சீர்காழி: ஊராட்சிமன்ற தலைவர்கள் மீதும் அரசு ஒடுக்குமுறை
செந்தளம் செய்திப் பிரிவு
இந்தாண்டு பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் - மானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பாரியளவில் வெட்டியது பாஜக அரசு. ஊரக வளர்ச்சி திட்டங்களிலும் தனியார் கார்ப்பரேட்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கிராம சபைகளுக்கும் இருக்கும் தம்மாதுண்டு அதிகாரங்கள் கூட பறிக்கப்பட்டு ஒன்றுகுவிக்கப்படுகின்றன. இந்த பாசிசப் போக்கை கண்டித்தே சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அது குறித்த மாலை முரசு செய்தி:
சீர்காழி அருகே புத்தூரில் சேர்மேனை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊராட்சிகளுக்கான நிதியினை பயன்படுத்தும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு பதிலாக ஊராட்சி ஒன்றிய அலுவலக சேர்மேனுக்கு வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதாக தெரிகிறது.
இதனை நடைமுறை படுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசால் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதியினை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக ஆன்லைன் டெண்டர்கள் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரியாமலே பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதனை கண்டித்து கொள்ளிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற இருந்தது. இதல் கலந்து கொள்ள வந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு பேரை புத்தூர் கடைத் தெருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவரான நேதாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமையாள்பதி ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், அதிமுகவை சேர்ந்த காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், திமுக வை சேர்ந்த முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் உள்ளிட்ட நான்கு ஊராட்சி மன்ற தலைவர்களை போலிசார் கைது செய்தனர். அப்போது வாகனத்தில் ஏற மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கடுமையாக தாக்கி குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.
அப்பொழுது அவர்களுக்கு ஆதரவாக வந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களை கைது செய்ய விடாமல் சாலையில் அமர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக போராடிய கிராம மக்களும் கைது செய்யப்பட்டதால் புத்தூர் கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி அரசின் பாசிசப் போக்குகளுக்கு காவலனாய் நிற்கும் திமுக அரசு, தங்களது பறிபோகும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவருகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு