டிரம்ப்பின் கத்தார் பாதுகாப்புச் செயலாணை

வெண்பா (தமிழில்)

டிரம்ப்பின் கத்தார் பாதுகாப்புச் செயலாணை

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாருக்குப் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்து டிரம்ப் ஒரு செயலாணையில் கையெழுத்திட்டார்.

டிரம்ப், எரிசக்தி வளம் மிக்க கத்தார் நாட்டைப் பாதுகாக்க, தேவைப்பட்டால் அமெரிக்க இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதாக கூறி செயலாணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் — இருப்பினும் இதன் உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த செயலாணையின் உரை புதன்கிழமை (அக்டோபர் 1, 2025) வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் கிடைத்தது, ஆனால் அது திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தேதியிடப்பட்டிருந்தது. காசா பகுதியில் இஸ்ரேலுடன் போர்நிறுத்தத்தை ஏற்பது குறித்து ஆலோசித்து வந்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு, கத்தார் மக்களுக்கு உறுதியளிக்க டிரம்ப் எடுத்த மற்றொரு நடவடிக்கையாக இது தோன்றுகிறது.

இரு நாடுகளின் "நெருங்கிய ஒத்துழைப்பு" மற்றும் "பகிரப்பட்ட நலன்" ஆகியவற்றை இந்த ஆணை மேற்கோள் காட்டுகிறது, மேலும் "வெளிப்புறத் தாக்குதலுக்கு எதிராக கத்தார் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதாக" உறுதியளிக்கிறது.

காசா திட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் முத்தரப்பு அமைப்பில் கத்தார் இணைகிறது.

"கத்தார் நாட்டின் பிராந்தியம், இறையாண்மை அல்லது முக்கிய உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் எந்தவொரு ஆயுதத் தாக்குதலையும் அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும்" என்று அந்த ஆணை கூறுகிறது.

"அத்தகைய தாக்குதல் ஏற்பட்டால், அமெரிக்காவின் மற்றும் கத்தார் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தூதரக, பொருளாதார நடவடிக்கை மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கைகள் உட்பட பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும்".

இந்த ஆணை, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை அமெரிக்காவுக்கு சென்றபோது பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. நெதன்யாகு கத்தாருடன் தொலைபேசியில் பேச டிரம்ப் ஏற்பாடு செய்தார். அதில், கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு நெதன்யாகு தனது "ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்" என்று வெள்ளை மாளிகை கூறியது.

டிரம்பின் ஆணை குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு கத்தார் அதிகாரிகள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், கத்தாரின் நிதியுதவி பெறும் செய்தி நிறுவனமான அல் ஜசீரா, புதன்கிழமை "இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு கத்தாரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய டிரம்ப் செயலாணை" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்த இஸ்ரேலிய தாக்குதலுக்கு மன்னிப்புக் கோர கத்தார் பிரதமரை நெதன்யாகு அழைக்கிறார்.

இந்த உறுதிமொழியின் உண்மையான வரம்பு கேள்விக்குரியது. பொதுவாக, சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள், அமெரிக்க செனட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும். இருப்பினும், அதிபர்கள் செனட்டின் ஒப்புதல் இல்லாமலேயே சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர்; எடுத்துக்காட்டாக, ஒபாமா, 2015-ல் உலக வல்லரசு நாடுகளுடன் செய்த அணுசக்தி ஒப்பந்தம்.

இறுதியில், இராணுவ நடவடிக்கை எடுக்கும் எந்த முடிவும் அதிபரிடமே உள்ளது. இந்த தன்மை, டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நேட்டோவின் பிரிவு 5 உத்தரவாதங்கள் போன்ற பிற அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் நிச்சயமற்றதாக்கியுள்ளது.

பாரசீக வளைகுடாவிற்குள் நீண்டுசெல்லும் ஒரு தீபகற்ப நாடான கத்தார், தனது இயற்கை எரிவாயு மூலம் மிகப்பெரிய செல்வந்த நாடாக ஆனது. இது அமெரிக்காவின் முக்கிய இராணுவக் கூட்டாளியாக இருந்து வருகிறது; கத்தாரின் பரந்த அல் உதெய்த் விமான தளத்தில் தனது அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை மையத்தை அமைப்பதற்கு அனுமதித்துள்ளது. 2022-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியபோது கத்தார் செய்த உதவி காரணமாக, ஜோ பைடன் கத்தாரை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடாக அறிவித்தார்.

இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு, சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது; இதன் மூலம் அந்த ராஜ்யம் பாகிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பின் கீழ் வந்தது. இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளைப் பற்றியும் கவலை கொண்டுள்ள மற்ற வளைகுடா அரபு நாடுகள் அணுசக்தித் திட்டம் தொடர்பான ஐ.நா. தடைகளை எதிர்கொள்ளும் நிலையில், பிராந்தியத்தின் நீண்டகாலப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பவருடன் இதே போன்ற ஏற்பாடுகளை நாடுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

"மத்திய கிழக்கில் வளைகுடாவின் முக்கியத்துவமும், அமெரிக்காவிற்கு அதன் முக்கியத்துவமும், டிரம்பின் “மீண்டும் நிகழாது” என்ற உறுதிமொழிகள், இரவு விருந்து சந்திப்புகளையும் தாண்டி முக்கியமான அமெரிக்க உத்தரவாதங்களைக் கோருகின்றன" என்று குவைத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் பாதர் அல்-சைஃப் கூறுகிறார்.

வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/international/trump-signs-new-executive-order-vows-qatar-protection-israeli-strikes-netanyahu/article70116460.ece

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு