இந்தியாவைத் தண்டிக்க விரும்பவில்லை ஆனால்...: ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து அமெரிக்க எரிசக்தி செயலாளர்
வெண்பா (தமிழில்)

ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிரிஸ் ரைட் சென்ற வாரம் வலியுறுத்தினார். இந்தியாக்கு ஏராளமான மாற்று வழிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பிரச்சினையை தார்மீக உத்தியாக ரைட் முன்வைத்தார். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது உக்ரைனில் நடக்கும் அட்டூழியங்களுக்கு மறைமுகமாக நிதியளிக்கிறது என்றும், அதே நேரத்தில் இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆழமான எரிசக்தி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அவர் வாதிட்டார்.
"நாங்கள் இந்தியாவைத் தண்டிக்க விரும்பவில்லை. நீங்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்கலாம், ஆனால் ரஷ்ய எண்ணெயை மட்டும் வாங்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. அமெரிக்காவிடம் விற்பனைக்கு எண்ணெய் உள்ளது, மற்ற அனைவரிடமும் உள்ளது," என்று நியூயார்க் வெளிநாட்டு பத்திரிகை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ரைட் கூறினார்.
"உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஏராளமாக உள்ளன. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டிய அவசியமில்லை. அது மலிவானது என்பதால் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்புவதில்லை; அவர்கள் அதைத் தள்ளுபடி விலையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
“நிலையான எரிசக்தி திட்டங்களில் இந்தியா ஒரு "நட்சத்திரம்" என்று குறிப்பிட்ட அவர், மலிவான எண்ணெயை வாங்குவதற்காக சமரசம் செய்துகொண்டு, புதினின் கைகளில் அதிகப் பணம் சேர்வதைக் கண்டுகொள்ளாமல் இருக்க இந்தியா முடிவு செய்துள்ளது” என்றார்.
தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் இன்னும் சீனா, இந்தியா, துருக்கி போன்ற நாடுகளைச் சென்றடைகிறது என்றும், இது ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவுகிறது என்றும் செயலாளர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "அதுதான் சிக்கல். நாங்கள் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். இந்தியர்களும் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
தள்ளுபடி விலையில் விற்கப்படும் ரஷ்ய எண்ணெய், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு நிதியளிக்க உதவுகிறது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியா இறக்குமதி செய்யும் ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்த வரிகள் தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் ரைட்டின் கருத்துக்கள் வந்துள்ளன.
இதற்கிடையில், தமது எரிசக்தி உத்தியானது தேசிய நலன் மற்றும் சந்தை இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. மேற்கத்தியத் தடைகள் விநியோகத்தைக் கட்டுப்படுத்திய பிறகு தள்ளுபடி விலையில் உள்ள ரஷ்ய எண்ணெயை இந்தியா நாடியது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் இலக்கை இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது என்று நம்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார். மேலும், அமெரிக்க அரசு இந்திய அரசை "அற்புதமான கூட்டாளி" ஆகவும், உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்காளராகவும் கருதுவதாக அவர் வலியுறுத்தினார்.
இயற்கை எரிவாயு, நிலக்கரி, அணுசக்தி, தூய சமையல் எரிபொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்று ரைட் சிறப்பித்துக் கூறினார். "நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவுடன் மேற்கொண்டு எரிசக்தி வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு கலந்துரையாடல்களை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
"நான் எனது பதவிக்கு வந்த ஆரம்ப நாட்களில் எனது பெரும்பாலான நேரம் இந்தியாவுடனான விவகாரங்களைக் கையாள்வதில் கழிந்தது. இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அமெரிக்காவின் அற்புதமான கூட்டாளி, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உண்மையாகவே ஆற்றல்மிக்க சமூகம். அதன் குடிமக்களின் செழிப்பு உயரும்போது, அதன் எரிசக்தித் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது," என்றும் ரைட் குறிப்பிட்டார்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/world/us-news/story/us-energy-secretary-chris-wright-russian-oil-imports-glbs-2792872-2025-09-25
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு