அயலுறவுக் கொள்கையில் இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைவை நோக்கி நகர்கிறதா?

தமிழில்: விஜயன்

அயலுறவுக் கொள்கையில் இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைவை நோக்கி நகர்கிறதா?

1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உலகின் ஒட்டுமொத்தக் கவனமும் கியூபா ஏவுகணை நெருக்கடியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேளையில், சீனாவும் இந்தியாவும் தங்களின் இமயமலை எல்லையில் ஒரு போரை நிகழ்த்திக் கொண்டிருந்தன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அந்தப் பூசல் உலக நாடுகளின் கவலையை மொத்தமாக ஈர்த்தது, இதன் காரணமாக சீன-இந்தியப் போர் ஓர் அற்பமான பேசுபொருளாக மாறிப் போனது. அந்தப் போர் ஒரு மாதம் நீடித்தது என்றாலும், வெறும் 13 நாட்களே நிகழ்ந்த வல்லரசுகளின் நேரடிச் சூறாவளியால் அது முற்றாக மறைக்கப்பட்டது.

இன்று, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்துவிட்ட நிலையிலும், வரலாறு அதே பாணியில் திரும்ப நிகழவில்லை என்றபோதும், சில வடிவங்கள் நன்கு பரிச்சயமானவையாகவே தென்படுகின்றன. மீண்டும் ஒருமுறை, உக்ரைன் போர்ச் சூழலில் அமெரிக்கா-ரஷ்யா உறவுகளின் தற்போதைய நிலை குறித்த விஷயத்திற்கே உலகின் பெரும்பாலான கவனம் செலுத்தப்படுகிறது. அதே சமயம், சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவுப் பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள அவசியம் கவனிக்கப்பட வேண்டிய திருப்பங்கள் போதியளவிற்கு சர்வதேச கவனத்தைப் பெறவில்லை எனலாம்.

1962 இல், அமெரிக்கா-சோவியத் உறவுடன் ஒப்பிடுகையில் சீன-இந்திய உறவு இரண்டாம் நிலை என்று கருதியது அச்சமயத்தில் பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நிலை தற்போது உண்மையாக இருக்கவில்லை. சீனாவும் இந்தியாவும் ஒட்டுமொத்தமாக உலகின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 சதவீதத்தைத் தம்மகத்தே கொண்டுள்ளன. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும், மேலும் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் பரிணமிக்கும் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறது. பல்துருவ உலக மேலாதிக்கத்திற்கான போட்டி நிலவும் சூழலில், இந்நாடுகளின் உறவில் நிகழும் எந்தவொரு மாற்றமும் உலக ஒழுங்கின் போக்கில் நேரடியான செல்வாக்கைச் செலுத்துகிறது.

இந்தக் காரணத்தினாலேயே, இந்த மாத இறுதியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே நடக்கவிருக்கும் சந்திப்பை அரசியல் ஆய்வாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது, 2018-இற்குப் பிறகு மோடி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். இதன் காலக்கட்டம்கூட குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்திராத மிக மோசமான பகைமையை விளைவித்த 2020 எல்லை மோதல்களால் ஏற்பட்ட கடும் பதட்டங்களுக்குப் பிறகு, உறவுகளை மீளமைக்க இரு அரசாங்கங்களும் முயற்சித்து வருகின்றன. இந்தப் பயணம் அந்த முயற்சிக்குரிய உச்ச நிலையைப் பிரதிபலிக்கிறது.

இந்தச் சந்திப்பு குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. இது இரு நாடுகளின் போர்த்தந்திர அடிப்படையிலான தன்னாட்சி மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  ஒவ்வொரு நாடும் வல்லாதிக்க சக்திகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, அயலுறவுக் கொள்கை முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்க விரும்புகின்றன. சீனாவும் இந்தியாவும் நீண்ட நாகரிகப் பாரம்பரியம் கொண்ட தேசங்களாகவே தம்மைக் கருதுகின்றன. இரண்டும் தங்களை உலகளாவிய தெற்கின் தலைவர்களாகவோ, அல்லது அவற்றின் “குரல்களாகவோ” தங்களை நிலைநிறுத்த விரும்புகின்றன. மேலும், பன்னாட்டு அமைப்பில் உள்ள அதிகாரச் சமநிலையை மறுவடிவமைப்பதோடு, அதிக சமமானதாகவும் பலதுருவத்தன்மை கொண்டதாகவும் மாற வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகின்றன. இந்த ஒற்றுமைகள் புதியவை அல்ல; ஐ. நா. சபையின் வாக்கெடுப்புப் பதிவுகள், ஏழை நாடுகள் அல்லது அரைகுறை ஜனநாயக அரசாங்கங்களுடனான உறவுகள், மட்டுமல்லாது காலநிலை தொடர்பான கடமைகளைவிட வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கிலும் இவை தெளிவாகத் தென்படுகின்றன.

ஒத்திசைவை ஏற்படுத்தும் மற்றுமொரு காரணி, அமெரிக்காவுடன் இவ்விரு நாடுகளின் உறவுகள் பலவீனமடைந்து வருவதுதான். சீனாவும், இந்தியாவும் இப்போது தமக்குள் உறவுகளை மேம்படுத்த வலுவான காரணங்களைக் கொண்டுள்ளன. ஆகவே, மேற்கத்திய அரசாங்கங்கள், அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவைச் சீனாவுக்கு நிரந்தரமான ஈடுகொடுக்கும் சக்தியாகப் பயன்படுத்தலாம் என்ற தங்களது தொன்மையான அனுமானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அந்த அனுமானம் உண்மையில் யதார்த்தமானதல்ல. வாஷிங்டனின் எதிர்பார்ப்புகள் எவ்வாறிருப்பினும், இந்தியா ஒருபோதும் சீனாவுக்கு எதிரான நம்பகமான ‘தடுப்புக் கோட்டையாக’ இருக்கப் போவதில்லை. மோடியின் சீனப் பயணம் ஒரு சாத்தியமான திருப்புமுனையைச் சுட்டிக்காட்டுகிறது: இந்தியாவும் சீனாவும் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளை இனிமேல் அதிக ஒழுங்குடன் ஒத்திசைக்கத் தொடங்கலாம் என்ற சாத்தியம் நிலவுகிறது.

சீனா மற்றும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் மூன்று பரந்த குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன:

வளர்ச்சி நோக்கு: உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்கான ஒரு கருவியே அயலுறவுக் கொள்கை என்ற பார்வையே இரு நாடுகளிடமும் முதன்மையாக விளங்குகின்றன.

அண்டை நாடுகளுக்கு முதன்மை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறை: குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், இரண்டும் தங்களின் அண்டையப் பிராந்தியங்களில் உறவுகளை ஸ்திரத்தன்மையுடையதாக நிலைநிறுத்த விழைகின்றன.

மேற்குலக நாடுகளுக்குப் பகைமையின்றி, சீர்திருத்தவாதப் பிம்பம்: வெளிப்படையாக மேற்கத்திய நாடுகளுக்கு விரோதமானவையாகத் தோன்றாமல், உலகளாவிய அமைப்பை விமர்சிக்கவும் சீர்திருத்தவும் இரு நாடுகளும் விரும்புகின்றன.

இதுவரையில், சீனாவும் இந்தியாவும் இந்த திசைகளில் ஒன்றோடொன்று இணையாகவே சென்றன, ஆனால் அதிக ஒருங்கமைவு இருக்கவில்லை. சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் மோடியின் வருகை இந்த நிலையை மாற்றலாம். 1990களில் உருவாக்கப்பட்ட SCO, ஆரம்பத்தில் மத்திய ஆசியாவில் எல்லைத் தகராறுகளைக் கையாண்டது, ஆனால் அதன் பின்னர் மேற்கத்திய தலைமைக்கு ஒரு மாற்று உலகக் கண்ணோட்டத்தை முன்வைக்கும் ஒரு களமாக அது உருவெடுத்துள்ளது. இன்று, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை அதன் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மீதான இந்தியாவின் ஈடுபாடு முன்னர் உறுதியற்ற நிலையிலேயே இருந்தது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு உச்சி மாநாட்டைத் தவிர்த்தார். மேலும், 2022–23 இல் இந்தியா SCO இன் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, அந்த அமைப்பின் முக்கியத்துவத்தை நாசூக்காகக் குறைக்கும் பொருட்டு புது டெல்லி ஒரு மெய்நிகர் உச்சி மாநாட்டை மட்டுமே ஏற்பாடு செய்தது. அக்காலக்கட்டத்தில், இந்தியாவின் கவனம் அதற்குப் பதிலாக அதன் G20 தலைமைப் பொறுப்பை நோக்கியே முழுமையாகத் திருப்பப்பட்டிருந்தது. இந்தியா "மேற்கத்திய நாடு அல்லாத, அதேபோல மேற்கத்திய எதிர்ப்பும் அல்லாத" நிலைப்பாட்டைக் காட்ட விரும்பியதால், இந்த வியூகப்பூர்வமான நகர்வு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் தற்போது, அமெரிக்கா-இந்தியா உறவுகளில் ஏற்பட்ட சரிவு புது டெல்லியை SCO அமைப்பை பயன்படுத்துவது குறித்து மீண்டும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

நீண்ட காலமாக உறங்கிக் கிடக்கும் ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்புக் குழு மீண்டும் புத்துயிர் பெறுமா என்பதே SCO இல் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சமாகும். இது முதன்முதலில் 1990களில் கட்டமைக்கப்பட்டது. அப்போது, மனிதாபிமான இராணுவத் தலையீடுகள் என்ற பெயரில் பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் (sovereignty) குறுக்கிட்ட நடவடிக்கைகளை அவை குறிப்பாகச் சுட்டிக்காட்டி, அமெரிக்கத் தலைமையிலான உலக ஒழுங்கை விமர்சிக்க இந்தக் குழுவை மூன்று நாடுகளும் பயன்படுத்தின. சீனா மீதான அதிக அவநம்பிக்கையையும் அனுபவித்த அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருங்கிச் சென்றதால் இந்தியா, தனது பங்கேற்பைக் குறைத்துக் கொண்டது.

ஆர்.ஐ.சி. (ரஷ்யா-இந்தியா-சீனா) குழுவை சீரமைப்பதென்பது, அண்மைக் காலப் போக்குகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்வதற்கு உதவுவதோடு, உலகளாவிய விவகாரங்களில், சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவுடன் இணைந்து, தங்களின் கூட்டுக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும், நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்கவும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமையும். 1990களில் நிலவிய சூழலைப் போலல்லாமல், இன்று அவை வல்லமைமிக்கதொரு நிலையில் இருந்து செயல்படுகின்றன; தங்களின் வார்த்தைகளுக்கு இணையாக, உண்மையான, செயல்வடிவிலான நடவடிக்கைகளால் நிரூபிக்கக்கூடிய ஆற்றலுடன் விளங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளும் தங்களின் இருதரப்பு வணிகப் பரிமாற்றங்களைத் தத்தம் தேசிய நாணயங்கள் வாயிலாக செய்து கொள்ளலாம் என்ற நடைமுறையை அதிகரித்து வருவதை  இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேற்கத்திய ஆதிக்கம் நிறைந்த நிதி வலையமைப்புகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க, மாற்றுப் பணப் பரிவர்த்தனை அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதையே இவை குறிக்கின்றன. தங்களுக்குள்ள தனிச்சிறப்பான அனுகூலங்களைப் பயன்படுத்துவதன் மூலம்—உற்பத்தியில் சீனாவின் திறமை, சேவைகளில் இந்தியாவின் ஆதிக்கம், மற்றும் ரஷ்யாவின் செழுமையான இயற்கை வளங்களின் திரட்சி—இந்நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும். மேலும், அதிகளவிலான ஏற்றுமதிச் சந்தைகளுக்குள் விரிவடையவும், உலகளாவிய வர்த்தகத்தின் இயல்புகளை மாற்றியமைக்கும் வலுவும் RICக்கு உண்டு.

ஆயினும், ஷி ஜின்பிங்கிற்கும் நரேந்திர மோதிக்கும் இடையேயான ஓர் ஒற்றைச் சந்திப்பால், சீனா-இந்தியா உறவுகளில் உள்ள சிக்கல்கள் தானாகவே கரைந்துவிடப் போவதில்லை. ஆழமான அவநம்பிக்கை இன்னமும் வேரூன்றி உள்ளது. தீர்க்கப்படாத எல்லைத் தகராறும், பிற நீண்டகாலமாகவோ அல்லது புதிதாகவோ உதித்தெழும் பதட்டங்களும் இந்த உறவுகளை எளிதில் முறியும் தன்மையுடைதாக்குகின்றன. இவற்றில் திபெத் பிரச்சனை (அடுத்த தலாய் லாமா குறித்த கருத்து வேறுபாடுகளால்), நீர் தகராறுகள் (இந்தியாவிலும் பாயும் ஒரு நதியில் உலகின் மிகப்பெரிய நீர் மின் திட்டத்தை சீனா கட்டத் திட்டமிடுவதால்), மற்றும் பாகிஸ்தான் பிரச்சனை (இஸ்லாமாபாத்துடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான “எல்லா காலநிலைக்குமான” உறவு, இது இந்தியா-பாகிஸ்தான் மோதல்களின் போது குறிப்பாகவே சர்ச்சைக்குரியதாக வெளிப்பட்டது) ஆகிய பிரச்சனைகளை குறிப்பாக சொல்லலாம்.

அண்டை நாடுகளுடனான தங்களது கொள்கைகளைக் கையாள்வதில் இரு நாடுகளும் முரண்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில், சீனா பல நாடுகளுக்கு முன்னோடியான வணிகப் பங்காளியாகவும், முதலீட்டாளராகவும், பாதுகாப்புத் துணையாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவிற்கும் சில தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான சிக்கல் நிறைந்த உறவுகளையும், பிராந்தியத்தில் நிலவும் மிகக் குறைந்த வர்த்தக ஒருமைப்பாட்டையும் சாதகமாகப் பயன்படுத்தி, சீனா புதிய பிராந்தியக் கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சிகளுக்குச் சீனாவின் நிதியாதிக்கமும், இராஜதந்திர பலமும் பின்புலமாகத் திகழ்கின்றன. உதாரணமாக, சீனா அண்மையில் வங்கதேசத்துடனும், பாகிஸ்தானுடனும், மேலும் காபூலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களை ஏற்பாடு செய்தது.

சமீபத்திய நிகழ்வுகள், இரு தரப்பினரும் குறைந்தபட்சம் கருத்து வேறுபாடுகளைக் களையத் தொடங்க தயாராக உள்ளனர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. கடந்த வாரம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியாவுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, புத்துயிர் அளிக்கப்பட்ட சிறப்புப் பிரதிநிதிகள் குழுவிற்குள் இந்தியத் தலைவர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆர்வத்தைக் காட்டுகின்றன. எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, முன்னர் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கும் 2005 ஆம் ஆண்டின் இருதரப்பு ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு, “ஒரு நியாயமான, பகுத்தறிவுள்ள மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய குழுவை”  ஏற்படுத்த விரும்புவதாக இரு நாடுகளும் தெளிவுபடுத்தியுள்ளன.

இதனுடன் சேர்ந்து, விசா கட்டுப்பாடுகளை எளிதாக்குவது, நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது போன்ற மக்களை மையப்படுத்திய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிக்கு, இரு நாடுகளும் இப்போது அமெரிக்காவுடனான தங்களின் உறவுகளில் எதிர்நோக்கும் சிக்கல்களும் ஒரு காரணமாகின்றன. டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக் காலத்தைத் தொடங்குவதற்கு முன்பும்கூட, சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவுடன் சுமூகமான உறவுகளை கொண்டிருக்கவில்லை. டிரம்ப் நிர்வாகம் சுங்க வரி விதிப்புகளைத் தாமதப்படுத்துவதன் மூலமும், குறைக்கடத்தி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைக் குறைப்பதன் மூலமும் சீனா மீதான தனது கெடுபிடியை ஓரளவுக்கு தளர்த்தியிருந்தாலும், அமெரிக்கா நம்பகத்தன்மையற்ற நாடு என்ற சீனாவின் பார்வையை இது மாற்றவில்லை.

இந்தியாவும் அமெரிக்காவுடனான உறவுகளில் சறுக்கலைக் கண்டுள்ளது. இந்தியாவுடனான வலுவான உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் இரு கட்சி ஆதரவு இருந்தபோதிலும், பல பிரச்சினைகள் இந்தக் கூட்டணியைப் பலவீனப்படுத்தியுள்ளன. இந்தியாவில், மேற்கத்திய நாடுகள் "இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க" விரும்புகின்றன என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகம் குறித்த மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள், இந்து தேசியவாதக் கொள்கைகள் பற்றிய கவலைகள், மனித உரிமை மீறல்கள், ஒட்டுண்ணி முதலாளித்துவம் (crony capitalism) குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவை இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. 2023 இல் கனடா மற்றும் அமெரிக்காவில் நடந்த படுகொலைச் சதித்திட்டங்களில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகள், ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கமான உறவுகள் குறித்த விமர்சனம் மட்டுமல்லாது முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்ய எண்ணெயின் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாக இந்திய-அமெரிக்க உறவுகள் மேலும் நலிவடைந்தன.

தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது போன்ற எந்தவொரு கருத்தும் வலுவான காலனியாதிக்க எதிர்ப்பு உணர்வுகள் கண்ட நாடுகளில் மிக எளிதாக சர்ச்கைக்குரிய விசயமாக மாறிவிடுகிறது. இந்தச் சூழலில், டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடைப்பிடித்த கொள்கைகள்—இந்திய-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு உடனடியாக பாகிஸ்தானை நோக்கி சென்றது, இந்தியாவை ஒரு “செயலற்ற பொருளாதாரம்” (dead economy) என்று வர்ணித்தது, 50% சுங்க வரிகளை விதித்தது போன்றவை—உறவுகளை மேலும் சீர்குலைத்துள்ளன.

இந்தச் சேதம் முற்றிலும் நிரந்தரமானது அல்ல. அமெரிக்காவில் 50 இலட்சத்திற்கும் அதிகமான பரந்த புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தின் இருப்பு, அங்கு கல்வி கற்கும் 3,00,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், மட்டுமல்லாது தொழில்நுட்பம், இராணுவத்தில் தொடரும் ஒத்துழைப்பு ஆகியவை முக்கியமான பாலங்களாக நிலைக்கின்றன. இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு சலுகை பெற்ற அல்லது விசேஷமான கூட்டணியைப் பேணி வருகின்றன என்ற முந்தைய நம்பிக்கை தற்போது மங்கி வருகிறது.

பொருளாதாரத்தின் இன்றியமையாத் தேவையே தொடர்ந்து சீனா-இந்தியா நல்லிணக்கத்திற்கான ஒரு முக்கியக் காரணியாக விளங்குகினற்ன. சீனாவில் இருந்து அவசியமான உதிரிப் பாகங்களையும் மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதை இந்தியா சாதிக்க இயலாது. சீனாவுடனான இந்தியாவின் சார்புநிலையோடு, உள்நாட்டுப் பொருளாதாரச் சவால்களையும் ஒருசேர எதிர்கொள்வதால் மேற்கத்திய நாடுகளின் சீனச் சார்புநிலை குறைப்பு என்ற உத்தியால் இந்தியா பயனடைகிறது என்ற கருத்தே அடிபட்டு போகிறது எனலாம். உலகளாவிய உற்பத்தியில் ஒட்டுமொத்த சீன பங்களிப்புடன் ஒப்பிடும் இந்தியாவின் பங்கு இன்னமும் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மேலும், முதலீட்டைக் ஈர்க்க அரசுத் தரப்புப் பிரச்சாரங்கள் ஒருபுறம் தீவிரமாக இருந்தபோதிலும், இந்தியாவின் GDPக்கு உற்பத்தித் துறையின் பங்களிப்பு வளர்ச்சியின்றி தேக்கமடைந்துள்ளது.

பதட்டங்களைத் தணிப்பதன் மூலம், இந்தியாவும் சீனாவும் இப்போது ஒத்துழைப்பை நோக்கி நகர்வதற்குரிய தளத்தை உருவாக்கியுள்ளன. இருதரப்பு நிறுவனங்களும் உயர் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் தொழில்கள் உட்பட முக்கியமான புதிய பகுதிகளில் கூட்டு முயற்சிகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றன.

அமெரிக்காவின் பலம் குறைந்து கொண்டே வரும் சூழலில், உலகம் பன்முகத்தன்மையை (multipolarity) நோக்கி நகரும்போது, சீனாவும் இந்தியாவும் உலக சக்தியாகத் தொடர்ந்து மேலெழுந்து வருவதாகத் தெரிகிறது. அவற்றின் பொதுவான நலன்கள் இந்தப் போக்கை மேலும் உறுதிப்படுத்தும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவுடனான அதன் போட்டியில் இந்தியாவால் எதைக் கொடுக்க முடியும் அல்லது எதை கொடுக்க முடியாது என்பது குறித்த மிகவும் எதார்த்தமான எதிர்பார்ப்புகளுக்கு இது இட்டுச் செல்ல வேண்டும். அதே வேளையில், சீனாவுக்கு போட்டியாக இந்தியா இருக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கருத்தாக்கம், இன்றைய பன்முக அமைப்பில் வழக்கொழிந்து வருகிறது என்பதையும் இது காட்டுகிறது. இந்த மாற்றம், கடந்த மூப்பதாண்டுகளாக இருந்த அமெரிக்கா-இந்தியாவின் போர்த்தந்திரக் கூட்டணியின் மைய அடிப்படைகளில் ஒன்றைக் வலுவாக சிதைவிற்கு உட்படுத்துகிறது எனலாம்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://foreignpolicy.com/2025/08/27/sco-summit-china-india-relationship/

இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு