பெண்களின் உண்மையான விடுதலைக்கு வழிகாட்டிய கம்யூனிஸ்ட் போராளி - கிளாரா ஜெட்கின்

ஜி.மஞ்சுளா

பெண்களின் உண்மையான விடுதலைக்கு வழிகாட்டிய கம்யூனிஸ்ட் போராளி - கிளாரா ஜெட்கின்

கிளராவை நினைவு கூர்வோம்!

“மகளிர் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லக் கூடிய மகளிர் இயக்கம் எதுவும் கிடையாது. ஏனெனில் வர்க்கங்களாக பிளவுண்டு இருக்கும் சமுதாயத்தில் முதலாளித்துவ மகளிர் இயக்கமும் உழைக்கும் வர்க்க மகளிர் இயக்கமும் மட்டுமே உள்ளன…. பாட்டாளி வர்க்க மகளிர் விடுதலை இயக்கமானது – முதலாளித்துவ மகளிர் இயக்கத்தைப் போன்று – அவளுடைய வர்க்கத்தைச் சார்ந்த ஆண்களுக்கு எதிராக போராடும் இயக்கமாக இருக்க முடியாது…. அவளுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் ஆண்களுக்கெதிரான சுதந்திரமான போட்டி அல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை படைப்பதாகும். உழைக்கும் வர்க்க மகளிர் தமது சொந்த வர்க்க ஆண்களுடன் தோளோடு தோள் இணைந்து நின்று முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்து போராடுகின்றனர்.”

1896ல் கோத்தா நகரில் நடைபெற்ற ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி காங்கிரசில் ‘பாட்டாளி வர்க்க மகளிருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே சோசலிசம் வெற்றி பெறும்’ என்ற தலைப்பில் கிளாரா ஜெட்கின் பேசிய உன்னதமான உண்மைகளே மேற்கூறியவை.

மார்க்சிய அடிப்படையில் நின்று தன்வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களுக்காக கருத்தியல் போராட்டத்தை நடத்தியதோடு அதை நடைமுறைப் பணிகளோடு இணைத்து வெற்றிகண்ட மாபெரும் கம்யூனிஸ்ட் போராளி கிளாரா ஜெட்கின் 1857ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி ஜெர்மன் நாட்டில் பிறந்தார். தனது 17வது வயதில் லீப்சிக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றபோது தான் அந்நகரில் இயங்கி வந்த புரட்சிகர சோசலிச மாணவர் வட்டத்துடனும் போலந்திலிருந்து குடிபெயர்ந்தோருடனும் அவருக்கு தொடர்புகள் ஏற்பட்டது. குடிபெயர்ந்தோரில் ஒருவரான ஓசிப் ஜெட்கினை தான் பின்னாளில் கிளாரா மணந்தார். மாணவர் வட்டத்தின் மூலமாக மார்க்சிய கல்வியையும் பெற்றார். அதன் பின் ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். அப்போது ஆட்சியில் இருந்த பிஸ்மார்க் அரசு சோசலிஸ்டுகளுக்கு எதிரான தடைசட்டத்தை விதித்திருந்ததால் தலைமறைவு பணிகளில் ஈடுப்பட்டதோடு லீப்ஜீக்கின் புறநகரில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

அவரது கணவர் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டதால் அரசியல் அகதிகளாக அவர்கள் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிரான்சு, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளின் சோசலிச இயக்கங்களிலும் கிளாரா பங்கேற்றார். சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்த போது ஜூரிச் நகரில் இருந்து வெளியிடப்பட்ட ‘சமூக ஜனநாயகவாதி’ என்ற சட்டவிரோத பத்திரிகைக்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரிசில் இருந்தபோது கார்ல் மார்க்சின் புதல்வி லாரா லபார்க்குடனும் பிரெஞ்சு சோசலிச இயக்கத்தின் முன்னணித் தலைவர்களான பால் லபார்க், ஜூலியஸ் கெஸ்டே போன்றவர்களுடனும் அவர் இணைந்து செயல்பட்டுள்ளார்.

‘சர்வதேச தொழிலாளர் சங்கத்தில்’ அவரது ஆற்றல்மிகுந்த பணிகள் மிகுந்த முக்கியத்துவமுடையவை. கிளாராவின் தனிச்சிறப்பு எதுவெனில், மூன்று அகிலங்களின் வரலாற்று நிகழ்வுகளை அவர் நன்றாக அறிந்திருந்ததும் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் அகில செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு அதன்மூலம் அவர் பெற்றிருந்த அனுபவங்களும் தான்.

முதலாளித்துவம் குறைவான கூலிக்காக பெண்களை குழந்தைகளை ஆலை பணிகளில் அமர்த்தியபோது ஆண்களுக்கு குறைந்த கூலியும் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்படும் நிலைமைகளும் இருந்தன. முதலாளித்துவ சுரண்டலின் உண்மை காரணத்தை அறியாத ஆண் தொழிலாளர்கள் பெண்களுக்கு வேலை அளிப்பதுதான் தங்களுடைய கடும் துன்பங்களுக்கு காரணம் என நினைத்தனர். எனவே தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி, பெண்கள் உழைப்பை சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும் என கோரினர்.

“இக்கோரிக்கையை அனுமதித்திருந்தால் காலகாலமாக பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையை மீண்டும் ஏற்படுத்தியிருக்கும்” எனவும், தொழிற்சாலைகளில் பெண் உழைப்பை சட்டபூர்வமாக தடைசெய்வதற்கான முயற்சிகளை 1866ம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது……. தொழிற்சாலையில் பெண் உழைப்பின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்த மார்க்சினுடைய பகுப்பாய்வுதான் அக்கோரிக்கையை நிராகரிப்பதில் தீர்மானகரமான பங்கு வகித்தது…... முதலாம் அகிலத்தின் பொதுச்சபையில் ஒரு பெண் இடம் பெற்றார். பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அகிலத்துடன் இணைக்கப்பட்டன” என முதலாம் அகிலம் பெண் விடுதலைக்காக ஆற்றிய மகத்தான பங்களிப்பை கிளாரா விவரித்துள்ளார்.

1872ம் ஆண்டு முதலாம் அகிலம் பிளவுபட்டு செயலிழந்த பின் எங்கெல்சின் முன்முயற்சியில் 1889ல் இரண்டாவது அகிலம் நிறுவப்பட்டு அதில் பெண்களுக்கான பணிகளில் கிளாரா பெரும் பங்காற்றினார். எங்கெல்சின் மறைவிற்கு பின்னர் 1914ல் முதல் உலகப் போர் துவங்கிய போது, அந்த ஆக்கிரமிப்பு போரை ஆதரித்த நாடுகளை இரண்டாவது அகிலம் ஆதரித்தது. அதன் சந்தர்ப்பவாதத்தை கிளாரா உறுதியாக எதிர்த்தார். 1916ல் இரண்டாம் அகிலமும் கலைக்கப்பட்டு செயலிழந்தது.

அதன்பின் லெனின் தலைமையில் 1919ம் ஆண்டு மூன்றாம் அகிலம்(கம்யூனிஸ்ட் அகிலம்) தோற்றுவிக்கப்பட்டது. லெனினின் வழிகாட்டுதலோடு சர்வதேச அளவிலான கம்யூனிச மகளிர் இயக்கம் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான பணிகளிலும் கிளாரா ஈடுபட்டார்.

இவ்வாறு கிளாராவின் வாழ்க்கை உலக பெண்கள் இயக்க வரலாற்றோடு பின்னிபினைந்த ஒன்றாக இருந்ததால்தான் ‘மகளிர் விடுதலை இயக்கங்கள்’ பற்றி வர்க்க போராட்டங்களின் அடிப்படையிலமைந்த வரலாறாக மிகச் சிறந்த கட்டுரைகளை அவர் படைத்தளித்து பெண்களின் உண்மையான விடுதலைக்கான பாதையையும் காட்டியுள்ளார்.

முதலாளித்துவ மகளிர் இயக்கம்:

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து தோன்றி வளர்ந்த முதலாளித்துவ மகளிர் இயக்கம், பெண்ணை வீட்டில் அடைக்கும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கருத்துகளுக்கு எதிராகவும் ஆணினம் பெண்களின் மீது கொண்டிருந்த ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தகர்தெறியும் பொருட்டும் பெண்ணுரிமைக்கான பல கோரிக்கைகளை முன்வைத்தது.

“திருமணம், விவாகரத்து ஆகியவற்றில் சமஉரிமை, சொத்து, வருமானத்தில் பெண்ணுக்கான உரிமை, பொதுவான பாலின ஒழுக்க விதி, சமுதாய வாழ்க்கையின் எல்லா அரங்குகளிலும் இயங்கவும் செயல்படவும் இருபாலாருக்கும் சமஉரிமை, அரசியல் சமத்துவம் போன்ற கோரிக்கைகள் பாட்டாளிவர்க்க உழைக்கும் பெண்களுக்கு மதிப்பு மிக்கவை என்பதில் நமக்கு மறுப்பதற்கு ஏதுமில்லை. இதன் முக்கியத்துவம் என்பது பெண்ணினம் ஆண்களைப் போலவே சமஅந்தஸ்த்தும் சமஉரிமைகளும் கொண்டவர்கள் என்பதை அங்கீகரித்தது” தான் என முதலாளித்துவ மகளிர் இயக்கத்தின் சிறப்பை கிளாரா சுட்டிக்காட்டுகிறார்.

இருப்பினும் இச்சீர்திருத்தங்கள் ஒரு எல்லைக்குட்பட்டவையே என்றும், உண்மையில் இவை சொத்துபடைத்த, சுரண்டும் வர்க்கத்தை சார்ந்த, பொருளாதாரரீதியில் சுதந்திரமான பெண்களுக்கே பெருமளவில் நன்மையளித்தது எனவும் வாக்குரிமைக்கான போராட்டத்தில் கூட பெண்களின் வாக்குரிமையை ‘உயர் வர்க்க பெண்களின் வாக்குரிமை’ என அவ்வியக்கம் சுருக்கியதையும், ஒரு கட்டத்தில் அவ்வியக்கம் பாசிச எதிர்ப்புரட்சி தன்மை கொண்டதாக மாறிய வரலாற்றையும் கிளாரா எடுத்துரைத்து அதனுடன் நமக்கு எவ்விதமான சமரசமோ பிணைப்போ இருக்க கூடாது. இருக்கவும் முடியாது என வலியுறுத்துகிறார்.

சமூக ஜனநாயக மகளிர் இயக்கம்:

பெண்விடுதலைக்காக முதலாம் அகிலம் ஆற்றிய பங்களிப்பை இரண்டாம் அகிலம் தொடரவில்லை. பாட்டாளிவர்க்கத்தின் போராட்டத்தையும், உழைக்கும் பெண்கள் தங்கள் விடுதலைக்காக நடத்தும் போராட்டத்தையும் ஒன்றிணைப்பதை தத்துவார்த்தரீதியாக அமைப்புரீதியாக இரண்டாம் அகிலம் தவிர்த்து விட்டது. எனவே அப்பணி சோசலிசத்தில் நம்பிக்கை வைத்திருந்த பெண்களால் பூர்த்தி செய்யப்பட்டதெனவும் குறிப்பாக ஜெர்மனியில் இருந்த சமூக ஜனநாயக பெண்கள் தனிச்சிறப்பான முறையில் மற்றவர்களை வழிநடத்தினார்கள் எனவும் கிளாரா குறிப்பிடுகிறார். இவை அக்காலகட்டத்தின் சோசலிச பெண்களின் ஆழமான தத்துவார்த்த அரசியல் புரிதல்மட்டத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

சீர்திருத்தத்திற்கு மாறாக, தங்களுடைய வர்க்கச் சகோதரர்களுடன் கரம் சேர்த்து போராட வேண்டும் என்றும் அதற்காக பாட்டாளிவர்க்க பெண்களை ஒன்று சேர்த்து அமைப்பாக்கி பயிற்றுவிக்க வேண்டும் என்றும்….. உற்பத்தி சாதனங்களிலுள்ள தனியுடமையை ஒழிப்பதன் மூலம் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிய முன்வரவேண்டும் என்று சமூக ஜனநாயக மகளிர் இயக்கம் பெண்நிலைவாதம், முதலாளித்துவ சீர்திருத்தவாதம் ஆகியவற்றிலிருந்து கோட்பாடுரீதியாவும் நடைமுறைரீதியாகவும் தெளிவான எல்லைக்கோட்டை வகுத்துக் கொண்டதன் மூலம் தன்னை பாட்டாளிவர்க்க விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்பதை நிரூபித்து காட்டியது.

பெண்தொழிலாளர்களின் சட்டபூர்வ பாதுகாப்பு, மகளிருக்கான தனிபத்திரிகை, சோசலிச சர்வதேச மகளிர் அமைப்பு, வாக்குரிமைக்கான போராட்டம், மகளிருக்கான சர்வதேசதினத்தை அனுசரிப்பதற்கான சர்வதேசிய நடவடிக்கை என இவ்வியக்கம் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுத்தது. இருப்பினும் 1914 ம் ஆண்டில் ஏகாதிபத்திய யுத்தம் வெடித்த போது தங்களுடைய சொந்த நாட்டின் முதலாளித்துவ அரசுகளை காப்பவர்களாகவும் தேசிய வெறி உணர்வில் முதலாளித்துவ பெண்களுடன் போட்டியிடும் அளவிற்கு இவ்வியக்கம் சீரழிந்து போன நிகழ்வுகளும் நடந்தேறின. மேலும் சமூக சீர்திருத்தம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவற்றின் மூலம் ‘சமாதான வழிகளில் சோசலிச வளர்ச்சி’ என்று கூறி பாட்டாளி வர்க்க புரட்சி என்ற அடிப்படை இலட்சியத்தையே இவ்வியக்கம் கைவிட்டு விட்டது வரலாற்றுச் சோகமாகும். சீர்திருத்தவாதத்தின் அரிப்புச் சக்தியானது உறுதியானது போல் தோற்றமளித்த சமூக ஜனநாயக இயக்கத்தை ஊடுருவி உட்கொண்டு விட்டது என ஆழமான விமர்சனங்களை கிளாரா முன்வைத்துள்ளார்.

கம்யூனிச மகளிர் இயக்கம்:

1917 ரஷ்யாவில் நடைபெற்ற சோசலிச புரட்சிக்கு பின்னர் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் வாக்குரிமை, திருமணம், விவாகரத்து, மகப்பேறு உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு உண்மையான சமத்துவத்தை அளிக்கும் சட்டங்கள் சோசலிச ரஷ்யாவில் இயற்றப்பட்டன.

வீட்டில் செய்கின்ற வேலையின் காரணமாகப் பெண்கள் இன்னும் கடினமான நிலையில் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு முழு விடுதலை கொடுத்து ஆண்களுக்கு சமமாக அவர்களை ஆக்க வேண்டுமென்றால் தேசியப் பொருளாதாரம் சமூக மயமாக்கப்படுவதும் பொதுவான பயனுள்ள உழைப்பில் பெண்கள் ஈடுபடுவதும் அவசியம் அப்போது தான் பெண்கள் ஆண்களுக்கு சமமான நிலையைப் பெறுவார்கள் என கூறியதோடு நில்லாமல் பெண்களைக் குடும்ப வேலைகளில் இருந்து விடுவிக்ககூடிய குழந்தை வளர்ப்பு நிலையங்கள், உணவுச் சாலைகள் ஆகிய முன்மாதிரியான அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

சோசலிச புரட்சியில் ஈடுபட்டதோடு, சோசலிச சமூகத்தை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்ட சோவியத் பெண்களை ஒரு முன்மாதிரியாகவே கிளாரா கருதினார். லெனின் பெண்களின் மகத்தான இப்பணிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தாலும் இன்னமும் ஒரு சர்வதேச கம்யூனிச மகளிர் இயக்கம் உருவாக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்துடன் இருந்ததையும் எப்பாடுபட்டேனும் அவ்வியக்கத்தை கட்டவேண்டும் என்று பெருமுனைப்பு காட்டியதையும் கிளாரா தனது லெனின் பற்றிய நினைவுக்குறிப்புகளில் குறிப்பிடுகிறார்.

“கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்கு பெண்களைத் தயார் செய்தாக வேண்டும். ஆலைகளில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கப் பெண்களை மட்டுமல்ல இங்கு நான் கருத்தில் கொண்டிருப்பது. விவசாயப் பெண்களையும் அடிநிலை மத்தியதர வகுப்பில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன். இவர்கள் எல்லோருமே முதலாளித்துவத்துக்குப் பலியாகித் துன்புறுகிறவர்கள்தாம்” என கிளாராவுடன் நடைபெறும் உரையாடலில் லெனின் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறார்.

1921ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிசப் பெண்களின் இரண்டாவது சர்வதேசிய மாநாடு கம்யூனிச மகளிர் இயக்கத்தின் கோட்பாடுகள், போர்த்தந்திரம், அமைப்புமுறை ஆகியவற்றை பற்றிய ஒரு அடிப்படை திசைவழியையும் அளித்தது. “தனிச்சொத்து தான் பாலின மற்றும் வர்க்க அடிமைத்தனத்திற்கான இறுதிக்காரணம் என்ற முடிவையும் உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையை ஒழித்து அவற்றை சமுதாய உடமையாக்குவதால் மட்டுமே பெண்களின் முழு விடுதலையை உறுதி செய்ய வேண்டும்” என்ற முடிவை சார்ந்து வழிகாட்டும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கம்யூனிச மகளிர் இயக்கம் கட்டியெழுப்பட்டு அவ்வியக்கம் உலகம் முழுவதும் பரவியது குறித்தும், கிளாரா ஜெட்கின் காலத்தில் உருக்கொள்ள துவங்கிய பாசிசம் மற்றும் திருத்தல்வாதம் குறித்தெல்லாம் அவர் எழுதியுள்ளவை இன்றைக்கும் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகவும் நமக்கு வழிகாட்டுவதாகவும் உள்ளன.

ஜி.மஞ்சுளா (முகநூலில்)

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02WRMbLwP8XpDNvnk7sApgLs7FTAtHYSF9GFwn5KM8GVq2FV2B3NeC1MWrAAhX9JC1l&id=100001530942887&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&paipv=0&eav=AfY4J7pBMo3FCnjCxPTZwPimJ3guxDN4t01ITU0MC8QyWnlfXFCHdkU7XDHNEXjJ1Lk&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு