தமிழக பள்ளிகல்வித் துறையிலும் சங்பரிவார ஊடுருவல்
களையெடுக்குமா திமுக அரசா?
ஏகாதிபத்தியம் - கார்ப்பரேட்களுக்கு சேவைசெய்யும் பாஜக அரசு, தன் வேரான ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களின் அஜெண்டாவை நிறைவேற்றி வருகிறது. அனைத்து துறைகளிலும் பின்புலத்தில் ஊடுருவி வேலை செய்கிறது. வளரும் தலைமுறையிடம் மாணவப் பருவத்திலேயே நஞ்சை விதைக்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறையில் மிக ஆழமாக ஊடுருவியுள்ளது இந்த விஷச் செடியின் வேர். அதற்கு சாட்சியமாக தற்போதைய இரண்டு செய்திகள் பேசு பொருளாகியுள்ளது.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை புரிந்து பென்சன் பெற்ற 'ஷீ'தேசிய சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரர் போலவும், மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத சக்தி கொண்ட வித்தகர் போலவும், வரலாற்று ஆய்வாளர் போலவும் சித்தரித்து வருகிறது. அவை:
1) கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதனை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தொடர்புடையவை : சாவர்க்கர் கேலிச் சித்திரம்
2) இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சமச்சீர் கல்வியின் கீழ் தயாரித்து இருக்கும் 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் சாவர்க்கர் குறித்த கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதில், '1806ல் நடந்த வேலூர் கலகத்தை 'முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி' என வி.டி.சவார்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக ஆளும் கர்நாடகாவில் மட்டுமில்லாமல், சமூகநீதி- பெரியார்மண்- நான் கலைஞர் பிள்ளை என வீர வசனங்கள் பேசும் முக.ஸ்டாலினின் திமுக அரசிலும் இதே போக்கே உள்ளது. பல்வேறு வழிகளில் பாஜக அரசுடன் சமரசப் போக்கை கடைபிடிக்கும் ஊழல் மலிந்த திமுக அரசு, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ள சங்பரிவார கும்பலை களையெடுக்குமா? என்பது கேள்வி குறியே!
- செந்தளம் செய்திப் பிரிவு