நமது விவசாயம் மற்றும் கோழி வளர்ப்பு தொழிலை அழிக்கும் இந்திய - அமெரிக்க ஜி20 ஒப்பந்தம்

விஜயன்

நமது  விவசாயம் மற்றும்  கோழி வளர்ப்பு தொழிலை அழிக்கும்  இந்திய - அமெரிக்க ஜி20 ஒப்பந்தம்

கோழி இறைச்சி மற்றும் பிற பொருட்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் நடந்த ஜி-20 மாநாட்டில் கையெழுத்தாகியுள்ளது. பல இந்திய விவசாயிகள் மட்டுமல்லாது வர்த்தகர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜி-20 மாநட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னிலையில் அமெரிக்க அரசுப் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதாம், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு போன்ற பொருட்களுக்கு இந்தியாவால் விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல விவசாயிகளும், கோழி இறைச்சி தொழிலில் ஈடுபடும் சிறு வணிகர்களும் இந்த ஒப்பந்தம் தங்கள் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பரவலாக உண்ணப்படாத, ஆனால் இந்தியாவில் அதிக கிராக்கி உள்ள கோழிக்கால்கள், ஈரல்கள் போன்றவை இந்திய சந்தையில் கொட்டிக் குவிக்கப்படும் நிலை உருவாகும் என்பதே அவர்களின் முதன்மையமான கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள சில மதங்களால் விலக்கிவைக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு ரன்பால் தண்டா தலைமையிலான இந்திய கோழிப் பண்ணைக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்திய கோழிப்பண்ணையாளர்களின் நலன்களை மோடி அரசாங்கம் புறக்கணித்ததாக அவர்கள் கருதுகிறார்கள். கோழித் தீவனத்தில் மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி பயன்படுத்தப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்திய சிறு வணிகர்களுக்கு பாதகமாகவும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் மோடி அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் கடைசியாக நீடித்துவந்த வர்த்தக தகராறு ஒன்றையும் இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் பிரதிநிதி கேத்தரின் டாய் அறிவித்துள்ளார். உறைவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட வான்கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மட்டுமல்லாது புளுபெர்ரி, கிரான் பெர்ரி போன்ற சில அமெரிக்க விளைபொருட்கள் மீதான வரிகளையும் குறைப்பதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இது அமெரிக்க விவசாயிகளுக்கு இந்திய சந்தையில் நல்வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், சில இந்திய விவசாயிகள் இந்த ஒப்பந்தத்தால் பெரும் கவலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொண்டைக்கடலை, பருப்பு, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆப்பிள்கள் போன்ற பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதற்கான இந்தியாவின் முடிவால் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் (ராஷ்ட்ரிய கிசான் மகாசங்) தலைவர் கே.வி.  பிஜு கூறினார். இந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்றார். அமெரிக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களுக்கு எதிராக உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவிற்கு துணை நின்ற மற்ற நாடுகளுக்கும்கூட மோடி அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளது என்பதை சேர்த்துக் கூறினார்.

இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அரசாங்கம் குறைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- விஜயன் 

based on : https://www.thehindu.com/business/agri-business/farmers-to-approach-supreme-court-against-indo-us-deal-on-poultry/article67299994.ece?fbclid=IwAR00eFkag9NIEPr2Sw2DUMG7OFNDekLZ0UKqdmOszzB1ia4xpl-tuaOHxf0