ஜனநாயகத்தின் கழுத்தை முறிக்கும் அடாவடியான நடவடிக்கை

தங்களது கட்சியின் பெயரில் செயல்படும் முக்கியமான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஜனநாயகத்தின் கழுத்தை முறிக்கும் அடாவடியான நடவடிக்கை

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், போதிய நிதியின்றி தந்தளிக்கும் அபாயத்தை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டுமல்ல அதன் அன்றாட செயல்பாடுகளுக்கேகூட நிதித் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிவிடும் போலிருக்கிறது. தங்களது கட்சியின் முக்கியமான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ள நிலையில் ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. 2018-19 ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்த காரணத்திற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியின் இணையவழி பணந்திரட்டும் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தையும்கூட வருமானத் துறை முடக்கியுள்ளதாம். மேலும், வருமான வரிக்கான மேல்முறையீட்டு தீர்பாணையத்திடம் முறையிட்ட போது, வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வரை ஒத்தி வைத்ததோடு, குறிப்பிட்ட காலத்திற்கு வங்கி கணக்குகள் இயங்க அனுமதித்திருப்பதாகத் தெரிகிறது. அதுவரையில் 115 கோடி ரூபாயை பிணையமாக வைத்திருக்க வேண்டுமென நிபந்தனையும் விதித்துள்ளது. அதன்படி, 115 கோடிக்கு அதிகமான பணத்தை செலவு செய்வதற்கு அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில், நடப்பு கணக்கில் தங்களிடம் அவ்வளவு பணமில்லை என காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.

வருமான வரித் துறை கூறும் காரணங்கள் ஏதும் நேர்மையானதாக தெரியவில்லை, மேலும், வருமான வரித் தொடர்பான விதி மீறல்களுக்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் வழக்கமானது கிடையாது.  2018-19 ஆம் ஆண்டிற்கான(தேர்தல் நடக்கவிருந்த வருடம்) வருமான வரி கணக்கை காங்கிரஸ் கட்சி  சில நாட்கள் தாமதாக தாக்கல் செய்துள்ளது; மேலும், அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரொக்கமாக வழங்கிய 14.4 லட்ச ரூபாய் அளவிலான வருமானக் கணக்கை சரியாக கணக்கு காட்டததாகவும் தெரிகிறது.

சில நாட்கள் தாமதமாக ஐ.டி. தாக்கல் செய்ததற்காக, வருமானக் கணக்கை சரியாக காட்டாததற்காக 210 கோடி ரூபாய் தண்டம் விதிப்பது எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வருமானத் வரித் துறை சோதனை நடத்தியிருந்தது; அப்போது நடத்தப்பட்ட சோதனைக்கு கடந்த வாரம் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ம.பி. காங்கிரஸ் தலைமை கூறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அடுத்த நாளே இதுபோன்ற அடாவடியான நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும்.

எதிர்கட்சியையும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களையும் துன்புறுத்துவது மட்டுமல்லாது, மிரட்டி பணிய வைப்பதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை ஒரு கருவியாக பாஜக அரசாங்கம் எப்படி பயன்படுத்துகிறது என்பதன் ஒரு பகுதியாக வருமானத் வரித் துறையின் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட தேர்தலில் பங்கேற்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சியைத் தள்ளியுள்ளது. எதிர்கட்சிகளின் முதுகெலும்பை உடைத்து முடமாக்கியப் பிறகு தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றும் விசயம் மட்டுமல்ல, ஜனநயாகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானதாகும்.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.deccanherald.com/opinion/editorial/brazen-attempt-to-throttle-democracy-2900027

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு