இன்றைய உலகில் WTOவினால் ஏதாவது பயனிருக்கிறதா?
தமிழில்: விஜயன்

டிரம்ப் விதித்த "பரஸ்பர வரிகளை", பலரும் பெரும் மந்தநிலையின் தொடக்கத்தை விரைவுபடுத்தியதாகக் கருதப்படும் 1930களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மூட்-ஹாவ்லி வரிகளுடன் ஒப்பிடுகின்றனர். உலகளாவிய வர்த்தக விதிகளை மேற்பார்வையிடவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட உலக வர்த்தக கழகத்தின் இருப்புதான் அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடாகும். ஆயினும், உலக வர்த்தக கழகம் படிப்படியாகத் தன் நோக்கத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதோடு, இப்போது பெரிய அளவில் சீர்திருத்தப்பட வேண்டிய அவசரத் தேவையும் எழுந்துள்ளது என்பதே விமர்சகர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது. இன்றைய உலக வர்த்தகச் சூழலில் உலக வர்த்தக கழகம் இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா? சம்ரீன் வானி அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடலில் மார்க் லின்ஸ்காட் மற்றும் மோகன் குமார் இந்தக் கேள்வியை பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.
அவ்வுரையாடலின் தொகுக்கப்பட்ட பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
உலக வர்த்தக கழகம் ஓரங்கட்டப்பட்டுவிட்டதா? உலக வர்த்தக கழகம் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமெரிக்கா செவிசாய்க்குமா?
மோகன் குமார்: ஆரம்ப கட்டத்தில் நாம் பார்த்த உலக வர்த்தக கழகம் என்பது உண்மையில் மறைந்துவிட்டது. தன் முக்கியத்துவத்தை இழந்ததோடு, ஓரங்கட்டப்பட்டுவிட்டது - முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்ல மாட்டேன், ஆனால் அந்த நிலையை வெகுவிரைவில் அடைந்துவிடும் என்று கூறலாம். உலக வர்த்தக கழகம் மூன்று முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது:
•வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள்,
•வர்த்தகப் பூசல்களைத் தீர்ப்பது, மற்றும்
•உலகளாவிய வர்த்தக நடைமுறைகளைக் கண்காணிப்பது.
ஆனால், இன்று, அது அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து வருகிறது.
2001-ல் பலகட்ட தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவுற்றதிலிருந்து, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை பணி பெரும் தடுமாற்ற நிலையிலேயே நீடிக்கிறது. அதன் பின்னர், ஒரேயொரு முக்கியமான பலதரப்பு ஒப்பந்தம் மட்டுமே—மீன்வள ஒப்பந்தம்—இறுதி செய்யப்பட்டுள்ளது; அதுவும்கூட இன்னும் முழுமை பெறவில்லை. இதனிடையே, வர்த்தகத் தகராறு தீர்வுப் பணியும், குறிப்பாக மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் முடங்கிப் போயுள்ளது. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், இத்தீர்ப்பாயத்திற்கான நடுவர் நியமனங்களைத் அமெரிக்கா தடுக்கத் தொடங்கிய போதே இச்சரிவு ஆரம்பித்தது, அதன் விளைவாக இவ்வமைப்பு செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வர்த்தகக் கண்காணிப்புப் பணியைப் பொறுத்தவரை, உலக வர்த்தக கழகம் தனது முயற்சிகளைத் தொடர்ந்தபோதிலும், அதன் செயல்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. பல உறுப்பு நாடுகள்—குறிப்பாக ஒரு பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு—போதுமான வெளிப்படைத்தன்மை காட்டாததன் காரணமாக, வர்த்தகக் கொள்கைகளைத் துல்லியமாகக் கண்காணிப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. உலக வர்த்தக கழகம் தனது அதிகாரத்தை இழந்து பல் பிடுங்கப்பட்ட நிலையிலிருக்கும் சமயத்தில்தான் டிரம்ப்’ன் காப்பு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; இது நிலைமையை மிகவும் பாதுகாப்பற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது.
மார்க் லின்ஸ்காட்: உலக வர்த்தக கழகம் ஓரங்கட்டப்பட்டுவிட்டது என்ற தூதுவர் மோகன் குமாரின் மதிப்பீட்டை நான் முழுமையாக ஏற்கிறேன். WTO-வின் பயனற்ற நிலை அல்லது முக்கியத்துவம் குறைந்த நிலை என்பது டிரம்ப் நிர்வாகத்துடன் தொடங்கவில்லை. அதன் சிக்கல்கள் பலகட்ட தோகா சுற்று பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துவிட்டது. என் கருத்துப்படி, தோகா செயல்திட்டம்(Doha mandate) என்பது அடிப்படையிலேயே ஒரு பெரும் குறைபாடைக் கொண்டிருந்தது. அதன் நோக்கம் மிக விரிந்ததாகவும், அதீத இலக்குகளைக் கொண்டிருந்தது என்றாலும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளின் பெரும் சுமையையும் தாங்கியிருந்தது.
சீனா உலக வர்த்தக கழகத்தில் இணைந்ததன் மூலம் இச்சூழல் மேலும் சிக்கலுக்குரியதாக மாறியது. உலக வர்த்தக கழகத்தின் விதிகள் சீனாவின் வர்த்தக நடைமுறைகளையும் கொள்கைகளையும் எந்தளவிற்கு திறம்படக் கட்டுப்படுத்தும் என்பதில் கணிசமான அளவு அறியாமையே நிலவியது. தற்போது டிரம்ப் நிர்வாகத்தால் வெளிப்படுத்தப்படும் பல அதிருப்திகள் உண்மையில் பலகட்ட தோகா சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதே தோன்றியவைதான். பலதரப்பு, பாகுபாடற்ற காப்பு வரிக் குறைப்புக்கான முயற்சிகள் மூலம் பெரிய அளவிலான சுங்க வரிக் கட்டண வேறுபாடுகளைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாகச் முன்னெடுக்கப்படவில்லை அல்லது அதற்கான பேச்சுவார்த்தைகள் தோற்கடிக்கப்பட்டன.
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கான நியமனங்களை அமெரிக்கா தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகத் தடுத்து வந்தாலும், இந்த நடவடிக்கைகள் உலக வர்த்தக கழகத்தின் வர்த்தகத் தகராறு தீர்வு முறைமையிலும், மேல்முறையிட்டுத் தீர்ப்பாயத்திலும் இயல்பாக காணப்படும் குளறுபடிகளிலிருந்து எழுந்தவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறது என்ற கவலைகள் அதிகரித்து வந்தன - அதாவது, ஏற்கனவே உள்ள விதிகளின் அடிப்படையில் வர்த்தகத் தகராறுகளை விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பதற்குப் பதிலாக, அது நடைமுறையில் தான்தோன்றித்தனமாக வர்த்தகச் சட்டத்தை உருவாக்கியது போல செயல்பட ஆரம்பித்துவிட்டது.
இந்த வரிகள் நடைமுறைக்கு வரும்பொழுது, இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைத் உலக வர்த்தக கழகத்தால் தடுக்க முடியுமா?
மார்க் லின்ஸ்காட்: இல்லை. உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உலக வர்த்தகக் கழகத்திடம் இல்லை. பெரும்பாலான நாடுகள் வெளிப்படையான கலந்துரையாடலில் ஈடுபட்டு, இதுபோன்ற நெருக்கடிகளுக்கு இணைந்து தீர்வுகளைக் காணக்கூடிய ஒரு தளமாக WTO இயங்கவில்லை .
மோகன் குமார்: பொதுக் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்ற செயல்முறைதான் உலக வர்த்தக கழகத்தின் அடிப்படைச் சிக்கலாக மாறியுள்ளது. சட்ட வரைவுக் குழுவில் நடந்த விவாதங்களின் போது, ஏகோபித்த கருத்தொற்றுமை பெற வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக வாக்கெடுப்பு முறைக்கு மாறுவதை எதிர்த்த இரண்டே நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவும்தான். முடிவெடுக்கும் செயல்முறையில் கொண்டுவரப்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்திற்கும் ஒருமித்த, ஏகோபித்தக் கருத்து ஒற்றுமை வேண்டும் என்ற கொள்கையைக் கைவிடக்கூடாது என்பதே இதன் பொருளாகும். வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் நடுவர் தீர்ப்பாய முறையை முன்மொழிந்தது, ஆனால் இது அனைவரின் ஆதரவைப் பெறவில்லை. வர்த்தகக் கண்காணிப்பைப் பொறுத்தவரை, உறுப்பு நாடுகள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை உலக வர்த்தக கழகத்திடம் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை விதியாக மாற்றவும் முடியாது.
இந்த முக்கிய கட்டத்தில், பாகுபாடற்ற வர்த்தக சலுகை (MFN- மிகவும் வேண்டப்பட்ட நாடு) என்ற அடிப்படைக் கொள்கையின் முழுத் தோல்வியை நாம் காண்கிறோமா?
மோகன் குமார்: MFN விதி (மிகவும் வேண்டப்பட்ட நாடு – Most Favoured Nation) என்பது உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை விதியாகும். தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTAs) மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் அந்த ஒப்பந்தங்களும்கூட உலக வர்த்தக கழகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு நாடு ஒரு தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டால், அதனை உலக வர்த்தக கழகத்திற்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்த தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) கவனமாக ஆய்வு செய்ய வேண்டியது உலக வர்த்தக கழகத்தின் பணியாக இருந்தபோதிலும், அவற்றைச் சரிவர ஆய்வு செய்யவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் .
அமெரிக்காவின் சமீபத்திய காப்பு வரிவிதிப்புகள், உலக வர்த்தக கழக முறையிலிருந்து அமெரிக்கா முற்றிலுமாக விலகிச் செல்கிறது என்பதையே காட்டுகின்றன. இரண்டாவதாக, இந்த வரிவிதிப்புகள் பேரளவிலான நிச்சயமற்றத் தன்மையை உருவாக்குகின்றன. இறுதியாக, ஒரே நேரத்தில் 60 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பிற்கு (USTR) போதுமான ஊழியர்களும் கட்டமைப்புகளும் உள்ளனவா என்பதுகூட தெரியவில்லை, ஆனால் அத்தனை நாடுகள் மீதும் ஒரே நேரத்தில் காப்பு வரிகள் விதிக்கப்பட்டிருப்பது நிலைமையை மேலும் சிக்கலுக்குரியதாக்குகின்றன. எனினும், இந்தியா பேச்சுவார்த்தைகளை முன்னதாகவே தொடங்கிவிட்டதால், ஒரு சாதகமான நிலையில்தான் உள்ளது .
மார்க் லின்ஸ்காட்: "பாகுபாடற்ற வர்த்தக கொள்கை" (MFN) என்ற விதிமுறை, 1947ஆம் ஆண்டில் சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) ஏற்கப்பட்டபோது உருவானது. குறைந்தபட்சம் அமெரிக்காவின் பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது இதுவே சிக்கலின் ஓர் அம்சமாக விளங்குகிறது. பல வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, அவசர அவசரமாக, ஒருபக்க சார்பாக, தனது சராசரி சுங்க வரிகளை மிகக் குறைந்த நிலைக்குக் அமெரிக்கா குறைத்துவிட்டபோதிலும், இந்தியா உட்பட பிற நாடுகள் அவற்றை அதே அளவிற்கு குறைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்துதான் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. மற்ற நாடுகள் தன்னைப் பின்பற்றி தத்தமது வரிகளைக் கூடுதலாகக் குறைக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது, ஆனால் அவ்வாறு நிகழவில்லை. ட்ரம்ப்’ன் முதலாவது ஆட்சிக் காலத்தில், MFN விதிமுறையிலிருந்து அமெரிக்கா விலகிச் செல்லும் போக்கை ஆரம்பித்தது; மேலும் பைடன் ஆட்சிக்காலத்திலும் இதே அணுகுமுறைத் தொடர்ந்தது. ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான வரிகளும் (பிரிவு 232இன் கீழ்), சீனாவுக்கு எதிரான வரிகளும் (பிரிவு 301இன் கீழ்) பைடன் ஆட்சியில் தொடர்ந்தன. தற்போது, ட்ரம்ப் மீண்டும் இரண்டாவது முறையாகப் ஆட்சிக்கு வந்துள்ளதால், நிலைமை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக, MFN விதி WTO எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்காவிற்குப் பலனளிக்கவில்லை என்பதை ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் ஒருமித்து ஒப்புக்கொள்கின்றனர். 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும், பல நாடுகள் அதிவேகத்தில் தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) மேற்கொள்ளத் தொடங்கின. இந்நாடுகள் உலக வர்த்தக கழகம் மூலம் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை விட, தமக்குள் நேரடியாக வரிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாக இருந்ததைக் கண்டன. இது பாகுபாடற்ற வர்த்தக கொள்கையிலிருந்து (Most-Favoured Nation - மிகவும் வேண்டப்பட்ட நாடு) மேலும் விலகிச் செல்வதைக் குறித்தது.
"பத்தாண்டுகளுக்கு மேலாகியும் மீன்பிடித் தொழிலுக்கான அரசு ஆதரவு, விவசாயத்திற்கான அரசு ஆதரவு மட்டுமல்லாது அரசு உணவு சேமிப்புத் திட்டங்கள் குறித்து எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. இந்த விவகாரங்களில் இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதன் பின்னணி என்ன?"
மோகன் குமார்: பன்னாட்டு வர்த்தகத்தில் தங்களின் அளப்பரிய ஆதிக்கம் காரணமாக உலக வர்த்தக கழகத்தின் தோல்விக்கு பெரும் வர்த்தக வல்லரசு நாடுகளே முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், இந்தியாவும் தனது பங்கிற்கான பாதிப்பைச் செய்துள்ளது. நாம் எதிர்க்கக்கூடாத சில அம்சங்களையும் எதிர்த்தோம்.
விவசாய விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள இந்தியாவுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. எந்தவொரு இந்திய ஆட்சியாளருக்கும் இது எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான விவகாரமே ஆகும். உலக வர்த்தக கழகம் இந்தியாவின் விவசாயம் சார்ந்த கவலைகளுக்கு எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பாவும் பல ஆண்டுகளாக தங்கள் விவசாயிகளுக்குப் பெரியளவிலான நிதி உதவி வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தனது சொந்த உணவு உற்பத்தியை முழுமையாகச் சார்ந்துள்ள இந்தியா - வெறும் 0% ஆதரவு வழங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலை இதுதான்: உலக வர்த்தக கழகத்தில் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் விதிகள் குறித்து விவாதிக்க இந்தியா மறுத்து வருகிறது, ஆனால் இந்த விவகாரங்கள் பற்றி ஐரோப்பா, பிரிட்டன் மட்டுமல்லாது ஏன் அமெரிக்காவுடன்கூட தனித்தனியாகப் பேச இணக்கம் தெரிவித்துள்ளது. நான் கேட்டறிந்த ஒரே காரணம் யாதெனில், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாக முதலில் இந்தியா அதிக நம்பிக்கையைப் பெற விழைகிறது என்று ஒரு முன்னாள் வர்த்தகத் துறைச் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
மார்க் லின்ஸ்காட்: வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியாவின் சிறப்புத் தேவைகளையும், உணவுப் பாதுகாப்பு குறித்தானக் கவலைகளையும் பணக்கார நாடுகள் எந்த அளவிற்கு அலட்சியம் செய்தன என்பதை இந்தியா பார்க்கும் அதே விதத்தில் அமெரிக்கா பார்க்கவில்லை. பல வளரும் நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டுடன் முழுமையாக உடன்படவில்லை. விவசாயத் திட்டங்கள், அரசு ஆதரவுத் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. தொழில்களுக்கான அரசு நிதி ஆதரவைப் பற்றித் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் விவாதிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிப்போனது.
சீனா தனது சொந்தச் சந்தைகளை அந்நியப் பொருட்களுக்கு மூடிவைத்திருக்கும் அதே வேளையில், குறைந்த விலைத் தயாரிப்புகளை பிற நாடுகளின் சந்தைகளில் கொட்டிக் குவிப்பதற்கு உலக வர்த்தக கழகத்தின் விதிகள் அனுமதிக்கின்றன என்ற புகார் பரவலாகப் எழுந்துள்ளது, குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து எழுந்துள்ளது. இந்தக் கண்ணோட்டம் சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
மார்க் லின்ஸ்காட்: சீனா உலகளவில் - குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தளங்களில் - ஒரு மிகப் பெரும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைந்தபோது, "போட்டிக்கு வரும் சீனாவை" கையாளுவதற்கு WTO விதிகள் எந்தளவிற்கு பலவீனமானதாக இருக்கும் என்பதையோ, அல்லது சீனா எவ்வாறு ஒரு தடுக்க முடியாத ஏற்றுமதிப் பேரரசாக எழுச்சி பெறும் என்பதையோ யாரும் கணிக்கவில்லை.
மோகன் குமார்: நாம் WTO விதிகளை வகுத்தபோது, தொழில்நுட்ப ரீதியாக விதிகளை மீறாமல் உலக வர்த்தகத்தின் நியாயத்தன்மையை சீர்குலைக்கும் சூழ்நிலைகளைப் பற்றி நாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை. உதாரணமாக, மிகை உற்பத்திப் பிரச்சனையை நாம் ஒருபோதும் யோசித்ததேயில்லை. உலக எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் சரிபாதிக்கும் அதிகமான உற்பத்தியை தன் பிடியில் வைத்துள்ள ஒரு நாடு திடீரென சந்தைகளில் தனது பொருட்களைக் கொட்டிக் குவிப்பதன் மூலம் நியாயமற்ற வர்த்தகச் சூழல்களை உருவாக்க முடியும் என்பதை நாம் சிந்திக்கவே இல்லை. இதுபோன்ற ஏற்றத்தாழ்வான வர்த்தக நடைமுறைகளை தடுத்து நிறுத்துவதே உலக வர்த்தக கழகத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். ஆனால், இப்படியொரு நிலை வரும் என்பதை நாம் சற்றும் எதிர்பார்க்காததால், அவற்றைப் பற்றிய விதிகளை வகுக்க நம்மால் முடியவில்லை.
பேச்சாளர்களின் பின்னணித் தகவல்:
ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியராக மோகன் குமார் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர், அவர் காட் (GATT) மற்றும் உலக வர்த்தக கழக கூட்டங்களில் இந்தியாவின் முக்கியப் பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்றினார்.
அமெரிக்க-இந்தியா போர்த்தந்திர கூட்டமைப்பில் (U.S.-India Strategic Partnership Forum) மார்க் லின்ஸ்காட் மூத்த ஆலோசகராக உள்ளார்; இதற்கு முன்பு அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் உதவியாளராகப் பணியாற்றினார் .
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.thehindu.com/opinion/op-ed/is-the-world-trade-organization-still-relevant/article69488005.ece/amp/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு