வழக்கறிஞர்கள் மீதும் கூட பாயும் NIA பாசிசம்

செந்தளம் செய்திப்பிரிவு

வழக்கறிஞர்கள் மீதும் கூட பாயும் NIA பாசிசம்

இசுலாமியர்கள் மீது இந்துத்துவ பாசிசத்தை தீவிரமாக ஏவிவருகிறது மோடி அரசு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக அவ்வமைப்பினர் மீதும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பிற அமைப்பினர் மீதும் இசுலாமியர்கள் மீதும் பாசிச என்.ஐ.ஏ (NIA) சட்டத்தை ஏவி அவர்களை ஒடுக்கி வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வழக்காட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் பாசிச அடக்குமுறைகளை ஏவி வருவதும், அவர்களையும் என்.ஐ.ஏ. காவலில் கைது செய்தும் வருகிறது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட 6 இடங்களில்,  என்ஐஏ சோதனை என்ற பெயரில் இரு தினங்களுக்கு முன்பு 5 பேரை கைது செய்துள்ளது.

1) சென்னை திருவொற்றியூர் தாங்கல், புதிய காலனியில் வசிக்கும் அப்துல் ரசாக் 

2) மதுரை நெல்பேட்டையில் உள்ள வழக்கறிஞர் முகமது அப்பாஸ்

3) மதுரை, தெப்பக்குளம் தமிழன் தெருவில் உள்ள வழக்கறிஞர் முகமது யூசுப்

4) தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளரான சாதிக் அலி

5) திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரில் டீக்கடை நடத்தி வரும் கைசர்

ஆகிய ஐவரையும் கைது செய்து அடக்குமுறையை ஏவியுள்ளது என்.ஐ.ஏ. மதுரையை சேர்ந்த இரு வழக்கறிஞர்களும் ஏற்கனவே என்.ஐ.ஏ வுக்கு எதிரான வழக்குகளிலும், சமீபத்தில் தமிழக காவல்துறையால் பல் உடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளான சுபாஷ் வழக்கிலும் ஏ.எஸ்.பி பல்வீர்சிங்குக்கு எதிராக வழக்காடி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டற்ற அதிகாரத்தை இசுலாமியர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ அதிகாரிகள் கேடாக பயன்படுத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ.வை ஆதரித்த திமுக அரசு இன்று இசுலாமியர்கள் மீதான பாஜக அரசின் அடக்குமுறைகளை வேடிக்கை பார்ப்பதோடு ஒத்துழைப்பும் கொடுக்கிறது.

வழக்கறிஞர்களின் கைதை கண்டித்தும் என்.ஐ.ஏ வுக்கு எதிராகவும் மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு இசுலாமியர்கள் மீது தொடரும் பாஜக அரசின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கரம் கோர்ப்பது அவசியமாகியுள்ளது. 

- செந்தளம் செய்திப் பிரிவு