இரசிய-சீன முகாமை கட்டம் கட்டும் நேட்டோ உச்சி மாநாடு 2022:

தீவிரபட்டுவரும் முரண்பாட்டின் காரணமாக உலகளாவிய மோதலுக்கு தயாராகும் நேட்டோ அமைப்பு!

இரசிய-சீன முகாமை கட்டம் கட்டும் நேட்டோ உச்சி மாநாடு 2022:
நேட்டோ நாட்டுத் தலைவர்கள்

நேட்டோ உச்சி மாநாடு ஜூன் மாதம் 29-30 தேதிகளில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் நகரத்தில் நடந்த முடிந்தது. கடந்த சில வருடங்களாகவே அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாமுக்கும், இரசிய-சீன முகாமுக்கும் இடையில் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அவர்கள், ”ரஷ்யாவுடனான நேச நாடுகளின் கூட்டணி உறவு பனிப்போர் காலத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது" என்று எடுத்துக்காட்டினார். இந்த வருடம் அதைவிட கடுமையான அளவுக்கு பாதித்துள்ளது.

உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்பு போருக்குப் பிறகு நேட்டோ நாடுகள் இரசியா மீது கடுமையான பொருளாதார தடைகளும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதை கொண்டு உலக அரங்கில் இரசியாவை தனிமைபடுத்தி, பலவீனப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளபோவதாக மாநாட்டில் முடிவு செய்துள்ளனர்.

 

கூட்டு பிரகடனம்:

இந்த மாநாட்டில்,  இரசியாவின் போர் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். உக்ரைன் மீதான் இரசியாவின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக உக்ரைன் நாட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவையும், பெரும் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை அளிப்பது என்று முடிவெடுத்துள்ளனர். உக்ரைனுக்கு தேவைப்படும் கூடுதலான இராணுவ உதவிகளை வழங்கவும்; பாதுகாப்பு தகவல் தொடர்பு சாதனங்கள், ஆளில்லா போர் விமான எதிர்ப்பு கருவிகள் (Anti - Drone System) உள்ளிட்ட ஒரு "வலுவான அனைத்தையும் உள்ளடக்கிய உதவித் தொகுப்பு" (Strengthened Comprehensive Assitance Package) அளிப்பது என்று உறப்பினர்களால் ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஜார்ஜியா மற்றும் மால்டோவா குடியரசு உட்பட ஆபத்தில் உள்ள மற்ற நேட்டோ கூட்டாளர்களுக்கான புதிய ஆதரவு தொகுப்புகளையும் ( நிதி மற்றும் இராணுவ உதவிகள்) கூட்டாளி நாடுகளான மொரிட்டானியாவுக்கும் துனிசியாவிற்கும் புதிய ஆதரவு தொகுப்புகள்     கொடுப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

நேட்டோவின் உலக ஒழுங்கமைவுக்கு இரசியா பிரதான அச்சுறுத்தலாகவும், சீனாவை இரண்டாவது அச்சுறுத்தலாகவும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சீனாவை தங்களின் அச்சுறுத்தலாக கருதி அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும் என்பது கவணிக்கதக்கது. இவர்களுடன் ஈரான், வட கொரியா, சிரியா மற்றும் இந்நாடுகளின் செல்வாக்கில் இயங்கும் ஆயுத குழுக்கள் உலக அளவில் தங்கள் செல்வாக்குக்கும், நடவடிக்கைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக நேட்டோ படைகளுக்கு அதிக நிதி ஒதுக்குவது; படைகளின் எண்ணிக்கையை கூட்டுவது மற்றும் எல்லைகளில் இராணுவ தளவாடங்களை நிறுவுவதை அதிகரிப்பது என்று இரசியாவின் விரிவாதிக்க முயற்சிகளுக்கும் சீனாவின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள தங்கள் சக்திகளை தயார் படுத்த திட்டங்களை வகுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி 2023க்குள் நேட்டோ நாடுகள் தனது‌ அதிரடி தாக்குதல் படையின்‌ (Rapid Reaction Force - RRF) எண்ணிக்கையினைக்‌ கிட்டத்தட்ட எட்டு மடங்காக அதிகரிக்க அதாவது 3,00,000 துருப்புகளாக உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது சுமார் ‌ 40,000 என்ற எண்ணிக்கையில்‌ உள்ளது. கிழக்கு நேச நாடுகளின் எல்லைகளில் உள்ளூர் இராணுவத்துடன் கூடுதலாக நேட்டோ படையை 3000த்திலிருந்து 5000மாக அதிகரிக்க இருக்கின்றனர்.          எஸ்தோனியாவின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் கூடுதலாக 1000 துருப்புகளையும் ஒரு விமானம் தாங்கி கப்பலையும் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 1700 பிரிட்டன் இராணுவத்தினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் ரொமேனியாவிற்கு 1700 வீரர்களையும், பிரிட்டனுக்கு இரு எப்-35 விமானப் படைப்பிரிவும், ஸ்பெயினுக்கு இரு போர் கப்பல்களை அனுப்புவதாக அறிவித்துள்ளார். இராணுவ நிதியை அதிகரிக்க கூட்டணி நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% அளவுக்கு உயர்த்தி நிதியை உத்தரவாதப்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில் நேட்டோ முகாமுக்கும் சோவியத் இரசியாவுக்கும் இடையில் பின்லாந்தும் சுவீடனும் நடுநிலை வகித்து வந்தனர். சோவியத் தகர்வுக்குப் பிறகு அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாமுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவ கூட்டு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்தனர். தற்போது உக்ரைன் நோட்டோ முகாமுக்கு நெருக்கமான உறவுகளை பேண முயன்றதாலும், நேட்டோவின் முகாமாக மாறுவதை எதிர்த்தும் இரசியா உக்ரைன் மீது போர்த் தொடுத்தது. உக்ரைன் நிலைபாட்டை ஒத்த தங்கள் நிலைப்பாடின் ஆபத்தின் காரணமாக இரசியா தங்கள் மீது பலவழிகளில் தாக்குதல் தொடுக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து பின்லாந்தும் சுவீடனும் வடக்கு அட்லான்டிக் ஒப்பந்தக் கூட்டணியில் (நேட்டோவில்) இணைய விருப்பம் தெரிவித்தனர். இந்த முடிவை வரவேற்று பின்லாந்தையும் சுவீடனையும் சேர்ப்பது என்று அனைத்து கூட்டணி நாடுகளும் ஒப்புக்கொண்டு அனுமதி வழங்கியது நேட்டோ மாநாட்டின் இன்னொரு மையமான அம்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா குடியரசு ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக நேட்டோ உச்சி மாநாட்டில் பார்வையாளர்களாக இணைந்தனர். இந்த நாடுகள் நேட்டோவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, உலகளாவிய சவால்களை ஒன்றுசேர்ந்து எதிர்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது

 

போர்த்தந்திர ஆவணம்

இந்த மாநாட்டில் போர்த்தந்திர ஆவணத்தை நேட்டோ வெளியிட்டுள்ளது. இதில் நேட்டோ எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும், சவால்களை எதிர்கொள்ளும் பிராந்தியங்களையும், எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய தகவல்களை மட்டும் கீழே தரப்பட்டுள்ளது. நேரடி ஆவணத்தை பார்க்க, கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்

https://www.nato.int/cps/en/natohq/official_texts_196951.htm

https://www.nato.int/nato_static_fl2014/assets/pdf/2022/6/pdf/290622-strategic-concept.pdf

இந்த ஆவணத்தில், யூரோ-அட்லாண்டிக் பகுதியில் அமைதி இல்லை எனவும், இரசிய கூட்டமைப்பு ஒரு நிலையான ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளையும், கொள்கைகளையும் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பால்டிக், கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பெலாரசுடன்  ஒருங்கிணைந்த மாஸ்கோவின் இராணுவ உருவாக்கம் தமது பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு சவால் விடுவதாக குறிக்கிறது.

 

அந்த ஆவணம் கீழ் வருமாறு குறிப்பிடுகிறது:

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் காணப்படும் மோதல்கள், பலவீனங்கள் மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவை நேட்டோவின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கிறது; நேட்டோவின் தென்னக  அண்டை நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் சஹேல் பகுதிகள், ஒன்றிணைந்த பாதுகாப்பு, மக்கள்தொகை, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்; இந்த நிலை காலநிலை மாற்றம், பலவீனமான நிறுவனங்கள், சுகாதார அவசரநிலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் இவை மேலும் மோசமடைந்து வருகின்றன. இந்த நிலைமை பயங்கரவாத அமைப்புகள் உட்பட அரசு சாராத ஆயுதக் குழுக்களின் பெருக்கத்திற்கு வளமான அடித்தளத்தை வழங்குகிறது. இந்த நிலைமை தங்களின் மேலாதிக்க போட்டியாளர்களை ஸ்திரத்தன்மை குலைப்பது மற்றும் கட்டாய தலையீட்டிற்கு வழி வகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசு (PRC) அரசின் லட்சியங்கள் மற்றும் கட்டாயக் கொள்கைகள் நமது நலன்கள், பாதுகாப்பு மற்றும் மதிப்புகளுக்கு சவால் விடுகின்றன. PRC அதன் உலகளாவிய அளவில் தடம் பதிக்கவும் அதன் திட்டங்களை அதிகரிக்கவும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத்தை கருவிகளாகப் பயன்படுத்தி அமல்படுத்துகிறது. அதே நேரத்தில் அதன் மூலோபாயம், நோக்கங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் பற்றி வெளிப்படைத்தன்மை அற்றதாக உள்ளது. PRC இன் தீங்கிழைக்கும் கலப்பின மற்றும் இணைய செயல்பாடுகள் மற்றும் அதன் மோதல் ஏற்படுத்தும் சொற்போர்கள் மற்றும் தவறான தகவல் பரப்புதல் ஆகியவைகள் மூலம் கூட்டாளிகளை குறிவைத்து கூட்டணி பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. PRC முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறைகள், முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய பொருட்கள், விநியோகச் சங்கிலி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முயல்கிறது. மூலோபாய சார்புகளை உருவாக்குவதற்கும் அதன் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் அதன் பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்துகிறது. விண்வெளி, இணையம் மற்றும் கடல்சார் களங்கள் உட்பட சர்வதேச உலக ஒழுங்கமைவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. சீன மக்கள் குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு இடையே ஆழமான மூலோபாய கூட்டாண்மை மற்றும் விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைக் குறைப்பதற்கான அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பும், கடும் முயற்சிகளும் எங்கள் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிராக இயங்குகின்றன.” என்று ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

ஆக மொத்தத்தில், இரசிய-சீன முகாம் அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாமுக்கு பல முணைகளில் சவாலாக இருந்து வருவதையும், பல் முணைகளில் இந்த இரு முகாம்களும் மோதி வருவதையும் இந்த ஆவணம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. சோவியத் தகர்வுக்குப் பிறகு அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாமின் ஆதிக்கம் எங்கும் எதிலும் பரவி இருந்தது. இப்போது இந்த முகாமின் உலக ஒழுங்கமைப்புக்கு சவால் விடும் அளவுக்கு இரசிய-சீன முகாம் வளர்ந்துள்ளதை தங்களுக்கு அச்சுறுத்தலாக காண்கின்றனர் என்பதை நேட்டோவின் மூலோபாய ஆவணம் தெளிவாக காட்டுகிறது.

- செந்தளம் செய்திப் பிரிவு