ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாசிச ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் அடக்குமுறை திட்டம்

பி.ஜே. ஜேம்ஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாசிச ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் அடக்குமுறை திட்டம்

ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்  சென்றாண்டு செப்டம்பர் மாதத்தில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 14 அன்று இக்குழு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. டிசம்பர் 12, 2024 ல் உயர் மட்ட குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்பதாகவும், நடந்து கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்யப் போவதாகவும் மோடி அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டுமெனில் மாநில சட்டமன்றங்களின் அங்கீகாரத்துடன் தனியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டியிருக்கும் என்பதால், தற்போது இது வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 1950–ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக குடியாட்சி முறையை இந்தியா ஏற்றுக்கொண்டாக அறிவிக்கப்பட்ட பிறகு, 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடந்தன. எனினும், பல நேரங்களில் சட்ட மன்றங்களும், நடாளுமன்றமும் ஐந்தாண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே  அடுத்தடுத்து கலைக்கப்பட்ட காரணத்தால், அவற்றிற்கான தேர்தல்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, இந்த யதார்த்தமான நிலைமைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டதால், மையமான அரசியல் விவகாரங்களில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கடுமையான விவாதங்கள் எதுவும் எழவில்லை. பொதுவாக ஆளும் வர்க்கத்தின் அரசியல் சீரழிந்து, சிதைந்து கொண்டிருந்த போதிலும், பிராந்திய, மாநில அளவிலான கோரிக்கைகளை முன்வைத்து பல பிராந்திய கட்சிகள், மாநில கட்சிகள் 1960களில் இருந்தே வேகமாக வளர ஆரம்பித்தன.

இதுவோருபுறம் இருந்தபோதிலும், அவசரகால நெருக்கடிக்கு பிறகு, குறிப்பாக புதிய தாராளமய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் RSSம், அதன் கிளை அமைப்புகளும் அசுர வேகத்தில வளர ஆரம்பித்தன. ராம ஜென்மபூமி இயக்கம் துவங்கி, 1992ல் பாபர் மசூதி இடிப்பு வரையிலான நிகழ்வுகள் இதற்கு முக்கியமாக பங்களித்தன; நாட்டின் மையமான அரசியல் வாதங்களாக மாறுவதற்கு வழிவகுத்தன. அகில இந்திய அளவில் ஒற்றை இந்து பெரும்பான்மைவாத கருத்தியலை பரப்புவதற்கு பாஜகவை தனது அரசியல் கருவியாக பயன்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்.ன் நடவடிக்கைகள் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த போது வேகமெடுக்க ஆரம்பித்தன. முதலில் மதிப்புக் கூட்டு வரி, பின்னர் ஜி.எஸ்.டி. வரி விதிப்புகள் என மிகவும் பிற்போக்கான புதிய–தாராளமய மறைமுக வரி முறையை அறிமுகப்படுத்தியது வாஜ்பாய் ஆட்சிதான். வரிவிதிப்பில் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமையை பறித்து ஒற்றை ஆட்சி அமைவதற்கான பொருளாதார அடித்தளமிட்டது வாஜ்பாய் ஆட்சிதான். இதற்கும், ஒரே தேர்தல் முறைக்கும் நேரடி தொடர்பு இருந்ததோடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டுமென விடாப்பிடியாக பேசி வந்த அத்வானி போன்ற தலைவர்களின் பெருமுயற்சியும், பேராதரவும் வாஜ்பாய் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்தது. மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி முறையை உயர்த்திப் பிடிக்கும் வகையில், வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் 1999–ம் ஆண்டே சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கியது.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, 60 ஆண்டு காலமாக இருந்துவந்த திட்டக் குழுவை கலைத்துவிட்டு ஆகஸ்ட் 2014ல் நிதி(NITI) ஆயோக் உருவாக்கப்பட்ட பிறகு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. தேர்தல் செலவினங்கள் குறையும், வாக்குப் பதிவு அதிகரிக்கும், நிர்வாகத் திறன் மேம்படும், மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் குறையும், அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது குறைந்து அதனால் ஏற்படக்கூடிய செலவுகளும் குறையும் என்பன போன்று ஏராளமான நன்மைகள் ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதனால் கிடைக்கும் என்பதை மட்டும் ஒரு தலைபட்சமாக முன்வைத்து 2017ம் ஆண்டு மோடி தலைமையிலான நிதி ஆயோக் அமைப்பு விவாத அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்கு கிடைக்கும் நன்மைகள், கூட்டாட்சி தத்துவமும், இந்திய துணை கண்டத்தின் பன்முக கலாச்சாரமும் தகர்க்கப்படுவது போன்ற நாசகரமான பின்விளைவுகள் பற்றியெல்லாம் பேசாமல் இந்த விவாத அறிக்கை வாய்மூடி கள்ள மௌனம் சாதித்தது. 

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லாத போதும், மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொய்வின்றி நடந்து கொண்டுதான் வருகின்றன என்பது அப்பட்டமாக தெரிகிறது. செப்டம்பர் 2023ல் கோவிந்த் குழு அமைக்கப்பட்டது, மார்ச் 2024ல் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, டிசம்பர் 2024ல் மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதலையும் பெற்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்படுவதும், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார அமைப்புகளின் தீவிரமான இந்துத்துவ தாக்குதலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வில்லையெனில், நாட்டிற்கு மட்டுமல்ல, துணை கண்டத்தின் மூலைமுடுக்குகளில்கூட இருக்கும் ஏராளமான பன்முக தன்மைக்கும் பேரழிவாக மாறிவிடும். மேலும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தேசிய நலன்கள் என்ற போர்வையில் மாநில நலன்களை குழிதோண்டி புதைப்பதற்கு வழிவகுக்கும்.

இந்த நேரத்தில், சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தினால் பல்வேறு மொழிவாரி மக்களின், இனக்குழுக்களின் குறிப்பான பிரச்சனைகள் முக்கியத்துவமற்றதாக மாற்றப்பட்டு புறக்கணிக்கப்படும்; அகில இந்திய கட்சிகளுக்கு குறிப்பாக மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்கு அதிகமான நன்மைகளை கிடைக்கச் செய்து மாநில அரசியல் சக்திகளின் முக்கியத்துவத்தையும், செல்வாக்கையும் குறைத்துவிடும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு பாராதூரமான பாதிப்புகள் ஏற்படும். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் போதுமான அளவு கிடைக்கச் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதுவரை பேசப்படவே இல்லை. முதற்கட்ட அறிக்கை வழங்கிய தகவல்படி பார்தோமானால், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு தற்போதிருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமான அளவிற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தேவைப்படுகிறது; அனைத்தும் திட்டமிட்டபடி சுமூகமாக நடந்தாலும் இதற்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது தேவைப்படும். தயாரிப்பு வேகத்தை அதிகப்படுத்தினாலும், உற்பத்தியை இரண்டு மடங்காக மாற்றுவதற்கான திறன் இந்திய தயாரிப்பு நிறுவனங்களிடம் இல்லை என்பதால், சிப்’கள், இன்னப்பிற முக்கியமான பொருட்களை அந்நிய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இது தேர்தல்கள் நடத்துவதில் எதிர்பாராத சிக்கல்களை தோற்றுவிக்கும். 

சுருக்கமாக சொல்வதெனில், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே போலீஸ் என அடுக்கடுக்காக கொண்டு வரப்பட்ட பல திட்டங்களைப் போலத்தான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் என்பது அப்பட்டமாக கூட்டாட்சி முறைக்கு எதிராக, மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சிமுறையை மேலிருந்து திணிக்கிறது என்பதே பிரச்சனையின் மையமான விசயமாக இருக்கிறது. இத்திட்டம், பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல இனக்குழுக்கள் வாழக்கூடிய இந்திய கூட்டரசின் மீது கொடூரமான, பாசிச தாக்குதலை தொடுத்துள்ளது. இந்தப் பாசிசத் தாக்குதலை எதிர்த்து முறியடிப்பதற்கு அனைத்து ஜனநாயக, மதச் சார்பற்ற, பாசிச எதிர்ப்பு சக்திகளும், சமூக அக்கறையுள்ளவர்களும் ஒன்றுபடுமாறு அறைகூவி அழைக்கிறோம்.

(பி.ஜே. ஜேம்ஸ், பொதுச் செயலாளர், சிபிஐ(எம்எல்) ரெட் ஸ்டார்)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://redstaronline.in/2024/12/14/one-nation-one-election-draconian-move-towards-a-fascist-unitary-regime/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு