டிரம்ப்பின் அதிரடிப் பிரகடனம்: 'அமெரிக்க-விரோதக் கூட்டணி'யை(BRICS) ஆதரித்தால் 10% கூடுதல் காப்பு வரி விதிக்கப்படும்; புதிய வரி-விதிப்பு கடிதங்கள் இன்றே அனுப்பப்படும்!
தமிழில்: விஜயன்

முக்கியத் தகவல்கள்:
ஞாயிற்றுக்கிழமை இரவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், BRICS கூட்டமைப்பினை 'அமெரிக்க-விரோதக் கூட்டணி' என்று பகீரங்கமாகச் சாடினார்.
BRICS கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுச் செயல்படும் அல்லது பின்பற்றும் எந்த நாடாயினும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, கூடுதலாக 10% சுங்க வரி (tariff) செலுத்த வேண்டி வரும் என அவர் கண்டிப்புடன் எச்சரித்திருந்தார்.
அமெரிக்காவின் வர்த்தக உறவிலிருக்கும் நாடுகளுக்கு திங்கள்கிழமை முதல் புதிய காப்பு வரி அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்படும் என்று அறிவித்த சற்று நேரத்திலேயே, இந்த அதிரடிப் பிரகடனத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதே அறிவிப்பு கடிதங்களில், ஒருதலைப்பட்சமான புதிய சுங்க வரிகள் (one-sided tariffs) அல்லது வர்த்தக ஒப்பந்தங்கள் (trade agreements) குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
முக்கிய அம்சங்கள்:
"BRICS கூட்டமைப்பின் 'அமெரிக்க-விரோதக் கருத்துக்களை' ஆதரிக்கும் எந்த நாடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, 'கூடுதலாக 10% சுங்க வரியைச்' செலுத்த வேண்டும்", என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
BRICS கூட்டமைப்பு என்பது, உலகின் பல வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பாகும். இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இக்கூட்டமைப்பு தனது ஆண்டு மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடத்தியது.
BRICS உச்சி மாநாடும் பங்கேற்ற நாடுகளும்:
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் பின்வருமாறு:
o ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
o அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
o இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ
o தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா
o பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா
o இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
o சீனப் பிரதமர் லி கியாங்
o எத்தியோப்பாவின் பிரதமர் அபி அகமது
o எகிப்தின் பிரதமர் முஸ்தஃபா மட்பௌலி
o ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி
டிரம்ப் வெளியிட்ட பதிவில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகள் மீதும் கூடுதல் வரிகளைச் சுமத்த உத்தேசித்துள்ளாரா, அல்லது அவர் ஏற்காத குறிப்பிட்ட கொள்கைகளுக்கு எதிராக மட்டுமே சுங்க வரியை சுமத்த உத்தேசித்துள்ளாரா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள பல நாடுகளுக்கு ஒருதலைப்பட்சமான "சுங்கவரி அறிவிப்பு கடிதங்கள்" மற்றும்/அல்லது "வர்த்தக ஒப்பந்தங்கள்" அனுப்பப்படும் என டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த எச்சரிக்கை அறிவிக்கை வெளியானது. இக்கடிதங்கள், அமெரிக்கக் நேரப்படி திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் அனுப்பி வைக்கப்படும்.
இக்கடிதங்களைப் பெறும் நாடுகளின் எண்ணிக்கை குறித்து டிரம்ப் எவ்வித தகவலும் வெளியிடவில்லை. மேலும், இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்படுவது பற்றி இந்த நாடுகள் ஏற்கனவே அறிந்திருந்ததா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.
பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு: முழு விவரங்கள்
பிரிக்ஸ் அமைப்பின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றான பிரேசில், 17வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. 2023 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டதிலிருந்து, இந்தக் கூட்டமைப்பின் இரண்டாவது சந்திப்பாக இது அமைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து புதிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தன. உச்சி மாநாட்டில், இந்தக் கூட்டமைப்பு சார்பாக ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களையும், காப்பு வரிகள் அதிகரிப்பதையும் அவர்கள் கடுமையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அவர்கள் டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இதுவொருபுறமிருக்க, பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரு முக்கியத் தலைவர்களான — ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து அவர் இந்த நிகழ்வைத் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.
பிரிக்ஸ் குறித்து டொனால்ட் டிரம்ப் முன்னர் உரைத்தது என்ன?
டொனால்ட் டிரம்ப், தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட ஒரு பதிவில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்திருந்தார். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு புதிய பிரிக்ஸ் நாணயம் உருவாக்குவது குறித்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் முன்மொழிவை, அவர் முழுமையாக நிராகரித்தார். அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தைக் குறைக்கவோ அல்லது அதைப் புறந்தள்ளவோ எந்த நாடாவது முயன்றால், அந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு நூறு சதவிகித இறக்குமதி வரியை (காப்பு வரி) விதித்து, தீர்க்கமான பதிலடி தரப்படும் என டிரம்ப் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும், புதியதொரு பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்றும், அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் உறுதிமொழியும் வரை இந்த வரி விதிப்பு தொடரும் என அவர் மேலும் திட்டவட்டமாக அப்போது பதிவிட்டிருந்தார்.
“சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாகப் பிரிக்ஸ் நாணயம் இடம்பெற ஒருபோதும் வாய்ப்பில்லை. இதைச் செய்ய முற்படும் எந்த நாடும் அமெரிக்காவின் நட்புறவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான்,” என்று டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தீர்க்கமான மொழியில் உறுதிபடத் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்தக் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டைக் குறைக்கும் அல்லது அறவே நீக்கும் எந்த முயற்சியிலும் இந்தியா ஈடுபடவில்லை என்று இந்திய அரசு சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்தியது.
ஒருதலைப்பட்சமான வர்த்தக வரி-விதிப்பு அறிவிப்புக் கடிதங்கள் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
வியாழக்கிழமை அன்று, டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரபூர்வமான கடிதங்களை அனுப்பத் தொடங்கும் என்று தெரிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு, ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய இறக்குமதி வரிகள் (காப்பு வரிகள்) பற்றிய தகவல்களை இந்தக் கடிதங்கள் அளிக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று சுமார் 10 அல்லது 12 கடிதங்கள் அனுப்பப்படக்கூடும் என்றும், அடுத்த சில நாட்களில் மேலும் பல கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், அந்தக் கடிதங்கள் உண்மையில் அன்றைய(வெள்ளிக்கிழமை) தினமே அனுப்பப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. காப்பு வரிகள் குறித்த அனைத்துக் கடிதங்களும் ஜூலை 9ஆம் தேதிக்குள் அனுப்பப்படும், அதே நேரத்தில் அன்றோடு இது தொடர்பான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் நிறைவுபெறும் என்று டிரம்ப் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடிப்பதற்கான இறுதி காலக்கெடுவாக ஜூலை 9ஆம் தேதியே முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய இறக்குமதி வரிகள் (காப்பு வரிகள்) அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார். சில நாடுகள் 60% அல்லது 70% வரை மிக உயர்ந்த சுங்கவரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், மற்ற நாடுகளுக்கு 10% முதல் 20% வரையிலான சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சுமார் 15 நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிராந்தியக் கூட்டமைப்புகளுடனும் அமெரிக்கா தற்போது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் விளக்கினார். ஆனால், உலகளவில் மொத்தமாக 150க்கும் மேற்பட்ட நாடுகள்/கூட்டமைப்புகள் அமெரிக்காவுடன் வர்த்தக உறவைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “ஏதேனும் ஒரு தருணத்தில், நாங்கள் இந்த நாடுகளுக்கு/கூட்டமைப்புகளுக்கு வரி-விதிப்பு கடிதங்களை அனுப்பத் தொடங்குவோம். அந்தக் கடிதங்களில், எங்கள் வர்த்தக நிபந்தனைகளைத் தெளிவாக விளக்குவோம். இந்த நிபந்தனைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அந்தந்த நாடுகளின் விருப்பம்,” என்றவாறு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://go.forbes.com/c/7unB