அமெரிக்காவின் கொள்ளைத் திட்டங்களுக்கு தொடரும் திமுகவின் சேவை
உள்கட்டமைப்புத் திட்டங்களை(சாகர்மாலா, பாரத்மாலா, உதான்) நடைமுறைப்படுத்தியே தீருவோம் என அமைச்சர் எ.வ.வேலு சபதம்
அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டம் மற்றும் குவாட் திட்டங்களுக்குச் சேவை செய்யும் வகையில் இந்தியா முழுவதும் பாஜக அரசும் தமிழகத்தில் திமுக அரசும் உள்கட்டமைப்பு திட்டங்களான சாகர்மாலா, பாரத்மாலா, உதான் திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
பாரத்மாலா திட்டத்தின் ஒருபகுதியாக - சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கௌத்தி வேடியப்பன் மலைகளிலுள்ள கனிம வளங்களை ஏகாதிபத்தியங்களும் உள்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் கொள்ளையடிக்கவே, சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை அமைப்பதற்கு விவசாயிகளை - பழங்குடிகளை அவர்களின் விளைநிலங்கள்- வனங்களில் இருந்து விரட்டியடித்து நிலங்களை கையகப்படுத்தும் வேலையை மேற்கொண்டது கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எடுபிடி எடப்பாடி அரசு.
தேர்தலின் போது சேலம்-சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது என பொய்யான வாக்குறுதியை அள்ளி வீசிய மு.க.ஸ்டாலின் கும்பல் இன்று ஆட்சிக்கு வந்தபின் தான் அத்திட்டத்திற்கான பணிகளை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, எட்டுவழிச்சாலை மீதான தங்களின் பழைய நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
அத்திட்டம் அமல்படுத்தப்படும்போதே “திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை; மக்கள் ஒத்துழைப்புடன் செய்யலாம்; எடப்பாடி கமிசனுக்காகவே இத்திட்டத்தை கொண்டு வருகிறார்” என்று கூறி தனது அடிமை சேவகத்தை அதிமுகவுடன் பங்கிட்டுக் கொண்டது. தேர்தல் சமயத்தின் போது மட்டும் நாடகமாடிய திமுக தனது உண்மை முகத்தை இன்று அனைத்து துறைகளிலும் வெளிக்காட்டி வருகிறது.
கடந்த திமுக ஆட்சியிலேயே, ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து உருவாக்கிய டிம்கோ நிறுவனம் இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டது. அது அம்பானியின் இராணுவ தளவாட உற்பத்திக்குச் சேவை செய்தது. தற்போதுள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏவியேசன் நிறுவனமும் டிட்கோ நிறுவனமும் இணைந்து குவாட் திட்டங்களுக்கான விண்வெளி, விமானம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
அதேப் போல சாகர்மாலாத் திட்டத்தின் அங்கமாக காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அதானி நிறுவனங்களுக்கு ஆதரவளித்தது. ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பது போல் நாடகமாடியது. இப்போது அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கு தானும் சேர்ந்து காவல் காக்கிறது மு.க.ஸ்டாலின் அரசு.
உதான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகளை தடாலடியாக துவங்கியுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் - புறநகர் பகுதிகளின் விவசாயத்திற்கு ஆதாரமாகவும் விளங்கும் நீர்நிலைகள் அழிவைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை விமான நிலையமே முக்கியம் எனத் திமிராக பேசி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு.
இவ்வாறு அமெரிக்க நலன்களுக்காகவும் அம்பானி அதானி நலன்களுக்காகவும் இந்திய-தமிழக வளங்களை பாஜக - அதிமுக அரசைப் போல திமுக - காங்கிரஸ் கூட்டணியும் தாரை வார்த்தே வந்துள்ளன, வருகின்றன.
- செந்தளம் செய்திப் பிரிவு