ரஷ்யா - உக்ரைன் போரின் 658-வது நாளில் நடந்த முக்கியமான நிகழ்வுகள்

தமிழில் : விஜயன்

ரஷ்யா - உக்ரைன் போரின் 658-வது நாளில் நடந்த முக்கியமான நிகழ்வுகள்

டிசம்பர் 13, 2023 புதன்கிழமை நிலவரப்படி இவைதான் நடந்தது.

தாக்குதல்கள்

"உக்ரைனின் தெற்கு ஜபோரிஷியா பகுதியில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மாஸ்கோவால் நியமிக்கப்பட்ட தலைவரான யெவ்ஜெனி பாலிட்ஸ்கி, ரஷ்யப் படைகள் நோவோபோக்ரோவ்காவின் வடகிழக்கு நோக்கி கணிசமாக முன்னேறியுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த கிராமம் ரோபோடைனுக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ளது. இப்பகுதியை ஆகஸ்ட் மாதத்தில் தாங்கள் மீட்டதாக உக்ரைன் கூறியிருந்தது.ரஷ்யப் படைகள் எல்லைகளில் நில்லாமல் படிப்படியாக முன்னேறி வருகின்றன என்று பாலிட்ஸ்கி கூறினார். இப்பிராந்தியத்தில் மோதல்கள் நடந்து வருவதை உக்ரைன் உறுதிப்படுத்தியது. 'எங்கள் இராணுவம் வடக்குப் பகுதிகளில் அதாவது ப்ரியுட்னே மற்றும் சபோரிஷியா பிராந்தியத்தில் நோவோபோக்ரோவ்காவின் மேற்குப் பகுதிகளில் எதிரிகளிடமிருந்து வரக்கூடிய மூன்று தாக்குதல்களை முறியடித்துள்ளது. " என்று உக்ரைன் இராணுவத்தின் தினசரி அறிக்கை கூறுகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து, ரஷ்யா அனுப்பிய, ஈரானில் தயாரிக்கப்பட்ட 15 ஷாஹித் ட்ரோன்களில் ஒன்பது ட்ரோன்களை வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

தெற்கு கெர்சன் பிராந்தியத்தில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் இராணுவ நிர்வாகத்தின் தலைவரான ஒலெக்சாண்டர் புரோகுடின் கூறினார்.

கிழக்கு டொனெட்ஸ்கில் உள்ள ஒரு முக்கியமான மலையைக் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியது. டொனெட்ஸ்க் நகரின் வடமேற்கே உள்ள சுரங்க நகரமான பிவ்டென்னே அருகே உயரமான காட்சியை படம்பிடித்து, இந்த இடத்தை தனது துருப்புக்கள் கைப்பற்றியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

உக்ரைனின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கை இயக்கும் Kyivstar-இல் மிகப் பெரிய சைபர் தாக்குதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை சுமார் 24.3 மில்லியன் மக்களை மொபைல் போன் சேவை இல்லாமல் ஆக்கியதோடு, வான்வழி தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு அனுப்புவதை கடினமாக்கியது. ரஷ்யா உக்ரைன் மீதான முழுப் படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து இது மிகப்பெரிய சைபர் தாக்குதலாகத் தெரிகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Oleksandr Komarov என்பவர், இது சைபர்ஸ்பேஸில் நடக்கும் போரின் ஒரு பகுதி என்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். இதில் ரஷ்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். புதன் கிழமைக்குள் சிக்கலைச் சரிசெய்து சேவைகளைப் பெற முடியும் என்று Kyivstar நம்புகிறது.

Kyivstar நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, மில்லியன் கணக்கானவர்கள் தொலைபேசி சேவைக்கான இணைப்பை இழந்தனர். [Sergei Chuzavkov/AFP]

உக்ரைனில் நடந்த போரில் சுமார் 3,15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை மோதலின் தொடக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்த துருப்புக்களில் கிட்டத்தட்ட 90% என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளன. உக்ரைன் தொடுத்த தாக்குதலில், இராணுவ வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் இரண்டிலும் ரஷ்யா கணிசமான இழப்புகளை எதிர்கொண்டதாகவும் அதே உளவுத்துறையின் அறிக்கை கூறியுள்ளது. இந்த இழப்புகள் ரஷ்யாவின் இராணுவ முன்னேற்றத்தை தோராயமாக 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

அரசியலும், இராஜதந்திரமும்

உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி பேச அதிபர் ஜோ பைடனும் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். புதிய எல்லை பாதுகாப்பு விதிகளை உருவாக்குவது என்ற நிபந்தனையுடன் உக்ரைனுக்கு பணம் கொடுப்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சில அமெரிக்க குடியரசுக் கட்சியினர் உக்ரைனுக்கு ஆதரவாக பில்லியன் கணக்கான டாலர்கள் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரைனுக்கு இராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதன் முக்கியத்துவத்தை அதிபர் பைடன் வலியுறுத்தி பேசினார். இந்த உதவியை குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து முடக்கினால், அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு "கிறிஸ்துமஸ் பரிசு" வழங்கும் நிலையே உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார். புடினை அவர்கள் தடுக்கவில்லை என்றால், அவர் தனது போர் நடவடிக்கைகளைத் தொடருவார் என்றும் பைடென் எச்சரித்தார்.

சுமார் 6,00,000 உக்ரேனியர்கள் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்டதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கருங்கடலில் உக்ரைனின் வெற்றி மற்றும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய பாதையை உருவாக்குவது குறித்தும் அவர் பேசியுள்ளார். 2024-ஆம் ஆண்டில், வான்வெளியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதே தங்களின் நோக்கம் என்று அவர் கூறினார்.

உக்ரேனிய ஜனாதிபதி நேரடியாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் புதிய நிதியுதவிக்கான ஒப்புதலைக் கேட்டார். இச்சந்திப்பிலிருந்து தனக்கு சாதகமான அறிகுறிகள் கிடைத்தது என்றாலும் பேசுவதை காட்டிலும் நடவடிக்கை தேவை என்பதில் தான் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள், குறிப்பாக அவையின் சபாநாயகர் மைக் ஜான்சன் உடன்பாட்டிற்கு வருவதாகத் தெரியவில்லை. சரியான மேற்பார்வை, வெற்றிக்கான தெளிவான உத்தி அல்லது அமெரிக்க மக்களுக்கு திருப்திகரமான பதில்கள் இல்லாமல் பில்லியன் கணக்கான கூடுதல் டாலர்களை வழங்குவது குறித்து ஜான்சன் சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.

முன்னதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை ரஷ்யா உன்னிப்பாகக் கவனிக்கும் என்று குறிப்பிட்டார். பெஸ்கோவ், உக்ரைனுக்கான கூடுதல் அமெரிக்க இராணுவ உதவி பலனளிக்காது என்று கூறியதுடன், முந்தைய உதவிகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் போர்களில் உக்ரைனுக்கு பயனளிக்கவில்லை என்றும் அதை ஒரு "படுதோல்வி" என்றும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவுடன் சமாதானம் செய்ய உக்ரைன் தனது நிலப்பரப்பில் சிலவற்றை தாரைவார்க்க வேண்டும் என்ற கருத்தை ஜெலென்ஸ்கி உறுதியாக மறுத்ததோடு, அவ்வாறு செய்வது "பைத்தியக்காரத்தனம்" என்று அழைத்தார். இங்கு வாழும் குடும்பங்கள் மற்றும் அவர்களின் வரலாறு பற்றிய விசயம் என்று தனது மறுப்புக்கு விளக்கம் கூறினார், எம்மக்கள் பிரதேசங்களை பயங்கரவாதிகளிடம் தாரைவார்க்க மாட்டார்கள் என்றார் ஜெலன்ஸ்கி.

போலந்தின் புதிய பிரதமர் டொனால்ட் டஸ்க், உக்ரைனை முழுமையாக ஆதரிக்குமாறு ‘போலாந்து’ மேற்கு நாடுகளை கேட்டுக் கொள்வதாகக் கூறினார். அதைத் தவிர வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நடவடிக்கை உக்ரைன் மீதான முழுமையான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ரேடியோ லிபர்ட்டி (RFE/RL) என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் அல்சு குர்மஷேவா, அக்டோபர் மாதம் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டார். "ரஷ்ய இராணுவத்தைப் பற்றி தவறான தகவலைப் பரப்பியதற்காக" அவர் இப்போது அதிக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார். RFE/RL நிறுவனத்தின் செயல் தலைவரும் குழு உறுப்பினருமான Jeffrey Gedmin, இந்த செயலை கடுமையாக விமர்சித்ததோடு, தங்கள் நிறுவனத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். குர்மாஷேவாவுக்கு எதிரான கடுமையான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆயுதங்கள்

200 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த ஆயுத உதவித் தொகுப்பில், உயர் தாக்குதல் திறனுடைய பீரங்கி ராக்கெட்டுகள் (HIMARS), வேகமான கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளுக்கான தோட்டாக்கள் போன்றவை அடங்கும். ஆனால், ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த உதவிப் தொகுப்பை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்க வேண்டும், இன்னும் அவர்கள் ஏற்கவில்லை. "நாடாளுமன்றம் விரைவில் கூடுதல் உதவிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், பாதுகாப்பு உதவியுடன் உக்ரைனுக்கு நாம் உதவக்கூடிய இறுதி முறை இதுவாகவும் இருக்கலாம்." என்று பைடன் நிர்வாகம் குறிப்பிட்டது.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2023/12/13/russia-ukraine-war-list-of-key-events-day-658