பெண்கள் மேம்பாட்டுக்கான “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” திட்டத்தின் 79% சதவிகித நிதியை விளம்பரங்களுக்காக மட்டுமே வீணடித்துள்ளது மோடி அரசு

செந்தளம் செய்திப் பிரிவு

பெண்கள் மேம்பாட்டுக்கான “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” திட்டத்தின் 79% சதவிகித நிதியை விளம்பரங்களுக்காக மட்டுமே வீணடித்துள்ளது மோடி அரசு

(இந்த செய்தி தகவல் 2021 ம் ஆண்டின் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது)

“பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்” என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 79 சதவீதம் விளம்பரத்திற்காக மட்டுமே செலவழிக்கப் பட்டுள்ளது என்று மகளிர் உரிமைக்கான நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்தும், அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்வதற்காக இருவகையான குழுக்கள் உருவாக்கப்படுகிறது. சில துறைகளுக்கு நிரந்தரமாக குழுக்கள் அமைக்கப்படும், மற்ற சில குழுக்கள் தேவையேற்படும் பட்சத்தில் குறிப்பட்ட காலத்திற்கு மட்டும் உருவாக்கப்படும். அவ்வகையில், மகளிர் உரிமைக்கான நாடாளுமன்றக் குழு என்பது பல்வேறு நிலைக்குழுக்களில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும், நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் துவங்கும்போது இக்குழுவிற்கு மக்களவையிலிருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். இவர்களில் ஒருவரை இக்குழுவிற்கான தலைவராக சபாநாயகர் நியமிப்பார். அவ்வகையில், 2021-ல் அமைக்கப்பட்ட மகளிர் உரிமைக்கான நிலைக்குழுவின் தலைவராக பாஜகவின் முன்னாள் எம்.பி. ஹிணா விஜயகுமார் கெவித் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தலைமையிலான நிலைக்குழு வழங்கிய அறிக்கையில்தான் மக்கள் நலத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் பணம் எவ்வாறு வெற்று விளம்பரத்திற்காக வீணடிப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடிய பழைய காலனியாட்சியின் போதுகூட 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்துள்ளதாக 1901-ல் சேகரிப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால், சுதந்திரம் பெற்றுவிட்டதாக சொல்லி குடியரசு தினம், சுதந்தர தினம், பெண்கள் தினம், குழந்தைகள் தினங்களை மட்டும் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் கடந்த 70 ஆண்டுகளாக அமல்படுத்தி வரும் புதிய காலனிய கொள்கைகளால் பாலின சமத்துவம் என்பது பழைய காலனியாட்சி காலத்தைவிட பின்னோக்கி சென்றுவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று  2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. அதோடு,1961-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை1991-ஆம் ஆண்டிலிருந்து படுவேகமாக சரிந்து கொண்டு வந்துள்ளது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 1991-ல் 945 பெண் குழந்தைகள், 2001-ல் 927 குழந்தைகள், 2011-ல் 918 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன என்று அந்தந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழகமும் 1990களுக்கு பிறகான இந்தப் போக்கை தவிர்க்க முடியாமல் பின்னோக்கியே சென்றுள்ளது. இதில் மட்டுமல்லாது, மக்கள் நலன் சார்ந்த எந்த புள்ளிவிவரத் தகவல்களிலும் இந்திய அளவிலான சராசரியோடு தொடர்புபடுத்தி, தமிழகம் ஒப்பீட்டளவில் முன்னேறிவிட்டதாக கூறி வாய்ச்சவடால் அடித்து வருவதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். 

இப்படிப்பட்டதொரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டதால்தான் 1997-ல் பெண் சிசுக் கொலைகளை குறைப்பதற்கும், பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும் பாலிகா சம்ரிதி யோஜனா(BSY) என்ற பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. பினனர், 2004-ல் மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களின் கல்விக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைப்பதற்காக கஸ்தூரி பாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2008-ல் தனலட்சுமி திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 918 என்ற நிலைக்கு சரிந்துவிட்டதென்று  2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. மேற்கண்ட அனைத்து திட்டங்களும் படுதோல்வி அடைந்துள்ளன என்பதையே இவை நிரூபிக்கின்றன. இதுபோன்ற வெற்றுத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவிட்டுத்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்போம், பெண் பிள்ளைகளை படிக்க வைப்போம் (Beti Bachao  Beti padhao - BBBP) என்ற பெயரில் மற்றொரு வெற்றுத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2015-ல் அறிவித்தார். 

முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களினால் கொஞ்ச நஞ்ச பலன்களையாவது மக்கள் பயன்பெறும்  நிலையிருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் நலத் திட்டங்களுக்கு அறிவிக்கப்படும் நிதியின் அளவை பெருமளவு குறைத்துவிட்டதோடு, ஒதுக்கப்படுகின்ற சிறு நிதியில் பெரும்பகுதியை தனது போலியான பிம்பத்தை ஊதிப் பெருக்குவதற்காகவே செலவிட்டு வருகிறார் என்பதை அரசின் மற்ற உறுப்புகளே குற்றச்சாட்டு வைக்கும் அளவிற்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. இத்திட்டம் ஜனவரி 2015-ல் அறிவிக்கப்பட்டதென்றால் 2015-16ம் நிதியாண்டிற்கான CAG அறிக்கையில்கூட இதுதொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்தில் இத்திட்டம் துவங்கப்படுவதை அறிவிப்பதற்காக கட்டப்பட்ட நுழைவாயிலுக்காக மட்டும் 3 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பானிபட் மாவட்டத்தின் துவக்க நிகழ்ச்சிக்காக மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 21 லட்சம் செலவு செய்துள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு 40 கோடி அளவிற்குகூட நிதி ஒதுக்கப்படாத நிலையில் வெற்று விளம்பரத்திற்காக மட்டும் 2015 முதல் 2018 வரை 209 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டத்தின் துவக்கத்திலிருந்தே வெற்று விளம்பரத்திற்காகத்தான் மக்கள் பணத்தை இந்த மோடி அரசு வீணழித்துள்ளது என்பது தெரியவருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மனித வள அமைச்சகம் என இந்த ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூன்று அமைச்சகங்களின் கவனம் ஒன்று குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016-2019 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையில் 78.91 சதவீத நிதி விளம்பரத்திற்காக மட்டுமே செலவழித்துள்ளனர் என்று நாடாளுமன்ற நிலைக்கு குழு 2021-ல் கூறியிருந்தது. 2014-15 முதல் 2019-20 வரை  இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு மொத்தம் 622.48 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் 25.13 சதவீதம் அதாவது 156.46 கோடி மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்று நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் 50 சதவீத நிதியை புத்தாக்கமான வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செலவழிக்கலாம் என்ற வகையில்தான் இத்திட்டத்தையே மோடி அரசு வடிவமைத்துள்ளது என்பதே இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகும். அதையும் தாண்டிய நிலையில்தான் 80 சதவீத நிதியை விளம்பரத்திற்காக மட்டுமே செலவழித்துள்ளனர். 

இவைபோக, அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் மூலம் மோடி ஆட்சிக்கு வந்த 8 ஆண்டு காலத்தில் 6,491 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக மட்டும் செலவழிக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் இதற்கான செலவை மோடி அரசு அதிகரித்துக் கொண்டே செல்வதை பல்வேறு ஊடகங்களில் காட்டப்படும் மோடியின் பிம்பத்தை வைத்தே புரிந்து கொள்ள முடியும்.

- செந்தளம் செய்திப் பிரிவு