ரஷ்யா-சீனா ஒத்துழைப்பு மற்றும் பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த புடினின் கருத்துக்கள்

தி வயர் - தமிழில்: வெண்பா

ரஷ்யா-சீனா ஒத்துழைப்பு மற்றும் பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த புடினின் கருத்துக்கள்

‘நேர்மையான பலதுருவ உலக ஒழுங்கு’: பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், 'பாகுபாடான தடைகளுக்கு' எதிராக ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுபட்டுள்ளன என்று விளாடிமிர் புடின் கூறுகிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்த புடின், சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதல் வளங்களைத் திரட்டுவதில் ரஷ்யாவும் சீனாவும் சிறப்புக் கவனம் செலுத்துவதாகவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் பிரிக்ஸ் அமைப்பின் திறனை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டு நிற்பதாகவும் அவர் கூறினார்.

பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத…

மோடி-புதின் உரையாடல் குறித்த நேட்டோ தலைவரின் கூற்றை ‘முற்றிலும் ஆதாரமற்றது’ என இந்திய அரசு நிராகரிப்பு

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிஉயர்வைத் தொடர்ந்து, மோடி புதினுடன் பேசியதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறியதை, செப்டம்பர் 26 அன்று இந்திய அரசு நிராகரித்தது.

நியூயார்க்கில் ரூட்டேவின் கருத்துகள் குறித்துக் கேட்டபோது, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தக் கூற்று “உண்மையில் தவறானது; முற்றிலும் ஆதாரமற்றது” என்று கூறினார்.

“இந்நோக்கில் மோடி, புதினுடன் எந்த நேரத்திலும் பேசவில்லை. அப்படிப்பட்ட உரையாடல் எதுவும் நடைபெறவில்லை,” என்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"நேட்டோ போன்ற ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க நிறுவனத்தின் தலைமை, பொது அறிக்கைகளில் அதிகப் பொறுப்புடனும் துல்லியத்துடனும் செயல்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக" அவர் வலியுறுத்தினார். மேலும், “பிரதமரின் சந்திப்புகளைத் தவறாகச் சித்தரிக்கும் அல்லது நடைபெறாத உரையாடல்களை நடந்ததாகக் குறிப்பிடும் ஊகத்தின் அடிப்படையிலான அல்லது கவனக்குறைவான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியானது, "இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தியை" வழங்குதை நோக்கமாகக் கொண்டது என்று சுட்டிக்காட்டிய ஜெய்ஸ்வால், "தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு தொடர்ந்து எடுக்கும்" என்றும் கூறினார்.

ஐ.நா. வின் முன்பு சி.என்.என்-இன் (CNN) கிறிஸ்டியன் அமன்பூரிடம் பேசிய ரூட்டே, “அமெரிக்க வரிகள், நேரடியாக ரஷ்யாவைப் பாதிக்கின்றன. ‘நான் உங்களை ஆதரிக்கிறேன், ஆனால் அமெரிக்காவின் இந்த 50% கட்டணங்களால் நாங்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதால், உக்ரைன் போரில் உங்கள் உத்தியை எனக்கு விளக்க முடியுமா? என மோடி புதினுடன் தொலைபேசியில் தற்போது பேசுகிறார்” எனக் கூறினார்.

ஆகஸ்ட் 2025-இல் அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்தது. ஆகஸ்ட் 7 அன்று இந்திய ஏற்றுமதிகள் மீது 25% வரி அமலுக்கு வந்தது. பின்னரும், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ததால், அமெரிக்கா கூடுதலாக 25% அபராதம் விதித்தது, இது மொத்த விகிதத்தை 50% ஆக இரட்டிப்பாக்கியது. இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்தது. இந்தக் கட்டணங்கள் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், காலணிகள், தளவாடங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என இந்தியாவின் பரந்த அளவிலான ஏற்றுமதித் துறைகளைக் குறிவைக்கின்றன, அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணுப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அமெரிக்க வரிகள் அறிவிக்கப்பட்ட பிறகு மோடியும் புதினும் பலமுறை தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

ஆகஸ்ட் 8 அன்று, மோடி புதினுடன் உரையாடினார். அதில், வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அறிக்கைப்படி, புதின் “உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள்” குறித்து அவருக்கு விளக்கினார். பேச்சுவார்த்தை மூலம் இந்த மோதல் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மோடி மீண்டும் வலியுறுத்தினார், மேலும் இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த உரையாடல் குறித்த ரஷ்ய அறிக்கையும், உக்ரைன் மற்றும் இருதரப்பு உறவுகள் மீதும் கவனம் செலுத்தப்படுவதையே குறிப்பிட்டது.

பத்து நாட்களுக்குப் பிறகு, புதின் மோடிக்குத் தொலைபேசியில் அழைத்தார். புதின், அலாஸ்காவில் டிரம்புடன் சமீபத்தில் நடத்திய சந்திப்பு குறித்து மோடிக்கு விளக்கியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்தது. தனது மதிப்பீட்டைப் பகிர்ந்துகொண்டதற்காக மோடி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா இந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் உறுதியளித்தார். ரஷ்யாவும் இதேபோல், இந்த உரையாடல் அலாஸ்கா உச்சிமாநாடு மற்றும் உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தது.

அதன்பிறகு மிகச் சமீபத்திய உரையாடல் செப்டம்பர் 17 அன்றுதான் நடந்தது. அன்று புதின், மோடியின் 75வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தார்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/diplomacy/modi-putin-call-mark-rutte-nato-secretary-general-mea-reaction

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு