தூய்மைப் பணியாளர்களை வாழ வைக்குமா அரசு?
ஆர்.வேல்முருகன்/ தீக்கதிர்
தூய்மைப் பணியாளர்களை இந்த சமூகம் ஒருபோதும் சக மனிதர்களாக மதிப்ப தில்லை; ஒரு வாரம் இந்த தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை என்றால், நாடு நகரம் எல்லாம் நாற்றமெடுக்கும்.
கொரோனா பெருந் தொற்று காலத்தில் முழு அடைப்பு செய்துவிட்டு, அமைச்சர்களும், அதிகாரிகளும் இணையவழியில் பணி செய்தனர்.
ஆனால் அதிகாலை தொடங்கி நாள் முழுவதும் உயிரை துச்சமெனக் கருதி மக்களை காக்கும் பணியை தூய்மைப் பணியாளர்கள்தான் செய்தனர். கொரோனா காலத்தில் முன்களப் பணி யாளர்கள் என இவர்களை வர்ணித்த அரசு நிர்வாகம், இவர்களை அத்துக்கூலிகளாக மாற்றிவிட்டது.
நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட பணியிடங்களை தவிர்த்து, பிற இடங்களை தனியார்மயப்படுத்தும் வகையில் 2022 அக்டோபர் மாதம் அரசாணை 152ஐ அரசு வெளியிட்டது.
இதன்படி, சென்னை பெரு நகரம் தவிர்த்து பிற நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்குகிற போது, பெரும்பகுதியான நிரந்தரப் பணியிடங்களை அழித்துவிட்டு, வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறை யில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மதுரை, கோவை போன்ற மாநகராட்சிக ளில் 301 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று 20 மாநகராட்சிகளில் ஆணையா ளர் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 147 பணியிடங் கள்தான் இருக்க வேண்டும்; மற்ற அனைத்து பணியி டங்களும் வெளிமுகமை மூலம் மட்டுமே செய்ய வேண்டும் என அந்த ஆணை தெரிவிக்கிறது.
உதார ணத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டுள்ளன. 1285 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தூய்மைப்பணி, மேற்பார்வை பணி, ஓட்டுநர், காவலர், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், வரி வசூ லிக்கும் அலுவலர், ஆவண எழுத்தாளர், மின் பணியா ளர் உட்பட பல்வேறு பணியிடங்களை வெளிமுகமை முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அரசாணை தெரிவிக்கிறது.
மேற்கண்ட பணியிடங்க ளில் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்த பணியிடங்களை நிரந்தர மாக நீக்கி விடுவது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால் வாரிசு வேலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகவும் ஆபத்தானதாகும்.
நிரந்தர பணியிடங்களை ஒழித்து வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த ஊழி யர்களை நியமனம் செய்வது தமிழ்நாட்டில் சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
பெரும் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சி, நக ராட்சிகளில், மக்களுக்கான அடிப்படை சேவைகளை உறுதி செய்ய லாப நட்டக் கணக்கு பார்க்கக்கூடாது. அத்தகைய போக்கு மக்கள் நலனுக்கு எதிரானது.
இந்த அரசாணை தமிழகத்தை தூய்மையாகப் பராமரிக்க எந்த விதத்திலும் உதவி செய்யாது. அதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக கோளாறுகள் ஏற்படுவதுடன், ஒவ்வொருமுறை ஒப்பந்ததாரர் மாற்றப் படும் போதும் பணிகள் தேக்கமடையும். ஊழல் - முறை கேடுகளுக்கு வழிவகுக்கும்.
தாம்பரம் மாநகராட்சியும் வெளிமுகமையும்
உதாரணத்திற்கு தாம்பரம் மாநகராட்சியை எடுத்துக் கொள்ளலாம். தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், சிடலப்பாக்கம், செம்பாக்கம், மாடம் பாக்கம், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
தற்போது தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விரிந்து பரந்த பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிக்கு குறைந்தபட்சம் 1000 தூய்மைப் பணி யாளர்களாவது இருக்க வேண்டும். ஆனால், இங்கு ஒப்பந்த அடிப்படையில் 600க்கும் மேற்பட்டோர் (நகராட்சியின் நேரடி ஒப்பந்தம்) மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தனர். அதாவது குறைந்த பட்ச கூலிக்கும் குறைவாகவே பெற்று வந்தனர்.
இந்த நிலையில், அரசாணை 152 வெளியிட்ட பிறகு, ஊதியம் 7 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதையும் மாதாமாதம் வழங்குவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அரசாணை வெளிவந்த பிறகு கடந்த ஐந்து மாதங்களாக மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தொழிலாளர் விரோத நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை எதிர்த்து சிஐடியு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
ஊதியக் குறைப்பு குறித்து நடந்த பேச்சுவார்த்தை யில், மாதச்சம்பளமாக 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதில் பிஎச், இஎஸ்ஐ பிடித்தம் போக மாதாமாதம் 5ஆம் தேதி ஒப்பந்ததாரர் சம்பளத்தை வழங்குவார்; தூய்மைப் பணியாளர்களுக்கு அடை யாள அட்டையும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதாவது, ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியம் (தினக்கூலி) 424 ரூபாய். அதன்படி மாத சம்பளம் 12 ஆயிரத்து 720 ரூபாய். பிஎப் 1527 (12 சதவீதம்), இஎஸ்ஐ ரூ.414 (3.25 சதவீதம்) என 1941 ரூபாய் பிடித்தம் போக, 10 ஆயிரத்து 779 மாத சம்பளமாக வழங்க வேண்டும். ஆனாலும் மாதந்தோறும் 20 தேதிக்கு பிறகு 7000 மட்டுமே வழங்கப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களை பாதுகாக்குமா அரசு?
நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு சபைகளை ஏற்படுத்தி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என முனையும் தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்க ளை நிரந்தர தொழிலாளிகளாக மாற்ற வேண்டும்.
அரசாணை 152ஐ ரத்து செய்து தொழிலாளர்களை மாநகராட்சி - நகராட்சியின் நேரடித் தொழிலாளி யாக, நிரந்தரத் தொழிலாளியாக மாற்றியமைக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்குவது, 8 மணி நேரம் வேலையை உறுதிப்படுத்துவது என்பது உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதை அரசு செய்ய வேண்டும்.
கட்டுரையாளர் : தென்சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு