ஈரான் - இஸ்ரேல் நெருக்கடி காஸா போரில் துவங்கி முற்றிய விதம் : நிகழ்வுகளின் கால வரைவு

இஸ்ரேல் காஸா பகுதியில் போரைத் துவங்கிய பின்னர், இஸ்ரேலுடனான நெருக்கடிகள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஏப்ரல் 19 வெள்ளிக் கிழமையன்று, இஸ்ஃபாகான் மாநகரில், குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக, ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஈரான் - இஸ்ரேல் நெருக்கடி காஸா போரில் துவங்கி முற்றிய விதம் : நிகழ்வுகளின் கால வரைவு

ஈரானிய அரசு ஊடகம், வெள்ளியன்று, தங்கள் நாடு, மத்தியப் பகுதி மாநகரான இஸ்ஃபாஹானின் வான் பாதுகாப்பு ஏற்பாட்டை செயல் படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று வான்வெளி போர்க் கருவிகளை வீழ்த்தியுள்ளதாகவும், பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அறிவித்தது. எச்சரிக்கை காலகட்டத்தில், விமானங்கள் வானில் பறக்க பல இடங்களில் சிறிது நேரம் தடை விதிக்கப் பட்டது.

அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனங்கள், மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேல், இஸ்ஃபாஹானை தாக்கியதாக சொல்கின்றன. அனேகமாக ட்ரோன்களின் தாக்குதலாக் இருக்கக் கூடிய இதைப் பற்றி, உறுதி செய்ய வேண்டியிருக்கிறதென்று அறிவித்த நிலையில், இஸ்ரேல் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை.

இதற்கிடையில், சிரியாவின் அரசு ஊடகமான சானா (SANA) செய்தி நிறுவனம், இன்று அதிகாலையில், ஏவுகணைகள் தாக்குதலில், நாட்டின் தென் பகுதியில் உள்ள வான்பாதுகாப்பு தலங்களை  சேதப் படுத்தின என ஒரு இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. 

இஸ்ஃபாஹானில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளும் சிரியா மீதான தாக்குதலும், இஸ்ரேல் காஸா போரை துவங்கிய பின், இவ்விரண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் முற்றிய நிலையில் நிகழ்ந்துள்ளன. 

பல பத்தாண்டுகளாக இஸ்ரேலும், ஈரானும் நிகழ்த்தி வந்த "நிழல் யுத்தமாக" தொடரும் சிக்கல், சமீப  மாதங்களில் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது - பிராந்தியத்தில் பரவக் கூடிய மோதல்களாகக் கூடியதாக அவை கவலை அளிக்கின்றன. 

அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய குழுவான ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய பின் காஸா மீது போர் தொடரப்பட்டு, தீவிரமடைந்த நிகழ்வுகளின் கால வரைவு கீழே:

அக்டோபர் 7. ஹமாஸ் முன்னிட்டு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்

ஹமாஸ், ஆபரேஷன் 'அல்-அக்ஸா வெள்ளம்' எனும் பெயரில், தெற்கு இஸ்ரேலின் உள்நாட்டு பகுதியின் மீது ஒரு அதிர்ச்சித் தாக்குதலை நடத்தியது. தாக்குதலின் சில மணி நேரங்களுக்குப் பின், ஹமாஸை தோற்கடிக்க உறுதி கொண்டு, காஸா பகுதியின் மீது குண்டு மழையை பொழிய துவங்கியது. ஆனால் இலக்கானவர்கள் அனேகமாக பொது மக்களே. குண்டுகள் போட்டும், அந்த அயல் நாட்டு வளாகத்தையே நெருக்கமாக சுற்றி வளைத்தும், அதை பஞ்சத்தால் சரிந்துவிட்ட பகுதியாக மாற்றிவிட்டது. இதுவரை, 33,000 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர், பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

ஈரான், ஹமாஸ் தாக்குதலைப் பற்றி, முன்னதாக எதுவும் தெரியாது என மறுத்த போதும்,டெஹ்ரானின் தலைமையிலான அதிகார பூர்வமற்ற 'எதிர்ப்பு மையம்' என சொல்லிக் கொண்டு, லெபனானின் ஹமாஸ், ஏமனின் ஹவுதி கிளச்சிக் குழு, சிரிய அரசு, ஈரானின் சில குழுக்கள் உள்ளிட்ட கூட்டணியின் செயல்பாட்டுக்கு ஆதரவு தந்து கொண்டிருப்பதாக ஈரானை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது இஸ்ரேல் . காஸா போரின் பகுதியாக, இஸ்ரேல் இந்த மையத்தின் பல அமைப்புகளுடன் மோதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 

அக்டோபர் 17: ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி எச்சரித்தது.

ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும், லெபனான்-இஸ்ரேலிய எல்லையில் துப்பாக்கி சூடுகளை பல நாட்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கையில், வெளியுறவு அமைச்சர், ஹுசேன் அமீரப்துல்லாஹியான் அரசு தொலைக் காட்சியில் சொன்னது: "இயல்பாகவே, காஸாவில் எந்த நடவடிக்கையை எடுக்கவும் எதிர்ப்பு மைய தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்; அங்கே நிலைப் படுத்திக் கொண்டு உறுதியானவுடன், மற்ற பகுதிகளுக்கு இந்த எதிர்ப்பு பரவும்."

"எனவே, இன்னும் சில மணி நேரங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் படலாம." எனவும் சொன்னார்.

இந்த அறிவிப்பு, அமீரப்துல்லாஹியான், ஹிஸ்புல்லா தலைவர் ஹாஸன் நஸ்ரல்லாவை சந்தித்த அடுத்த நாளில் வெளியானது. 

அக்டோபர் 17 அன்று, ஈரானின் பெருந்தலைவர் அயோதுல்லா அலி கமேனி, காஸா மீதான இஸ்ரேலின் போரை கண்டனம் செய்து, அதற்கு பின்விளைவுகள் இருக்கும் என அச்சுறுத்தியுள்ளார்.

"ஜியோனிச (இஸ்ரேல்) ஆளும் வர்க்கத்தின் குற்றங்கள் இப்படியே தொடர்ந்தால், எதிர்ப்பு முஸ்லிம் படைகள் பொறுமை இழந்துவிடுவர், அவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது." என கமேனி எச்சரித்தார். "காஸாவின் மீதான குண்டு மழை பொழிவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்." என்றார் அவர்.

நவம்பர் 19: ஏமனின் ஹவூதிகள் செங்கடலில் ஒரு கப்பலை கைப்பற்றினர்.

ஈரானின் கூட்டாளியான ஏமனின் ஹவூதி குழு, செங்கடலில் ஒரு சரக்கு கப்பலை கைப்பற்றியது.

ஹவூதி இராணுவ பிரதி நிதியான யாஹ்யா ஸாரீ, கப்பல் கைப்பற்றப் பட்டது, "எங்கள் பாலஸ்தீனிய சகோதரகளுக்கு எதிரான படுபாதக செயல்களுக்கான" எதிர்வினை என்றார். 

ஹவூதி குழுவினர் அந்தக் கப்பல் இஸ்ரேலுடையது என சொல்கின்றனர்; இஸ்ரேலோ ஜப்பான் இயக்கும் பிரிட்டிஷாருக்கு சொந்தமான சரக்கு கப்பல் அது; அதில் இஸ்ரேலியர்கள யாருமில்லை என்கிறது.

இதன் பின், ஹவூதிகள், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்புடைய கப்பல்களை தொடர்ந்து இலக்காக்கிக்  கொண்டு வருகின்றனர்.

டிசம்பர் 18: ஈரான்  இஸ்ரேலால் இணையவழி ஊடுறுவல் (Cyber Attack) தாக்குதல் நடத்தப் பட்டதாக குற்றம் சாட்டுகிறது.

ஒரு இணையவழி ஊடுறுவல் தாக்குதல் மூலம், ஈரானின் பெட்ரோல் பங்குகளில் 70 சதம் வேலையை முடக்கியது.

ஈரானிய அரசு தொலைக் காட்சியும், இஸ்ரேலிய ஊடக வெளியீடுகளும், இரண்டுமே, இஸ்ரேலுக்கு தொடர்பான ப்ரீடேடரி ஸ்பார்ரோ (பெர்சிய மொழியில்: Gonjeshke Darande) இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளது என அறிவித்தன.

டிசம்பர் 25: இஸ்ரேலிய படை ஈரானின் முக்கிய தளபதியை சிரியாவில் கொன்றது.

சிரிய தலைநகர் டமாஸ்கஸுக்கு வெளியே, இஸ்ரேலின் விமானத் தாக்குதலால், ஈரானின் முக்கிய தளபதியும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படைகளது (Islamic Revolutionary Guard Corps (IRGC)  மூத்த ஆலோசகருமான சையத் ராஸி மவுசாவி கொல்லப் பட்டதாக, ஈரானிய அரசு ஊடகம் அறிவித்தது.

மவுசாவி, ஈரானுக்கும், சிரியாவுக்கும் இடையே ராணுவ ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தவர்.  

ஜனவரி 15: ஈரான், வடக்கு ஈராக்கில், 'மொஸாட் மையத்தை' தாக்கியது. 

வடக்கு ஈராக்கின் குர்திய பகுதியில் உள்ள எர்பிலில் அமைந்துள்ள  இஸ்ரேலின் உளவு அமைப்பு என தான் சொல்லும் நிலையத்தின் தலை வாயிலை ஏவுகணைகளால் தாக்கியதாக,  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படைகள் அறிவித்தன. குறைந்தது எட்டு குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நான்கு பேர் கொல்லப் பட்டதாகவும், ஆறுபேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.

ஏறக்குறைய அதே சமயத்தில், இஸ்ரேலும், வடக்கு சிரியாவில், ஐ எஸ் ஐ எல்லுக்கு (ஐஎஸ்ஐஎஸ்) தொடர்பானதாக சொல்லப் படும் இலக்குகளை தாக்கியது. ஐஆர்ஜிசி, தன் பாதுகாப்பை பலப் படுத்தி, "பயங்கரவாதத்தை" எதிர்த்துக் கொண்டிருப்பதாக அறிவித்தது. 

ஜனவரி 20: டமாஸ்கஸ் கட்டடம் ஒன்றின் மேல், குண்டுவீசி, ஐந்து ஐஆர் ஜி ஸி உறுப்பினர்களை கொன்றதாக இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது குண்டு வீசி, தனது ஐந்து ராணுவ ஆலோசகர்களை கொன்றதாக ஐஆர்ஜிசி சொன்னது.

சிரிய அரசு ஊடகமான சானா (SANA) "இஸ்ரேலிய"ஆக்கிரமிப்பு மாஸே பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தை இலக்காக்கியது என சொன்னது.

ஃபிப்ரவரி 10: லெபனானுக்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக முழு வீச்சான ஒரு தாக்குதல் இருக்கும் என ஈரான் எச்சரித்தது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அமீரப்துல்லாஹியான், லெபனானுக்கு விஜயம் செய்திருந்த போது, ஈரான் அந்தப் பகுதியில் போர் பரவ என்றும் விரும்பியதில்லை என்றார்.

இருந்த போதிலும், இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக பரந்து பட்ட தாக்குதலை தொடர்ந்தால், அது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹுவின் "இறுதி நாட்களாக" ஆகிவிடும் என்றார். 

"லெபனானின் பாதுகாப்பு, ஈரான் மற்றும் அந்த பகுதியின் பாதுகாப்புக்கு ஒப்பானது என தாங்கள் கருதுவதால், லெபனான் எதிர்த்துப் போரிட  வலிமையான ஆதரவு தருவோம்." எனவும் அவர் சொன்னார்.

ஃபிப்ரவரி 21: எரிவாயு குழாய்ப் பாதை  வெடிப்புக்கு இஸ்ரேல் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியது.

ஈரானின் முதன்மையான தெற்கு வடக்கு எரிவாயு குழாய்ப் பாதை மீது இருமுறை தாக்குதல் நடத்தப் பட்டு, பல மாநிலங்களில் சேவைகள் தடைப் பட்டன.

ஈரானின் எண்ணெய்வள அமைச்சர் ஜவாத் ஒவைஸி, "குழாய்ப் பாதையின் வெடிப்பு, இஸ்ரேலின் சதி." என்றார்.

மார்ச் 1: ஐஜிஆர்சி கமாண்டருடன், இரண்டு பேர் கொல்லப் பட்ட நிகழ்வு, இஸ்ரேல் தாக்குதல்தான்என சந்தேகிக்கப் படுகிறது. 

சிரிய துறைமுக நகரமான பனியாஸில் நிகழ்ந்த ஒரு தாக்குதலால், ஐஆர்ஜிசி உறுப்பினர் ஒருவரும், மற்ற இருவரும் கொல்லப் பட்டனர்.

ஈரானிய அரசு செய்தி நிறுவனமான இர்னா (IRNA), "விடியற்காலையில், அபகரிக்கும் ஜியோனிச ஆளும் வர்க்கம், ரேஸா ஸரேயி எனும் ஐஆர்ஜிசி உறுப்பினரை, விடியற்காலையில் கொன்றது." என அறிவித்தது.

பானியாஸில் கொல்லப் பட்ட ரேஸா ஸரேயி, சிரியாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பொறுப்பானவர். டெஹ்ரான் தலைமைக்கும், லெபனானின் உள்நாட்டு செயல்பாட்டாளர்களுக்கும்  இடையே உள்ள உயர் மைய தொடர்பை துண்டிப்பதை இஸ்ரேல் இலக்காக கொண்டுள்ளது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 

ஏப்ரல் 1: இஸ்ரேல் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை தாக்கியது.

சிரியாவில், டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் தகர்ந்தது, இஸ்ரேலிய வான் தாக்குதலால்தான்  என சந்தேகிக்கப் படுகிறது.

இந்த தாக்குதலில், க்வட்ஸ் படையின் மூத்த கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ரேஸா ஸஹேதி, அவரது துணை ஜெனரலான மொஹம்மத் ஹாடி ஹஜ்ரியாஹிமி உட்பட  பதிமூன்று பேர் கொல்லப் பட்டனர்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அமீரப்துல்லாஹியான், இந்த தாக்குதலை, "அனைத்து சர்வதேச கடமைகள், வழக்காறுகளை மீறிய" ஒரு தாக்குதல் என வர்ணித்து இஸ்ரேலை குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது என பல்வேறு இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர

ஏப்ரல் 13:ஐஜிஆர்சி இஸ்ரேல் தொடர்புள்ள கப்பலை ஹோமுஸ் ஜலசந்தியில் கைப்பற்றியது.

ஈரானிய ஆயுதப் படைகள், போர்ச்சுகீசிய-கொடி தாங்கிய எம்எஸ்சி ஏரிஸ் கப்பலை ஹோமுஸ் ஜலசந்திக்கு அருகில் கைப்பற்றியது.

எம்எஸ்சி ஏரிஸ் கப்பல், அமீரகத்தில் இருந்து கிளம்பிய பின், இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருந்ததென சொல்லப் படுகிறது. அது, லண்டனை சார்ந்த ஸோடியாக் மாரிடைமுக்கு சொந்தமானது. இஸ்ரேலிய கோடீஸ்வரரான இயால் ஓஃபர், குடும்பத்தினரோடு நிர்வகிக்கும் ஸோடியாக் குழுவின் ஒரு அங்கம். 

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், இஸ்ரேல் கட்ஸ், தனது எக்ஸ் பக்க பதிவில், ஈரானின் நடவடிக்கை "சர்வதேச விதிகளை மீறிய கடற்கொள்ளை நடவடிக்கை" என குறிப்பிட்டார்.

ஏப்ரல் 13: முதல் முறையாக, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக் கணக்கான ஏவுகணைகளையும், ஆளில்லா விமான தாக்குதலையும் நடத்தியது.

தகராறு முற்றிய நள்ளிரவில், ஈரான் 300க்கும் மேறப்ட்ட ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் கொண்டு இஸ்ரேலை தாக்கியது. அது ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என (Operatio True Promise) பெயரிடப் பட்டது. ஈரானிய மண்ணிலிருந்து இஸ்ரேல் தாக்கப் படுவது இதுவே முதல் முறை. 

பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸின் துணை கொண்டு சுட்டு வீழ்த்தப் பட்டன என இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது. ஜோர்டானும், இஸ்ரேலை நோக்கி செலுத்தப் பட்டு, தங்கள் நாட்டின் வான் வெளியினூடாக பறந்து சென்ற  சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.

ஏவுகணைகளின் சிதிலங்களால், சில நோயாளிகளும், ஒரு ஏழு வயது சிறுமியும் சிறு காயங்களை அடைந்தனர். 

- வைகைறை நேசன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.aljazeera.com/news/2024/4/19/how-iran-israel-tensions-have-escalated-since-the-war-on-gaza-a-timeline