ஸ்ரீமதி: தனியார்மய கல்வி கொள்கைக்கு மேலும் ஒரு நரபலி
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் வெடித்த போராட்டம்
கல்வி இன்று லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் வணிக சரக்காகவும் - அரசின் கல்வி கொள்கைகள் சந்தை நல கொள்கைகளாகவும் மாறிவிட்டன. அதனால் புற்றீசல் போல தோன்றிய தனியார் கல்வி நிறுவனங்கள் தினந்தோறும் மாணவர்களை காவு வாங்கி வருகிறது.
கோழிப்பண்ணைகளில் கறிக்காக கோழிகளை ரசாயன ஊசிகள் போட்டு வளர்ப்பது போல், மாணவர்களை கார்ப்பரேட் அடிமைகளாக மாற்றும் நோக்கில் வெறுமனே மதிப்பெண்களுக்காக மட்டும் மாணவர் பற்றியும் அவரின் கற்கும் - தாங்கும் திறன்கள் குறித்தும் எவ்வித மதிப்பீடும் இன்றி அவர்களது சக்திக்கு மீறிய பாரத்தை ஏற்றுவது - அதற்காக கொடுமை செய்வது உள்ளிட்ட தனியார்மய லாப வெறிக்கு மாணவர்கள் தொடர் பலியாகின்றனர்.
தனியார் கல்வி கொள்கையின் வெளிப்பாடே இன்று கள்ளக்குறிச்சியில் எதிரொலித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகிலுள்ள சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் - தனியார் உறைவிட பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் கூராய்வு அறிக்கையில் அந்த மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அப்பகுதியை சார்ந்த மக்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசும் காவல் துறையும், தனியார் கல்வி நிறுவன காவலனாக மாறி மக்களின் போராட்டத்தை நசுக்க முயன்றதன் விளைவாக அப்போராட்டம் வன்முறையாக மாறி சின்ன சேலம் பகுதியே போர்க்களமாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய அப்பகுதி வாழ் மக்கள் அதிகாரம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்துள்ளது காவல்துறை.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மாணவ - மாணவிகளின் மரணம் இப்பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கண்டன குரல்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மேலெழுந்து வருகின்றன.
- செந்தளம் செய்திப் பிரிவு