மருத்துவர் - நோயாளி முரண்கள்: வணிகமய கார்ப்பரேட்மய மருத்துவ கொள்கையை அமல்படுத்தும் அரசே குற்றவாளி!

செந்தளம் செய்திப்பிரிவு

மருத்துவர் - நோயாளி முரண்கள்:  வணிகமய கார்ப்பரேட்மய மருத்துவ கொள்கையை அமல்படுத்தும் அரசே குற்றவாளி!

மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட 62 மருத்துவமனைகள், 37 தலைமை மருத்துவமனைகள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 13,214 மருத்துவமனைகளுடன் இந்தியாவின் பிற மாநிலங்களை விட சற்று முன்னேறிய அளவிலேயே தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு உள்ளது. 

அத்தகைய மருத்துவ கட்டமைப்பையும் தற்போது சீர்குலைத்து வருகிறது திமுக அரசு. மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் நியமனத்தை குறைத்ததோடு மட்டுமில்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்கவில்லை. 

சமீபத்தில், கிண்டியிலுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவர் பற்றாக்குறையால் நேர்ந்ததே இந்த விபரீதம். சுகாதாரத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன், துறையை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அரசு மருத்துவர்களும். சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களும் கூறி வருகிறார்கள்.

திராவிட மாடல் மருத்துவமனைகளின் லட்சணம் 

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 'இன்னுயிர் காப்போம்', 'நம்மைக் காக்கும் 48', 'மக்களைத் தேடி மருத்துவம்' 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவம் திட்டம்' என வெத்து அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு அதற்குரிய மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கவே இல்லை. மருத்துவர்களையும் பணியாளர்களையும் நியமிக்கவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாகப் புதிய மருத்துவப் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில், தற்போது 19,866 அரசு மருத்துவர்களும், 38,027 அரசு செவிலியர்களும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6,000 மருத்துவர் பணியிடங்களும், சுமார் 18,000 செவிலியர் பணியிடங்களும், 8,671 மருத்துவர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே உள்ளது. 

மருத்துவ மேற்படிப்பு மாணவர்களையும், ஒப்பந்த மருத்துவர்களையும் வைத்துத்தான் அரசு மருத்துவமனையை ஓட்டுகிறது திமுக அரசு. இதனால பல்வேறு அசம்பாவிதங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகின்றன. இதுதான் திராவிட மாடல் மருத்துவமனைகளின் லட்சணம்.

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து வி.சி.க வின் சிந்தனைச்செல்வன் பேசுகையில், "கடலூரில், மாவட்டத் தலைமை மருத்துவமனையே இல்லை. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 254 மருத்துவர் பணியிடங்கள் இருக்கின்றன. அவற்றில், 154 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பணியில் இருக்கும் 100 மருத்துவர்களில், 40 பேர் ஒப்பந்த அடிப்படையில்தான் பணியாற்றுகிறார்கள். இங்கு மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக, சட்டமன்றத்தில் தொடர்ச்சியாகப் பேசிவருகிறேன். அதைச் சரிசெய்ய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 'எம்.ஆர்.பி' எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 3,645 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை தேர்வு நடத்தப்படவும் இல்லை அதற்கான அறிகுறிகளும் இல்லை. தமிழக சுகாதாரத்துறையில் இது போன்ற ஒரு மோசமான நிலைமை எந்தக் காலகட்டத்திலும் இருந்தது இல்லை.

மரணப்படுக்கையில் தமிழக சுகாதாரத்துறை

மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை; போதிய கட்டமைப்பு இன்மையால், கிராமப்புற மருத்துவ சேவையில் மிக மோசமான நிலையை எய்தி வருகிறது தமிழ்நாடு. 

திருவண்ணாமலை மாவட்டம், சந்தகவுண்டன்புதூரைச் சேர்ந்த குமுதவள்ளி என்பவருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, தொடர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கடந்த நவம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவர் பற்றாக்குறைதான். சம்பந்தப்பட்ட செங்கம் அரசு மருத்துவமனையில் வெறும் ஐந்து மருத்துவர்களே பணியில் இருக்கிறார்கள். ஒன்பது பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வெறும் ஐந்து மருத்துவர்கள் எப்படி ஆயிரக்கணக்கான நோயாளிகளை கவனிக்க முடியும்... 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்ந்த துர்கா தேவி என்பவருக்கு, செவிலியர்களே பிரசவம் பார்த்திருக்கின்றனர். பிரசவத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளால், சில நாள்களில் துர்கா தேவி இறந்துவிட்டார். பிறந்த அவருடைய பெண் குழந்தையும் இறந்துவிட்டது. அவர்களின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது?

அதேபோல மயிலாடுதுறை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி பிரசவத்துக்காக சிவரஞ்சனி என்பவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின்போது குழந்தையின் தோள்பட்டை கர்ப்பவாயில் மாட்டிக்கொண்டதால், குழந்தையை உயிருடன் எடுக்க முடியவில்லை; தாயின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. சிவரஞ்சனியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவும், நிலைமையைச் சமாளிக்க சிகிச்சையளித்த மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது அரசு. இது போன்ற சிக்கலான பிரசவத்தை மகப்பேறு நிபுணர்களோ அல்லது மூத்த மருத்துவர்களோதான் செய்திருக்க வேண்டும். ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மகப்பேறு (சீமாங்) நிலையத்தில் மூத்த மருத்துவர்களே இல்லை. அந்தப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கடைசியில் ரம்யாவை பலிகடா ஆக்கிவிட்டு, தப்பித்துக்கொண்டது அரசு.

மயிலாடுதுறையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமுள்ள 129 சீமாங் நிலையங்களின் நிலையும் இதேபோலத்தான் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காகச் சேர்பவர்களில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல், சிகிச்சையளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அதற்கு மருத்துவர் பற்றாக்குறைதான் மூல காரணம். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கலாம். ஒரு துறையே புரையோடிப் போயிருந்தால் எப்படி சிகிச்சை அளிப்பது? திமுக அரசின் சுகாதாரத் துறை மரணப்படுக்கையில்தான் உள்ளது.

தரமற்ற மருந்துகள் தடையின்றி விநியோகம்

அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத மருத்துகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்து, அந்த நிறுவனம் வெளி மார்க்கெட்டில் மருந்து சப்ளை செய்திருந்தால், அதையும் பறிமுதல் செய்யவேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் பொறுப்பு. தற்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத 46 மருந்து வகைகளை சப்ளை செய்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் சப்ளை செய்த மருந்துகள் இதுவரை பறிமுதல் செய்யப்படவே இல்லை. எந்தெந்த நிறுவனங்கள் தரமில்லாத மருந்துகளை சப்ளை செய்தன? என்ற விவரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இல்லை திமுக அரசு.

தரமில்லாத மருந்துகளை வழங்கி அபராதம் விதிக்கப்பட்ட அனிதா டெக்ஸ்கார்ட் என்ற நிறுவனத்துக்கு மீண்டும் 4,21,200 மெடிக்கல் கிட்களை சப்ளை செய்வதற்கான டெண்டரை வழங்கியிருக்கிறது திமுக அரசு.

ஆகஸ்ட் மாதமே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஊரெங்கும் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு மரணங்கள் நிகழ்ந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூருக்கு அருகே 6-வயது சிறுமி நவம்பர் 5-ம் தேதி உயிரிழந்த பிறகுதான் விவகாரம் பெரிதானது. மருத்துவத்துறை சார்பில் நவம்பர் 7-ம் தேதி ஒரு செய்திக்குறிப்பும் வெளியானது. அதில், 5.11.2024 வரை 20,138 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2023-ல் 29,401 பேரும், 2022-ல் 30,425 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக டெங்கு பாதிப்பு குறித்து 2024-ம் ஆண்டுக்கான அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2022-ல் 6,430 பேரும், 2023-ல் 9,121 பேரும், 2024 (31.5.2024)ல் 4,384 பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு ஏமாற்றுவதோடு தமிழகத்தில் டெங்கு பாதிப்பே இல்லை என சவடாலடிக்கிறது திமுக அரசு. 

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண விவகாரத்தில் பேசுபொருளான 'Fomepizole மருந்து உண்மையில் சுகாதாரத்துறை வசம் இல்லை. இல்லாத மருந்தை 'இருக்கு' என்று சொல்லிவிட்டு, பின்பு, 'இதன் தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டு நீண்ட நாள்களாகின்றன. மும்பையில் ஓர் இடத்தில் மட்டும் விற்பனைக்கு இருந்த இந்த மருந்தை வாங்கிவந்தோம்' என மாற்றி மாற்றிப் பேசினார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சமீபத்தில்கூட கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டபோது. தாக்கிய நபர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி பிரச்சினையை திசைதிருப்ப முயற்சித்தார். மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டவுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். பிரச்சனைக்கு அடிப்படையான மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை போக்கவோ மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் உயிர் காக்க மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளையும் மக்களையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அநீதி மாடல் அரசு. 

வணிகமய கார்ப்பரேட்மய மருத்துவ கொள்கையை அமல்படுத்தும் அரசே குற்றவாளி!

மருத்துவத்துறை அரசால் வணிகமாயக்கப்படுவதால் மருத்துவர்களும் வணிக நோக்கில் மாறுவது நிகழ்கிறது. கல்வித்துறையில் ஆசிரியர்களும் அப்படித்தான் மாறுகிறார்கள். இது தனி நபர் பிரச்சினை அல்ல. இது சமூக நோய். 

இது மருத்துவர் - நோயாளி, ஆசிரியர் - மாணவர் முரண்களுக்கு இட்டுச்செல்கிறது. அரசுதான் குற்றவாளி என்பதை அறியாமல் மருத்துவரை குற்றவாளி என நோயாளி கருதுகிறார். மருத்துவ சங்கங்கள் மக்களை எதிர் நிலைப்படுத்துகின்றன.

உண்மையில் இந்த பிரச்சினைகளின் மூலவேர் அரசாங்கத்தின் வணிகமய மருத்துவ கொள்கையே. அரசு-தனியார் பங்கேற்பு எனும் பெயரில் சுகாதாரத்துறை தொடர்ச்சியாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இன்றைய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திராவிட மாடல் என்றாலே அது தனியார் மாடல்தான் எனும் அளவுக்கு தனியார்மயமாக்கல் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவம் முற்றாக ஒழிக்கப்பட்டு அதை அரசுத்துறையாக சேவைத்துறையாக மாற்றினால்தான் இது தீரும்.

- செந்தளம் செய்திப் பிரிவு

ஆதாரக் கட்டுரை : ஜூனியர் விகடன்