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் வங்கி உத்தரவாதத்தை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது. அது உண்மையென, அதானி எண்டர்பிரைசஸின் 2008-09 ஆண்டு அறிக்கையும்கூட உறுதிப்படுத்துகிறது. ஆனால் நிறுவனத்தின் அடுத்த ஆண்டறிக்கை VTPL நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், எதுவும் நிலுவையில் இல்லை என்றும் காட்டியது.

இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படையாக இருந்தபோதும், திரைமறைவில் சில மோசடி நடவடிக்கைகளும் இருந்தன. 2 ஜூலை 2010 அன்று, VTPL நிலக்கரி டெண்டரில் பங்கேற்பதற்கு சரியாக எட்டு நாட்களுக்கு முன்பு, தீபக் ஷா மற்றும் யோகேஷ் ஷா VTPL இன் இயக்குநர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்தனர். ராஜ் பி ஷா மற்றும் சுகூன் வி ஷா ஆகியோர் ஒரே நாளில் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக ஆனார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு—ஜூலை 24 அன்று—VTPL அதன் பங்குகளில் 4.45 மில்லியனை குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கியது. ஆகஸ்டில், மொரீஷியஸைச் சேர்ந்த இந்த நிறுவனம் FDI (அந்நிய நேரடி முதலீடு) மூலமாக VTPL இல் 86.78 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

நவம்பர் 3, 2010 அன்று, ஐசிஐசிஐ வங்கி VTPL க்கு 'கடன் ஏற்பாட்டுக் கடிதத்தை' வழங்கியது. அதற்கு 150 கோடி ரூபாய் (தோராயமாக 18 மில்லியன் டாலர்) கடன் வரம்பை அனுமதித்தது. அங்கீகரிக்கப்பட்ட தொழில் மூலதன வசதி (working capital), வங்கி உத்தரவாதம் மற்றும் கடன் கடிதம் ஆகியவற்றுக்கு இடையே 100 கோடி ரூபாய் (தோராயமாக 12 மில்லியன் டாலர்கள்) வரை பரிமாற்றம் செய்யக்கூடியதாக மாற்றப்பட்டது. இதன் நோக்கம் 'நிலக்கரி கொள்முதலுக்கே' ஆகும்.

இருப்பினும், இந்தியாவில் (மற்றும் உலகம் முழுவதும்) உள்ள நடைமுறை என்னவென்றால், எந்த வங்கியும் போதுமான பாதுகாப்பு இல்லாமல் அத்தகைய கடன்களை வழங்குவதில்லை. VTPL அதன் மொத்த மூலப்பொருட்கள், அசையும் சொத்துக்கள், கணக்கிருப்பு, நிலுவைத் தொகைகள் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால வரவுகள் பற்றிய விவரங்களை ICICI வங்கிக்கு சமர்பித்த ஆவணங்கள் காட்டுகின்றன. VTPL குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெற்ற கார்ப்பரேட் கேரண்டி மற்றும் அதானி எண்டர்பிரைசஸின் 300 கோடி (சுமார் 36 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பங்குகளையும் உத்திரவாதமாக ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கியது. குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் அந்த நேரத்தில் 1700 கோடி ரூபாய் (சுமார் 206 மில்லியன் டாலர்) மதிப்புள்ள அதானி எண்டர்பிரைசஸின் பங்குகளையும் வைத்திருந்தது.

ஐசிஐசிஐ வங்கியின் கடன் ஏற்பாடு கடிதத்திலிருந்து ஸ்கிரீன்ஷாட்

குடாமி: VTPL சிக்கல்களில் முக்கிய பின்னணி நிறுவனம்

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் பற்றிச் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை உள்ளது, அந்த நிறுவனத்தின் 2005 ஆண்டு அறிக்கை, குடாமியின் இரண்டு மில்லியன் பங்குகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் சீன சாங் சுங்-லிங் வைத்திருந்ததாகக் கூறுகிறது. ஒரு பங்கு ஜோசப் செல்வமலருக்கு இருந்தது.

அதானி வாட்ச் 2 மார்ச் 2023 அன்று, அதானியைப் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கையில் லிங்கோ-சாங் என்றும் அழைக்கப்படும் சாங் சுங்-லிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவரது இரண்டு மகன்களில் ஒருவரான சியென்-டிங் சாங் (மோரிஸ் சாங்) தைவானில் உள்ள அதானி குழுமத்தின் பிரதிநிதி. அவரும் அவரது சகோதரர் சியென்-ஹுவான் சாங்கும் (நோரிஸ் சாங்) அதானி ஷிப்பிங் (சீனா) கோ லிமிடெட் உடன் இணைக்கப்பட்ட ஒரு கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள், இது வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் அனுமதிக்கப்பட்டது.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அதானி குழுமத்தின் விவகாரங்கள் தொடர்பாக சாங் சுங்-லிங்கின் பெயர் மீண்டும் மீண்டும் ஒலித்து வந்தது. மார்ச் 2007 இல் அதானி எண்டர்பிரைஸஸ் ஏற்றுமதி மோசடி குறித்து DRI அனுப்பிய ஷோ-காஸ் நோட்டீசில் அவர் குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் மொரிஷியஸில் உள்ள அதானி குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருப்பதாகக் கூறியது.

வினோத் அதானியும் சாங் சுங்-லிங்கும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்களாக இருந்தனர். இந்த இரண்டு நிறுவனங்களும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகும். சிங்கப்பூரில் உள்ள நிறுவனப் பதிவு ஆவணங்களின்படி, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் மற்றும் குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஒரே முகவரியில் இயங்கி வருவதாக டிஆர்ஐ அறிக்கையில் தெரியவந்துள்ளது. வினோத் அதானிக்கும் சாங் சுங்-லிங்குக்கும் ஒரே குடியிருப்பு முகவரியும் இருந்துள்ளது.

2009ம் ஆண்டின் டிஆர்ஐ ஷோ-காஸ் நோட்டீசிலிருந்து ஸ்கிரீன்ஷாட்

இந்த நிறுவனங்களுக்கு இடையே இதுபோன்ற பல இணைப்புகளை டிஆர்ஐ பட்டியலிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கும் அதானி நிறுவனங்களுக்கும் இடையே பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகள் நடந்ததாகவும் டிஆர்ஐ குறிப்பிட்டது. 'குடாமி இன்டர்நேஷனல் நேரடியாக/மறைமுகமாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானதென்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ளதென்றும் DRI முடிவு செய்தது.

இந்தப் பின்னணியில்தான், ஆகஸ்ட் 2010 இல், குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் அந்நிய நேரடி முதலீடு மூலம் VTPL இல் 86.78 கோடி ரூபாய் (தோராயமாக 10.5 மில்லியன் டாலர்) முதலீடு செய்தது.

20 மார்ச் 2011 அன்று, VTPL மற்றொரு 500,000 பங்குகளை குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது.

  VTPL இன் திடீர் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமாக VTPL ன் வருமானம் மானிய முறைகேடுகள் மூலமாக திடீரென வளரத் தொடங்கியது, அது அம்பலமானவுடன் அது மூடபட்டது. அதன் 2009-10 ஆண்டு அறிக்கை, 2008-09 நிதியாண்டில் மொத்த வருவாய் ₹90,47,61,237 (தோராயமாக 11 மில்லியன் டாலர்) என்று கூறியது. அடுத்த நிதியாண்டின் (2009-10) முடிவில், இந்த எண்ணிக்கை 1328% உயர்ந்து, ₹12,92,06,88,289 ஐ (157 மில்லியன் டாலர்) அடைந்தது.

VTPL இன் 2009-10 ஆண்டு அறிக்கை இவ்வாறு கூறியது: 'இந்த ஆண்டில் சிஐஎஃப் (அல்லது காப்பீடு மற்றும் சரக்கு செலவு) வர்த்தகப் பொருட்களின் இறக்குமதி தொடர்பான அந்நியச் செலாவணி வெளியேற்றம் 10,06,65,54,310 ரூபாயாக இருந்தது.'

பின்வரும் விளக்கப்படம் அடுத்த சில ஆண்டுகளில் VTPL இன் அந்நியச் செலாவணி (FE) வெளியேற்றங்களை (ரூபாயில்) விளக்குகிறது.

VTPL இன் 2012 ஆண்டு நிதி அறிக்கை, குடாமி இன்டர்நேஷனல் மொரிஷியஸ் லிமிடெட் தனது பெயரை PMC இன்ஃப்ரா லிமிடெட் என மாற்றியதை தெரிவிக்கிறது .

2018-19ம் நிதியாண்டில், PMC இன்ஃப்ரா லிமிடெட் VTPL இல் உள்ள தனது பங்குகளை மைல்ஸ்டோன் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு (Milestone Tradelinks Pvt Ltd - MTPL) மாற்றியது, மேலும் VTPL MTPL இன் துணை நிறுவனமாக மாறியது. அடுத்த ஆண்டு, MTPL VTPL ஐ இணைத்தது.

அதானி இன்ஃப்ரா (இந்தியா) லிமிடெட்டில், அதானி இன்ஃப்ராவின் ஒழுங்குமுறை ஆவணங்களின்படி, 750 கோடி ரூபாய் (தோராயமாக 92 மில்லியன் டாலர்) மதிப்புள்ள CCD கடனீட்டுப் பத்திரங்களை  வைத்திருக்கும் நிறுவனமாக MTPL இன் பெயர் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், MTPL இன் 2020-21 ஆம் ஆண்டிற்கான  நிதிநிலை அறிக்கை, அது 484 கோடி ரூபாய் (தோராயமாக 59 மில்லியன் டாலர்) மதிப்புள்ள அதானி இன்ஃப்ராவின் (இந்தியா) 75 மில்லியன் CCDகளை வைத்திருப்பதாகக் காட்டுகிறது.

அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை எம்பிடிஎல் ஒருங்கிணைத்தது இதுதான் முதல் முறை அல்ல, இதற்கு எதிராக டிஆர்ஐ போன்ற இந்திய அரசாங்க அமைப்பால் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வைக்கப்பட்டன. இதுதான் அதன் குறுகிய கதை.

மே 2012 இல், ஏழு நிறுவனங்கள் மைல்ஸ்டோன் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்தன: இவை ஆதித்யா கார்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹிந்துஜா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மிடெக்ஸ் ஓவர்சீஸ் லிமிடெட், அம்பிஷியஸ் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆனந்த் டிரேட்-மூவர்ஸ் (குஜராத், பிரைவேட் லிமிடெட், என்ஏபிடிடி) சூர்யா-ரத் டிரேட்லிங்ஸ் பிரைவேட் லிமிடெட். பட்டியலிலுள்ள முதல் மூன்றும் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்டின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஒரு குழுமத்தை உருவாக்கியதாக DRI ஆல் குற்றம் சாட்டப்பட்டது.

2007ம் ஆண்டின் டிஆர்ஐ ஷோ-காஸ் நோட்டீஸிலிருந்து ஸ்கிரீன்ஷாட்

சீனாவின் தொடர்பு மீண்டும் ஏற்படுதல்

காலப்போக்கில், குடாமி இன்டர்நேசனல் பிரைவேட் லிமிடெட், குடாமி இன்டர்நேசனல் (மொரீசியஸ்) லிமிடெட் மற்றும் PMC ஆகியவை பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருந்தன. டிஆர்ஐ வழங்கிய ஷோ-காஸ் நோட்டீஸ் மற்றும் அதானி குழும நிறுவனங்களின் ஒழுங்குமுறை தாக்கல் படிவம் ஆகிய இரண்டும் அது சாங் சுங்-லிங் குழுமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததையும், வினோத் அதானியும்  சுங்-லிங்கும் அந்தந்த நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் மற்றும் PMC ஆகியவை MPSEZ இன் 16% க்கும் சற்று அதிகமாகப் பங்குகளை வைத்திருந்ததும், பின்னர் அதானி குழுமத்தின் மொரிஷியஸ் நிறுவனங்களான வென்ச்சுரா டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், பிரைட் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் டிரைடென்ட் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றிற்கு தங்கள் பங்குகளை மாற்றியது என்றும் முந்த்ரா போர்ட் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் - MPSEZ (இப்போது அதானி போர்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் - APSEZ) ன் நவம்பர் 2007 DHRP ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது..

அதானி பவர் லிமிடெட்டின் ஜூலை 2009 டிஎச்ஆர்பி, சாங் சுங்-லிங் தனது தனிப்பட்ட திறனில் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. மொரிஷியஸில் பதிவு செய்யப்பட்ட அதானி எண்டர்பிரைசஸின் 100% துணை நிறுவனமான அதானி குளோபல் லிமிடெட்டின் இயக்குநர்களாக வினோத் அதானி (வினோத் சாந்திலால் ஷா), சமீர் வோரா, ஜியான்டியோ ரீமுல் மற்றும் தேவராஜன் பொன்னம்பலமும் இருந்தனர் என்பதையும் அது காட்டியது.

அதானி எண்டர்பிரைசஸின் பங்குச் சந்தை தாக்கல்கள் ஜூன் 2015 வரை குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்ததைக் குறிக்கிறது.

சாங் சுங்-லிங், ஜியாண்டியோ ரீமுல் மற்றும் தேவராஜன் பொன்னம்பலம் ஆகியோர் PMC புராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் ஹோல்டிங் நிறுவனமான குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் அல்லது பிஎம்சி இன்ஃப்ரா லிமிடெட்டின் இயக்குநர்களாக இருந்தனர் என்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு 2014ல் அனுப்பப்பட்ட டிஆர்ஐ  ஷோ-காஸ் நோட்டீஸ் காட்டியது. .

விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழலில் குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக 2021 இல் தெரிவித்தோம் - இது சாப்பர்கேட் அல்லது அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் (Choppergate or the AgustaWestland scam) என்றும் குறிப்பிடப்படுகிறது. . ஆயுதத் தரகர்களுக்கான பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பட்டியலில் குடாமியின் பெயர் தோன்றியபோதே - மார்ச் 2020 லேயே சிங்கப்பூரின் நிறுவனப் பதிவேட்டில் இருந்து நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டது.

முடிவுரை

ஆந்திரப் பிரதேச மின் உற்பத்தி தொடர்பான நிலக்கரி கொள்முதல் டெண்டரில் முறைகேடு நடந்ததாக சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குத் திரும்புகையில், சர்ச்சையில் சிக்கிய முக்கிய நிறுவனமான VTPL, டெண்டர் செயல்முறைக்கு முன்பே அதானி குழுமத்தில் வேரூன்றி பின்னர் அதன் சிக்கலான வலைக்குள் படிப்படியாக காணாமல் போனது. 

சங்கிலியில் உள்ள ஒவ்வொரு இணைப்பும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொது டொமைனில் கிடைக்கின்றன—VTPLக்கு சொந்தமான மொரீஷியஸை தளமாகக் கொண்ட ஹோல்டிங் நிறுவனங்களில் முதல் இரு நிறுவனங்களுக்கும் பின்னால் சாங் சுங்-லிங்கும் அந்நிறுவனங்களை  மேம்படுத்துபவராக  வினோத் அதானியும் இருந்ததும் தெளிவாகிறது.

ஆயினும்கூட, இந்தியாவின் முதன்மையான காவல் புலனாய்வு அமைப்பு என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் சிபிஐயால் இந்த வழக்கில் அதன் விசாரணைகளை முடிக்க முடியவில்லை.

20 மார்ச் 2023 அன்று, அதானி குழுமத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மற்றும் சிபிஐயின் தகவல் அதிகாரி ஆகியோருக்கு, நாங்கள் தொகுத்துள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த, எங்களின் கேள்விகள் அடங்கிய தொகுப்பை மின்னஞ்சல் செய்தோம். இருவரிடமிருந்தோ அல்லது இருவரில் ஒருவரிடமிருந்தோ பதில் வரும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

ஒரு விளக்கக் குறிப்பு:

சிபிஐ தனது சொந்த முயற்சியில் (இந்த நிகழ்வைப் போலவே) அல்லது வேறொருவரின் புகாரின் அடிப்படையில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் (அல்லது இந்தியாவில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படும் விதிமுறைகளை பதிவு செய்யலாம்). செயல்பாட்டின் முதல் படி, 'முதற்கட்ட' விசாரணை என்று விவரிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. சிபிஐ, 'போதுமான' ஆதாரங்களைச் சேகரித்த பிறகு, அதை நீதிமன்றங்களுக்கு  அனுப்புகிறது. பின்பற்ற வேண்டிய செயல்முறைகளும் விளக்கப்பட்டுள்ளது.

===============================================

பகுதி - 3

அதானியின் உள்கட்டமைப்பு திட்டங்களின் பின்னணியில் சீன நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அதானி குழுமத்தின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் உட்பட இந்தியாவில் முக்கியமான உள்கட்டமைப்பை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளதாக இதில் விவரிக்கப்படுகிறது.

அதானி குழுமத்துடன் இணைந்த சீன நிறுவனம் இந்தியாவில் முக்கியமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், துறைமுகங்கள், கொள்கலன் முனையங்கள், விமான ஓடுபாதைகள், மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் இரயில் பாதைகள் போன்ற பிற போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இது அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் செயல்படுகிறது, ஆனால் இந்நிறுவனம் மோரிஸ் சாங் என்று அழைக்கப்படும் சாங் சியென்-டிங்கிற்கு சொந்தமானது. இவர் அதானியின் பல நிறுவனங்களின் இயக்குநரும் வினோத் அதானியின் நீண்டநாள் வணிக கூட்டாளியான சாங் சுங்-லிங்கின் மகன.

இந்தியாவில் முக்கியமான உள்கட்டமைப்பை நிறுவுவதில் சீனாவுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் ஈடுபட்டிருப்பது தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், ‘தேசியவாத’ நாடகமாடும் நரேந்திர மோடி அரசு காது கேளாத மௌனத்துடன் உள்ளது.

சீனாவின் சாங் சியென்-டிங், இந்தியாவில் அதானியின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள PMC இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்.

அதானி குழுமத்தின் ஒரு பகுதிக்கு எதிராக இந்திய அரசாங்க புலனாய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முறையற்ற அனுகூலத்தை உருவாக்குவதற்காக, செயற்கையாக விலையை உயர்த்தும் ஒரு இடைத்தரகர் மூலம் பொருட்களை அனுப்பும் நடைமுறையான ‘ஓவர் இன்வாய்சிங்’ (over-invoicing) என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதானி பவர் மகாராஷ்டிரா லிமிடெட் (ஏபிஎம்எல்), அதானி பவர் ராஜஸ்தான் லிமிடெட் (ஏபிஆர்எல்) மற்றும் மகாராஷ்டிரா ஈஸ்டர்ன் கிரிட் பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் (எம்இஜிபிடிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களில் :ஓவர் இன்வாய்சிங்' மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிதி அமைச்சகத்தின் உளவுத்துறை பிரிவான வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ - DRI) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பல்வேறு அதானி குழும நிறுவனங்களுக்கும், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானிக்கும் DRI அனுப்பிய நோட்டீஸில் அவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள Electrogen Infra FZE (EIF) என்ற நிறுவனம், PMC Projects (India) Private Limited (PMC) மற்றும் MEGPTCL ஆகியவற்றிற்கு மின்சார கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தளவாடங்களை இறக்குமதி செய்யும் போது தரகு பில்லிங் முகவராக செயல்பட்டதாக அது குற்றம் சாட்டுகிறது. சீனா மற்றும் தென் கொரியாவில் உள்ள மூல உபகரண உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக PMC மற்றும் MEGPTCL க்கு சரக்கு வந்தாலும், EIF தரகு நிறுவனம் 400% அதிகமாக உயர்த்தி பில்லிங் செய்துள்ளாதாக DRI குற்றம் சாட்டியுள்ளது. 

மின் இணைப்புகளை நிறுவுவதற்கான உபகரணங்களை இறக்குமதி கொள்ளையில் தொடர்புடைய சியென்-டிங், அதானி குழுமத்தின் பல உள்கட்டமைப்பு திட்டங்களிலும் இடம்பெற்றவர் என அறிக்கை கூறுகிறது.

24 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்ட அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை, அதன்  பங்குச்சந்தை மோசடிகள் குறித்தும் PMCயுடனான செயல்பாடுகள் பற்றியும்  குறிப்பிட்ட அளவில் பேசியது. இந்த அதானி வாட்ச் கட்டுரை, பிஎம்சிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையே உள்ள தொடர்பை ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் அப்பாற்பட்டு எடுத்துரைத்துள்ளது.

பிஎம்சி 3 மே 2005 அன்று அகமதாபாத்தில் மொரிஷியஸில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனமான ப்ராஜெக்ட் மானிட்டரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (PM&CL)ன் 100% துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது. PM&CL PMC இல் 9999 பங்குகளை வைத்திருந்தது, அதே நேரத்தில் மலாய் மகாதேவியா ஒரு பங்கை வைத்திருந்தது.

பிஎம்சியின் முதல் இயக்குநரான மஹாதேவியா - தொழில் ரீதியாக பல் மருத்துவர். இவர் கெளதம் அதானியின் நெருங்கிய நண்பர் மற்றும் தொழில்முறை கூட்டாளி. 1990களின் முற்பகுதியில் இருந்து அதானி குழுமத்துடன் தொடர்புடையவர். பல குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பணியாற்றியுள்ளார். 31 ஜனவரி 2023 அன்று, மகாதேவியா 12 அதானி குழும நிறுவனங்கள் மற்றும் GSPC LNG லிமிடெட் குழுவில் இருந்தார், இதில் அதானி குழுமம் 5.46% பங்குகளைக் கொண்டுள்ளது. 'மஹாதேவியா, பல வழிகளில், அதானியின் மறு வடிவம் மற்றும் அதானியின் நம்பகமான வலது கையாகவே கருதப்படுகிறார் என்று தி எகனாமிக் டைம்ஸில் கட்டுரை கூறுகிறது.

அதானி குழுமம் பிஎம்சியை தனது ‘குரூப் நிறுவனம்’ என்று கூறிக்கொள்ளவில்லை என்றாலும், அதானி குழுபத்துடனான பிஎம்சியின் தொடர்பு அதன் தொடக்கத்திலிருந்தே தெளிவாக தெரிந்தது. பிஎம்சியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் 2012 நவம்பரில் Constructionworld.in இணையதளம் வெளியிட்ட ஒரு நேர்காணல், 'PMC திட்டங்கள் மலாய் மகாதேவியாவின் மூளை' என்ற வாக்கியத்துடன் தொடங்கியது. PMC இன் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது 2006 மற்றும் 2012 க்கு இடையில் அதானி குழுமத்தின் டொமைன் பெயரை நிறுவனத்தின் வருடாந்திர வருமானத்தில் பயன்படுத்தியுள்ளது. PMC என்பது முறையாக விவரிக்கப்படாவிட்டாலும் கூட அதானி குழுமத்தில் உள்ள ஒரு நிறுவனம் என்பது எடுத்த எடுப்பிலே தெரிந்துவிடும்.

1 மே 2006 அன்று நிறுவனங்களின் பதிவாளருக்கு PMC தாக்கல் செய்த ஸ்கிரீன்ஷாட்

PMC ஆல் செய்யப்பட்ட ஒழுங்குமுறைத் தாக்கல்கள், 1 ஜூலை 2006 அன்று, ப்ராஜெக்ட் மானிட்டரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் மொரிஷியஸ் PMC இல் அதன் 100% பங்குகளை குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (ஜிஐபிஎல்) க்கு மாற்றியது.

ஜிஐபிஎல் என்பது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும், இது அதானி குழுமத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. DRI இன் மற்றொரு வழக்கில் ஓவர் இன்வாய்சிங் (மின்சார உபகரணங்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெட்டி பளபளப்பான வைரங்கள் மற்றும் தங்க நகைகளை ஏற்றுமதி செய்யும் போது வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது) தொடர்பான விசாரணையின் போது, DRI இந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டது. வெவ்வேறு அதிகார வரம்புகளில் உள்ள ஒழுங்குமுறை தாக்கல்களை மேற்கோள் காட்டிய DRI, GIPL நேரடியாக அதானி குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் இயக்குனர், சாங் சுங்-லிங் வினோத் அதானியின் வணிக கூட்டாளி என்றும், அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல வெளிநாட்டு நிறுவனங்களில் இயக்குனராக இருந்துள்ளார் என்றும் கூறியது.

GIPL இன் 2004-05 தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலிருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட்.

2006-07 நிதியாண்டில், ஜிஐபிஎல் பிஎம்சியில் அதன் பங்குகளை குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் (ஜிஐஎம்எல்) க்கு மாற்றியது.

அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (பின்னர் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்) இன் 2001-02 ஆண்டு அறிக்கையின் பக்கம் 51 இல், குடாமி இன்டர்நேஷனல் ஒரு ‘அசோசியேட் நிறுவனம்’ என்று விவரிக்கப்பட்டது.

PMC புராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம், www.pmcprojects.com, இப்போது செயல்படவில்லை. இருப்பினும், இணையத்தில் உள்ள இந்த வலைத்தளத்தின் ஆவணங்கள் சுவாரஸ்யமான தரவுகளை காட்டுகின்றன. 29 மே 2016 அன்று காப்பகப்படுத்தப்பட்ட இணையதளத்தின் ஸ்னாப்ஷாட் கூறுகிறது: 'PMC ப்ராஜெக்ட்ஸ் டெவலப்பர்களுடன் (sic) நெருக்கமாகப் பணியாற்றி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகத்தை ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகராக உருவாக்கியுள்ளது. மேலும் அந்நிறுவனம் இந்தியாவில் Dahej மற்றும் Hazira துறைமுகங்களை இயக்குவதில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளது. குஜராத்தின் காண்ட்லா, கோவாவில் மோர்முகாவ் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களில் கட்டுமானங்களை உருவாக்கும் பணியில் பிஎம்சி ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அபோட் பாயின்ட்டில் நிலக்கரி முனைய விரிவாக்கம், கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டம் மற்றும் வடக்கு கலிலீ பேசின் ரயில் திட்டம் (என்ஜிபிஆர் திட்டம்) போன்ற வெளிநாட்டு திட்டங்களுக்கான திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளையும் பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் வழங்குகிறது.

மேலே உள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் அதானி குழும திட்டமாகும். எனவே PMC அதானி குழுமத்தின் திட்டங்களை மட்டுமே கையாளுகிறது என்பதை இந்த இணையதளத்தின் காப்பகப்படுத்தப்பட்ட பக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

PMC இணையதளத்தின் பழைய பதிப்பில், முகப்பு பக்கத்தில், 'பிற இணையதளங்களுக்கான இணைப்புகள்' இருக்கும், இது கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு மேம்படுத்தியுள்ளது:

PMC இன் இணையதளம் ஏப்ரல் 2019 வரை செயல்பாட்டில் இருந்தது. நிறுவனம் அதன் இணையதளத்தை மூடுவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

2011-12 நிதியாண்டிற்கான பிஎம்சியின் இருப்புநிலைக் குறிப்பின்படி, குடாமி இன்டர்நேஷனல் (மொரிஷியஸ்) லிமிடெட் அதன் பெயரை பிஎம்சி இன்ஃப்ரா லிமிடெட் என மாற்றியது.

அக்டோபர் 2013 இல், PMC அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியை அதானி குழுமத்திற்குச் சொந்தமான கட்டிடமாக மாற்றியது. பிப்ரவரி 2015 இல், PMC அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ‘விடுப்பு மற்றும் உரிமம்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மற்றும் அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்ட சாந்திகிராம் டவுன்ஷிப்பில் அதானி எண்டர்பிரைசஸுக்குச் சொந்தமான AMDC என்ற கட்டிடத்தில் அதன் தற்போதைய முகவரிக்கு அதன் அலுவலகத்தை மாற்றியது.

இந்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் கடைசியாக தாக்கல் செய்த தகவலின்படி, பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் இன்னும் மொரீஷியஸில் பதிவுசெய்யப்பட்ட ஹோல்டிங் நிறுவனமான பிஎம்சி இன்ஃப்ரா லிமிடெட்க்கு சொந்தமானது.

8 பிப்ரவரி 2019 அன்று, இந்திய அரசு நிறுவனங்கள் சட்டம் 2013 இல் ஒரு பிரிவைத் திருத்தியதோடு நிறுவனத்தின் 'குறிப்பிடத்தக்க நன்மை பயக்கும் உரிமையாளர்களின்' பெயர்களை நிறுவனங்கள் வெளியிடுவதை கட்டாயமாக்கியது. திருத்தத்தின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: '... அறிக்கையிடும் நிறுவனத்தின் உறுப்பினர், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையைத் தவிர,   கார்ப்பரேட்டின் ஒரு உறுப்பு நிறுவனம் (இந்தியா அல்லது வெளிநாட்டில் இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பதிவுசெய்யப்பட்டிருந்தாலும்), மற்றும் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் - (அ) உறுப்பினராக பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவர் அல்லது (ஆ) அந்த உறுப்பினரின்  ஹோல்டிங் நிறுவனத்தில் (இந்தியா அல்லது வெளிநாட்டில் இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பதிவுசெய்யப்பட்டிருந்தாலும்) பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவர்...’.

இந்தத் திருத்தம் பிஎம்சி இன்ஃப்ரா லிமிடெட் அதன் பயனளிக்கும் உரிமையாளரின் பெயரை வெளியிட கட்டாயப்படுத்தியது. 28 செப்டம்பர் 2020 அன்று, சாங் சியென்-டிங் மொரீஷியஸில் பதிவுசெய்யப்பட்ட பிஎம்சி இன்ஃப்ரா லிமிடெட் மூலம் பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்டின் 100% பயன்பெறும் உரிமையாளர் என்று அவர் தந்தை சாங் சுங்-லிங் அறிவித்தார். நிலக்கரி கொள்முதல் விசாரணைகளிலும், அதானி நிறுவனத்தின் வட கொரியாவுடனான வர்த்தக தொடர்புகளிலும் அவரது பெயர் வெளிவந்துள்ளது. பதிவு படிவம் சாங் சியென்-டிங்கை சீனக் குடியரசின் குடிமகனாக அடையாளப்படுத்துகிறது.

பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் ஒழுங்குமுறைத் தாக்கல் (படிவம் BEN-1) இலிருந்து ஸ்கிரீன்ஷாட், பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் ஒழுங்குமுறை தாக்கல் செய்ததிலிருந்து (படிவம் BEN-1) அதானி குழுமத்துடன் நெருக்கமாக தொடர்புடைய இந்திய நிறுவனத்தின் சீன உரிமை மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான வளாகத்தில் இருந்து செயல்படுவதானது, மோடியின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் ஆத்மநிர்பர் கோஷங்களுக்கும் அதானி குழுமத்தின் வணிகம் உதவுகிறது என்ற தொடர்ச்சியான கூற்றுக்கள் மீது கேள்விகளை எழுப்புகிறது. மோடி அரசிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்ப எழுப்பும் கேள்விகள் இவை. ஆயினும்கூட, துறைமுகங்கள், துறைமுக முனையங்கள், ரயில் பாதைகள் மற்றும் மின்சாரம் கடத்தும் பாதைகள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் சீன நிறுவனத்தின் ஈடுபாட்டினால் நாட்டின் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல்கள் வரும்போதுங்கூட மோடி அரசு காது கேளாததுபோல மௌனம் காக்கிறது.

27 மார்ச் 2023 அன்று, மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்களை ஓவர் இன்வாய்சிங் மூலம் இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கிய கிளீன் சிட் சான்று வழங்கிய தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய டிஆர்ஐ தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) உத்தரவுக்கு எதிராக டிஆர்ஐயால் மனு தாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் 2021 இல், அதானிவாட்ச் ஒரு கட்டுரையை வெளியிட்டது, அதில் இந்திய அரசாங்கம் ஓவர் இன்வாய்சிங் குற்றச்சாட்டுகள் மீதான தனது விசாரணையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதாக கருதுகிறது.

(ரவி நாயர் & பரன்ஜோய் குகா தாகுர்தா)

விஜயன் - வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரைகள் : https://www.adaniwatch.org/exclusive_was_adani_s_associate_in_china_involved_in_violating_un_security_council_sanctions_against_north_korea

https://www.adaniwatch.org/exclusive_adani_group_s_china_connection_allegedly_implicated_in_the_coal_procurement_scam

https://www.adaniwatch.org/exclusive_firm_linked_to_adani_s_infrastructure_projects_owned_by_chinese_national

Disclaimer: இந்த செய்தி தொகுப்புகள் கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு