உயர் நீதிமன்றத்தில் தமிழ் : தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!

கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலைப் போராட்டம் - உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம் மற்றும் வழக்குரைஞர் செயற்பாட்டுக் குழு அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தில் தமிழ் : தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!

பத்திரிக்கை செய்தி

உயர் நீதிமன்றத்தில் தமிழ் : தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!

  • அரசியலமைப்புச் சட்டக் கூறு 348(2), குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், மாநிலத்தின் அலுவல் மொழியை, ஆங்கிலத்துடன் சேர்த்து, அம்மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அலுவல் மொழியாக்க வகை செய்துள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களிலேயே, இராஜஸ்தான் மாநில அலுவல் மொழியான இந்தி, அம்மாநில உயர்நீதிமன்ற மொழியாக்கப்பட்டது. அதற்குப் பிறகு உத்தரப்பிரதேசம் (1969), மத்தியப்பிரதேசம் (1971), பீகார் (1972) ஆகியவற்றல் மாநில உயர்நீதிமன்றங்களின் மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 06.12.2006 அன்று தமிழைச் சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரைக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பேரில் தமிழ்நாட்டு அரசு ஒன்றிய அரசிற்கு ஒப்புதல் கோரி 07.12.2006 அன்று கோப்பினை அனுப்பியது.
  • தமிழ்நாட்டு அரசினைப் போன்றே மேற்குவங்கம் (1997), குஜராத் (2012), கருநாடகம் (2014) ஆகிய மாநில அரசுகளும் ஒன்றிய அரசிடம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோரி கோப்புகளை அனுப்பின. 1965 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகக் குழு தீர்மானத்தின் பேரில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கருத்துக் கேட்டு அனுப்பிய போது உச்சநீதிமன்றத்தின் நிர்வாக ரீதியான நீதிபதிகளின் முழு அவையானது அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறியது ஒன்றிய அரசு.
  • சட்டம் & நீதி அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அரசியலமைப்புச் சட்டக் கூறு 348(2) இன் படி நீதித்துறையிடம் கலந்து ஆலோசனை செய்யத் தேவையில்லை என நாடாளுமன்றத்தில் பலமுறை அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது. அதன்மேல் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலைக்குழு அறிக்கையில், உள்துறை அமைச்சருக்குச் சட்ட அமைச்சர் 11.06.2015ஆம் நாளிட்டு அனுப்பிய கடிதத்தில், 1965ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளதாகப் பதிவு உள்ளது. எட்டு ஆண்டுகளாக உள்துறை அமைச்சகம் இதில் என்ன செய்து வருகிறது என்பது புதிராகவே இருக்கிறது.
  • ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திக்கு அனுமதி அளித்து விட்டு, தமிழ்நாட்டின் அரசியலமைப்புச் சட்ட உரிமையை மறுப்பது பாகுபாடானது. கருத்தரங்கம், தொடர் முழக்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தில்லியில் தேசிய மாநாடு எனப் பல கட்டங்களாகப் போராடியும் பயனில்லை. 27 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு முடிவுமில்லை.
  • தொடங்குகிறோம் வழக்குரைஞர், சட்ட மாணவர், தமிழ்ச் சான்றோரின் அறப்போராட்டத்தினை; கோரிக்கை நிறைவேறும் வரை 25 பேர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை!

கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலைப் போராட்டம்  

நாள் :28.02.2024 முதல்

இடம்: இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில், எழும்பூர், சென்னை

ஒன்றிய அரசே!

தமிழைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க ஒன்றிய அரசிற்குத் தமிழ்நாட்டு அரசு 07.12.2006-இல் அனுப்பிய கோப்பிற்குக் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றிடு! தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!

வழக்குரைஞர்களே! வழக்காடிகளே!
சனநாயக ஆற்றல்களே! தமிழ்நாட்டு மக்களே!

ஆதரவு தாரீர் - நிதி தாரீர்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் - வழக்குரைஞர் செயற்பாட்டுக் குழு

தொடர்புக்கு:

வழக்குரைஞர் பகவத்சிங் - 9443917588 / 8124363699

வழக்குரைஞர் பாவேந்தன் - 9443306110 / 9361578849

Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு