உலக வர்த்தகப் போர்: மூன்றாம் உலகப் போருக்கு இழுத்துச் செல்கிறதா?
தமிழில்: விஜயன்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு, சர்வதேச அளவில் வர்த்தகப் போர் தொடங்கியது. இந்தப் பூசல், இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை, வேலை இழப்புகளுக்கான அறிகுறிகளைக் காண முடிகிறது. மேலும், பலர் டிரம்ப்’ன் ஆபத்தான முடிவுகளுக்கு எதிராகப் பெருந்திரளான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், டிரம்ப் பன்னாட்டு நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் குளறுபடிகளை ஒரு அவசியமான சிகிச்சையின் தற்காலிக பக்க விளைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க மக்களுக்கு விரைவில் நிலைமை சீரடையும் என்று கூறி அமைதிப்படுத்த முயன்று வருகிறார்.
இந்த வர்த்தகப் போர் எவ்வாறு முடிவடையும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால் தற்போது, அமெரிக்கா உட்பட எந்தவொரு நாடும் தனது பொருளாதார வளர்ச்சியை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியாத நிலையில்தான் உள்ளது. இதன் காரணமாக, உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற இன்னல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். மக்களின் உயிரையும் நலனையும் பணயம் வைத்தேனும் லாபம் ஈட்டுவது என்பதுதான் முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை குணம்சமாகும். இன்று நாம் காண்பது ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடு. இது முதலாளித்துவத்தின் மிகவும் தீவிரமான வடிவம். தற்போது தனது உண்மையான, ஆபத்தான சுயரூபம் என்னவென்பதை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது.
டிரம்ப் துவங்கியுள்ள வர்த்தகப் போர் என்பது இறக்குமதி-ஏற்றுமதி வரிகள் தொடர்பானது மட்டுமல்ல – இது உண்மையில் உலகச் சந்தைகளை மறுபங்கீடு செய்வதற்கான முயற்சியாகும். கடந்த காலங்களில், முதலாளித்துவம் உலகச் சந்தைகளை பங்கீடு செய்வதற்கான முயற்சிகளில் ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை ஏற்படுத்தியுள்ளது. அடோல்ஃப் ஹிட்லர் இதே நோக்கத்திற்காகத்தான் அதாவது சந்தைகளைக் மறுபங்கீடு செய்வதோடு, தன்னாட்டு முதலாளிகளின் இலாபத்தை பெருக்குவதற்காகவே இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினான். போருக்குப் பிறகு, உலகச் சந்தைகள் மறுபங்கீடு செய்யப்பட்டன, உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் முதலாளித்துவ ஆட்சிமுறை நீக்கப்பட்டதோடு, ஹிட்லரும் படுதோல்வியைத் தழுவினான். இன்று, ஹிட்லரைப் போன்ற ஒரு பாத்திரத்தை டிரம்ப் வகிப்பதாகத் தோன்றுகிறது. வரலாறு மீண்டும் நிகழலாம், மேலும் ஹிட்லரைப் போலவே டிரம்பும் படுதோல்வியடையக்கூடும். மனித சமூகம் எப்போதும் முன்னோக்கிச் செல்லவும் முன்னேற்றம் அடையவுமே விரும்புகிறது. பழைய, தீங்கு விளைவிக்கும் அமைப்புகளை நோக்கி வரலாற்றை பின்னோக்கி இழுக்க முயல்பவர்கள் இறுதியில் தோல்வியடைவார்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. மோடி, டிரம்ப் போன்ற தலைவர்களின் அரசியல் பாதைகள் இந்த விஷயத்தில் ஒத்திருப்பதாகவேத் தெரிகிறது.
ஏப்ரல் இரண்டாம் தேதியை "அமெரிக்க விடுதலை தினம்" என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அன்றுதான் அவர், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரிகளை (தீர்வைகளை) விதித்து வர்த்தகப் போரைத் தொடங்கினார். ஹிட்லரைப் போல் அல்லாமல், எந்தவொரு நாட்டின் ஆதரவும் இன்றி, டிரம்ப் உலகப் பொருளாதாரத்தை தனித்து ஆதிக்கம் செலுத்த முயல்கிறார். ஹிட்லர் நட்பு நாடுகளைச் சார்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலடியாக, சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34% வரி விதித்து கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மற்ற நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறைகள் முற்றிலுமாக சரிசெய்யப்படும் வரை இந்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெற மாட்டேன் என்று இந்த வர்த்தகப் போர் தொடங்கிய ஐந்தாவது நாள் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஒட்டுமொத்த உலகமுமே அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறைக்கு காரணம் என்று டிரம்ப் கூறியுள்ளார். எனவே, இந்தச் சிக்கலைக் குறைப்பதற்கு, ஒவ்வொரு நாடும் தங்களுடைய சந்தைகளை அமெரிக்கப் பொருட்களுக்காக முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்று அவர் கருதுகிறார் – அவர்களுக்கு உண்மையில் அந்தப் பொருட்கள் தேவையுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் துறை, தொழில்துறைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவர்கள் அமெரிக்கப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார். இவ்விதமாக, டிரம்ப்’ன் வர்த்தகப் போர் சீனாவைப் போன்ற நாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு ஆதரவளித்த பணக்கார முதலாளித்துவ நாடுகளுக்கும் எதிராகத் திரும்பியுள்ளது. உலக வங்கி (World Bank), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF), மற்றும் உலக வர்த்தக கழகம் (World Trade Organization - WTO) போன்ற அமைப்புகளின் மூலம் உலகமயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும்கூட இது முரணாக உள்ளது.
ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று, முதலாளித்துவத்தின் கட்டுப்பாடற்ற, மிருக குணத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். இது முதலாளித்துவ அமைப்பின்கீழ் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த அனைத்து விதிகளுக்கும் உடன்பாடுகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக வெளிப்பட்டது. டிரம்ப்’ன் நடவடிக்கைகள் உலகத்தின் ஏனைய பகுதிகளைத் அமெரிக்கா ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற வெறியால் மட்டுமே தூண்டப்படுவதை காண முடிந்தது. இதற்காக முதலாளித்துவ நீதியையும் நியாயத்தையும்கூட முழுமையாகப் புறந்தள்ளுவதற்கு தயாராகிவிட்டார்கள். இது மற்ற நாடுகளுடன் இணக்கமாகச் செயல்படுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் மறுத்துவிட்டு, மாறாக வாதங்களையும், மோதல்களையும், பதற்றங்களையுமே ஊக்குவிக்கிறது. இவ்வகையில், டிரம்ப்’ன் இந்த ஆக்கிரமிப்புத்தனமான ஏகாதிபத்தியக் கொள்கை, ஹிட்லரின் பாசிச ஆட்சியைப் போன்ற ஒரு நிலைக்கு மாறுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கின்றன. மேலும், டிரம்ப்’ன் வர்த்தகக் கொள்கைகளுக்கு அமெரிக்காவின் இராணுவ பலம் உறுதுணையாக இருப்பதால், இந்த வர்த்தகப் போர் ஒரு உண்மையான இராணுவப் போராக உருவெடுக்கக்கூடிய ஒரு மறைமுக அபாயமும் உள்ளது.
இந்த வர்த்தகப் போர் வெறுமனே வணிகம், பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. இது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உலகம் ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் நிர்ப்பந்திக்கும் முயற்சியாகவும் இருக்கிறது. அதனால்தான் உலகின் பிற நாடுகள், அமெரிக்காவின் வணிகப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கோ அல்லது அதன் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ தாங்கள் பொறுப்பல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தைப் அழித்து அமெரிக்கத் தொழில்களைப் பாதுகாக்கும் டிரம்ப்’ன் காப்புப் பொருளாதாரக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்க மக்கள் டிரம்ப்’ன் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடத் துவங்கியுள்ளனர். இத்தருணத்தில், இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் அமெரிக்க மக்களுடன் தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவது மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் உலகைக் காப்பாற்றுவது என்பது டிரம்ப்’ன் தனிப்பட்ட கடமை அல்ல – அது உலகெங்கும் வாழும் சாதாரண மக்களின் கடமையாகும். இந்தக் கடுமையானப் போராட்டத்தில், நாம் மோடி அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வலதுசாரி அரசாங்கங்கள், வலதுசாரி அரசியல் சக்திகளிடமிருந்தோ எந்த உதவியையும் எதிர்பார்ப்பது பயனற்றது; ஏனெனில் அவர்கள் இயல்பாகவே டிரம்ப்’ன் கருத்துகளையும் செயல்களையும் முழுமையாக ஆதரிக்கின்றனர்.
சத்தீஸ்கர் கிசான் சபாவின் துணைத் தலைவராக சஞ்சய் பரதே செயல்பட்டு வருகிறார். இது அகில இந்திய கிசான் சபாவின் (தேசிய விவசாயிகள் சங்கம்) துணை அமைப்பாகும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/04/world-tariff-war-are-we-heading-towards-the-third-world-war/