ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தாது : ப்ளூம்பெர்க்

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு அதானி பங்காற்றவில்லை என்பதை நிறுவாத ஹிண்டன்பர்க் வாதங்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு

ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தாது : ப்ளூம்பெர்க்

அதானி, குறுகியகால விற்பனையாளர் குறித்து ஹிண்டன்பர்க் எலியட்டிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்

எந்தவொரு குறுகியகால விற்பனையாளருக்கும் (short seller) இது முக்கிய தலைப்பு செய்தி. நியூயார்க் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வர்த்தக அமைப்பு, மின்சார வாகன உற்பத்தியாளர்களான நிகோலா கார்ப் மற்றும் லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ் கார்ப் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பியதற்காக முதலில் வால் ஸ்ட்ரீட்டின் கவனத்தை ஈர்த்தது. தற்போது "கார்ப்பரேட் வரலாற்றில் ஜாம்பாவான்" என்று அழைக்கப்படும் அதானி குழுமத்தின் மீதும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் கௌதம் அதானியின் மீதும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

இருப்பினும், இது சந்தையின் மீது அதிக தாக்கத்தை செலுத்தவில்லை. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் 75% பங்குகளை அதானியே தன் வசம் வைத்துள்ளார். அதைத்தொடர்ந்த பங்குகளை பொது முதலீட்டாளர்களிடம் கோரும் போதுதான்  ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால்தான் 18 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொன்றும் 3,276 ரூபாய் ($40.15) என்ற உயர்வான விலையில் விற்க முடிந்தது இதில் உயர்மட்ட முதலீட்டாளர்களில் அபுதாபி முதலீட்டு ஆணையமும் அடங்கும் என்று உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், அதானியில் செல்வம் ஒரே நாளில் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிந்தாலும் (பிறருக்கு இது மிகப்பெரிய தொகைதான்) அது அதானியின் நிகர மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அவரிடம் இன்னும் 100 பில்லியன் டாலருக்கு மேல் செல்வம் உள்ளது. அதானி நிறுவனம் வியாழன் அன்று ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறியது, ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை "ஆராய்ச்சியின்றி கேடு விளைவிக்கும் நோக்கிலிருந்து வைக்கப்பட்டது" என்று கூறியது.

ஹிண்டன்பர்க்கின் முயற்சிகள் ஏன் குறைந்துவிட்டன என்று கேட்பது பயனுள்ளது. அதன் ஆராய்ச்சியின் படி, ஏழு அதானி நிறுவனங்கள் 85% வீழ்ச்சியைக் கண்டிருப்பதற்கு காரணம் அவற்றின் வானுயர் மதிப்பீடுகளே.

முதலில், அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்படாமல் அதானி பிம்பம் நொறுங்க வாய்ப்பில்லை. ஆசியாவின் வளர்ந்து வரும் சந்தைகளை உற்று நோக்கினால், உயர்ந்த மதிப்பீடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய கார்ப்பரேட் ஆளுகை கொண்ட ஒரே நிறுவனமாக அதானி மட்டுமில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். சீனாவின் எச்என்ஏ குரூப் கோ. மற்றும் எவர்கிராண்டே குழுமம் இயல்பாகவே நினைவுக்கு வரும்.

பல ஆண்டுகளாக, குறுகியகால விற்பனையாளர்கள் எச்என்ஏ மற்றும் எவர்கிராண்டேவை விரும்பியுள்ளனர் - சிறிதும் பயனில்லை. எவர்கிராண்டேவின் தலைவர் ஹுய்காயன், 2017 இல் சீனாவின் பணக்காரர், குறிப்பாக, பங்குச் சந்தையில் குறுகியகால ஏற்ற இறக்கங்களை உருவாக்கும் கலையில் கில்லாடி. பல ஆண்டுகளாக, அவர் தனது பங்குகள், பத்திரங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக மற்ற தொழிலதிபர்களுடனான தனது நட்பைப் பயன்படுத்தினார்.

சீனா தனது அணுகுமுறையை மாற்றியபோதுதான் இந்த குறுகியகால விற்பனை முறை வேகம் பெற்றது. வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களை பொறுப்பற்ற முறையில் பின்பற்றியதாகக் கருதப்படும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் 2017ல் எச்என்ஏ சிக்கலில் சிக்கியது. இதேபோல், சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்ததால் 2021ல் ஹுய்யின் பேரரசு வீழ்ச்சியடைந்தது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, எவர்கிராண்டே இப்போது கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு திட்டத்தைப் பற்றி விவாதித்து வருகிறார், அதே நேரத்தில் அதன் தலைவரின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 3 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

அல்லது முதலீட்டாளர்களுக்கான ஆர்வலர் நிறுவனம் எலியட், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உண்டாக்கிய மாற்றத்தினை கவனிக்கவும். இது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகும். 2016ன் பிற்பகுதியிலிருந்து 2020 வரை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட பிரச்சாரம் மூலம் எலியட் 160% வருமானத்தை ஈட்டியுள்ளது. எலியட் மேல்மட்ட தொடர்புகளை பெற்றுள்ளது. ஏனெனில் சாம்சங்கின் தலைவர் ஜே ஒய். லீயோடு சேர்ந்து – மாற்றத்திற்கு தடையாக இருந்த அப்போதைய ஜனாதிபதியான பார்க் கியூன்-ஹேயை மோசமான ஊழலில் சிக்கவைத்து இறுதியில் பதவியிலிருந்து நீக்கச் செய்தது என்று ப்ளூம்பெர்க் ஆய்வுகள் தெரிவிகின்றன.

நரேந்திர மோடியின் ஆட்சியில் அதானியின் அதிர்ஷ்டம் உயர்ந்தது. அவரது தொழில்துறை சாம்ராஜ்யம், விமான நிலையங்களை இயக்குவது முதல் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறன்களை உருவாக்குவது வரை, மோடியின் பொருளாதார திட்டங்களுடன் பிண்ணிப் பிணைந்துள்ளது. எனவே மோடி தனது "மேக் இன் இந்தியா" அரசியலை மாற்றாத வரை, குறுகியகால விற்பனையாளர்கள் வினை மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.

இரண்டாவதாக, ஹிண்டன்பர்க்கின் பல புகார்கள் கார்ப்பரேட் ஆளுகையில் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது, அதன் அறிக்கை ஷெல் நிறுவனங்களின் தெளிவற்ற தணிக்கைகளை பற்றியுள்ளது. ஆனால் நீண்டகாலமாக வளர்ந்து வரும் சந்தை முதலீட்டாளர்களுக்கு இதில் ஆர்வமில்லை. அவர்களுக்கு, அதானி குழுமம் தென்கொரிய சேபோல் நிறுவனம் போல் தெரிகிறது, அது இன்று வரை, சாம்சங் மற்றும் ஹூண்டாய் மோட்டார் கோ போன்றவற்றால் முதலீடு செய்யப்படுகின்றன. மோசமான நிர்வாகம் குறித்த தொடர்ச்சியான புகார்கள் இருந்தபோதிலும் - விமர்சனங்களை இருதரப்பும் மறுக்கின்றன. எனவே, அதானி மோடி அரசாங்கத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்காற்றவில்லை (அல்லது அடுத்த தென் கொரியாவாக மாறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை) என்பதை ஹிண்டன்பர்க் நிறுவாவிட்டால், அதன் வாதங்கள் செவிடன் காதில் ஓதுவதற்கு ஒப்பாகும்.

இப்போது என்னை தவறாக எண்ண வேண்டாம். நான் குறுகிய கால விற்பனையாளர்களை விரும்புகிறேன். உற்சாகத்திற்கு வாய்ப்புள்ள சந்தையில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் நியூயார்க்கில் அமர்ந்திருப்பவர்களுக்கு வளரும் நாடுகளின் சிக்கல்கள் பற்றிய அறிவார்ந்த பார்வை உள்ளதா? என்றால் நிச்சயமாக இல்லை.

- ஷுலி ரென்

வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.washingtonpost.com/business/what-adani-short-seller-hindenburg-can-learn-from-elliott/2023/01/26/a083cd68-9dbe-11ed-93e0-38551e88239c_story.html