போல்ஷ்விக் கட்சியின் 2023 சிறப்புக் கூட்ட தீர்மானம்

சமரன் முகநூல் பக்கத்திலிருந்து

போல்ஷ்விக் கட்சியின் 2023 சிறப்புக் கூட்ட தீர்மானம்

Disclaimer: மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கட்சியின் சிறப்புக் கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தியை தகவலுக்காகவும்  விவாதத்திற்காகவும் இங்கு வெளியிடுகிறோம்.

பத்திரிக்கை செய்தி

2023 - சிறப்புக் கூட்டத் தீர்மானங்கள்

எமது கட்சி 30, 31-12-2023 ஆகிய தேதிகளில் சிறப்புக் கூட்டத்தை (கட்சி மாநாடு) நடத்தியது. 

அம்மாநாட்டில் பின்வரும் 8 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

முன்னுரை 

1. நால்வரணியின் கோஷ்டிவாதம் குறித்த தீர்மானம்

2. மூவரணியின் டிராட்ஸ்கியவாதம் குறித்த தீர்மானம் 

3. அமைப்புத்துறையில் தலைமை முறை குறித்த தீர்மானம் 

4. சர்வதேச அரசியல் பொதுவழி குறித்த தீர்மானம் 

5. கலைப்புவாதம் குறித்த தீர்மானம் 

6. இந்தியப் பாசிசம் குறித்த தீர்மானம் 

7. ஏஎம்கே அவர்களின் மார்க்சிய லெனினியப் பங்களிப்புகள் குறித்த தீர்மானம் 

8. அரசியல் தீர்மானம் 

முன்னுரை என்பது சாரத்தில் அனுபவ தொகுப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. இத்துனை ஆண்டுகளாக சிறப்புக் கூட்டம் ஏன் நடத்த இயலவில்லை?? என்பது குறித்தும் கட்சியில் ஏற்பட்ட கலைப்புவாத பிளவுவாத போக்குகள் குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. 88 சிறப்புக்கூட்டத்திற்கு பிறகு ஏஎம்கே-வால் நிறுவப்பட்ட மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கட்சி வலது இடது திரிபுகளை முறியடித்து எவ்வாறு மா- லெ வழியில் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்தது என்பது குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. 

முதல் 3 தீர்மானங்கள் அமைப்புத்துறை தொடர்பான தீர்மானங்களாகும். 4 முதல் 8 வரையிலான தீர்மானங்கள் அரசியல் தீர்மானங்களாகும். 

முதல் தீர்மானம் கட்சிக்குள் கோஷ்டிவாதம், எதேச்சதிகாரம் போன்ற அன்னிய வர்க்கப் பண்புகள் தோன்றுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை லெனினிய அடிப்படையில் தீர்க்கும் வழிமுறைகள் குறித்த தீர்மானமாகும். 

மேலும் அதனடிப்படையில் நால்வரணியின் எதேச்சதிகார, கோஷ்டிவாத போக்குகளை எதிர்த்து கட்சி எடுத்த நடவடிக்கை குறித்தும் பெரும்பான்மை முடிவிற்கு கட்டுப்படாமல் ஜனநாயக மத்தியத்துவத்தை நால்வரணி ஏற்க மறுத்ததால் கட்சி பிளவுபடுத்தப்பட்டது குறித்தும் அத்தீர்மானத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. 

2வது தீர்மானம் மூவரணி முன்வைத்த டிராட்ஸ்கியவாதத்தை கட்சி லெனினிய வழியில் முறியடித்தது குறித்த தீர்மானமாகும். 

3வது தீர்மானம் 

கட்சியின் தலைமைக் கமிட்டி எவ்வாறு இயங்கவேண்டும்? தலைமை முறை என்றால் என்ன?? ரசிய கம்யூனிஸ்ட் கட்சி வெவ்வேறு வரலாற்று நிலைமைகளில் எவ்வாறு இரண்டுவிதமான தலைமை முறைகளை பின்பற்றியது?? தத்துவம், நடைமுறை இரண்டும் இயங்கியல் ரீதியாக இணைந்து செயல்படுவதுதான் தலைமைமுறை என்று லெனின் எவ்வாறு வழிகாட்டினார்?? லெனின் வழிகாட்டுதலை கைவிட்டு பொலிட்பீரோ மட்டுமே சுயேச்சையாக அனைத்தையும் திர்மானிக்கலாமா?? ரசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ கட்சிகளாக மாறியதில் தலைமைமுறையின் பங்கு என்ன??? என்பனவற்றை லெனினிய அடிப்படையில் இந்த தீர்மானம் விளக்குகிறது. 

4வது தீர்மானம் ஒரு கட்சி சர்வதேச அரசியல் பொது வழியை எவ்வாறு வகுத்துக்கொள்ளவேண்டும் என்று லெனினிய அடிப்படையில் விளக்குகிறது. 

5வது தீர்மானம் கலைப்புவாதம் குறித்த லெனினிய வழிகாட்டுதல் என்ன?? உலகளவில் , இந்திய அளவில் கம்யூனிச இயக்கங்கள் பல குழுக்களாக உடைவதற்கு காரணம் என்ன?? என்பதை கோட்பாட்டு அடிப்படையில் முன்வைக்கிறது. 

6வது தீர்மானம் இந்தியப் பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி செயல்தந்திரம் குறித்த தீர்மானமாகும். 

7வது தீர்மானம் போல்ஷ்விக் கட்சியின் நிறுவனரும் ஸ்தாபகருமான ஏஎம்கேவின் மார்க்சிய பங்களிப்புகள் குறித்த தீர்மானமாகும். 

8வது தீர்மானம் கட்சியின் இன்றைய சர்வதேச மற்றும் தேசிய அரசியல் வழி குறித்த அரசியல் தீர்மானமாகும். 

இந்த தீர்மானங்கள் குறித்து புரட்சிகர ஜனநாயக சக்திகள் திறந்த மனதுடன் வாதிக்கவும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் வருமாறு போல்ஷ்விக் கட்சி கோருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
(மக்கள் யுத்தம் - போல்ஷ்விக்)
தமிழ்நாடு

=================================================================================================

பின்னிணைப்பு

எமது சர்வதேசிய மற்றும் தேசிய அரசியல் வழி குறித்த அரசியல் தீர்மானத்தை மட்டும்  (தீர்மானம்-8) உடனடி வாதத்திற்காகவும் பிரச்சாரத்திற்காகவும் பின்னிணைப்பாக வெளியிடுகிறோம். 

2023 சிறப்புக்கூட்ட அரசியல் தீர்மானம்

ஏகாதிபத்திய முகாம்களின் பனிப்போரை எதிர்ப்போம்!

1. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் காலனிகளை கைப்பற்றுவதற்கான முரண்பாடுகளும் யுத்தமும் தவிர்க்க முடியாதது என்பது லெனினியத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகளை பயன்படுத்துவதென்பது அம் முரண்பாடுகளால் எழும் வாய்ப்புகளையும் சூழலையும் பயன்படுத்தி பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுத்துச் செல்வதே. முதல் உலகப் போரில் லெனின் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களையும் எதிர்க்கும் செயல்தந்திரத்தை முன்வைத்து புரட்சியை சாதித்துக் காட்டினார். முதல் உலகப் போருக்குப் பிறகும் இரண்டாம் உலகப் போரின்போதும் சோசலிச முகாம்களைப் பாதுகாக்கும் பொருட்டு லெனின், ஸ்டாலின், மாவோ முன்வைத்த செயல்தந்திரங்களை சோசலிச முகாம்கள் இல்லாத இன்றைய சூழலில் பொருத்தி ஓர் ஏகாதிபத்திய அணியை ஆதரிப்பது திருத்தல்வாதமாகும் என்று ஏஎம்கே சர்வதேச அரசியல் வழியை முன்வைத்துள்ளார். அதுவே நமது சர்வதேச அரசியல் செயல்தந்திரமாகும். 

2. இன்றைய சர்வதேச நிலைமையைப் பொறுத்தவரை, அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும், ரசிய-சீன முகாமிற்கும் இடையில் உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. சிரியா, வெனிசுலாவைத் தொடர்ந்து உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் உக்கிரமாக பனிப்போர் நடந்து வருகிறது.

3. உக்ரைனில், ஆளும் ஜெலன்ஸ்கி ஆட்சியை கருவியாகப் பயன்படுத்தி நேட்டோ பதிலிப் போரில் ஈடுபட்டு வருகிறது. ரசியா நேரடி ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. சீனா ரசியாவை ஆதரிக்கிறது. உக்ரைன் சந்தை மற்றும் எண்ணெய்-எரிவாயு வளங்களை மறுபங்கீடு செய்வதற்காக 2 ஆண்டுகளாக ஏகாதிபத்திய ஓநாய்கள் உக்ரைன் மக்களை பலியிட்டு வருகிறது. ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான இந்த பனிப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர்.

4. உக்ரைனைப் போல் இஸ்ரேல்-பாலஸ்தீனத்திலும் பனிப்போர் உக்கிரமடைந்து வருகிறது. ஆனால் உக்ரைனைப் போலன்றி இஸ்ரேலில் ஏகாதிபத்திய முரண்கள் இலங்கையில் வெளிப்பட்டதைப் போன்று வெளிப்பட்டுள்ளது. இரு முகாம்களுக்கிடையில் ஈழ விடுதலைப் போரை அழித்தொழிப்பதில் ஒற்றுமையும், அதன்மூலம் ஒன்றுப்பட்ட இலங்கையை பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடும் வெளிப்பட்டதைப் போன்று, பாலஸ்தீன தேசிய இன விடுதலைப் போரை அழிப்பதில் ஒற்றுமையும் ஒன்றுப்பட்ட இஸ்ரேலை பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடும் நீடிக்கின்றது. 

புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கு ராஜபக்சே கும்பலுக்கு அனைத்து விதமான அரசியல்-பொருளாதார- இராணுவ உதவிகளையும் சீன-ரசிய முகாம் வழங்கியது. அமெரிக்கா, புலிகள் இயக்கத்திற்கு வர வேண்டிய நிதி மற்றும் இராணுவ ஆதாரங்களை முடக்கி முதுகெலும்பை உடைத்தது. அதே சமயம், இலங்கையின் சந்தையை பங்கிட்டுக் கொள்வதில் இரு முகாம்களுக்கும் முரண்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. அண்மையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்த பெரும் போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்தில் கூட இம் முரண்கள் வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது.

இஸ்ரேலின் பிரதான வர்த்தக–இராணுவ கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. இரண்டாவது இராணுவ கூட்டாளியாக ரசியாவும், 2வது வர்த்தக கூட்டாளியாக சீனாவும் திகழ்கிறது. ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பதில் ஒற்றுமையும், இஸ்ரேலின் எண்ணெய் – எரிவாயு வளங்கள் மற்றும் சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடும் இவ்விரு முகாம்களுக்கு இடையில் நீடித்து வருகிறது. இந்த ஒற்றுமையையும், முரண்பாட்டையும் பாலஸ்தீனம் குறித்து ஐ.நா.வில் நடந்த வாதங்களை உற்று நோக்கினால் எளிமையாக உணர முடியும்.

5. இரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான இந்த பனிப்போர் அடுத்து தெற்காசியாவில் குறிப்பாக தைவானை மையப்படுத்தி வெடிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா தைவான் ஆளும் வர்க்கத்தை பதிலிப்போரில் ஈடுபடுத்தவும், சீனா நேரடி ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபடவும் தயாரித்து வருகின்றன. ரசியா சீனாவை ஆதரித்து வருகிறது.

6. எனவே சர்வதேச அளவில் ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான பனிப்போரில் பாட்டாளி வர்க்கம் எந்தவொரு பிரிவையும் ஆதரிக்க முடியாது. உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.

7. உக்ரைனில் இரு முகாம்களையும், ஆளும் ஜெலன்ஸ்கி ஆட்சியையும் எதிர்த்து உள்நாட்டு அரசியல் யுத்தத்திற்கு பாட்டாளி வர்க்கம் அறைகூவல் விடுப்பதும், பாலஸ்தீன தேசிய விடுதலைப் போரை ஆதரிப்பதும் இஸ்ரேலுடனான ஏகாதிபத்திய முகாம்களின் அரசியல்-பொருளாதார- இராணுவ உறவுகள் மூலம் நிகழ்ந்துவரும் இன அழிப்புப் போரை எதிர்ப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச அரசியல் கடமையாகும். 

பாசிச மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

1. ஏகாதிபத்திய நாடுகளின் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரை எதிர்ப்பது நமது பிரதான சர்வதேசிய அரசியல் வழி எனில், உள்நாட்டில் அதிதீவிர பாசிச வலதுசாரி கும்பலான மோடி ஆட்சியை வீழ்த்துவதும், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதும் பிரதான தேசிய அரசியல் வழியாகும். அதாவது உள்நாட்டு அரசியல் யுத்தக் கொள்கையிலிருந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது நமது தேசிய அரசியல் வழியாகும்.

2. பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்கள் மற்றும் அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் ஏகபோக நலன்களுக்கு ஏற்றவாறு சேவைத்துறை, சந்தைகள், அரசு எந்திரம், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தின் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஏகபோக ஆட்சி நிறுவப்பட்டு வருகிறது. இதுவே பாசிசத்தின் பொருளியல் அடிப்படையாகும். இப்பொருளியல் அடிப்படையை மூடிமறைக்கவும் ஏகபோக ஆட்சியை எதிர்த்தப் போராட்டங்களை பிளவுபடுத்தி ஒடுக்கவும் பாசிசம் சாதி-மத-தேசிய இனவெறியையூட்டி அவற்றை தனது வடிவங்களாக அமைத்துக் கொள்கிறது. இதுவே பாசிசம் குறித்த ஏஎம்கேவின் மா.லெ. வழிகாட்டுதலாகும். 

3. மோடி கும்பல், அமெரிக்காவின் யுத்தத்தந்திர கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு – உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக பாசிச காட்டாட்சியை நடத்தி வருகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கி நாள்தோறும் கருப்புச் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து ஆளும் தகுதியை இழந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, வறுமை, விலைவாசி உயர்வு பன்மடங்கு பெருகிவிட்டது. இந்த அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களை சாதி, மத, தேசிய இனவெறியைத் தூண்டி பிளவுபடுத்தி வருகிறது. எதிர் கட்சிகளையும் கூட “ஊழல் எதிர்ப்பின் பேரில்” மிரட்டி, பிளவுபடுத்தி தனது கட்சிக்குள் உள்ளிழுத்து வருகிறது. பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தமது எடுபிடி ஆளுநர்கள் மூலம் மறைமுகமான அதிகாரத்துவத்தை செலுத்தி வருகிறது. அண்மையில், நாடாளுமன்றத்தில் மோடி ஆட்சியின் கொள்கைகளால் அதிருப்தியுற்ற இளைஞர்கள் வண்ணப்புகை குப்பிகளை வீசினர். அவர்கள் எழுப்பிய அரசியல் பிரச்சினைகள் மீது வாதம் கோராமல் பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேர்ந்ததாக கூறி எதிர்கட்சிகள் அது குறித்து வாதம் கோரின. ஆனால் மோடி கும்பல் அதைக்கூட அனுமதிக்காமல், நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 150க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பாசிச முறையில் இடைநீக்கம் செய்துள்ளது. 

4. காங்கிரசு-திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவின் பாசிசக் கொள்கைகளுக்கு மாற்றான அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளை கொண்ட கட்சிகள் அல்ல. பாஜக ஆட்சி அமல்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையைத்தான் காங்கிரசு, திமுக, சிபிஎம் கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தி வருகின்றன. புதிய பொருளாதார கொள்கையின் மூலம் நாட்டை நாசமாக்குவதற்கு காங்கிரசு ஆட்சிதான் வித்திட்டது. இதன் காரணமாகதான் இவை பாஜகவின் பாசிசத்திற்கு மாற்றாக ஒரு பாசிச எதிர்ப்புத் திட்டத்தை முன்வைக்க திராணியற்று இருக்கின்றன. பாஜகவின் மதவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றன. மதவாத எதிர்ப்பிற்கும் கூட எவ்வித குறைந்தபட்சத் திட்டத்தையும் முன்வைக்காமல் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் பிரச்சாரம் என எல்லாவற்றையும் தேர்தலையொட்டிய தனது நடவடிக்கைகளாக சுருக்கி விட்டன. பாசிசத்தின் சமூக அடித்தளத்தை அசைப்பதற்கான களப்பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்ய தயாரில்லை.

எனவே பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத ‘இந்தியா’ கூட்டணியை நாம் ஆதரிக்க முடியாது. நாம் முன்பு கூறியவாறு அக்கூட்டணியால் மாற்றுத் திட்டத்தை வைக்கவும் முடியாது. மாற்று திட்டம் இல்லாத இக்கூட்டணியை ஆதரிப்பதும், தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்தலாம் என்ற மாயைகளை உருவாக்குவதும் உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும். ஆட்சி மாற்றங்கள் பாசிசத்தின் வடிவங்களில் சிற்சில மாற்றங்களைக் கொண்டுவர முடியுமே ஒழிய பாசிசத்தின் வர்க்க அடிப்படையை – பொருளியல் அடிப்படையை ஒழிக்காது.

5. இடைக்காலத் தீர்வாக, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையைக் கொண்ட தேசிய முதலாளிகளின் (வ.உ.சி., சன்யாட்சென் போன்ற) தேசிய ஜனநாயக முன்னணி அரசு அமையும் பட்சத்தில் குறைந்தபட்ச திட்டமாக நிபந்தனைகளுடன் ஆதரிக்கலாம். ஆனால் அவ்வர்க்கங்கள் பலவீனமாகவே உள்ளன. அரசியல் இயக்கமாகவும் வளரவில்லை. ஆகவே இதை கொள்கையளவில் இடைக்காலத் தீர்வாக முன் வைக்கிறோம்.

அடிப்படை வர்க்கங்களுடன் கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டியமைப்பதும், மேலிருந்து பல்வேறு ஜனநாயக சக்திகள், அரசியல் இயக்கங்களுடன் கூட்டமைப்பைக் கட்டியமைப்பதும் உள்நாட்டு தேசிய அரசியல் வழியின் பிரதானக் கூறாக உள்ளது. பாசிச எதிர்ப்பு முன்னணியை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாகக் கட்டியமைப்பதும், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியின் விளைவாக அமையும் ஐக்கிய முன்னணி சர்க்கார் - அதாவது புரட்சிக்கு சற்று முன்பாக அமையும் சர்க்கார் - பாசிசத்தின் பொருளியல் அடிப்படையைத் தகர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான பாதை அமைத்து தரும். 

இந்த ஐக்கிய முன்னணியின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் சென்று அதன் மூலம் அமையும் மக்கள் ஜனநாயக குடியரசே பாசிச அரசிற்கு நிரந்தர மாற்றாக இருக்கும். 

ஆகவே, பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் நமது அரசியல் வழி அமைகிறது:

அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான பனிப்போரை எதிர்ப்போம்!

• பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

• பாசிச பாஜகவிற்கு மாற்று ‘இந்தியா’ கூட்டணி அல்ல! பாசிச எதிர்ப்புத் திட்டம் இல்லாத ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிப்பது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமே!

• பாராளுமன்ற தேர்தல் மூலம் பாசிசத்தின் பொருளியல் அடிப்படையைத் தகர்க்க முடியாது! பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்!

• பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

• பாசிசத்திற்கு மாற்று புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் அமையும் மக்கள் ஜனநாயக குடியரசே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
(மக்கள் யுத்தம் - போல்ஷ்விக்)
தமிழ்நாடு

(சமரன் முகநூல் பக்கத்திலிருந்து)

பிடிஎஃப் ஃபைல் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Files