டிரம்ப்பின் சுங்க வரிக் கொள்கைகள் பழைய கூட்டணிகளை மீளுருவாக்கம் செய்து வரும் வேளையில், உலகளாவிய தெற்கு நாடுகள் தங்களுக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்ளத் துணிந்துள்ளன
விஜயன் (தமிழில்)

டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பது குறித்து உலகளாவிய தெற்கு நாடுகள் தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்றைய உலக நிகழ்வுகளை உள்ளபடி புரிந்துகொள்ள, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுங்க வரிகளை ஆதரித்துப் பேசிய பிரிட்டிஷ் அரசியல்வாதியான ஜோசப் சேம்பர்லினிடமிருந்து பல அரிய படிப்பினைகளை நாம் கற்க வேண்டும்.
சுங்க வரிகளே சர்வதேச பிரச்சனைகளக்கு ஒரே தீர்வு என சேம்பர்லின் ஆழமாக நம்பினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குள் இருக்கும் காலனிய நாடுகளுக்கு இடையே சிறப்பு வரி விகிதங்களை உருவாக்கும் "ஏகாதிபத்திய முன்னுரிமை" எனும் திட்டம், பிரிட்டனின் ஏகாதிபத்திய நலன்களை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலனிகளைச் சிதறவிடாமல் பிணைத்துக் காக்கும் என்று அவர் திடமாக நம்பினார்.
சேம்பர்லினின் சகோதரர் ஆஸ்டன், இந்தச் சிந்தனையை மிகத் தெளிவான வார்த்தைகளில் எடுத்துரைத்தார். பரஸ்பர வர்த்தகத்தின் வாயிலாக, பிரிட்டிஷ் காலனிகளுக்கிடையே ஒரு வலுவான பொது நலன்களை உருவாக்க முடியும் என்று அவர் விளக்கினார். வர்த்தகமானது, காலப்போக்கில் காலனிகளைப் மேலும் இறுகிப் பிணைக்கும் உறவுகளின் வலையமைப்பை உருவாக்கும் என அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தப் பிணைப்புகள் அத்துணை நெருக்கமாக அமையுமாதலால், எத்தகைய இடர் நிறைந்த காலத்திலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எந்தவொரு காலனியும் பிரிந்து செல்ல எண்ணிப்பார்க்காது. இத்தகைய வலிமையான, இலாபகரமான பிணைப்புகளை முறிப்பதற்கு எவரும் கனவுகூட காணத் துணியமாட்டார்கள் என்றும் சேம்பர்லினின் சகோதரர் ஆஸ்டன் உறுதிபடக் கூறினார்.
ஆனால், டிரம்ப்பின் சுங்க வரிப் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டதாகும். அவர் ஐக்கியத்தையோ அல்லது ஒருங்கிணைந்த வலையமைப்புகளையோ உருவாக்கும் நோக்கத்துடன் சுங்க வரிகளைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. மாறாக, சுங்க வரிகள் அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கத்தின் அப்பட்டமான அறிவிப்புகளாகவே அமைந்தன. டிரம்ப் அநீதியானது என்று தாம் கருதிய அமெரிக்க வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக்(பற்றாக்குறைகளை) குறைக்கும் நோக்கத்திற்காகவே அவரின் சுங்க வரிவிதிப்புகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டன.
பல சூழ்நிலைகளில், டிரம்ப்பின் இந்த வியூகம் எதிர்பார்த்த பலனை அளித்தது. அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருந்த சிறிய பொருளாதாரங்களுக்கு அவர் கடும் அழுத்தத்தைக் கொடுத்தார். இந்த நாடுகளில் சில தங்கள் சொந்த சுங்க வரிகளைக் குறைத்தன. மேலும் சில நாடுகள், அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிக முதலீடு செய்வதாகத் தெளிவற்ற வாக்குறுதிகளை மட்டும் அளித்தன.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, ஒரு திட்டவட்டமான அரசியல் எதிர்வினை வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலக அரசியலில் சுங்க வரிகள் ஒரு முழுமையான மறுசீரமைப்பை நிகழ்த்தி வருகின்றன என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுவது முன்முடிவாகிவிடும். ஆயினும், பிரேசில், ரஷ்யா, இந்தியா மட்டுமல்லாது சீனத் தலைவர்களிடமிருந்து கிளம்பும் வலுவான எதிர்ப்பு, சுங்க வரிகள் டிரம்ப் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையான விளைவுகளையே விளைவிக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது. நாடுகளை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, இந்த வரிகள் அவற்றை ஒன்றிணைத்து அமெரிக்காவின் வல்லமையைக் குறைக்கத் தூண்டலாம்.
கட்டுப்பாடு இன்றித் தொடர்ந்தால், இராஜதந்திர வழியிலான டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பு, வரித்தாக்குதலுக்கு உள்ளாகும் பொருளாதாரங்களுக்குப் பெரும் சேதத்தை விளைவிப்பதோடு நிற்காமல், அவற்றின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக அமையலாம்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் அண்மையில் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இக்கருத்தையே அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். தற்போது பிரேசில் பல பொருட்களின் மீது 50% சுங்க வரிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. வர்த்தகம், அரசியல், டிரம்ப்பின் தனிப்பட்ட சீற்றம் எனப் பல முகங்களைக் கொண்ட ஒரு விரிவான தாக்குதலின் அங்கமாகவே அமெரிக்காவின் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.
ஷி ஜின்பிங், “நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒருதலைப்பட்சக் கொள்கைகளுக்கும், காப்பு கொள்கைக்கும் எதிராகத் தெளிவானதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்று அறைக்கூவி அழைத்தார். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக லூலா, பிற தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் உரையாடியுள்ளார். ஒரு காலகட்டத்தில், இராணுவ விவகாரங்களில் டிரம்ப்பின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக மோடி பார்க்கப்பட்டார். ஆனால் தற்போது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது 50% சுங்க வரிகளை மோடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மோடி அடுத்த மாதம், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பல ஆண்டு காலப் பதட்டங்களுக்குப் பிறகு, நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதிலும், வர்த்தகத்தைப் பெருக்குவதிலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்.
இந்த புதிய யதார்த்தத்தை லூலா தனது எளிய, ஆனால் ஆணித்தரமான வார்த்தைகளில் சுருக்கமாக எடுத்துரைத்தார். “நாங்கள் எங்கள் தயாரிப்புகளைத் தொடர்ந்து விற்பனை செய்வோம். அமெரிக்கா எங்களிடமிருந்து கொள்முதல் செய்ய விரும்பவில்லையெனில், புதிய பங்காளி நாடுகளைத் தேடுவோம். உலகம் மிகப் பெரியது, பிரேசிலுடன் வர்த்தகம் செய்ய அது பேராவல் கொண்டுள்ளது,” என்று லூலா உறுதிபடக் கூறினார்.
உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் மேலும் ஆழமாகி வருகிறது. சட்டப்பூர்வ ஆதரவு இல்லாத, சந்தேகத்திற்கிடமான நிர்வாக உத்தரவுகள் மூலமாக மட்டுமே விதிக்கப்பட்டு வரும் டிரம்ப்பின் சுங்க வரிகள், வெறுமனே வர்த்தக நோக்கங்களைத் தாண்டி, அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதே இந்த விரிசல்கள் ஆழமாகி வருவதற்கு காரணமாகும்.முதலில், சுங்க வரிகள் 1.18 டிரில்லியன் டாலர் அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமநிலைப்படுத்துவதற்காக விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் கூறினார். பிறகு, அமெரிக்காவில் முதலீடு செய்ய நாடுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
ஆனால் இன்று, தொடர்பில்லாத பல விவகாரங்களில் அமெரிக்காவின் அரசியல் கோரிக்கைகளுக்கு இணங்க நாடுகளை நிர்ப்பந்திக்கும் ஒரு வலுவான கருவியாக சுங்க வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்: மெக்ஸிகோவில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அரசு தனது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. மெக்ஸிகோ மீது 30% சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த சமயத்தில் இது நிகழ்ந்தது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளுக்கும், சுங்க வரி அச்சுறுத்தலுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அதிபர் கிளவுடியா ஷெயின்பாம் திட்டவட்டமாக மறுத்துரைத்தார். இந்தியா மலிவான ரஷ்ய எண்ணெயின் கொள்முதலைப் பலமடங்கு அதிகரித்ததை காரணம் காட்டி, சுங்க வரி 50% ஆக உயர்த்தப்பட்டதை ஒரு நியாயமற்ற தண்டனையாகவே பலரும் கருதுகின்றனர். கனடாவில், பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதற்குப் பதிலடியாக, கனடாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது “மிகவும் கடினமாகிவிட்டது” என்று டிரம்ப் கருத்துரைத்தார்.
பிரேசிலில், டிரம்ப் அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளார். பதவிக் காலம் முடியும் தருவாயில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனது கூட்டாளியும், முன்னாள் அதிபருமான ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிரான விசாரணைகளைத் தடுப்பதற்கு உதவியிருக்கிறார். பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் மீது டிரம்ப் தடைகளை விதித்தார். அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்கள் மீது பிரேசில் விதிப்பதற்கு திட்டமிட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலுக்கட்டாயமாக வற்புறுத்தினார்.
இவையனைத்தும், டிரம்ப் சுங்க வரிகளை ஒரு அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்துகிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. அமெரிக்க நுகர்வோர் சந்தையை அணுகும் வாய்ப்பு, அவரது முதன்மையான இராஜதந்திரக் கருவியாக உருவெடுத்துள்ளது. அவரது விருப்பங்களுக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கங்களின் மீது அது ஒரு நீடித்த அச்சுறுத்தலாகவே தொக்கி நிற்கிறது. இதன் விளைவாக, பல நாடுகள் தங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றன: தாங்கள் ஒவ்வொருவராக குறிவைக்கப்படலாம் என்பதை உணர்ந்து, டிரம்ப்புடன் தனித்தனியாக சமாதானம் செய்துகொள்ள முயல வேண்டுமா? அல்லது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டுமா? பலர் பிரிக்ஸ் அமைப்பை ஒரு நம்பகமான பாதுகாப்பு அரணாகக் கருதுகின்றனர். மேற்கத்திய G7 நாடுகளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள 10 நாடுகள் கொண்ட கூட்டமைப்புதான் பிரிக்ஸ்.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரங்கள் அசுர பலம் கொண்டவை. இவை சுமார் 450 கோடி மக்களுக்கு தாயகமாக விளங்குகிறது; இது உலக மக்கள் தொகையில் 55% ஆகும். வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் அளவிடப்படும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 37.3% பங்கை இந்தப் கூட்டமைப்பு கொண்டுள்ளன.
டிரம்ப்பின் சுங்க வரிகளும் அவரது வற்புறுத்தல்களும் பிரிக்ஸ் கூட்டமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதே தற்போதைய முக்கிய விவாதப் பொருளாகும். இதுவரை, பிரிக்ஸ் கொள்கை ரீதியாகப் பல்வேறுபட்ட நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவிற்கு வெளிப்படையாகவே விரோதம் பாராட்டும் சீனா போன்ற நாடுகளையும், அதேசமயம் வாஷிங்டனுடன் நட்புணர்வு பாராட்டும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளையும் இது உள்ளடக்கியிருந்தது.
பிரேசில் அதிபர் லூலா ஏற்கனவே தனது மனப்பாங்கை மாற்றியமைத்து வருகிறார். உள்நாட்டிலோ, அமெரிக்கத் தலையீடுகளுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு உருவாகியதோடு, தேசியவாதக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
அண்மைக் காலம் வரை, டிரம்ப்புடனான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, பிரேசிலின் “பலதரப்பு ஒருங்கிணைப்பு” என்ற உத்தியையே லூலா செயல்படுத்தி வந்தார். இடதுசாரி அரசியல் பின்னணி இருந்தபோதிலும், பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணியாக மாற்ற சீனாவின் முயற்சியை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஈரான் போன்ற நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் சேர்ப்பதையும் அவர் எதிர்த்தார்.
ஆனால் டிரம்ப்பின் புதிய அழுத்தம் ஒரு பெரிய மாறுதலைத் தூண்டுகிறது. சாவ் பாலோவில்(பிரேசிலின் நிதி மையம்) உள்ள சர்வதேச உறவுகளுக்கான பள்ளியில் இணைப் பேராசிரியராக பணிப்புரியும் ஆலிவர் ஸ்டுயென்கெல், “டிரம்ப்பின் நடவடிக்கைகள் பிரேசிலை, பன்முகத்தன்மையைப் பின்பற்றவும், பிரிக்ஸ் அமைப்பைப் பயன்படுத்தவும், புதிய கூட்டாளிகளையும் முடிந்தவரை அதிக நண்பர்களையும் கண்டறிய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளன,” என்று குறிப்பிட்டார்.
“அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும், இந்த சுங்க வரிகளால் சீனர்களே பெரும் வெற்றியை அடைந்திருக்கிறார்கள்,” என்று பிரேசிலில் உள்ள மற்றொரு பேராசிரியரான மதியாஸ் ஸ்பெக்டர் கூறுகிறார்.
அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது பற்றியும் லூலா பேசியுள்ளார். சீனா நீண்டகாலமாக இதை விரும்பியபோதும், கடந்த இருபது ஆண்டுகளாக இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில், லூலா, “பிரேசில், டாலரைச் சார்ந்திருக்க முடியாது. பிரிக்ஸ் கூட்டமைப்பு வர்த்தகத்திற்காக ஒரு பொது நாணயத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்,” என்று கூறினார். “வெனிசுலா, பொலிவியா, சிலி, ஸ்வீடன், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய நாங்கள் டாலர்களை வாங்கக் கடமைப்பட்டவர்கள் அல்ல. நமது சொந்த நாணயங்களையே நாம் பயன்படுத்தலாம். எமது ஆளுகைக்குள் இல்லாத ஒரு நாணயமான டாலருடன் ஏன் நாங்கள் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்? டாலர்களை அமெரிக்கா மட்டும்தான் அச்சிடுகிறது அல்லவா,” என்று அவர் மேலும் விளக்கினார்.
தற்போதைக்கு பிரேசில் ஒப்பீட்டளவில் வலிமையான நிலையில் உள்ளது. அதன் மொத்த ஏற்றுமதியில் 12% மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்கிறது, இது 2000 ஆம் ஆண்டில் 24% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. சீனாவே பிரேசிலின் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்குகிறது. 2023 ஆம் ஆண்டில், இரும்புத் தாது, சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி உள்ளிட்ட 94 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரேசில் தயாரிப்புகளைக் சீனா கொள்முதல் செய்தது.
இருப்பினும், பிரேசிலில் சில தொழில்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும். காபி எண்ணெய், கடல் உணவுப் பொருட்கள், ஜவுளி, காலணிகள் மற்றும் பழங்கள் போன்ற துறைகள் குறிப்பாகப் பாதிக்கப்படலாம். நிறுவனங்கள் பிற ஏற்றுமதி சந்தைகளுக்குத் தடம் மாற உதவும் பொருட்டு, அரசாங்கம் அவசரக் கடன் வசதிகளை வழங்கி வருகிறது.
UBS BB ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவிற்கான பிரேசிலின் ஏற்றுமதிகளில் 75% வரை வேறு நாடுகளுக்குத் திருப்பிவிடப்படலாம். பிரேசிலின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் இதன் அதிகபட்ச தாக்கம் வெறும் 0.6% இழப்பாக மட்டுமே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமான இந்தியாவும் அமெரிக்காவின் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
டிரம்ப்பின் சுங்க வரி விதிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வலிமையானது என்று இந்திய அரசு உறுதியாகக் கூறுகிறது. தனது மூன்றாவது பதவிக்காலத்தில் அடியெடுத்து வைத்துள்ள மோடி, இந்தியாவின் சிறு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்று வலியுறுத்துகிறார். இந்த விவசாயிகளே அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பிரதிநிதிகளின் முக்கிய இலக்காக உள்ளனர். இந்தியா தற்போது சீனாவை விட அதிக சுங்க வரிகளை எதிர்கொள்வது எவரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாகும். அண்மைக் காலம் வரை, சீனாவை சமாளிப்பதற்கு பயன்படும் நாடாக இந்தியா விளங்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது.
தில்லி வட்டாரங்களில் புதிய சிந்தனைகள் முளைத்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்திய அரசின் சிந்தனைக் குழுவான NITI ஆயோக், அந்நிய நேரடி முதலீட்டு நெறிமுறைகளைத் தளர்த்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த விதிகள் தற்போது சீன நிறுவனங்கள் மீது கூடுதல் ஆய்வுக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அவை தளர்த்தப்பட்டால், இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்கிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தும்.
மற்றொரு முக்கிய கேள்வி என்னவென்றால், பசிபிக் கடந்த நாடுகளுக்கிடையேயான விரிவான மற்றும் முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CPTPP) சீனா இணைய முடியுமா என்பதுதான். டிரம்ப் 2017-இல் கைவிட்ட பசிபிக் கடந்த கூட்டாண்மை (TPP) ஒப்பந்தத்திற்குப் பதிலாக இந்த ஒப்பந்தம் உருவானது. சீனா 2021 இல் இக்குழுவில் இணைய விண்ணப்பித்தது. அதன் விண்ணப்பம் ஜப்பான் மற்றும் பிற உறுப்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது. தைவானும் அதே நேரத்தில் விண்ணப்பித்ததால், அந்த கொந்தளிப்பான சிக்கலைத் தவிர்க்கும் நோக்கில் அவர்கள் சீனாவின் விண்ணப்பத்தை எதிர்த்தனர்.
இதற்கிடையில், சீனாவும் இந்தியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், விசா நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், வர்த்தகத்தைப் பெருக்குவதற்கும் திட்டங்களை அவை அறிவித்துள்ளன. சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி புது டெல்லிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
டிரம்ப்பின் சுங்க வரிப் போர் பல கட்டமாகத் தொடரவே வாய்ப்புள்ளது. தற்போது, அவர் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு எதிரான தனது வர்த்தக போர் வெற்றிகளைக் கொண்டாடி மகிழ்கிறார். இந்த வரிகள் அமெரிக்கக் கருவூலத்திற்குப் பில்லியன்கணக்கான வருவாயைப் ஈட்டித் தருவதாக அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். சில நிபுணர்கள் கணித்தது போல் பணவீக்கம் கடுமையாக உயரவில்லை. ஆனால் இது ஒரு நீண்டகால யுத்தம். யுத்தத்தின் எல்லைக் கோடுகள் இன்னும் வரையறுக்கப்பட்டு வருகின்றன. இந்த யுத்தத்தின் இறுதி விளைவு டிரம்ப்பை திகைப்பில் ஆழ்த்துவதற்கும் பெரும் வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, சுங்க வரிகள் பிற நாடுகள் ஒன்றோடொன்று வர்த்தக உறவுகளைப் பெருக்கிக்கொள்ளவும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ளவும் தூண்டலாம்.
இது அமெரிக்காவை மேலும் தனிமைப்படுத்தக்கூடும். இத்தகைய ஒரு விளைவு, ஜோசப் சேம்பர்லின் ஒரு காலத்தில் தனது ஏகாதிபத்திய முன்னுரிமை திட்டம் மூலம் அடைய விரும்பியதற்கு முற்றிலும் நேரெதிரானதாக அமையும்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.theguardian.com/us-news/2025/aug/27/trumps-tariffs-trade-war
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு