அமெரிக்கா–பிரிட்டன் ‘சிறப்பு உறவின்’: நாளைய பாதை
தமிழில்: செந்தாரகை

அமெரிக்காவுடன் “சிறப்பு உறவு” எனும் சொல்லை அடிக்கடி வலியுறுத்துவது, அதனைப் பற்றி பெருமையாகப் பேசுவது பெரும்பாலும் நாமே என்பது பிரிட்டனின் வெளியுறவு அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் நன்கு அறிந்த உண்மையாகும்; அமெரிக்கர்கள் அதை பெயரளவிற்கே பேசி வருகிறார்கள். காரணம் என்னவெனில் இந்த உறவு நமக்குப் பரந்த ஆதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ளது; அமெரிக்கர்களுக்கு அது வெறும் வசதியோ விருப்பமோ மட்டுமே.
இந்த சிறப்பு உறவை ஒரு வெறும் உணர்ச்சிப் பிணைப்பாகவோ, சிதைந்த பேரரசின் நினைவுகளைப் பிடித்து நிற்கும் மனோபாவமாகவோ மட்டும் நோக்குவது மேலோட்டமான விளக்கமே. உண்மையில், இது அதைவிட ஆழ்ந்த வரலாற்று–அரசியல் அடித்தளங்களைக் கொண்டுள்ளது.
தற்போது, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையின் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்புக் குழு, பிரிட்டன்–அமெரிக்க உறவின் எதிர்காலப் பாதையை ஆய்வு செய்து வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, உளவுத்துறை, தூதரகம், மேலும் எங்களை இணைக்கும் வரலாற்று–கலாச்சாரத் தொடர்புகள்—இவற்றின் அனைத்திலும் அமெரிக்காதான் எப்போதுமே பிரிட்டனின் முதன்மையான கூட்டாளி என்ற கருத்தை அங்கே நான் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால் இந்த உறவு ஒரே மாதிரியில் உறைந்து நிற்பதில்லை; அது உலக அரசியலின் அலை ஏற்ற இறக்கங்களோடு மாறிக்கொண்டே இருக்கும். சாக்ரடீஸ் சொன்னது போல, “ஆராயப்படாத வாழ்க்கை அர்த்தமற்றது” அதுபோல ஆராயப்படாத கொள்கையும் நிலைத்து நிற்காது. உலக அரசியலில் நிரந்தரம் என்ற ஒன்று எதுவும் இல்லை.
2018 இல் முன்னாள் பிரதமரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான பென்னி மோர்டான்ட் தொடங்கிய உலக செழிப்புக்கான கூட்டணி (Coalition for Global Prosperity) என்ற கட்சி சார்பற்ற குழு, பிரிட்டனின் வெளிநாட்டு–பாதுகாப்புக் கொள்கை பின்வரும் மூன்று வலுவான தூண்களில் நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது:
1. பயனுள்ள வளர்ச்சிக்கான பட்ஜெட்,
2. சுறுசுறுப்பான தூதரகப் பணி,
3. உறுதியான பாதுகாப்புத் திட்டம்.
அந்தக் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, உலக அரசியலின் மாறிவரும் சூழ்நிலைகளை ஆய்ந்து, அமெரிக்காவுடனான உறவை எவ்வாறு புதுப்பித்து வலுப்படுத்தலாம் என்பதைக் கூறுகிறது. (குறிப்பு: நான் சமீபத்தில் அந்தக் குழுவில் தேசிய பாதுகாப்பு மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டேன். ஆனால் அறிக்கை வெளிவந்த பின் தான் சேர்ந்தேன்; எனவே அதில் எனது பங்களிப்பு இல்லை.)
டிரம்ப் காலம் இந்த உறவுக்கு பல சிரமங்களை உருவாக்கியது; இது பிணைப்பில் புதுப் பிளவுகளையும் அழுத்தங்களையும் தோற்றுவித்தது. அமெரிக்கா மட்டுமே சுமையைக் ஏற்றுக்கொள்ளாமல், பிரிட்டனும் தனது பாதுகாப்புச் செலவுகளை உயர்த்தி, இராணுவப் பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டும். மேலும், வர்த்தகம், சுங்கவரி, உக்ரைன், வெளிநாட்டு உதவி போன்ற பிரச்சினைகளில் வாஷிங்டனின் பார்வையும் லண்டனின் பார்வையும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது . முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை; ஆனால் அவற்றை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதே அவற்றை நுட்பமாக கையாளும் முதல் படி என்று அறிக்கை வெளிப்படையாகச் சொல்கிறது.
“கென்னடி ஆட்சியின் தலைகீழ் பிரதிபலிப்பு” போன்றதுதான் டிரம்ப் காலம் என்ற அறிக்கையின் மையக் கருத்து பின்லாந்து ஜனாதிபதியின் ஒரு கூற்றில் பிரதிபலிக்கிறது. அதாவது—“அமெரிக்கா எங்களுக்கு என்ன செய்யும்?” என்று கேட்பதற்கு மாறாக, “நாம் அமெரிக்காவுக்காக என்ன செய்ய முடியும்?” என்று ஐரோப்பியர்கள் கேட்க வேண்டிய நிலை. இதன் பொருள் அமெரிக்காவுக்குக் கீழ்ப்படிதல் அல்ல; மாறாக, *பிரிட்டனின் தனித்திறன்களைப் பயன்படுத்தி, இருதரப்புக்கும் பயனளிக்கும் பங்களிப்பை உருவாக்குவதே.
* நேட்டோ நிர்ணயித்துள்ள பாதுகாப்புச் செலவுத் தரத்தில் மட்டுமே நின்றுவிடாமல், பிரிட்டன் அதைத் தாண்டி செல்ல வேண்டும். 2035க்கான இலக்கை 2030ல் அடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% நிதியை இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்க வேண்டும். இப்படியான முன்முயற்சி, பிரிட்டனின் தீவிரத்தையும் தலைமைத்துவத்தையும் உலகிற்கு உறுதியாகக் காட்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
இன்றைய அமெரிக்கா தனது பிரதான சவாலாக சீனாவையே கருதுகிறது. அதன் வெளிநாட்டு–பாதுகாப்புக் கொள்கைகள் அனைத்தும் இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நகர்கின்றன. அதேசமயம், சீனா தன்னைச் சிறு நாடுகளின் “நண்பனாக” காட்டும் நோக்கில்,பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மூலம், கம்போடியா, பெரு, இலங்கை போன்ற இடங்களில் துறைமுகங்களையும் கடற்படைத் தளங்களையும் உருவாக்கி தன் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
இதற்கு எதிராக, சீனாவின் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள், மறைமுக சுயநல நோக்கங்களை அம்பலப்படுத்துவதில் பிரிட்டன் இன்னும் உறுதியாக பங்காற்ற வேண்டும். இதற்குத் தேவையான மேடைகள்(ஐ.நா., நேட்டோ, ஜி7, ஐரோப்பா கவுன்சில், ஓஎஸ்சிஈ, ஓஇசிடி, டபிள்யூடிஓ, காமன்வெல்த்) அனைத்திலும் பிரிட்டன் உறுப்பினராக இருப்பது அருமையான வாய்ப்பாகிறது.
மேலும், “மினிலேடரல்” எனப்படும் குறுகிய கூட்டணிகள்—சில நாடுகள் குறிப்பிட்ட இலக்குக்காக இணையும் அமைப்புகள்—அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என அறிக்கை வலியுறுத்துகிறது. உதாரணமாக:
* புதிய தொழில்நுட்பம், ஆயுத மேம்பாட்டுக்கான AUKUS ஒப்பந்தம்,
* பால்டிக், ஆர்க்டிக் பிராந்தியங்களில் விரைவான நடவடிக்கைக்குத் தயாராக இருக்கும், பிரிட்டன் தலைமையிலான Joint Expeditionary Force,
* வளர்ச்சி முன்னுரிமைகளைப் பற்றி புதிய சிந்தனையை உருவாக்கும் அமெரிக்கா–பிரிட்டன் சிறு குழு.
இதன் பின்னணியில் இரண்டு முக்கியப் பாடங்கள் தெளிவாகத் தெரிகின்றன:
1. அட்லாண்டிக் கடலைத் தாண்டிய இந்த உறவு இரு நாடுகளுக்கும் அளவிட முடியாத நன்மை செய்துள்ளது.
2. ஆனால் அது வரலாற்று சிறப்புமிக்க உறவு என்ற பேரிலேயே நிலைத்து நிற்பதில்லை; மாறாக, இருதரப்புக்கும் பயனளிக்கும் நடைமுறைகளில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதற்காக, பாதுகாப்புச் செலவுகளை உயர்த்துதல், சீனாவுக்கு எதிரான தெளிவான நிலைப்பாடு, AUKUS பங்கேற்பாளர்களுக்கு உண்மையான பலன்களை அளித்தல், மேலும் Joint Expeditionary Force மாநாடுகளுக்கு அமெரிக்க பார்வையாளர்களை அழைத்து, ஐரோப்பா தன் பாதுகாப்பைக் கையில் எடுத்துக் கொள்ளும் உறுதியைக் காட்டுதல்—இவை அனைத்தும் அத்தியாவசியம்.
ஆம், டிரம்ப் ஒவ்வொரு விஷயத்தையும் வணிக நடவடிக்கையாக மட்டுமே பார்க்கிறார்; எங்கு அமெரிக்காவுக்குப் பலன் கிடைக்கிறதோ அங்கேயே கவனம் செலுத்துவார். எனவே, பிரிட்டன் உண்மையில் பங்களிக்கக்கூடிய துறைகளிலேயே தன் ஆற்றலைச் செலுத்த வேண்டும். அது அட்லாண்டிக் சாசனம் போல உயர்ந்த இலட்சிய முழக்கமாக இருக்க வேண்டியதில்லை; ரீகன்–தாச்சர் காலம் போல உற்சாக நட்பின் கவிதையாகவும் இருக்க வேண்டியதில்லை. சற்றே வணிகரீதியாகத் தோன்றினாலும், *இன்றைய புதிய உலக யதார்தத்தை அதுவே மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.
- செந்தாரகை (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thehill.com/opinion/international/5459775-the-future-of-the-special-relationship-between-the-us-and-uk/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு