திருப்பரங்குன்றம் மலையில் ‘விலங்கு பலி’ விவகாரம்: எம்.பி.க்கும் பாஜகவுக்கும் இடையே மோதல்

தமிழில்: விஜயன்

திருப்பரங்குன்றம் மலையில் ‘விலங்கு பலி’ விவகாரம்: எம்.பி.க்கும் பாஜகவுக்கும் இடையே மோதல்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில், புகழ்பெற்ற தர்கா ஒன்றும், அதிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கோவிலும் அமைந்திருக்கின்றன. இங்கு விலங்குகளை பலியிடுவதற்கு அனுமதிப்பது தொடர்பாக அவ்வூரிலுள்ள இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே பூசல் நிலவுகிறது. இந்நிலையில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மலையில் அசைவ உணவு உட்கொண்டு இந்துக்களைத் தூண்டிவிடும் விதமாக செயல்பட்டதாகக் கூறி, பாஜக தலைவர்கள் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தனர்.

ஜனவரி 18-ஆம் தேதி, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சமூக நல்லிணக்க விருந்துக்காக ஆடுகள்,கோழிகளை பலியிட முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். திருபரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமான புனித மலையில் விலங்குகளை பலியிடுவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தர்காவில் பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்று மதுரை நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோர் திருபரங்குன்றத்திற்குச் சென்று, நகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இப்பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். அப்போது பேசிய நவாஸ் கனி, “சிக்கந்தர் தர்காவும், காசி விஸ்வநாதர் கோவிலும் திருபரங்குன்றம் மலையில் அமைந்திருப்பது மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்துக்களும், முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அவரவர் மதச் சடங்குகளைச் செய்து, பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விலங்குகளை பலியிட அனுமதிப்பதில்லை என்றும், ஆனால் சமைத்த அசைவ உணவை மலைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஆடுகள், கோழிகளை பலியிட்டு உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், தற்போது சிலர் வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். கோயிலுக்கும், தர்காவிற்கும் செல்வதற்கு தனித்தனி பாதைகள் உள்ளன,” என்றார். தர்கா அமைந்துள்ள நிலம் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்றும் நவாஸ் கனி தெரிவித்தார்.

இதற்கிடையில், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இந்துக்களைத் தேவையற்ற விதத்தில் தூண்டி, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். “இதுபோன்ற தூண்டிவிடும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பாஜக தலைவர் எச். ராஜா வியாழக்கிழமை திருபரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “சட்டப் பிரச்சினைகளைத் தொடர்ந்து, 1931-ஆம் ஆண்டு இலண்டன் கவுன்சில் வழங்கிய தீர்ப்பின்படி, திருபரங்குன்றம் மலை என்பது முருகக் கடவுளின் புனித தலமாகும், மேலும் அது கோயிலுக்குச் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல சமத் ஆகியோர் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://timesofindia.indiatimes.com/city/madurai/mp-bjp-clash-over-animal-sacrifice-on-thiruparankundram-hill/articleshow/117497691.cms