புதிய வக்ஃப் சட்டத்தை முதல் மாநிலமாக நடைமுறைப்படுத்தும் கேரள சிபிஎம் அரசு
தி ஹிந்து

இதற்கு முன்பு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், புதிய வக்ஃப் வாரியத்தை அமைக்க ஆயத்தமாகி வருகிறது.
தற்போதைய கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதியன்று நிறைவடைந்திருந்தாலும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாகத் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகிறது. புதிதாக திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய வக்ஃப் வாரியத்தை அமைப்பதற்கான தேர்வு நடைமுறைகளை மாநில அரசு விரைவில் நிறைவு செய்யும் என்று வக்ஃப் வாரிய அமைச்சர் வி. அப்துரஹிமான் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், முஸ்லீம் இளைஞர் லீக் அமைப்பின் உறுப்பினர்கள் மலப்புரத்தில் வக்ஃப் சட்ட முன்வரைவின் நகல்களை எரித்து தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கேரள மாநிலம் வக்ஃப் (திருத்த) சட்டம், 2025-ஐ தீவிரமாக எதிர்த்திருந்த போதிலும், தற்போது புதிய விதிமுறைகளின்படி வக்ஃப் வாரியத்தை நிறுவும் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் திகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வாரியம் சுமார் இரண்டு மாதங்களுக்குள் அமைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. முன்னதாக, டிசம்பர் 19-ஆம் தேதியுடன் முந்தைய வாரியத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும், புதிய வாரியம் தேர்ந்தெடுக்கப்படும் வரை தனது பணிகளைத் தொடர வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. கேரளாவில் ஆட்சிபுரியும் சிபிஐ(எம்) தலைமையிலான அரசாங்கமும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கூட இந்த புதிய சட்டத்தை ஒருமனதாக எதிர்த்தன என்பதே இங்கு கவனிக்கத்தக்க விஷயம். வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த மாற்றங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் ஒரு தீர்மானத்தையும் கேரள சட்டமன்றம் நிறைவேற்றியிருந்தது.
இருப்பினும், ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் அதிகாரப்பூர்வ ஒப்புதலை இந்த மசோதா பெற்றதைத் தொடர்ந்து, இந்த திருத்தச் சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறை
புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின்படி, புதிய வக்பு வாரியத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும் என்று வக்பு விவகாரங்களுக்கான அமைச்சர் வி. அப்துரஹிமான் தெரிவித்திருந்தார். “சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த நடைமுறைகள் அனைத்தையும் முடிக்க விரும்புகிறோம். வாரியத்தின் செயல்பாட்டை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்த முடியாது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ் புதிய வாரியம் அமைக்கப்பட வேண்டியது அவசியம், ஏனெனில் தற்போதைய வாரியத்தின் பதவிக்காலம் இந்தத் திருத்தப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே முடிவடைந்துவிட்டது. திருத்தப்பட்ட விதிகளின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வக்பு வாரியங்கள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே தொடர முடியும் . “வக்பு (திருத்த) சட்டம், 2025 நடைமுறைக்கு வரும்போது பதவியில் இருக்கும் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்கள் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும்,” என்று அந்தச் சட்டமானது தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறது.
மாநில அரசு சமீபத்தில் பழைய சட்டத்தின்படி புதிய வக்பு வாரியத் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அந்தப் பழைய சட்டம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப அரசாங்கம் தேர்வு முறையை மாற்ற வேண்டியது அவசியம்.
முன்னர் திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணையின்படி, வக்பு வாரியத் தேர்தலுக்கான முதல்நிலை வாக்காளர் பட்டியல் ஏப்ரல் நான்காம் தேதி வெளியிடப்பட இருந்தது; அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்பு மே மூன்றாம் தேதி வெளியிடப்பட இருந்தது. வாரியத்தின் மொத்தமுள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் ஏழு நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் பன்னிரண்டாம் தேதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எஞ்சியிருக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாநில அரசால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படயிருந்தனர்.
கடுமையான அரசியல் எதிர்வினைகள்
மத்திய அரசாங்கம் திருத்தச் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தியதும், அதன் நிறைகுறைகளை ஆய்வதற்காக ஒரு கூட்டுக் நாடாளுமன்றக் குழுவை அமைத்த போதும் கேரள மாநிலத்தில் தீவிரமான கொந்தளிப்பான அரசியல் சூழல் உருவானது. இது இதற்கு முன்பு எப்போதும் காணப்படாத அளவில் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாக ஆழமான பிளவுகளை உருவாக்கியது.
கேரளத் திருச்சபையின் சில பிரிவினர், குறிப்பாக முனம்பம் பகுதியில் வசிக்கும் மக்களின் வருவாய்(நிலம் அல்லது சொத்து) உரிமைக்கான கோரிக்கைகளை மீட்டெடுக்க விரும்பியவர்கள் இந்தத் திருத்தங்களை ஆதரித்தனர். இருப்பினும், பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் இந்த மாற்றங்களை கடுமையாக எதிர்த்தன. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இந்தத் திருத்தங்களை வெளிப்படையாக ஆதரித்தபோதும், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆகிய இரு கூட்டணிகளிலும் உள்ள அனைத்து கட்சிகளும் திருத்தச் சட்டத்தை திட்டவட்டமாக எதிர்த்தன.
விஜயன் (தமிழில்)