வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதா: வழக்கறிஞர்களின் எதிர்ப்பையடுத்து, சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு
வழக்கறிஞர் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கறிஞர் சங்கம் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய பார் கவுன்சிலின் அதிகாரத்தையும், தன்னாட்சி உரிமையையும் பாதிக்கும் சில விதிகள் இந்த மசோதாவில் உள்ளதாக இந்திய பார் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதாவைப்(2025) பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவுள்ளது என்று சனிக்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு, தில்லி உயர் நீதிமன்றம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களைச் சார்ந்த வழக்கறிஞர்கள், முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டங்களின் விளைவாக வந்துள்ளது. முன்னதாக, கார்க்கர்டுமா மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சி செய்யும் வழக்கறிஞர்கள், வெள்ளிக்கிழமை அன்று ஐந்தாவது நாளாகவும் சாலைகளை மறித்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குச் சற்று முன்னதாக, சனிக்கிழமையன்று தில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (DHCBA) - அதன் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான மோஹித் மாத்தூர் கையெழுத்திட்ட - தீர்மானம் ஒன்றை வெளியிட்டது. அதில், DHCBA நிர்வாகக் குழுவின் கூட்டத்தில், முன்மொழியப்பட்ட வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதாவைக்(2025) கடுமையாக எதிர்ப்பதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், திங்களன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வழியிலோ ஆஜராவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
"எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் நடத்திய போராட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் இந்த முன்மொழிவுகளுக்குத் தெரிவித்திருக்கும் கடுமையான ஆட்சேபனைகளை நிர்வாகக் குழு கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, எங்கள் சக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து உறுப்பினர்களும், பிற வழக்கறிஞர்களும் 2025 பிப்ரவரி 24, திங்கள்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பணிக்கு வராமலும், உயர் நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது இணைய வழியிலோ ஆஜராகாமலும் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்," என்று தில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் – செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (PIB) மசோதா குறித்த புது செய்திக்குறிப்பை வெளியிட்ட பிறகு – சனிக்கிழமையன்று தெரிவித்தது.
"கடந்த பிப்ரவரி 13 அன்று, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2025, சட்ட விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன் மூலம், அரசாங்கம் வெளிப்படைத்தன்மையிலும், சம்பந்தப்பட்டவர்கள், பொதுமக்களுடனான விரிவான கலந்தாலோசனை செய்வதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்படுகிறது," என்று செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (PIB) சனிக்கிழமையன்று முன்னதாகக் கூறியது.
இருப்பினும், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்திக்குறிப்பின்படி, முன்மொழியப்பட்ட சட்டத்தைப் பற்றிய ஆலோசனைகள், கோரிக்கைகளை முக்கியமானதாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு, அரசாங்கம் தற்போது கருத்தறியும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், திருத்தப்பட்ட வரைவு மசோதா சம்பந்தப்பட்டவர்களுடன் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட்டு புதிதாகப் திருத்தியமைக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நகர்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, வழக்கறிஞர் சட்டம், 1961-ன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான இந்திய வழக்கறிஞர் சங்கம், மசோதாவைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகவும், இது மத்திய அரசின் "நியாயமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய சட்டமியற்றும் நடைமுறைக்கான உறுதியான அர்ப்பணிப்பு" என்றும் சனிக்கிழமையன்று அறிக்கை வெளியிட்டது.
அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும், சட்ட வல்லுநர்களையும் "முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது வேலைநிறுத்தங்களிலோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இந்திய வழக்கறிஞர் சங்கம் (BCI) கேட்டுக்கொண்டுள்ளது."
"சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்தாலோசித்த பிறகு, சட்டத்துறையினரின் நலன்களை முழுமையாகக் கருத்தில் கொண்டு மட்டுமே 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. மேலும், அரசாங்கம் இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதையும் பார்க்க முடிகிறது" என்று BCI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, புதன்கிழமை அன்று, முன்மொழியப்பட்ட வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதா(2025) குறித்து "மிகுந்த கவலை" தெரிவித்த BCI, இந்த மசோதா தற்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டத் தொழிலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கடிதம் எழுதியிருந்தது.
BCI சுட்டிக்காட்டியுள்ள சர்ச்சைக்குரிய விதிகளில், பிரிவு 4(1)(d)-இன் படி மத்திய அரசு மூன்று உறுப்பினர்களை நியமிக்கலாம். மேலும், பிரிவு 49B-யின் கீழ் மத்திய அரசு, BCI-க்கு "கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தை" வழங்குகிறது, இதனையும் BCI எதிர்த்துள்ளது. BCI ஒரு "தன்னாட்சியுடைய அமைப்பு" என்பதால், இந்த விதிகள் அதன் அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் பறிப்பதாகக் கூறுவதோடு, இந்த விதிகளை "எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று BCI திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழில்: விஜயன்