தலித் மக்களுக்கு நிழற்குடை அமைப்பதை தடுக்கும் சாதி ஆதிக்க சக்திகள்

தீக்கதிர்

தலித் மக்களுக்கு நிழற்குடை அமைப்பதை தடுக்கும் சாதி ஆதிக்க சக்திகள்

விழுப்புரம், கண்டமங்கலம் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தலித் மக்களுக்கு பேருந்து நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் சாதிய ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி யின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி தலைமையில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், கண்ட மங்கலம் ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சௌந்தரராஜன், எம்.பழனி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் கண்ணதாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு:- விழுப்புரம் வட்டம், கண்டமங்க லம் ஒன்றியத்துக்குட்பட்ட ராம்பாக்கம் ஊராட்சியில் 7000க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பொது தொகுதியான இந்த ஊராட்சிமன்றத்தில் தலித் வகுப்பை சேர்ந்தவர் வெற்றி பெற்று தற்போது தலைவராக உள்ளார்.   இங்கு ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தனித்தனியே இருந்தாலும் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி போக்குவரத்து நிறுத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்துதான் தலித் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற வேண்டும்.

இந்த பேருந்து நிறுத்தத்திற்கு ஆதிக்க சாதியினர் வாழும் குடி யிருப்பு பகுதிக்குள் வந்து தான் செல்ல வேண்டும்.  கால்நடையாக காலம் காலமாக நடந்து வந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும் தலித் மக்கள், ஆதிக்க சாதிகளின் வசிக்கும் பகுதியில் அரசுக்கு சொந்த நிலத்தில் அமைத்துள்ள நிறுத்தத்தில் பேருந்துகள் வரும் வரை கால் கடுக்க நிழல் கூடம் இல்லாமல் வெயில், மழையில், இயற்கை உபாதைகளுக்குக்கூட ஒதுங்க இடம் இல்லாமல் காத்திருந்து பயணம் செய்யும் அவலம் நீடித்து வருகிறது. இந்நிலையை போக்கும் வகையில் வானூர் தொகுதி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ நிதியிலிருந்து தலித் பகுதி மக்களுக்காக பொது இடத்தில் நிழற்குடை கட்டும் பணிக்கான ஆரம்ப கட்ட வேலை நடந்தது. ஆனால், ஆதிக்க சாதி யினர், தங்கள் பகுதியில் தலித் மக்களுக்கு நிழற்குடை அமைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு வகையிலும் தடுத்து வந்தனர். இந்நிலையில், அந்த இடத்தை அரசு அதிகாரிகள் அளவீடு செய்ய முயற்சித்தனர். அப்போது, அந்த நிலம் தங்கள் பகுதிக்கு சொந்த மானது என்று தடுத்து நிறுத்திய ஆதிக்க சாதியினர் அள வீடு செய்யவிடாமல் அரசு அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால், அதிகாரிகள் அளவீடு பணியை கைவிட்டு திரும்பி னர்.  மேலும், தலித் மக்களுக்காக நிழற்குடை அமைக்க உள்ள இடத்தின் சாலையோரத்தில்  ஊராட்சிமன்றத்தின் அனுமதியின்றி ஆதிக்க சாதியினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

இதற்காக, பள்ளம் தோண்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அத்துமீறிய ஆதிக்க சாதியினரின் கட்டுமானப் பணியை தடுத்தனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் பேருந்துக்காக தலித் மக்கள் காத்திருக்கும் இடத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளைகளை நிழல் இல்லாமல் கழித்து, அந்த மரத்தில் வேண்டுமென்றே ஒரு மஞ்சள் துணியை சுற்றி சாமி என கூறி, வேலியும் அமைத்துள்ளனர். ஆனால், இதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தலில் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றது ஆதிக்க சக்திகளை சேர்ந்த ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தலித் மக்கள் தங்கள் பகுதிக்கு வந்து பேருந்து நிறுத்ததில் தங்களுக்கு நிகராக அமர்ந்துவிடக்கூடாது என்கிற சாதிய வெறியோடு நடந்துக்கொள்கிறார்கள். தலித் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்படும் நிழற்குடை கட்டுமான பணியினை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் (மாவட்ட ஆட்சியர்) தலையீட்டு பொது இடத்தில் தலித் மக்களுக்காக நிழற்குடையை கட்டிகொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

- தீக்கதிர்

https://theekkathir.in/EPaper#