சாவித்திரி கண்ணன் கைது : சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான செயல்

சாவித்திரி கண்ணன் கைது : சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

இன்று முற்பகலில் அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டார். இக்கைதினை  கண்டித்து சென்னை பிரஸ் கிளப் செய்தி வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை காவல்துறை உடனடியாக விடுவிக்க தமிழக முதலமைச்சர் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

பல்வேறு முன்னனி பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், அறம் ஆன்லைன் என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறார். இன்று காலை (11.09.22) சென்னையிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை விசாரணை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள்செய்தி வெளியிடக்கூடாது என்றவகையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததும், அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்புப் பிரிவை தமிழ்நாடு காவல்துறை உருவாக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது பத்திரிகையாளர்களை பயமுறுத்தும் நடவடிக்கை என்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்றும் பத்திரிகையாளர் அமைப்புகளும், பல மூத்த பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பாக தனது அறம் ஆன்லைன் இணைய தளத்தில் சாவித்திரிகண்ணன் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுவந்த நிலையில், சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்டிருப்பது, அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் நடவடிக்கை என்பதுடன் அப்பட்டமான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயலாக சென்னை பிரஸ் கிளப் கருதுகிறது.

எனவே காவல்துறையினர் கட்டுப்பாட்டிலுள்ள சாவித்திரி கண்ணன் உடனே விடுதலை செய்யப்பட வேண்டுமென  சென்னை பிரஸ் கிளப் கேட்டுக்கொள்கிறது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் பத்திரிக்கையாளர்களும் திமுக அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கெதிராக குரல் எழுப்புவதற்கும் போராடுவதற்கும் ஒன்றிணைவோம்.

- செந்தளம் செய்திப் பிரிவு