மராட்டிய விவசாயிகளின் உயிரையும் ஆரோக்கியத்தையும் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
தமிழில்: மருதன்
மராட்டிய மாநிலம் யவத்மால் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில், விவசாய வயல்களால் சூழப்பட்டுள்ளது, போரிசின் கிராமம். மகாராஷ்டிராவில் பூச்சிக்கொல்லி விஷத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் பல கிராமங்களில் இதுவும் ஒன்று.
2017-ல் பூச்சிக்கொல்லி விஷத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி ஹிராமன் சயாம், 45, முன்பு இருந்ததைப் போல தனது உடலுக்கு வலிமை இல்லை என்று விரக்தியடைகிறார். "நான் மூச்சுத்திணறல் மற்றும் அமைதியற்ற உணர்வுடன் எழுந்தேன், அதைத் தொடர்ந்து வலிப்பு மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டது. நடுங்கிக்கொண்டிருந்த என் உடல் மெல்ல மெல்ல குளிர்ந்தது. என்னால் இன்னும் படுத்திருக்க முடியாததால் என் உறவினர்கள் என்னை கயிறு மற்றும் புடவையால் கட்டிலில் கட்டிவிட்டார்கள். அவர்கள் என்னை அகோலா பஜார் பிராத்மிக் ஆரோக்ய கேந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கிருந்து ஸ்ரீ வசந்த்ராவ் நாயக் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நான் பரிந்துரைக்கப்பட்டேன்,” என்று அவர் தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்தார்.
பருத்தி விளைச்சலை கணிசமாக அதிகரிக்கும் என்று விற்பனையாளரின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் ஒரு பூச்சிக்கொல்லியை தொடந்து தெளித்து வந்துள்ளார்.
"அப்பூச்சிக்கொல்லி மருந்தின் விஷம் தோலின் வழியாக உடலுக்குள் சென்று கலந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைக் கண்டு, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கினேன், எங்களுக்கு மொத்த மருத்துவச் செலவு ₹1,16,000 செலவானது, அதில் ₹50,000 இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை” என்று அவரது மனைவி அர்ச்சனா தெரிவித்தார்.
அவரது கணவர் பசியை இழந்துவிட்டார், தொடர்ந்து மயக்கம், தலைவலி மற்றும் உடல்வலி குணமாகுமா என்று மருத்துவர்களால் சொல்ல முடியவில்லை. முன்பு இல்லத்தரசியாக இருந்த திருமதி. அர்ச்சனா தற்போது அவர்களின் மூன்று ஏக்கர் பண்ணையில் இறங்கி வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இத்தனைக்குப் பிறகும் பூச்சிக்கொல்லி மருந்தை நம்பியே அவர்களது விவசாயமும், குடும்பமும் தொடர்கிறது.
உலகளாவிய எதிர்ப்பு
2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் இருந்து பூச்சிக்கொல்லி விஷம் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தன, இது இந்தியாவின் பூச்சிக்கொல்லி ஒழுங்குமுறை கொள்கைகளுக்கு எதிராக உலகளாவிய விமர்சனத்தை ஈர்த்தது. இலாப நோக்கற்ற பூச்சிக்கொல்லி நடவடிக்கை நெட்வொர்க் (PAN) இந்தியா, அதன் 2017 அறிக்கையில், ‘மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம்: சொல்லப்படாத உண்மைகள்’ என்ற தலைப்பில், பூச்சிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், அகோலா, அமராவதி, புல்தானா, வாஷிம் மற்றும் யவத்மால் மாவட்டங்களில் 60 நாட்களுக்கு சில குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளின் (புரோஃபெனோபோஸ், ஃபிப்ரோனில், அசிபேட், டிஃபென்திரான் மற்றும் மோனோக்ரோடோபாஸ்) விநியோகம் மற்றும் விற்பனை தடைசெய்யப்பட்டது.
ஆனால் ஹிராமன் சயாம் குடும்பத்தினர் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் இன்னும் தடை செய்யப்படவில்லை.
பான் இந்தியாவின் ஆலோசகர் டி. நரசிம்ம ரெட்டி கூறியதாவது: மஹாராஷ்டிராவில் வெள்ளை ஈக்களுக்காகவும், தாவர வளர்ச்சியை அதிகரிக்கவும் மோனோகுரோட்டோபாஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உணவுப் பயிர்களில் பயன்படுத்த உரிமம் பெறவில்லை, ஆனால் விவசாயிகள் இதை அறியாமல் பயன்படுத்துகின்றனர்.
யவத்மாலில், 2017-18 ஆம் ஆண்டில் ஒரு அரசாங்க பணிக்குழு அறிக்கை கூட மோனோகுரோட்டோபாஸ் மற்றும் போலோ ஆகிய பூச்சிக்கொள்ளிகளை குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், PAN இன்டர்நேஷனல் மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளின் பட்டியலை வெளியிட்டது, அவற்றில் 100 க்கும் மேற்பட்டவை தற்போது இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர அரசு பூச்சிக்கொல்லி சட்டம், 1968ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை ஆகஸ்ட் 8, 2023 அன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
"இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, முன்மொழியப்பட்ட திருத்தம் பூச்சிக்கொள்ளிகள் பிரச்சனையில் மிகவும் கவனம் செலுத்துகிறது, மேலும் அது தீர்க்க முயற்சிக்கும் பிரச்சனை புதியதல்ல. இந்த திருத்தத்தின் மூலம், தவறான முத்திரை அல்லது தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. இந்த மசோதா மூலம், கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற அல்லது தவறான முத்திரை குத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை தண்டிக்க அரசு முயல்கிறது.
சட்டத்திருத்தம் ஜாமீனில் வெளிவர முடியாததாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. மற்ற சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம், ”என்று டாக்டர் ரெட்டி கூறினார்.
பூச்சிக்கொல்லிகளுக்கு விடைகொடுப்போம்
யவத்மாலில் இருந்து 20 கிமீ தொலைவில் திவாசா கிராமத்தில் சுபாஷ் சர்மாவின் 16 ஏக்கர் பண்ணை உள்ளது. திரு. ஷர்மா, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை 1994 இல் நிறுத்தினார்.
“1990களில், பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பண்ணையில் 20 மாடுகள் இறந்தன. மோனோகுரோட்டோபாஸ், எகலக்ஸ் (பூச்சிக்கொல்லி) மற்றும் பலவற்றைத் தவிர, தாங்க முடியாத துர்நாற்றம் வீசும் ஃபோரேட்டை (ஒரு பூச்சிக்கொல்லி) நான் தவறாமல் தெளித்து வந்ததால் இது என்னை உலுக்கியது,” என்று அந்த நேரத்தில் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட திரு. சர்மா கூறினார். புகழ்பெற்ற ஜப்பானிய இயற்கை விவசாயி மசனோபு ஃபுகுவோகாவைப் பற்றி படித்தபோது, அவர் இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்ய விரும்பினார்.
2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசாங்கம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக மூத்த விவசாயி தலைவர் பஞ்சாப்ராவ் தேஷ்முக்கின் பெயரில் டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் ஆர்கானிக் அக்ரிகல்ச்சர் மிஷனை அமைத்தது. புல்தஹானா, அகோலா, வாஷிம், அமராவதி, யவத்மால் மற்றும் வார்தா ஆகிய விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் முதல் கட்ட பணி அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 முதல், இலாப நோக்கற்ற சர்வநாத் வாகாடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் (SWFPCL), ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்த பயிற்சி அளித்து வருகிறது.
SWFPCL இன் இயக்குனர் மினாக்ஷி சவால்கர், தாங்கள் தற்போது 300 விவசாயிகளை ஆதரிப்பதாகவும், ஆனால் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
யவத்மாலில் உள்ள ஸ்ரீ வசந்த்ராவ் நாயக் அரசு மருத்துவக் கல்லூரியின் சுகாதார அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான பூச்சிக்கொல்லி நச்சு நிகழ்வுகளுக்கு சந்தையில் மாற்று மருந்து எதுவும் இல்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துவிடுகிறார்கள்.
பூச்சிக்கொல்லி விஷம் பற்றிய தனது பதிவுகளை தி இந்துவுடன் பகிர்ந்து கொள்ள மருத்துவமனை மறுத்துவிட்டது.
- மருதன் (தமிழில்)
மூலக்கட்டுரை : The Hindu