ஆயுத வர்த்தகத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம்

ஸ்டாக்ஹோம்

ஆயுத  வர்த்தகத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம்

ஐரோப்பாவிற்கான ஆயுத இறக்குமதி அதிகரிக்கும் அதே நேரத்தில் உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது

2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய ஆயுதங்களின் இறக்குமதி 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சர்வதேச அளவிலான ஆயுதப் பரிமாற்றங்கள் 5.1 சதவிகிதம் குறைந்துள்ளன. ஆப்ரிக்கா (–40 சதவீதம்), அமெரிக்கா (–21 சதவீதம்), ஆசியா மற்றும் ஓசியானியா (–7.5 சதவீதம்) மற்றும் மத்திய கிழக்கில் (–8.8 சதவீதம்) ஆயுத இறக்குமதி ஒட்டுமொத்தமாக சரிந்தது – ஆனால் கிழக்கு ஆசியா மற்றும் அதிக புவிசார் அரசியல் பதற்றம் நிலவும் மற்ற சில நாடுகளில் இறக்குமதி கடுமையாக உயர்ந்தது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute - SIPRI) 13 மார்ச் 2023 அன்று வெளியிட்ட உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் குறித்த புதிய தரவுகளின்படி, உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 33 லிருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

'உலகளவில் ஆயுதப் பரிமாற்றங்கள் குறைந்துள்ள போதிலும், ரஷ்யாவிற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக ஐரோப்பாவின் ஆயுத இறக்குமதி கடுமையாக உயர்ந்துள்ளது' என்று SIPRI ஆயுதப் பரிமாற்றத் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் டி. வெஸ்மேன் கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் அதிக ஆயுதங்களை, வேகமாக இறக்குமதி செய்ய விரும்புகின்றன. கிழக்கு ஆசியாவிற்கான ஆயுத இறக்குமதி அதிகரித்துள்ளதோடு மத்திய கிழக்கிற்கான ஆயுததேவைகளும் அதிகளவிலுள்ளன. இவ்வகையில் போர்த்தந்திரப் போட்டி மற்ற இடங்களிலும் தொடர்கிறது.

ரஷ்ய ஏற்றுமதி குறைவதால் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கிறது

உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகின்றன (கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து மிகப்பெரிய மற்றும் இரண்டாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்கள்). எவ்வாறாயினும், இரண்டிற்கும் இடையேயான இடைவெளி கணிசமாக விரிவடைந்து வருகிற அதே நேரத்தில் ரஷ்யாவிற்கும் மூன்றாவது பெரிய சப்ளையர் பிரான்ஸுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துள்ளது. 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் மட்டும் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் 2018-22 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 40 சதவீதத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 31 சதவீதம் சரிந்தது. உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அதன் பங்கு 22 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைந்துள்ள அதே நேரத்தில் பிரான்சின் பங்கு 7.1 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ரஷ்ய ஆயுத ஏற்றுமதி 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் அதன் 10 பெரிய இறக்குமதியாளர்கள் 8 ஆகக் குறைந்துள்ளன. ரஷ்ய ஆயுதங்களை அதிகம் பெறும் நாடான இந்தியாவுக்கான ஏற்றுமதி 37 சதவீதம் சரிந்தது, மற்ற 7 நாடுகளுக்கான ஏற்றுமதி சராசரியாக 59 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி சீனா (+39 சதவீதம்) மற்றும் எகிப்து (+44 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கு அதிகரித்தது, மேலும் அவர்கள் ரஷ்யாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய இறக்குமதியாளர்களானார்கள்.

‘உக்ரைன் மீதான போர் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தும். ஏனென்றால், ரஷ்யா தனது ஆயுதப் படைகளை போருக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் ரஷ்யா மீதான வர்த்தகத் தடைகள் மற்றும் ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்கக்கூடாது எனும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரசுகளின் அழுத்தம் அதிகரிப்பால் மற்ற நாடுகளின் இறக்குமதி குறைவாகவே இருக்கும்' என்று SIPRI ஆயுத பரிமாற்ற திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சைமன் டி.வெஸ்மேன் கூறினார். 

பிரான்சின் ஆயுத ஏற்றுமதி 2013-17 மற்றும் 2018-22 இடையே 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை ஆசியா மற்றும் ஓசியானியா மற்றும் மத்திய கிழக்கு அரசுகளுக்கு ஆகும். 2018-22 இல் பிரான்சின் ஆயுத ஏற்றுமதியில் 30 சதவீதத்தை இந்தியா பெற்றது, மேலும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக அமெரிக்காவை பிரான்ஸ் மாற்றியது.

'உதாரணமாக, இந்தியாவில் காணப்படுவது போல், ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி குறைந்து வருவதால், உலக ஆயுத சந்தையில் பிரான்ஸ் அதிக பங்கைப் பெறுகிறது' என்று SIPRI ஆயுதப் பரிமாற்றத் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் டி. வெஸ்மேன் கூறினார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், ரஷ்யாவை விட பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதிக்கு அதிக நிலுவையில் உள்ள ஆர்டர்களைப் பெற்றிருந்ததால், இது தொடரும் என்று தெரிகிறது.

2022 இல் உலகின் மூன்றாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உக்ரைன் மாறுகிறது

1991 முதல் 2021 இறுதி வரை, உக்ரைன் சில பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்தது. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்ய போரைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் இராணுவ உதவியின் விளைவாக, உக்ரைன் 2022 இல் (கத்தார் மற்றும் இந்தியாவிற்குப் பிறகு) 3 வது பெரிய ஆயுத இறக்குமதியாளராகவும், மொத்தமாக 2018-22 ஆண்டுகளில் 14 வது பெரிய நாடாகவும் ஆனது. ஐந்தாண்டு காலத்தில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 2.0 சதவீதத்தை உக்ரைன் கொண்டுள்ளது.

"போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்குவது உக்ரைனில் போரை மேலும் அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில், 2022 இல் உக்ரைனின் கோரிக்கைகளை நேட்டோ நாடுகள் நிராகரித்தன. அதே நேரத்தில், மோதலில் ஈடுபட்டுள்ள மற்ற அரசுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கு அத்தகைய ஆயுதங்களை வழங்கின" என SIPRI ஆயுத பரிமாற்றத் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் டி. வெஸ்மேன் கூறினார்.

இன்னும் அதிக இறக்குமதி செய்யும் பகுதியாக ஆசியா மற்றும் ஓசியானியா

ஆசியா மற்றும் ஓசியானியா 2018-22 இல் 41 சதவீத பெரிய ஆயுத பரிமாற்றங்களைப் பெற்றன, இது 2013-17 ஐ விட சற்று குறைவான பங்காகும். பிராந்தியத்திற்கான பரிமாற்றங்களில் ஒட்டுமொத்த சரிவு இருந்தபோதிலும், சில நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளும் மற்றவற்றில் குறிப்பிடத்தக்க குறைவுகளும் காணப்பட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகியவை 2018-22ல் உலகளவில் 10 பெரிய இறக்குமதியாளர்களில் இப்பிராந்தியத்தில் உள்ள 6 நாடுகளாகும்.

கிழக்கு ஆசிய நாடுகளின் ஆயுத இறக்குமதி 2013-17 மற்றும் 2018-22 இடையே 21 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவின் ஆயுத இறக்குமதி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது, இதில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்து வந்தவை. எவ்வாறாயினும், கிழக்கு ஆசியாவில் அமெரிக்க உடன்படிக்கை கொண்ட நாடுகளான தென் கொரியா (+61 சதவீதம்) மற்றும் ஜப்பான் (+171 சதவீதம்) ஆகியவற்றால் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. ஓசியானியாவில் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள ஆஸ்திரேலியா தனது இறக்குமதியை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

'சீனா மற்றும் வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த அச்சங்கள் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆயுத (குறிப்பாக நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்கள் உட்பட) இறக்குமதிக்கான தேவையை அதிகரித்து வருகின்றன' என்றும் ‘மூன்றுக்கும் முக்கிய சப்ளையராக அமெரிக்கா உள்ளது’ என்றும் SIPRI ஆயுத பரிமாற்றத் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சைமன் டி. வெஸ்மேன் கூறினார். 

உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, ஆனால் அதன் ஆயுத இறக்குமதி 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 11 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சரிவு  சிக்கலான கொள்முதல் நடைமுறை, பல்வேறு நாட்டிலிருந்து ஆயுத சப்ளைகளை பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் உள்ளூர் வடிவமைப்புகளுடன் இறக்குமதியை மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2018-22 ஆம் ஆண்டில் உலகின் எட்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளரான பாகிஸ்தானின் இறக்குமதிகள் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதோடு சீனா அதன் முக்கிய சப்ளையராக உள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உயர்தர ஆயுதங்களை மத்திய கிழக்கு பெறுகிறது

2018-22ல் முதல் 10 இறக்குமதியாளர்களில் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய மூன்று நாடுகள் மத்திய கிழக்கில் இருந்தன. சவுதி அரேபியா 2018-22 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்ததோடு அந்தக் காலகட்டத்தில் உலகளவில் ஆயுத இறக்குமதியில் 9.6 சதவீதத்தைப் பெற்றது. கத்தாரின் ஆயுத இறக்குமதி 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 311 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2018-22 இல் உலகின் மூன்றாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

மத்திய கிழக்கிற்கான ஆயுத இறக்குமதியில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்தும் (54 சதவீதம்), அதைத் தொடர்ந்து பிரான்ஸ் (12 சதவீதம்), ரஷ்யா (8.6 சதவீதம்) மற்றும் இத்தாலி (8.4 சதவீதம்) ஆகிய நாடுகளில் இருந்தும் வந்தது. அவற்றில் 260 க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்கள், 516 புதிய டாங்கிகள் மற்றும் 13 போர் கப்பல்கள் அடங்கும். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மட்டும் 180 க்கும் மேற்பட்ட போர் விமானங்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளன, அதே நேரத்தில் ஈரான் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய 24 ஆர்டர்களை வழங்கிள்ளது (இது 2018-22 இல் ஒப்பீட்டளவில் பெரிய ஆயுதங்களைப் பெறவில்லை).

மற்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்:

  • தென்கிழக்கு ஆசியாவிற்கான ஆயுத இறக்குமதி 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் 42 சதவீதம் குறைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட உபகரணங்களை அந்நாடுகள் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்த குறைவு ஏற்பட்டுள்ளது.
  • ஐரோப்பிய நேட்டோ நாடுகள் தங்கள் ஆயுத இறக்குமதியை 65 சதவிகிதம் அதிகரித்தன, ஏனெனில் அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எழும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் தங்கள் ஆயுதங்களை வலுப்படுத்த முயன்றன.
  • இருதரப்பு பதட்டங்கள் காரணமாக 2013-17 மற்றும் 2018-22 க்கு இடையில் துருக்கிக்கான அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி வியத்தகு அளவில் குறைந்துள்ளது. துருக்கி பெரிய அமெரிக்க ஆயுத இறக்குமதியாளர் பட்டியலில் 7வது இடத்திலிருந்து 27வது இடத்திற்கு சரிந்தது.
  • புற-சஹாரா ஆப்பிரிக்க அரசுகளின் ஆயுத இறக்குமதி 23 சதவீதம் குறைந்துள்ளது, அங்கோலா, நைஜீரியா மற்றும் மாலி ஆகியவை மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக உள்ளன. இப்பிராந்தியத்திற்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையராக சீனாவை ரஷ்யா மாற்றியது.
  • அமெரிக்காவில் உள்ள மூன்று அரசுகளின் ஆயுத இறக்குமதி கணிசமாக உயர்ந்தது: அமெரிக்கா (+31 சதவீதம்), பிரேசில் (+48 சதவீதம்) மற்றும் சிலி (+56 சதவீதம்).
  • அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு முதல் ஏழு ஆயுத ஏற்றுமதியாளர்களில் சீனா (–23 சதவீதம்), ஜெர்மனி (–35 சதவீதம்), இங்கிலாந்து (–35 சதவீதம்), ஸ்பெயின் (–4.4 சதவீதம்) மற்றும் இஸ்ரேல் (–15 சதவீதம்) - ஆயுத ஏற்றுமதி குறைந்துள்ளது. இத்தாலி (+45 சதவீதம்) மற்றும் தென் கொரியா (+74 சதவீதம்) ஆகிய இரண்டு நாடுகளும் பெரிய அதிகரிப்பைக் கண்டது.

(ஸ்டாக்ஹோம்)

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.sipri.org/media/press-release/2023/surge-arms-imports-europe-while-us-dominance-global-arms-trade-increases