சி.ஐ.எஸ்.எஃப். ல் மகளிர் படைக்கு அனுமதி: அந்த படை உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு எதிரான கோடாரிக் காம்பே!

செந்தளம் செய்திப்பிரிவு

சி.ஐ.எஸ்.எஃப். ல் மகளிர் படைக்கு அனுமதி:  அந்த படை உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு எதிரான கோடாரிக் காம்பே!

இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையில் (CISF - Central Industrial Security Force) அனைத்து மகளிர் பட்டாலியன் உருவாக்கி கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்தார். 

1969 ல் துவங்கப்பட்ட இந்த துணை இராணுவப் படையில் சுமார் 2,00,000 பேர் வேலை பார்க்கின்றனர். உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்பு, 1992 ம் ஆண்டிலிருந்து பெண்கள் மத்திய ஆயுதப்படைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது சி.ஐ.எஸ்.எஃப். ல் மட்டும் 7% சதவிகிதம் அளவுக்கு பெண்கள் பங்கேற்று வருகின்றனர். சி.ஐ.எஸ்.எஃப் க்கு இந்திய அளவில் 12 பட்டாலியன்கள் உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது 1025 பெண்கள் மட்டும் உள்ள அனைத்து மகளிர் பட்டாலியனை துவங்க முடிவெடுத்துள்ளது மோடி அரசு. இதற்கான ஆட்சேர்ப்பு, பயிற்சிகளை ஏற்கெனவே துவங்கிவிட்டது. 

பொதுவாக இராணுவம் என்பதே அதிகார வர்க்கத்தின் அடியாள்படையாக இயங்கி வரும் நிலை உலகெங்கும் உள்ளது. இந்தியாவில், தேசபக்தி எனும் பெயரில் பெருந்தேசிய வெறியூட்டப்பட்டு காஷ்மீர், ஈழம், பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாகாணங்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வருகிறது இந்த அடியாள்படை. நக்சல் வேட்டை எனும் பெயரில் பழங்குடிகளை கொன்று குவித்து வருகிறது. இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் அனைத்திலும் துணை இராணுவப் படை எனும் வகையில் சி.ஐ.எஸ்.எஃப்.ம் பங்கேற்றே வந்துள்ளது. 

2005 முதல் இந்திய- அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் மூலம், இந்திய விரிவாதிக்க நலன்களுக்கு மட்டுமின்றி அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கும் போர்வெறிக்கும் சேவை செய்யும் அடியாள்படையாக இந்திய இராணுவம் மாற்றப்பட்டுள்ளது.

அதுவரை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கி வந்த சி.ஐ.எஸ்.எஃப்., 2009 ம் ஆண்டு முதல் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சியில் பன்னாட்டு உள்நாட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது. டாட்டா, இன்போசிஸ், ஹெ.சி.எல்., அம்பானி, அதானி, பதஞ்சலி உள்ளிட்ட சுமார் 100 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குவாரிகள், சுரங்கங்கள் என கனிம வள சுரண்டல் கட்டமைப்புகள், விமானநிலையம், ரயில்வே, மற்றும் ஏகாதிபத்திய - கார்ப்பரேட் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது என தனது எலலையை விரிவுபடுத்தியுள்ளது இந்த படை. 

பாதுகாப்பு எனில் யாரிடம் இருந்து பாதுகாப்பு? கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கு எதிரான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி கார்ப்பரேட் கும்பல்களுக்கும் அதிகார சுரண்டும் வர்க்கத்திற்கும் பாதுகாப்பு. ஆதிதிரட்டல் முறையில் இங்குள்ள வளங்களை கொள்ளையடித்து செல்ல பாதுகாப்பு. பன்னாட்டு நிதிமூலதன கும்பல் தடையின்றி சுதந்திரமாக வர்த்தகம் செய்து கொள்ளையடிக்க பாதுகாப்பு. சிறுகுறு தொழில்களை அழித்துவிட்டு கார்ப்பரேட் கும்பலை செழிக்க வைக்க பாதுகாப்பு. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு எதிராக நிறுவனத்தை எதிர்த்து போராடும் போராட்டங்களை அடக்கி ஒடுக்க அதிகாரம். பயங்கரவாத அச்சுறுத்தல் எனும்பெயரில் தூத்துக்குடி படுகொலை மாடலில் உழைக்கும் மக்களை காக்கை குருவி போல சுட்டுக்கொல்ல அதிகாரம். இதுவா? தேச பக்தி(!?)

புதிய காலனிய நலன்களிலிருந்து மாபெரும் உள்கட்டமைப்பு - இராணுவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் வேலையில்லாப் பட்டாளம் அதிகரித்து வரும் வேளையில், பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.  பெண் தொழிலாளர்களின் சுரண்டலுக்கு பாதுகாவலான பெண்கள் மட்டுமே அடங்கிய சிறப்பு படை பிரிவு இருந்தால், ஜனநாயக முகமூடி அணிந்துக்கொண்டே தேசபக்தி எனும்பெயரில் அவர்களை அடக்கி ஒடுக்கமுடியும் என கருதுகிறது அரசு. அதற்காகத்தான் இத்தகையதொரு முன்னேற்பாட்டை செயல்படுத்தி வருகிறது பாஜக அரசு. 2 ஆண்டுகளுக்கு முன் அக்னிபாத் எனும் பெயரில் இராணுவத்தை இந்துத்துவ- கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை வெளியிட்டது. தற்போது மகளிர் பட்டாலியன் படையை அமைத்து கூண்டோடு கார்ப்பரேட் சேவைக்கு அனுமதித்துள்ளது. 

அதிகார வர்க்கத்தின் சுரண்டல் அமைப்பில் ஆண்- பெண் சமத்துவம், பெருந்தேசிய வெறிக்கு சேவை செய்வதில் ஆண்-பெண் சமத்துவம் என்ற பேச்சுக்கு இடமளிக்க முடியாது. 

சி.ஐ.எஸ்.எஃப்.ல் இணைந்து பணிபுரிவது என்பது தேசபக்தி அல்ல.  ஆனால் பெரும்பாலானோர் கூலிப்படையினராகவே உள்ளனர். விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அதிகாரவர்க்க கைக்கூலி நடிகை கங்கனாவை கன்னம் பழுக்க வைத்தார் குல்வீந்தர் கவுர் எனும் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் வீராங்கனை. அது தேசபக்தியின் ஒரு வடிவம் ஆகும். ஒரு சிலர்தான் இதுபோன்ற உணர்வுடன் உள்ளனர். அவர் போன்ற ஒரு சில படைவீரர்களின் உண்மையான  தேசபக்தியையும் மழுங்கடிப்பதற்காகதான் தற்போது இந்த சிறப்பு பட்டாலியனை உருவாக்கி உள்ளதாக பார்க்க முடிகிறது. தேசப்பாதுகாப்பு எனும் பெயரில் உழைக்கும் வர்க்கப் பெண்களை வீழ்த்தும் கோடாரிக் காம்பாகவே இவர்கள் செயல்பட போகிறார்கள்.

எனவே,  ஆளும் வர்க்க கும்பல்களின் இந்த தேசபக்தி கோஷங்களுக்கு மயங்காமல் உழைக்கும் வர்க்க பெண்கள் தங்களது வர்க்க விடுதலைக்காக -  இந்த நாட்டின் உண்மையான விடுதலைக்காக தன் வர்க்கத்தை சேர்ந்த ஆண்களின் தோளோடு தோள் சேர்த்து உழைப்பாளர் முன்னணிப் படையை உருவாக்க முன்வர வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தி. 

- செந்தளம் செய்திப்பிரிவு