அமெரிக்க-சீன போர்தந்திர போட்டியும், தெற்காசியாவில் உருவாகும் ஆயுத வியாபாரமும்

நூருலைன் நசீம்

அமெரிக்க-சீன போர்தந்திர போட்டியும், தெற்காசியாவில் உருவாகும் ஆயுத வியாபாரமும்

"ஆகப் பிரதான போர்தந்திர அளவிலான போட்டி நாடு" சீனா தான் என்றும் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்த்து போரிடுவதற்கு உதவும் வகையில் மிகவும் தீவிரமான கொள்கையை பின்பற்றி வருகிறோம் என்று சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா சொல்லிக்கொண்டிருந்தது. அமெரிக்க உள்நாட்டு ஆதரவாளர்கள் அமெரிக்காவின் அகஉறுதியை பெரிதும் பாராட்டினாலும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் தெற்காசியாவில் ஒரு போர் பதற்ற நிலை உருவாகும் அபாயம் எழுந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் போட்டியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்து வரும் போட்டிகளை தீவிரப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் ஆயுதப் வியாபாரத்திற்கான போட்டியைத் தடுப்பதே இதற்கான முதற்படியாகும்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான ஆயத வியாபாரப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தானுக்கிடையில் இருக்கும் அணு ஆயுதப் போட்டி விளங்குகிறது. ஆயுத வியாபார போட்டிகள், பாதுகாப்பு குறித்தான அச்சங்கள், ஸ்திரத்தன்மையும், ஸ்திரமற்ற தன்மையும், இடைவிடா போட்டி ஆகியவை இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் முக்கிய முரண்பாடாக விளங்குகிறது.

1947 ஆம் ஆண்டின் போது அவசர அவசரமாகப் இந்தியா-பாகிஸ்தான், என்று இரு நாடுகளாக துண்டாடப்பட்ட போது போட்டி தோன்றியிருந்தாலும்,1998 இல் தான்இரு நாடுகளுக்கிடையில் வெளிப்படையான அணுவாயுதப் போட்டியின் தீவிரத்தைன்மை பன்மடங்கு அதிகரித்தது. கடந்த காலத்தில், அணு ஆயுதங்களை வைத்துள்ள அண்டை நாடுகளுக்கு இடையேயான பதட்டங்களைத் தணிப்பதில் சர்வதேச தலையீடு முக்கிய பங்காற்றியது. இருப்பினும், கரணம் தப்பினால் மரணம் என்றிருக்கும் நிலையை அச்சுறுத்தும் வகையில் தான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான அதிகரித்து வரும் போட்டி இருந்துவருகிறது.

நிலைமாறி வரும் புவிசார் அரசியல் நிலைபாடுகள்

சமீபத்திய ஆண்டுகளில் பூகோள அடிப்படையில் ஏற்பட்டு வரும் அரசியல் சார்புத்தன்மை எதிரெதிர் முகாம்கள் திடப்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதாவது அமெரிக்க – இந்திய போர்தந்திர அடிப்படையிலான கூட்டணி ஒருபுறமும், சீன – பாகிஸ்தானுக்கிடையில் நிரந்தரக் கூட்டணி மறுபுறமும் உருவாகியுள்ளது.போட்டி முரண்பாடுகளை தணிப்பதற்கு இருந்த வந்த காரணிகள் மழுங்கிபோனதால் வல்லாதிக்க நாடுகளுக்கும் அவர்களின் தெற்காசிய கூட்டாளிகளுக்கும் இடையிலான கூட்டணி வலுவடைந்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடந்த காலத்தில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது போல இந்தியாவும் சீனாவும் பரஸ்பர எல்லை கண்காணிப்பு விசயங்களில் ஒத்துழைத்து வந்ததால் இதற்கு முன்பு இருந்துவந்த பூகோள அடிப்படையிலான அரசியல் சார்புத்தன்மை ஒரு சமநிலையோடு இருந்து வந்தது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது, அங்கீகரிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவது போன்ற விசயங்கள் கடந்த காலத்தில் போட்டி முரண்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு இருந்த சிலப் பொதுத்தன்மைகளையும் நீக்கிவிட்டது. இதற்கு மாறாக, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கிடையில் போட்டி கூர்மையடைந்துள்ளதாகவே தெரிகிறது.

ஒரு வேளை அமெரிக்காவும், சீனாவும் அறிந்தோ அறியாமேலோ தெற்காசிய பிராந்தியத்தை வல்லாதிக்கத்திற்கான போட்டிக்களமாக, இலாபம் தேடுவதற்கான போர்த்தந்திர களமாக  கருதினால், இது ஏற்கனவே இந்திய-பாகிஸ்தானுக்கிடையில் இருந்து வரும் போர்தந்திர அடிப்படையிலான போட்டி முரண்பாடுகளைக் தீவிரமடைவதற்கு இட்டுச்செல்லும்.

போட்டி முரண்பாடுகளின் ஒன்றுகுவிந்த தன்மையும், அச்சுறுத்தல் நிலவரமும் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் ஒரு அணுவாயுதப் போட்டியை தோற்றுவிப்பதோடு பேராபத்தான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஒரு வேளை அமெரிக்காவும், சீனாவும் அறிந்தோ அறியாமேலோ தெற்காசிய பிராந்தியத்தை வல்லாதிக்கத்திற்கான போட்டிக்களமாக, இலாபம் தேடுவதற்கான போர்த்தந்திர களமாக  கருதினால், இது ஏற்கனவே இந்திய-பாகிஸ்தானுக்கிடையில் இருந்து வரும் போர்தந்திர அடிப்படையிலான போட்டி முரண்பாடுகளைக் தீவிரமடைவதற்கு இட்டுச்செல்லக்கூடும்.

உதாரணத்திற்கு, போராயுத வியாபாரம்,பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் வாணிகம் அதிகரிப்பதால் பிராந்திய அளவிலான அச்சுறுத்தல் நிலவரத்தை அதிகரிப்பதோடு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கான உத்திகளுக்கு உந்துசக்தியாகவும் அமைந்துவிடும்.

பிராந்திய அளவிலான ஸ்திரத்தன்மையில் பரஸ்பரம் பங்கேற்கும் வகையில் பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் ஆயுதம் சப்ளை செய்வதனூடாகவே தங்களது வல்லாதிக்க நலன்களை சீனாவும் அமெரிக்காவும் பலப்படுத்திக் கொள்ள முயலுதல் வேண்டும். தெற்காசியாவில் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுத்துள்ள வல்லாதிக்க நாடுகளால் கொதிநிலையை எட்டியிருந்த அனுவாயுத மோதல் கூர்மையடைந்துள்ளது. வல்லாதிக்க நாடுகளை கணக்கில்கொள்வதோடு மட்டுமல்லாது, ஏதேனுமொரு போட்டி வல்லரசு நாடுகளுகளோடு தங்களது இராணுவ விவகாரங்களை நெருக்கமாக பிணைத்துகொள்வதனால் விளையும் பாதிப்புகளை இந்தியாவும், பாகிஸ்தானும் கணக்கில் கொள்ளுதல் வேண்டும். மேலெழுந்து வரும் போர்தந்திர அடிப்படையிலான புறத்தோற்ற மாற்றங்களுக்கு மத்தியில், அனைத்து நாடுகளும் இறையாண்மை, வளர்ச்சி மற்றும் போர்தந்திர அடிப்படையிலான ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை தர வேண்டும்.

நிரந்தர நண்பர்கள்: சீனா-பாகிஸ்தான் உறவுகள்

 

அமெரிக்காவும் சீனாவும் தங்களின் தெற்காசிய இராணுவ கூட்டாளிகளுடன் நீண்டகால போர்த்தந்திர அடிப்படையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. 1962 ஆம் ஆண்டு  சீன-இந்தியப் போருக்கு பிறகிருந்தே, பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி என்பது, சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்தது. இது வரை நடந்தவற்றை பார்க்கும் பொழுது, இந்தியாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை தகர்ப்பதற்கு பாகிஸ்தானை நோக்கியே சீனா சென்றுள்ளது. தற்போது சீனா, பாகிஸ்தானின் இராணுவ  பலத்தை மேம்படுத்தவும், இந்தியாவை எதிர்கொள்ளவும் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவத்  திறன்களை ஒன்னுமில்லாமல் செய்வதற்கு பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்வதன் மூலம், இந்தியாவிற்கு எதிராக இருமுனைகளிலிருந்து போரை தொடுப்பதற்கான சாதகநிலையை சீனா வலுப்படுத்தி வருகிறது. 

சீனா-பாகிஸ்தானுக்கிடையிலான இராணுவ உறவுகள் ஏற்படுவதற்கும், அவை இயங்குவதற்கும் இந்தியாவே மையக் காரணமாக இருக்கின்றன. 2003 இல், சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பிற்கான திசைவழிக் குறித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது அவர்களுக்கிடையிலான இராணுவ ரீதியிலான கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தியது. அப்போதிருந்து சீனா, பாகிஸ்தானுக்கு J-10CE, அல் காலிட் டாங்கிகளை வழங்கியதோடு மட்டுமல்லாது முதன்முறையாக  VT-4(இது சீனாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய போர் டாங்கி) என்ற டாங்கியையும் அனுப்பியதன் மூலம் தொடர் இராணுவ உதவியை வழங்கி வருகிறது. J-F17 என்ற இந்தியாவின் தண்டர் போர் விமானங்கள் மற்றும்  ரஃபேல் போர் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில்  J10C என்ற போர் விமானங்களை பாகிஸ்தான் சமீபத்தில் வாங்கியிருந்தது. வான்வெளியில் இந்தியாவை எதிர்த்து போரிடுவதற்கு உதவும் வகையிலும், அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படும்  F-16 போர் விமானங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றுவதற்கும் பாகிஸ்தானிற்கு சீனா உதவியுள்ளது. இந்தியாவின் படைத்திறனை சமாளிப்பதற்காகவே சீனா இது போன்ற உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவின் எஸ் 400 என்ற வான் ஏவுகணை தடுப்பு அமைப்பை எதிர்கொள்வதற்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வழங்குவது தொடர்பாக சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைகளை கொண்டிருக்கும் வகையில் பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு திறனை மேம்படுத்துவதற்கு சீனா உதவிவருகிறது. மார்ச் 2022 இல் பாகிஸ்தானில் நடந்த இராணுவ தின கண்காட்சியில், சீனாவால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் செல்லும் அணுசக்தி ஏவுகணைகள், நவீன ரேடார் சாதனங்கள் மற்றும் போர் விமானங்களை காட்சிப்படுத்தியது. அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா தற்செயலாக பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் செலுத்திய சில மாதங்களுக்குப் பிறகு இது நடைபெற்றுள்ளது.தெற்காசிய போர்தந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இந்தியாவின் இராணுவத் திறனுக்கு நிகரான நாடாக பாகிஸ்தானை மாற்றுவதற்கு சீனா ஆயுதம் வழங்கி வருகிறது. எனினும், இதில் பிராந்திய அளவிலான ஆயுத வியாபாரப் போட்டியை துரிதப்படுத்தும் அபாயமும் உள்ளடங்கியுள்ளது.

அமெரிக்க-சீனாவிற்கு இடையிலான போட்டி இந்த மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தக்கூடும். AUKUS கூட்டமைப்பிடமிருந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா பெறக்கூடும் என்று சீனா கவலை தெரிவித்ததோடு QUAD கூட்டமைப்பு குறித்தும் அதன் 2020 மலபார் இராணுவப் பயிற்சிகள் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் சீனாவின் பாதுகாப்பு குறித்தான அச்சுறுத்தலை அதிகப்படுத்துவதோடு, பாகிஸ்தானிற்கு மென்மேலும் ஆயுதங்களை வழங்குவதற்கு வழிவகுக்கலாம். அதேபோல், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறும் வகையில் பாகிஸ்தானில் தற்போது இருந்துவரும் சீன முதலீடுகள் குறித்தும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பங்கு குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் கடற்படைத் திறனில் சீனாவின் சமீபத்திய முதலீடுகள், இந்தோ-பசிபிக் பகுதியில் எதிர் கடற்படை ஒன்றை உருவாக்குவதற்கும், எழுந்துவரும் போட்டி பற்றிய கவலையை கூர்மையாக்குகின்றன. அமெரிக்காவும் சீனாவும் பிராந்திய அளவிலான போர்தந்திர உத்திகள் பற்றிய அறிக்கைகளில் தங்களுக்கிடையில் நிலவி வரும் போட்டியை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அதன் விளைவுகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக இராணுவமயமாக்கலைத் தூண்டக்கூடும்.

போர்தந்திர கூட்டாளிகள்: அமெரிக்க-இந்திய இராணுவ உறவுகள்

சீனா-பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள் ஆழப்படுவது அமெரிக்க-இந்திய உறவுகளில் பிரதிபலிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் சீனாவை மட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் போர்தந்திர திட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் பொதுவான நலன்களுக்கு கட்டுப்பட்ட, இந்தியப் பெருங்கடல் பகுதியில் "கிட்டத்தட்ட காவல்காரனாகவே" இந்தியாவை அமெரிக்கா கருதுகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்தோ--பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பையும், பாதுகாப்பு திறன்களையும் விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் தனது காவல் சேவையில் அடியெடுத்து வைத்துள்ளது.  இதன் மூலம் அமெரிக்கா தன்விருப்பத்தின் அடிப்படையில் ஒரு கூட்டாளியை உருவாக்கிக்காட்டியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவுடனான அமெரிக்காவின் ஆயுத விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக, இந்தியாவிற்கான இராணுவ இறக்குமதியில் 14 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்தே வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஆயுத உற்பத்தியையும், பாதுகாப்பு தொழில்நுட்ப திறனை இந்தியாவில் மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்கையில் ஈடுபடுகின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் போர்தந்திர அடிப்படையிலான தொலைநோக்கு கூட்டறிக்கைகளை வெளியிட்டு, நேட்டோ நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை உயர்த்தும் நோக்கத்தில், போர்தந்திர முககியத்துவம் வாய்ந்த இராணுவ உறவுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

வல்லாதிக்க  போட்டியின் ஒரு பகுதியாக சீனா எப்படி பாகிஸ்தானிற்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறதோ அது போல அமெரிக்காவும் இந்தியாவின் இராணுவத் திறனை பலப்படுத்துவதற்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது. சீனாவை எதிர்த்து போட்டியிடுவதற்கு இந்தியாவிற்கு சொந்தமாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியா நீண்ட காலமாகவே சீனாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதி வந்துள்ள போதும், எல்லை மோதல்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போர்ப் பதற்றத்தை மீண்டும் தூண்டியதிலிருந்து இந்த அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது. லடாக் பிரதேசத்தில் அத்துமீறி ஆக்கிரமித்தலிருந்து நீண்ட கால நலன் கருதி பின்வாங்குவதை சீனா மறுத்து வருவதோடு போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த டெப்சாங் சமவெளிக்கு அருகில் சிறிய இராணுவ உள்கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் இருப்பு பற்றிய இந்தியாவின் கவலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலைமாற்றங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு மற்றும் இராணுவ உதவுகளை பெற தூண்டக்கூடும்; அவ்வகையில் இது பிராந்தியத்தில் இராணுவமயமாக்கலை துரிதப்படுத்துகிறது.

இராணுவமயமாக்கல் தொடர்ந்தால் நிகழ்வதென்ன?

வல்லாதிக்க சக்திகளுக்கிடையில் நடக்கும் புவிசார் அரசியல் சதிராட்டத்தில் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ பகடைக் காயாக இருக்க விரும்பவில்லை. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், தங்கள் நாடு வல்லாதிக்க போட்டியில் ஈடுபட தயக்கம் காட்டுவதாகவும், அதன் விளைவாக உருவாகும் போட்டி முகாம்களின் அரசியலை "நாங்கள் கடைசி வரை எதிர்ப்போம்" என்றும் கூறினார். போர்தந்திர அடிப்படையிலான தன்னாட்சி என்ற வரலாற்று நிலைப்பாட்டுடன் ஒத்துழைப்பை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இணைந்திருப்பதில் மறைமுகமாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இராணுவ ரீதியிலான முரண்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அது தற்போதைய கொள்கைகளின் எதிர்பாராத விளைவாகவே இருக்கலாம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது வெறுமனே அமெரிக்க-சீனா வல்லரசுகளின் போர்தந்திர அடிப்படையிலான போட்டியால் எழவில்லை அல்லது அதனால் மட்டுமே தீவிரமடையவில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியானது ஆயுதங்கள் விரைவாக வாங்கி குவிப்பதற்கு வழிவகுத்துள்ளது; இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ பலத்தை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை பயன்படுத்துகிறது. இது சீனா-பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே இருந்துவரும் தற்போதைய இராணுவ கூட்டணியை பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான பதட்டத்தை மேலும் அச்சுறுத்தும் வகையிலே உள்ளது. இதற்கு மாறாக, எதிர்காலத்தில் பாகிஸ்தான்-இந்தியா அல்லது சீன-இந்தியா இடையிலான ஆயுத மோதலைத் தவிர்க்க, இரு பெரும் வல்லரசுகளும் தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் இராணுவ ஒத்துழைப்புக் கொள்கையை பின்பற்ற வேண்டும். கூர்மையடைந்துவரும் முரண்பாடுகளுக்கு மத்தியில் இவ்வாறு செய்வது கடினமானது தான் என்றாலும், பாகிஸ்தானுக்கு F-16 விமான பாகங்களை வழங்க முடிவெடித்துள்ள அமெரிக்காவின் தற்போதைய முயற்சி ஒரு சாதகமான முதற்படியாகும். வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கையில் இந்தியாவும் சீனாவும் இதேபோன்ற ஒத்துழைப்பை தொடரலாம். எவ்வாறாயினும், அச்சுறுத்தல் தொடர்பான கருத்துகள் களையப்பட்டு, வெற்றித் தோல்வியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் உத்திகள் கைவிடப்படாதவரை ஒன்றிணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பேற்படப் போவதில்லை.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://southasianvoices.org/u-s-china-strategic-competition-and-the-resulting-arms-race-in-south-asia/