ஸ்ரீமதி மரணத்திற்கு கொலையாளிகளை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மரணத்திற்கு நீதி கேட்போர் மீது அடக்குமுறை! கொலையாளிகளுக்கு பாதுகாப்பா?
ஸ்ரீமதி மாணவி மரணத்தில் கொலையாளிகளை கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்ய கோரி தருமபுரி மற்றும் கடலூரில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமதி மாணவி கொலையுண்ட சில நாட்கள் மக்களும் ஜனநாயக சக்திகளும் அமைதியாக போராடி வந்தனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து காவல் துறை அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தினரும் பள்ளி நிர்வாகத்தின் கூற்றுக்கு ஒத்திசைவாக மாணவியின் மரணம் தற்கொலைதான் என்று முடித்து வைக்க திட்டமிடுவதாக கூறி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசின் இந்தப் போக்கையும், பள்ளி நிர்வாகத்தையும் அம்பலப்படுத்தி பல சமூக ஊடகங்களும், ஜனநாயக சக்திகளும் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
அமைதியாக நடந்து வந்த ஆர்ப்பாட்டத்தை அரசின் போக்கு மக்களின் கோபத்தை தூண்டியது. அடுத்தடத்து பல கட்ட தகவல்கள் இந்த நிகழ்வு கொலைதான் என்பதை ஊர்ஜிதப் படுத்தி வருகிறது.
மக்களின் போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கு விசாரணையை திசை திரும்பியுள்ளது. அரசுக்கு எதிராக போராடிய மக்களின் மீதும் ஜனநாயக சக்திகளின் மீதும் பொய் வழக்குகளையும் காவல் அடக்குமுறைகளையும் ஏவியுள்ளது திமுக அரசு. விசாரனை என்ற பெயரில் மிரட்டி வாக்கு மூலங்களை தங்களுக்கு ஏற்றார் வாங்குவதாக சில ஜனநாயக சக்திகள் நீதி மன்றத்தில் நீதிபதியிடம் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களுக்காக நிற்க வேண்டிய அரசு, மாணவிக்காக போராடிய மக்கள் மீது பாய்கிறது. இதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக சாடி வருகின்றனர்.
சமூக நீதி பேசும் திராவிட திமுக அரசு, சகல துறைகளிலும் கார்ப்பரேட் நீதியை காப்பதற்காக சமூக நீதியை குழித்தோண்டி புதைத்து வருகிறது என்று கூறி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒட்டி காவல் துறையிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் அது மறுக்கப்பட்ட காரணத்தால் கடலூர் மாவட்டம், தஞ்சை மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டம் சார்பாக மூன்று இடங்களில் தனித்தனியே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.