இரசியாவைத் தொடர்ந்து சீனாவை யுத்தத்திற்கு இழுக்கும் அமெரிக்க - நேட்டோ அணி
அமெரிக்க நேட்டோ அணியின் இரசியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு பலியாடாக மாறிய உக்ரைனைப் போல சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கு பலியாடாக மாறும் தைவான்!
அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி அவர்கள், பசிபிக் பிராந்தியத்தில் சீன இராணுவத்தின் வான் மற்றும் கடற் பிரிவு "குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமாகியுள்ளது" என்று எச்சரித்துள்ளார்.
மேலும் பசிபிக் பிராந்தியத்தில் சீன வான் மற்றும் கப்பற் படைகள் அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடமாட்டத்தை இடைமறித்த சம்பவங்கள் அதிகமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
தலைமை ஜெனரல் அவரின் இந்தோ பசிபிக் பிராந்திய சுற்றுப் பயணத்தின்போது, “இந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது கூட்டணியை சீரமைக்க உள்ளது” என்று கூறியுள்ளார். சீனாவின் தலைமை ஜெனரல் லீ சூசெங் இந்த மாதம் மில்லியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் “தைவான் விசயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சாலமன் தீவுகளுடன் சீனா ஏற்படுத்திக் கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் சீனா தென் பசிபிக்கில் தனது கப்பற் படையை நிறுவ முயற்சிக்கும் அதன் எண்ணம் வெளிப்படையாக தெரிவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
ஜெனரல் மில்லி, இப்பிராந்தியத்தில் சீனாவின் இந்த எல்லை கடந்த முயற்சி “வெறும் சாதாரண நடவடிக்கையாக” பார்க்கமுடியாது என்றும் அது தனது செல்வாக்கை இப்பிராந்தியம் முழுவதும் விரிவாக்க முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகளுக்கு இதன் “அரசியல் விளைவுகள்” சாதகமாக இருக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க மற்றும் சீனா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்தது. இப்பேச்சுவார்த்தை தைவான் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு இடையில் நடைப்பெற்றது. இதில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் மற்றும் சீனாவின் உயர் இராஜதந்திரி யாங் ஜீச்சியும் சந்தித்து கொண்டனர். ஆனால் தைவான் குறித்து இருதரப்பும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வர முடியவில்லை. “தைவான் மீதான முடிவைப் பொருத்துதான் சீன - அமெரிக்க உறவின் அடித்தளம் அமையும். இதை சரியாக கையாளவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்” என்று யாங்க் உறுதியுடன் கூறியுள்ளார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் கனடா போன்ற நாடுகள் சீனாவின் தென்சீனக் கடல் மீதான் நடமாட்டத்தில் மோதல் போக்கு சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக ஜெனரல் மில்லி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், பிலிப்பைன்ஸ் நாடு சீனாவுடனான தென் சீன கூட்டு எரிசக்தி திட்டப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளது. இந்த திட்டம் இரு நாடுகளும் கூட்டாக சேர்ந்து எண்ணெய் மற்றும் வாயு எடுக்க 2018ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தனர். ஆனால் இப்போது அதை முறித்துக் கொண்டுள்ளதாக பிலிபைன்ஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்க செனட் சபா நாயகர் நான்சி பெலோசி அவர்கள் தைவான் தீவிற்கு செல்லவுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார். இதற்கு சீன தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனா வெகு காலமாக தைவானை தங்களின் ஒன்றினைந்த பகுதியாக உரிமை கோரி வருகிறது. இதுவரை ஐ.நாவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதையே கடைபிடித்து வந்துள்ளனர். ஆனால் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடாக மாறிய பிறகு அமெரிக்க-நேட்டோ நாடுகளின் உலக ஒழுங்கமைப்பு போட்டியாக மாறி வருவதால், சீனாவிற்கு எதிராக தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு சில ஆண்டுகளாக தைவான் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். ரசியாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான நேட்டோவிற்கு பலியாடாக உக்ரைனை மாற்றியதுபோல சீனாவுக்கு எதிராக அமெரிக்க கூட்டணிக்கு பலியாடாக மாறிவிடும் சூழலில் தைவான் உள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம், நான்சி பெலோசியின் இந்த பயணம் “கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக பேச்சாளர் சாவோ லிஜியன் “சபா நாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்து அமெரிக்காவிடம் பல தருணங்களில் உறுதியான எதிர்ப்பை சீனா தங்கள் பக்கம் தெளிவாக தெரிவித்துவிட்டதாக” திங்களன்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் லிஜியன் “நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாமுக்கும், இரசிய-சீன முகாமுக்கும் இடடையில் கடுமையான, உக்கிரமான ஒரு பனிப்போர் நடந்து வருவதை இந்நிகழ்வுகள் தெளிவாக காட்டுகிறது. இந்த இரு முகாமுக்கு இடையில் உலகளவில் அணி சேர்க்கை நடந்து வருகிறது. உலகப் போருக்கான போக்குகள் தெளிவடைந்து செல்லுகிறது. இரு முகாம்களின் பொறிக்குள் சிக்குகொள்ளாமல் மற்ற உலக நாடுகள் தப்பித்துக்கொண்டால் உலகப் போராவதை தவிர்க்க முடியும்.
- செந்தளம் செய்திப் பிரிவு