எலான் மஸ்க் டெக்னோ-பாசிசம் அமெரிக்காவில் தோன்றியது எப்படி?

தமிழில்: விஜயன்

எலான் மஸ்க் டெக்னோ-பாசிசம் அமெரிக்காவில் தோன்றியது எப்படி?

தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் தலைமையகமாக அறியப்படும் சிலிகான் பள்ளத்தாக்கின் உயர்மட்டத் தொழில்நுட்ப அதிபர்களான மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் மற்றும் கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் ஜனவரி மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ன் பதவியேற்பின்போது அவருக்கு ஆதரவு தெரிவித்ததை, வணிக நலன்களின் அடிப்படையில் உருவான ஒரு கூட்டணியாகவே பலரும் கருதினர். வணிகங்களுக்கான அரசாங்கக் கட்டுப்பாடு குறையும், வரிக்குறைப்பு செய்யப்படும், தாங்கள் விரும்பாத கலாச்சார நெறிமுறைகளில்(Anti-woke culture) மாற்றங்கள் புகுத்தப்படும் போன்ற எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த அதீத செல்வம் படைத்த CEOக்கள் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால் வரலாற்றாசிரியர் ஜானிஸ் மிமுரா இதனைக் காட்டிலும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு புதிய போக்கு வெளிப்டுவதைக் கண்டார்: பெரிய நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு புதுவிதமான பிணைப்பு உருவாகி, அதன்மூலம் அரசாங்கம் வலுவான தொழில்துறை கொள்கைகளை முன்னெடுக்கும் அதே வேளையில் ஜனநாயக விழுமியங்களை நசுக்கக்கூடும் என்ற போக்கு தலைதூக்குவதாகக் கருதினார். ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், சிலிக்கான் பள்ளத்தாக்கின் அதிபர்கள் அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்கத் தொடங்கினர். இது இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜப்பானில் அரசியலைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து நாட்டைப் போருக்கு இழுத்துச் சென்ற வல்லமைமிக்க உயர்தட்டு அதிகார வர்க்கத்தினர் செல்வாக்கு பெற்றதை மிமுராவுக்கு நினைவுபடுத்தியது. "பொதுவாக பொறியியல் துறையில் நிபுணத்துவம் மிக்க தொழில்நுட்ப அறிஞர்களான இவர்கள், தற்போது அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கின்றனர்," என்று மிமுரா குறிப்பிட்டார். அவரது "பிளானிங் ஃபார் எம்பயர்" (2011) என்ற நூலில், இந்த வகையான ஆட்சியை "தொழில்நுட்ப-பாசிசம்" என்று அவர் வர்ணித்தார். இது தொழில்நுட்ப நிபுணர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒருவிதமான சர்வாதிகார ஆட்சி முறையாகும். இத்தகைய ஒரு அமைப்பின் முக்கிய இயக்குசக்தியாக தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். "அரசாங்கம் மட்டுமல்லாது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும், எத்தகைய விலைகொடுத்தாலும் சரி, செயல்திறன், தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளையே முதன்மைப்படுத்தும் தொழில்நுட்ப மயமாக்கும் போக்கு நிலவுகிறது." 

1930-களில், வடகிழக்கு சீனாவில் இருந்த மஞ்சூரியாவைத் ஜப்பான் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதனைத் தமது தொழில்நுட்பம் சார்ந்த சர்வாதிகார ஆட்சிக்குரிய ஒரு பரிசோதனைக் களமாக மாற்றியது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பணியாற்றிய ஜப்பானிய அரசு அதிகாரி நோபுசுகே கிஷி, 1936-ஆம் ஆண்டு மஞ்சூரியாவின் தொழிற்துறைத் திட்டங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.  'ஜைபட்ஸு'(Zaibatsu) என்று அழைக்கப்பட்ட பெரிய ஜப்பானிய நிறுவனங்களின் புதிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், உள்ளூர் மக்களின் கட்டாய உழைப்பையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்ட விரைவான தொழிற்துறை வளர்ச்சிக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தினார். 1939ஆம் ஆண்டு நோபுசுகே கிஷி ஜப்பானுக்குத் திரும்பியபோது, மஞ்சூரியாவில் அவருடன் இணைந்து பணியாற்றிய சிறு தொழில்நுட்ப அதிகார வர்க்க கும்பலுடன் சேர்ந்து, அதே சர்வாதிகார தொழில்மயமாக்கல் உத்திகளை ஜப்பானிலும் செயல்படுத்த முயன்றனர். இத்தகைய திட்டங்கள் பொருளாதாரத்தின்மீது அரசாங்கத்தின் ஆதிக்கத்தை முதன்மைப்படுத்தின; தனியார் வணிகச் சுதந்திரத்தையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் அவை திட்டமிட்டே புறக்கணித்தன.  இந்த பாசிச ஆட்சி முறை, ஐரோப்பாவில் நிலவிய முசோலினி அல்லது ஹிட்லரின் ஆட்சிகளைப் போல தனிப்பெரும் ஆளுமை மிக்க, வசீகரமான ஒரு தலைவரை மட்டும் சார்ந்திருக்கவில்லை. எனினும், 1920-களில் நாஜி இயக்கம் ஜெர்மனியில் வலுப்பெற்று வந்தபோது கிஷி அங்கு சென்றிருந்தார்; மஞ்சூரியாவில் தாம் மேற்கொண்டு வந்த தொழில்மயமாக்கல் திட்டங்களுக்காக ஜெர்மனியின் தொழிற்துறை வளர்ச்சியிலிருந்து சில படிப்பினைகளையும், ஊக்கத்தையும் எடுத்துக் கொண்டார். ஜெர்மனி, இத்தாலியில் இருந்ததற்கு மாறாக, வரலாற்றாசிரியர் மிமுரா கூறுவது போல, ஜப்பானில் "மெல்ல மெல்ல பாசிச ஆட்சி முறை கட்டியமைக்கப்பட்டது", அதாவது அரசாங்க அதிகாரிகள் பேரரசரை பெயரளவிலான தலைவராகத் தக்க வைத்துக் கொண்டே, சிறு கும்பலின் கைகளில் அதிக அதிகாரத்தை சத்தமில்லாமல் குவித்துக் கொண்டனர். அவர் மேலும் கூறியபடி, இந்த தொழில்நுட்பத்தை முதன்மைப்படுத்தும் அதிகார வர்க்கத்தினர், வழக்கமான சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு மந்திரி சபைகளுக்கு மேலாக இயங்கக்கூடிய, எவருக்கும் பதில்சொல்லும் கடமையற்ற சிறப்பு அரசாங்க உப குழுக்களை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சமகாலத்தில், எலான் மஸ்க்கின் டாகி(DOGE) அமைப்பு, டிரம்ப் அரசாங்கத்துடனான நெருக்கமான தொடர்பும் இதேபோன்ற ஒரு தலைமையின் இக்கால வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.

1900-களின் காலகட்டத்தில், அமெரிக்க நிறுவனங்கள் சில வேளைகளில் அரசாங்கத்தையும் தொழிற்துறை அதிகாரத்தையும் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டன. தொழிலதிபர் ஹென்றி ஃபோர்ட் தொழில்துறைகளை ஒருகமைக்கும் ஒரு முறையை முன்வைத்தார்; இது பிற்காலத்தில் "ஃபோர்டிஸம்" என்று பரவலாக அறியப்பட்டது. இதில், அரசாங்கம் பொருளாதாரத்தில் நேரடியாகத் தலையிட்டுப் பேரளவு உற்பத்தியையும் நுகர்வையும் உறுதி செய்யும். 1930-களில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐ.பி.எம். நிறுவனம், தனது ஜெர்மன் கிளைகள் வாயிலாக ஜெர்மனியின் நாஜி அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. குறிப்பாக, 1933ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற முக்கியப் பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை அளித்ததன் மூலம் ஜெர்மனியில் யூதர்களை அடையாளம் காண உதவியது. சமீபத்தில் 'தி கார்டியன்' பத்திரிகையில் பெக்கா லூயிஸ் என்ற ஊடகவியலாளர் குறிப்பிட்டது போல, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகமான சிலிக்கான் பள்ளத்தாக்கு நீண்ட காலமாகவே பழமைவாத அல்லது வலதுசாரி போக்குகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. இது பெண் வெறுப்பு சிந்தனைகளையும், தனிமனிதனின் வெற்றியே சமூகப் படிநிலைகளின் தலையாய அளவுகோல் என்ற கருத்தையும் ஆதரித்து வந்துள்ளது. ஊடகவியலாளர் மைக்கேல் எஸ். மலோன், 1990களின் இறுதியிலேயே வளர்ந்து வரும் "தொழில்நுட்ப பாசிசம்" குறித்து எச்சரிக்கை செய்திருந்தார். தொழில்நுட்ப உலகில் நிலவும் "மேதாவித்தன வெறி" குறித்தும், எண்ணிம(டிஜிட்டல்) மாற்றங்களை மின்னல் வேகத்தில் முன்னெடுப்பதில் தொழில்நுட்ப அதிபர்கள் காட்டிய ஆர்வம் குறித்தும், அதே சமயம் அந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது அதற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களையோ புறக்கணித்தது குறித்தும் அவர் அழுத்தமாகத் விவரித்திருந்தார். ஆனால் இன்று, வலையுலக அதிபர்களுக்கும் அன்றாட அரசுப் பணிகளுக்கும் இடையே ஒரு புதுவிதமான பிணைப்பு உருவாகியிருப்பதை நாம் காண்கிறோம். எனினும், இன்றைய சூழ்நிலை முன்னிருந்ததை விட மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. ஒரு காலத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் விளையாட்டாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் அதாவது குறுகிய கால தீவிர உணவு விரத முறை அல்லது கீட்டமைன் சிகிச்சை போன்று கருத்தியல் கோட்பாடாக மட்டும் சுருங்கிவிடாமல் இன்று நிதர்சனமான அரசு கொள்கையாக உருவெடுத்துள்ளது. அரசாங்க நிர்வாகத்தில் முன் அனுபவமில்லாத மஸ்க்’ன் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த இளம் பொறியாளர்கள் நிறைந்த டாகி(DOGE) அமைப்பு, இந்த தொழில்நுட்பம் சார்ந்த எதேச்சதிகாரப் போக்கினால் அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, ஒன்றிய அரசு அலுவலகங்களில் தான்தோன்றித்தனமான போக்கு தலைவிரித்தாடுகிறது எனலாம்.

மஸ்க் ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளார். தனது அதிகாரத்தை எதிர்த்த அரசுத் துறைகளை மூடியதுடன், பணிநீக்கங்கள் செய்ய வேண்டிய இடங்களைத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான குரோக்கிலிருந்து(Grok) வரும் AI உரையாடல் ரோபோக்கள்(Chatbot) போன்ற பேசும் மென்பொறிகளால் அரசாங்கம் நிர்வகிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மஸ்க்’ன் நிறுவனமான டாகி, அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் திறனையும், ஒன்றிய அரசாங்கம் முழுவதற்கும் ஒரே நேரத்தில் மின்னஞ்சல்களை அனுப்பும் சாதனங்களையும் பெற்றுள்ளது. அண்மையில், மஸ்க் இந்த மின்னஞ்சல் கருவியை ஒரு டிஜிட்டல் ஒலிபெருக்கி போலப் பயன்படுத்தி, ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வாராந்திரச் செயல்பாடுகளின் பட்டியலை அவருக்கு அனுப்பும்படி உத்தரவிட்டிருந்தார். "நீங்கள் தொழில்நுட்பக் கருத்துகளையும் தர்க்கரீதியான சிந்தனையையும் பயன்படுத்தி மக்களையும் சமூகத்தையும் கட்டுப்படுத்த முயலும்போது, அது கிட்டத்தட்ட ஒரு முழுமையான சர்வாதிகாரமாக மாறிவிடும்," என்று மிமுரா கூறியிருந்தார். இந்த வகையான தொழில்நுட்பம் சார்ந்த, சந்தர்ப்பவாத பாசிசம் மஸ்கிற்கு மட்டும் உரித்தானதல்ல. மற்ற தொழில்நுட்பத் அதிபர்களும் முதலீட்டாளர்களும் கூட ட்ரம்பின் அரசியல் திசை வழிக்கும், சிலிக்கான் பள்ளத்தாக்கின் இலாப நோக்குடைய வணிகக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, நாடு தழுவிய பெரிய கட்டமைப்புகளை உருவாக்க ஆர்வம்காட்டி வருகின்றனர். உதாரணமாக, ஓப்பன்ஏஐ(Open AI)யின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், டிரம்ப் அரசாங்கத்துடன் பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளார். இதில் ஐநூறு பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட 'ஸ்டார்கேட்' என்ற தரவு மையத் திட்டமும் அடங்கும். டெக்சாஸில் AI சேவையகங்களை உருவாக்கும் திட்டம் உட்பட, அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் ஐநூறு பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனமும் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் உறுதியற்றதாக இருந்தாலும், அவற்றின் பிரம்மாண்டமான அளவு பரஸ்பர ஒத்துழைப்பிற்கான தயார்நிலையைக் காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் புகழ்ந்து, அவை "நமது செயல்பாடுகளில் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

மேற்குலகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது தகவல் தொழில்நுட்பப் சேவைகளை சான் பிரான்சிஸ்கோ அல்லது ருமேனியாவின் க்ளூஜ்-நபொகா போன்ற சில நகரங்களிலிருந்து அவுட்சோர்ஸிங் வழியாக பெறுகின்றபோது சிலிக்கன் பள்ளத்தாக்கைப் போன்ற தோற்றத்தையும், அதன் சிந்தனைகளையும், செயல்பாட்டு முறைகளையும் பின்பற்றச் செய்து, தோற்றத்திலும், கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் எவ்வாறு உருமாற்றியுள்ளார்கள் என்பதை விளக்க, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் சிலிக்கன் பள்ளத்தாக்கு தொழில்நுட்ப அதிபர்களின் செல்வாக்கினை ஆராய்பவருமான எரின் மெக்எல்ராய் அவர்கள் "சிலிக்கானைசேஷன்"(Siliconization) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். வாஷிங்டனின் தற்போதைய தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தின்(Siliconization) ஆரம்ப அறிகுறிகளை பராக் ஒபாமாவின் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் காண முடிந்தது என்று மெக்எல்ராய் குறிப்பிடுகிறார். அக்காலகட்டத்தில், ஒபாமா பேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களை பொதுமக்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு முக்கிய ஊடகமாகவும், அரசாங்கத் தகவல்களையும் அவ்வப்போதைய செய்திகளை பகிர்வதற்காகவும் வெளிப்படையாகப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆரம்பத்தில், இந்த டிஜிட்டல் தளங்கள் மக்களுக்குப் பரவலான, வலுவான உரிமைக்குரலாக விளங்குவதன் மூலம் மக்களாட்சியை வலுப்படுத்தியது எனத் தோன்றியது. ஆனால் தற்போது, ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பம் அரசாங்கத்தின் மரபுசார் அதிகாரத்தையும் அதன் நிலையான பங்கையும் படிப்படியாகக் கைப்பற்றத் தொடங்குவது போலத் தெரிகிறது. "அரசாங்க அமைப்பில் ஒரு நெருக்கடி நிலவுகிறது" என்று மெக்எல்ராய் கூறுகிறார். மேலும், சிலிக்கன் பள்ளத்தாக்கு அதிபர்கள் திட்டமிட்டு அரசு இயந்திரத்தின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்த முயலுவதாகவும், இதன் மூலம் அதனை விரைவாகத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியும்” என்பதே அவரின் கருத்தாக இருக்கிறது. 

சிலிக்கான் பள்ளத்தாக்கின் அதிபர்களும், பொறியாளர்களும் மற்றவர்களைக் காட்டிலும் மிகுந்த திறமை உடையவர்கள்  - அதாவது, தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்திலும், பணிபுரியும் இடங்களை வடிவமைப்பதிலும், செயற்கைக்கோள்களை உருவாக்குவதிலும், விண்வெளிப் பயணத்தை மேம்படுத்துவதிலும் மிகச் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்ற ஆழமான கற்பிதத்தின் மீதே சிலிக்கான் பள்ளத்தாக்கு(பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம்) நிறுவப்பட்டுள்ளது. இந்த கற்பிதத்தின் அடிப்படையிலேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அரசு ஊழியர்களை விட அரசாங்கங்களை மிகத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் அவர்கள் திடமாக கூறி வருகின்றனர். தொழில்நுட்பத் துறையின் கொள்கைகளையும் பண்பாட்டையும் பின்பற்றும் தன்னாட்சி பெற்ற, தன்னிறைவான சமூகங்களை, உதாரணத்திற்கு  கடற்பரப்பில் புதிய சமுதாயங்களை உருவாக்குதல் (“கடல்வாழ்விடங்கள்- seasteading”) அல்லது இணையத்தால் இணைந்த தேசங்களை நிறுவுதல் (“வலை தேசங்கள்- network states”) போன்ற நவநாகரீக கருத்துகள் சிலிக்கான் பள்ளத்தாக்கு அதிபர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. இத்தகைய யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன அல்லது மத்தியதரைக் கடலின் அருகே “பிராக்ஸிஸ்” என்ற ஒரு புதிய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்குவோம் என்பது போன்ற புனைவுத் திட்டத்திற்கான விளம்பர யுக்திகளாகவே நீடித்து வருகின்றன. ஆயினும், இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சிக்கு வந்திருப்பதால், அமெரிக்க அரசாங்கம் ஒரு பரிசோதனைக்களமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மெக்எல்ராய் கூறுகிறார். “தற்போது எலான் மஸ்க் அரசாங்கத்தை நேரடியாகவே இயக்க முடிவதால், ஒரு காலத்தில் அவர்கள் எண்ணியது போன்று தங்களுக்கெனத் தனியான கடல் கடந்த தீவுகளை இனி உருவாக்க வேண்டிய அவசியம் இல்லையென்றுகூட அவர்கள் கருத வாய்ப்புள்ளது.”

தொழில்நுட்பத்தை மையப்படுத்திய ஒரு சமூகத்தை உருவாக்குவது பற்றிய இந்த யோசனைகள், டொனால்ட் டிரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த "அமெரிக்காவை மீண்டும் மேன்மையடையச் செய்வோம்" (MAGA)" என்ற கருத்தியல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஸ்டீவ் பேனன் போன்ற MAGA ஆதரவாளர்கள் பொதுவாக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து சந்தேகத்தையோ அல்லது தயக்கத்தையோ வெளிப்படுத்துவதை காண முடிகிறது. பல பத்தாண்டுகளாக பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தின் வருகைக்கு பிறகு, அவர்கள் குறிப்பிடும் காலகட்டத்திற்குப் பிறகு, மறைந்துவிட்டதாக நம்பப்படுகின்ற மேன்மையான அமெரிக்கப் பண்பாட்டை மீட்டெடுப்பதே ஸ்டிவ் பேனன் போன்ற MAGA ஆதரவாளர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது என்று பத்திரிகையாளர் ஜேம்ஸ் போக் விளக்குகிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் நிலவும் கோட்பாடுகளை ஒருவிதமான "தொழில்நுட்ப நிலப்பிரபுத்துவம்" என்று ஸ்டீவ் பேனன் விமர்சித்துள்ளார்; இதை எதிர்த்துப் போராடியும் வருகிறார். இது அடிப்படை மனித விழுமியங்களுக்கு முரணானது என்றும், அமெரிக்கர்கள் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் சுதந்திரம் பறிக்கப்பட்டு "டிஜிட்டல் அடிமைகளாக” மாற்றப்படுகிறார்கள் என்றும் அவர் கருதுகிறார். "அவர்களைத் தடுத்தே ஆக வேண்டும். நாம் இப்பொழுதே இதைத் தடுக்கத் தவறினால், இது நம் நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் பேரழிவிற்கு இட்டுச் சென்றுவிடும்," என்று ஜனவரி மாதம் நியூயார்க் டைம்ஸின் முக்கிய நடுப்பக்க எழுத்தாளர் ராஸ் டௌதத்திடம் ஸ்டீவ் பேனன் அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.  MAGA பழமைவாதிகள் கடந்த காலத்தை அல்லது அவர்கள் எண்ணும் பொற்காலத்தை மீண்டும் நிலைநாட்ட விழைகின்றனர். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வலதுசாரிகள் குழுவோ எல்லாவற்றையும் மாற்றி அமைக்க விரும்புகிறது - ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் ஒருமுறை கூறியது போல, நாங்கள் "அனைத்தையும் உடைத்தெறிய விரும்புகிறவர்கள்." அதே நேர்காணலின்போது, பேனன் "முன்னணி விரைவுபடுத்தல்வாதிகளில் ஒருவர்" என்று எலான் மஸ்கை குறிப்பிட்டார். இங்கு 'விரைபடுத்தல்வாதம்'(Accelerationism) என்பது தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் கருத்தியலாகும். சமூக மாற்றத்திற்கு ஒழுங்கின்மையும், தான்தோன்றித்தனமும் வேகமான மாற்றமும் இயற்கையானது அல்லது தவிர்க்க முடியாதது என்று கருத்தை முன்வைக்கிறது.

விரைவுபடுத்தல் என்னும் கருத்தாக்கம் கடந்த பத்தாண்டுகளில் பரவலாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நிக் லேண்ட்(Nick land) எனும் பிரிட்டிஷ் சிந்தனையாளர் மூலமாக இது முக்கியத்துவம் பெற்றது. இவர் புதிய பிற்போக்கு இயக்கம்(neo-reactionary) அல்லது இருள் ஞானோதயம்(Dark Enlightenment) என அறியப்படும் குழுவுடன் தொடர்புடையவர். இக்குழுவில் கர்டிஸ் யார்வின்(Curtis Yarvin) போன்றவர்களும் அடங்குவர். இவர் இதற்கு முன் கணினி நிரலாளராகவும், வலைப்பதிவாளராகவும் இருந்தவர். யாரோன் அமெரிக்கா ஒரு முடியாட்சி போல, நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியதற்காக  பிரபலமானவர். தற்போது சிலர் குறிப்பிடும் டிரம்ப் 2.0 அதாவது, டொனால்ட் டிரம்ப்’ன் செல்வாக்கு மீண்டும் மேலோங்கியுள்ள இக்காலகட்டத்தில் இந்த எண்ணங்கள் மீண்டும் பேசப்படுகின்றன. சமூகம் இறுதியில் ஒரு பெரிய சரிவைச் சந்திக்க நேரிடும் என்பதால், நாம் அதனை விரைவுபடுத்தலாம் என்பதே விரைவுபடுத்தலின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கிறது. விரைவுபடுத்தல் குறித்து ஆய்வு செய்யும் சாப்மேன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஆண்ட்ரியா மொல்லே விளக்கியது போல, "இந்த வீழ்ச்சி எப்படியும் நிகழத்தான் போகிறது - ஆகையால், வலியைத் தாமதப்படுத்துவதை விட இப்போதே எதிர்கொள்வது நல்லது”. முதலாளித்துவ அமைப்பிலுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்தால், தொழிலாளர்கள் (பாட்டாளி வர்க்கத்தினர்) புரட்சி செய்து, நீதியான, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவார்கள் என்று நிறுவிய கார்ல் மார்க்ஸ் அவர்களின் தத்துவத்தை அடியொற்றி இந்தக் கருத்தாக்கம் தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் எலான் மஸ்க்குடன் தொடர்புபடுத்தப்படும் விரைவுபடுத்தல்வாதம் (அக்செலரேஷனிசம்) பற்றி மொல்லே முன்வைக்கும் கருத்து முற்றிலும் மாறுபட்டது. அவர் இதனை "தொழில்நுட்ப விரைவுபடுத்தல்வாதம்" (டெக்னோ-அக்செலரேஷனிசம்) என்று அழைக்கிறார். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்வதற்குப் பதிலாக, மஸ்க்’ன் இந்த அணுகுமுறை தற்போதைய அரசாங்கக் கட்டமைப்பை முழுமையாக தகர்த்து, தொழில்நுட்ப அதிபர்களும் பொறியாளர்களும் கட்டுப்படுத்தும் ஒரு புதிய ஆட்சி முறையை நிறுவ முயல்கிறது. மொல்லே அவர்களின் கூற்றுப்படி, எலான் மஸ்க் தனது தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் ஆட்சியை ஏற்படுத்தவும் நிர்வகிக்கவும் தற்போதைய அரசாங்க விதிகள், அமைப்புகள் என அனைத்தையும் தகர்க்க விரும்புகிறார்.  மஸ்க்’ன் செல்வாக்கின்கீழ் உருவாகவிருக்கும் எதிர்கால அரசாங்கத்தை, டெஸ்லா கார்கள் இயங்கும் விதத்துடன் மொல்லே ஒப்பிடுகிறார். டெஸ்லா கார்கள், கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் மூலம் நிறுவனத்திடமிருந்து எப்போது வேண்டுமானாலும் கட்டளைகளைப் பெற முடியும். வாகன உரிமையாளர்கள் ஓரளவுக்குத் தங்கள் வாகனங்களைத் தடையின்றிப் பயன்படுத்த முடிந்தாலும், டெஸ்லா நிறுவனம் அந்த வாகனத்தின் தொழில்நுட்ப அமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உரிமையாளரின் பயன்பாடு, நிறுவனம் கருதும் மிகத் திறமையான வழிமுறைக்கு ஏற்ப இயக்கப்படவில்லை என்றால், மாற்றங்களைச் செய்ய அந்நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு. அதேபோன்று, மஸ்க் தலைமையிலான அரசாங்கத்தில், குடிமக்களுக்கு சிறிதளவு சுதந்திரம் வழங்கப்படுவதாக தோன்றலாம்; இருப்பினும், எல்லாம் மிகச் சிறப்பாக, திறம்பட இயங்குவதை உறுதிசெய்ய, தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.newyorker.com/culture/infinite-scroll/techno-fascism-comes-to-america-elon-musk