கொலை கும்பல்களுக்கு சுதந்திரம் - போராடுபவர்கள் மீது அடக்குமுறை

பரமத்தி வேலூர்: ஸ்ரீமதி படுகொலைக்கு நீதி கேட்டு பிரச்சாரம் செய்த மஜஇக தோழர்கள் கைது

கொலை கும்பல்களுக்கு சுதந்திரம் - போராடுபவர்கள் மீது அடக்குமுறை

அமுதப் பெருவிழா என்றப் பெயரில் மோடி கும்பல் தேச பக்தியை விற்பனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதை அம்பலப்படுத்தியும்; கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை படுகொலை செய்த சங்பரிவார கொலைக் கும்பலை கைது செய்யக் கோரியும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுவிக்க கோரியும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதையொட்டி பரமத்தி வேலூரில், மஜஇக சேலம் மாவட்ட அமைப்பாளர் தோழர். சோமு, ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தோழர். ஆறுமுகம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர். சதாசிவம் உள்ளிட்ட 5 தோழர்கள் நேற்று (13.08.2022) பொதுமக்களிடம் பிரசுரங்களை (படத்தில் பார்க்கவும்) விநியோகித்து தங்களது நிலைபாட்டை பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார கும்பல் பரமத்திவேலூர் காவல் நிலைய காவலர்களை பிரச்சாரம் செய்த தோழர்கள் மீது ஏவிவிட்டுள்ளது. தோழர்களை தள்ளிவிட்டு அராஜகமாக கைது செய்ததோடு; காவல் நிலையத்தில் வைத்து ஒரு தற்கொலையை கொலை என்று எவ்வாறு பிரச்சாரம் செய்யலாம் என மிரட்டி தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.

இது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட அமைப்பாளர்  தோழர். ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கூறியதாவது: 

“ஸ்ரீமதியை பலாத்காரம் மற்றும் படுகொலை செய்த பள்ளி முதல்வர், தாளாளர், அவன் மகன்கள் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை திமுக அரசு, பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பல், அதிமுக மற்றும் நீதிமன்றம் கூட்டாக கைக்கோர்த்து காப்பாற்றி வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து வீசப்பட்ட எலும்புத்துண்டுகளை கவ்விப் பிடித்துக் கொண்டு திமுக அரசின் காவல்துறையும் நீதிக்காக குரல் கொடுக்கும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. 75ம் ஆண்டு சுதந்திர தினம் என்றப் பெயரில் ஆளும்வர்க்கத்தால் தேசப்பக்தியும் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டு வரும் இன்றைய தினத்தில் ஜனநாயக ரீதியாக மக்களிடம் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்வதற்குக் கூட உரிமை மறுக்கப்படுகிறது. இதுவா ஜனநாயகம்? இதுவா சுதந்திரம்? இது யாருக்கான சுதந்திரம்? அமெரிக்காவிற்கு தேசத்தை கூறுப்போட்டு விற்பதற்கும்; அம்பானி -அதானிகள் நாட்டை சுரண்டிக் கொழுப்பதற்கும்; கல்வி தந்தைகள் என்ற பெயரில் முதலாளிகள் - காவிக் கழிசடைகள் ஸ்ரீமதி போன்ற குழந்தைகளை வன்புணர்ந்து படுகொலை செய்வதற்கும்; சாதிவெறியர்கள் தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவனை அடித்துக் கொல்லவும்தான் சுதந்திரம். உழைக்கும் மக்கள் மீதும், போராடும் புரட்சிகர - ஜனநாயக சக்திகள் மீதும் பாசிச அடக்குமுறை. வெட்கக்கேடு!

இவ்வித அராஜக அடக்குமுறைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்; நீதிக்கான குரலாக - நாட்டின் விடுதலைக்குமான போராட்டங்களில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். அடக்குமுறைக்கு அஞ்சிடோம்!” எனக் கூறினார்.

தோழர்களோடு சேர்ந்து ஜனநாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகியுள்ளது. 

- செந்தளம் செய்திப் பிரிவு