சீனாவின் கடன் வலையில் இந்தியா : குஜராத்தில் சாலை அமைப்பதற்கு 500 மில்லியன் டாலர்கள் கடன் அளித்த பிரிக்ஸ் வங்கி

தமிழில் : விஜயன்

சீனாவின் கடன் வலையில் இந்தியா : குஜராத்தில் சாலை அமைப்பதற்கு 500 மில்லியன் டாலர்கள் கடன் அளித்த பிரிக்ஸ் வங்கி

புத்தாண்டின்(2024) முதல் கடனாக $500 மில்லியன் டாலர்களை BRICS வங்கி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது- இது எதைக் குறிக்கிறது?

சுருக்கம்:

புதிய வளர்ச்சி வங்கி (NDB) என்று அழைக்கப்படும் BRICS வங்கி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு குறிப்பாக குஜராத்தில் சாலை அமைப்பதற்காக $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதிநவீன சாதனங்களையும், தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, சுமார் 13,500 கிலோமீட்டர் நீளமுள்ள புத்தாக்கமான, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய கிராமப்புற சாலைகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரகம், எகிப்து, ஈரான் மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்ததைத் தொடர்ந்து BRICS வங்கி விரிவடைந்து வருகிறது. இருப்பினும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலி இதில் சேரப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

BRICS வங்கி என்று பொதுவாக அறியப்படும் புதிய வளர்ச்சி வங்கி (NDB), 2024 ஆம் ஆண்டிற்கான தனது குறிப்பிடத்தக்க கடன் அறிவிப்பின் மூலம் நிதித் துறையில் துணிச்சலான நகர்வை முன்னெடுத்துள்துள்ளது. குஜராத்தில் அமையவிருக்கும் ஒரு விரிவான சாலை கட்டுமான திட்டத்திற்காக $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகவே ஒரு அதிரடியான நடவடிக்கைதான். இந்த அதிரடியான கடன் ஒப்புதல் என்பது வங்கியின் பலத்தை நிரூபிப்பது மட்டுமல்லாது, உலக அரங்கில் அதன் நோக்கம் என்னவென்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

வளர்ச்சிக்கான பாதை: பிரிக்ஸ் வங்கியும், இந்திய உள்கட்டமைப்புத் துறையும்

குஜராத்தில் கிட்டத்தட்ட 13,500 கிலோமீட்டர் நீளத்திற்கு உருவாக்கப்படும் கிராமப்புற சாலைத் திட்டத்தை துவக்குவதற்கு BRICS வங்கியின் கடன்தொகை தயாராக உள்ளது. இந்தத் திட்டம் வெறுமனே தார் சாலை அமைப்பதை விட பல புத்தாக்கமான, தாங்குதிறன்களையுடைய அம்சங்களை கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தச் சாலைகள் சவாலான தட்பவெப்பநிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன, புவிசார் செயற்கை பொருட்கள், புவிச்செயற்கைத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் துணிகள், சட்டகங்கள் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தி சாலைகளை வலுப்படுத்துதல் போன்ற மேம்பட்ட நுட்பங்களை உள்ளடக்கியதாக உள்ளது. பொறியியல் நுட்பத்தை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சார்ந்த தொலைநோக்கு பார்வையையும் உள்ளடக்கிய கலவையாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, BRICS வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளையும் நிறைவேற்றும் விதமாக இந்த கிராமப்புற சாலைத்திட்டம் அமைந்துள்ளது.

காலநிலை-மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய, கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கு தங்களது வங்கி துணை நிற்கும் என்று NDB-ன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான விளாடிமிர் கஸ்பேகோவ் உறுதியளித்துள்ளார். இந்த நடவடிக்கை வெறுமனே நிதி பரிவர்த்தனை சார்ந்தது மட்டுமல்ல; பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் நீடித்த, வளங்குன்றா வளர்ச்சியை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பரந்த, நீண்டகாலத்  திட்டத்தின் மறுவடிவமாகும்.

எல்லைகளை விரிவுபடுத்துதல்: அதிகரித்துவரும் பிரிக்ஸ் வங்கியின் செல்வாக்கு

BRICS வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் சர்வதேச நிதித்துறையில் அதன் அதிகரித்து வரும் செல்வாக்கையே அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவைச் சேர்த்த்தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரகம், எகிப்து, ஈரான் மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளை இணைத்ததால் கூட்டமைப்பு கணிசமான அளவிற்கு விரிவடைந்திருக்கிறது. இது வெறும் வங்கியின் கொடுக்கல் வாங்கல் செயல்பாடுகளுடன் சுருக்கிவிட முடியாது; இது புவிசார் அரசியல் தாக்கத்தையும் கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதோடு, இதுவரையிருந்து வந்த கூட்டணிகளை மிஞ்சும் வகையிலான நிதி மூலதன வலைபின்னலை பிரிக்ஸ் வங்கி மிகக் கவனமாக கட்டமைத்து வருகிறது.

இருப்பினும், எல்லோரும் இந்த அகல்விரிவாக்கத்தை ஆதரிக்கவில்லை. அர்ஜென்டினா அதிபர் Javier Milei என்பவர் வெளிப்படையாகத் தான் கூட்டமைப்பில் சேரப் போவதில்லை என்று கூறியுள்ளார். இந்த முடிவு குறிப்பிடத்தக்க முரண்பாட்டையே வெளிப்படுத்துகிறது, மேலும், பரஸ்பர ஒத்துழைப்பை நல்கும் வகையில் உலக நிதி மூலதன அமைப்பை தங்களுக்கு ஏற்றாற் போல மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள BRICS வங்கி எதிர்கொண்டுவரும் சிக்கல்களில் இவையும் ஒன்று என்பதையே குறிக்கிறது.

2024 ஆம் ஆண்டில், பல்துருவ உலக ஒழுங்கை வலுப்படுத்துவது, உலகளவில் சமச்சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறி BRICS-ன் தலைமைப் பொறுப்பை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. அதிபர் விளாடிமிர் புதினின் பார்வை அறிவியல், சுகாதாரம், சூழலியல், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கூட்டமைப்பின் செல்வாக்கை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. இந்த பரந்த அணுகுமுறை, நிதி மூலதன பரிவர்த்தனைகளுக்கு அப்பால் செல்வதோடு, சர்வதேச ஒத்துழைப்புக்கு வேண்டிய முழுமையான அடித்தளத்தை உருவாக்குவகுவது என்ற இலக்கையும் கொண்டிருக்கிறது.

ரஷ்யா தலைமை தாங்கிய போது, உலக பொருளாதார கட்டமைப்பில் BRICS கூட்டமைப்பின் பங்கை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல உயர்ந்த இலக்குகளை கொண்ட திட்டங்களும், முன்னெடுப்புகளும் செயல்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் பணவியல் மற்றும் நிதியியல் துறையில் BRICS-இன் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்ததோடு, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகத்தில் தேசிய நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தது போன்றவையும் ரஷ்யா ஊக்குவித்ததுதான். தற்போதுள்ள அதிகார சமநிலைக்கு எதிராக போட்டியிடுவதோடு, உலக நிதி மூலதனத்தின் இயக்கப்போக்கையே மறுவடிவமைக்கும் பலத்தையும் கொண்டுள்ள ஒரு அதிரடியான நடவடிக்கையாகவே இவை பார்க்கப்படுகிறன.

இந்த ஆண்டில் பிரிக்ஸ் வங்கி வழங்கவிருக்கும் முதல் கடனை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்திருக்கிறது என்பதை, வெறுமனே கொடுக்கல் வாங்கல் சார்ந்த வங்கிச் செயல்பாடாக பார்க்க முடியாது; மாறாக ஒரு தொலைநோக்கத் திட்டத்தை கொண்டிருக்கிறது. வளர்ச்சியை தக்கவைத்தல், நிதித்துறையில் அனைவரையும் உள்ளடக்கிய அனுகுமுறை, சர்வதேச விவகாரங்களில் வெறுமனே பொருளாதார நலன்களைத் தாண்டிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பது போன்ற தொலைநோக்குத் திட்டத்தை கொண்டிருக்கிறது. தனது தொலைநோக்குத் திட்டத்தை அடைவதற்கான பாதையில் BRICS வங்கி பல சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறது என்றாலும், இந்தப் புத்தாண்டின் துவக்கத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படியின்(அறிவிப்பின்) குறிப்புகளை மிக உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.cryptopolitan.com/brics-banks-inaugural-2024-loan-of-500m/?fbclid=IwAR2sIP0mR37i0FM00maJ1Jw_mUWa1ro7Xaq_eosooZeD3KHRUPDqD8-pSog