ஏமாற்றமளிக்கும் திராவிட மாடல் பட்ஜெட் - அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை
சேரன் வாஞ்சிநாதன்
பத்திரிக்கை செய்தி
*ஏமாற்றமளிக்கும் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை....!*
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.தமிழ்ச்செல்வி பொதுச்செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடும் பத்திரிகை செய்தி...
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக அரசின் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் தங்களது *திராவிட மாடல் அரசு* திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 80% அறிவிப்புகளை நிறைவேற்றி முடித்து விட்டதாக மேடைகள் தோறும் பேசி வரும் நிலையில், எஞ்சியுள்ள 20% அறிவிப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளே அதிகம் உள்ளன என்பதனால், இந்த நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் நிச்சயமாக இடம் பெறும்.,
குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இருந்தது.
ஆனால், வீட்டு வசதி கடன் 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும் என்ற ஒற்றை அறிவிப்பினை தவிர தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த வேறு அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் தனது உரையில் திராவிட மாடல் அரசு *"சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்..."* என்பதையும் தாண்டி சொல்லாததையும் செய்துள்ளோம் என சுய பெருமை பேசினார். உண்மையில் தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்த அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய விஷயத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிப்போம் என்று சொன்னதை செய்யாதது மட்டுமல்ல...
ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் ரத்து, அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதே நாளில் வழங்காமல் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் காலதாமதமாகவே வழங்கி வருவது, சமூக நீதிக் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்து புற ஆதார முறையிலான பணி நியமனங்களை மட்டுமே ஊக்குவிப்பது, தமிழக அரசு துறைகளையே ஒட்டுமொத்தமாக காலி செய்யவதற்கான அரசாணைகள் 115, 139, 152, போன்ற பிற்போக்குத்தனமான அரசாணைகளை வெளியிட்டு., படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து வைத்து காத்திருக்கும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்தப்பட்ட, இளைஞர்களின் அரசு வேலை கனவை தொடர்ச்சியாக தகர்த்து வருவது, போன்ற சொல்லாத பல செயல்களை மட்டுமே தமிழக அரசு செய்து வருகிறது....
ஆக...
திமுகவின் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் நலனுக்கு எதிரான அரசு என இந்த நிதி நிலை அறிக்கை வாயிலாக தனக்குத் தானே அறிவித்துக் கொண்டுள்ளதாகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக, அரசு ஊழியர்களின் நலனை உதாசீனப்படுத்தி அரசு ஊழியர்களை அவமரியாதையாக நடத்திச் சென்ற அதே பாதையில் இன்றைய ஆளும் திமுக திராவிட மாடல் அரசும் பயணித்து வருவது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் மன வருத்தங்களையும், ஏமாற்றங்களையும், ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி வரும் ஆளும் திமுக அரசின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், ஏற்கனவே 04/02/2023 கரூர் மாநில செயற்குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்வரும் 28/03/2023 அன்று நடத்த உத்தேசித்துள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மிகவும் எழுட்சியோடு நடத்த உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
இப்படிக்கு
சு.தமிழ்ச்செல்வி
மாநிலத் தலைவர்
ஜெ.லெட்சுமிநாராயணன்
பொதுச்செயலாளர்
மேற்கண்ட பத்திரிகை செய்தியினை தங்களது பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.