குற்றவியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் - திமுக அரசே! கைது செய்த ம.ஜ.இ.க தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
கிடைத்த அரைகுறை சுதந்திரம் கூட இன்று பறிக்கப்பட்டு இன்று பாசிச பேயாட்சிதான் தாண்டவமாடுகிறது. நாடு மொத்தமும் ஏகாதிபத்தியத்தின் வேட்டைகாடாக்கப்பட்டு விட்டது. பொழுதெல்லாம் நம் செல்வங்கள் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நாட்டை கொள்ளையிடுவதற்காக பாசிச ஆட்சியின் அரசபயங்கரவாதம் தினந்தோறும் மக்கள் மீது ஏவப்படுகிறது.
'ம்' என்றால் வனவாசம் "ஏன்" என்றால் சிறைவாசம் என்பதையும் தாண்டி அரசுக்கெதிராய் மூச்சுக்கூட விட முடியாத அளவிற்கு இன்று பாசிச பேயாட்சி நம் குரல்வளையை நெரிக்கிறது. உச்சபட்சமாக மோடி கும்பல் கொண்டு வந்துள்ள குற்றவியல் சட்டம் நாட்டை கார்ப்பரேட் நலன்களுக்கான போலீஸ் ராஜ்ஜியமாக கட்டிமைத்து மக்களை என்ன வேண்டுமானாலும் தன் விருப்பத்திற்கு செய்யலாம் என்கிற மிகக்கொடூர சட்டமாக உருவெடுத்து நடைமுறைக்கும் வந்துவிட்டது. மூச்சு விட்டால் கூட இனி சிறைதான் என மக்களையும் போராடும் இயக்கங்களையும் அச்சுறுத்துகிறது.
ஆனால் வரலாறு சுரண்டல் கூட்டத்தின் அடக்குமுறைகளை சட்டத்திட்டங்களை உடைத்தெறிந்துதான் முன்னேறியுள்ளது. வரலாற்றை படைப்பவர்கள் மக்கள் தான். அந்த வரலாற்றை ஆளும் சுரண்டல் கூட்டங்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு வென்றே மக்கள் வரலாற்றை படைத்துள்ளனர். இன்று மக்களை ஒடுக்க கொண்டுவரப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச சட்டங்கள் நாளை குப்பைதொட்டியில் வீசப்படுவது உறதி!
இப்படிப்பட்ட குற்றவியல் சட்டத்தை எதிர்த்து அதன் நகலை எரிக்கும் போராட்டத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (தோழர். தெய்வசந்திரன் தலைமையில்) இன்று நடத்தியது. நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விட்டுவிட்டு இங்கே கொண்டாடப்படும் சுதந்திர தினம் யாருக்கானது?நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவா இரத்தம் சிந்தினோம் என்று ம.ஜ.இ.க தனது போராட்டத்தில் முழக்கமிட்டது.
"இன்று அரைகுறை சுதந்திரம் கூட பறிக்கப்பட்டு புதிய காலனியாக நாடு மாறிவிட்டதை அனுமதியோம்! அரைகுறை சுதந்திரம் கூட இல்லாத ஆகஸ்ட்15 நமக்கு எதற்கு? இரண்டாவது சுதந்திரப் போரை வ.உ.சி., பகத்சிங் வழியில் முன்னெடுப்போம்!" என்று ம.ஜ.இ.க இன்று போராடியது. குற்றவியல் சட்ட நகலை கொளுத்தியது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ம.ஜ.இ.க தோழர்களை பாசிச பா.ஜ.கவிற்கு மாற்றாக கூறிக்கொள்ளும் "திராவிட மாடல்" சமூக அநீதி அரசு போராடிய தோழர்களை கைது செய்து ஒடுக்கி அடைத்து வைத்துள்ளது.
பகத்சிங், வ.உ.சி வழியில் சுதந்திரத்திற்காக போராடுவோம் என்று கூறி போராட்டம் நடத்திய ம.ஜ.இ.க தோழர்களை கைது செய்வது தான் திராவிடமாடலா? சமூக நீதியா? நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிட அனுமதியோம் என்று போராடினால் கைது நடவடிக்கையா?
சுதந்திரம் என்று பேசிக்கொண்டு சுதந்திரம் வேண்டி போராடிய தோழர்களை கைது செய்து அடைத்து வைத்து உங்கள் சுதந்திரத்தை கொண்டாடாதீர்கள்!
திராவிட மாடல் தி.மு.க அரசே!
உண்மையான சுதந்திரத்திற்காக போராடிய ம.ஜ.இ.க தோழர்களை உடனடியாக விடுதலை செய்!!
- செந்தளம் செய்திப்பிரிவு