ஸ்ரீமதி படுகொலை: மஜஇக ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கொலை செய்த கும்பலை பாதுகாக்கும் திமுக அரசு, போராடும் மக்கள்- ஜனநாயக சக்திகள் மீது பாசிச அடக்குமுறையை ஏவுகிறது

ஸ்ரீமதி படுகொலை: மஜஇக ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

மாணவி ஸ்ரீமதியின் கொலைக்கு நீதி கேட்டு ஆங்காங்கே மக்கள், ஜனநாயக சக்திகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தங்கள் அரசின் செயற்பாடுகளை விமர்சிக்காத குரல்களை அனுமதிப்பதும், விமர்சிக்கும் குரல்களை நசுக்குவதுமான முறையை கடைபிடித்து வருகிறது திமுக அரசு.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 19.07.2022 தேதி முதலே மாணவி ஸ்ரீமதி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் திமுக அரசு கொலை செய்த கும்பலை பாதுகாப்பதாகவும் - சங்பரிவார கும்பலுக்கு வால் பிடிப்பதாகவும் கூறி பிரச்சாரம் செய்து வந்தனர்.

தற்கொலை என்று ஜோடிக்கப்பட்ட மர்ம மரணத்தின் திரை இன்று பல்வேறு நபர்களால் விலக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் சங்கரசுப்பு, மருத்துவர் புகழேந்தி போன்றோர் உடற்கூராய்வின் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். ஸ்ரீமதி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பது நிரூபணம் ஆகி வருகிறது. தீவைப்பு வன்முறை சம்பவங்களில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த கும்பலை கல்வி நிர்வாகமே ஏற்பாடு செய்து ஈடுபடுத்தி இருப்பதாகவும், அதற்கு காவல்துறை உதவியதாகவும் தெரிய வருகிறது.

அவ்வாறிருக்கையில் சக்தி உறைவிட பள்ளி நிர்வாகத்தை - காவி கிரிமினல் கூட்டத்தை பாதுகாத்து வருகிறது திமுக அரசு, மேலும் அநீதிக்கு எதிராக போராடியவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளது. தனியார் மயக் கல்வி கொள்கையை அமல்படுத்திக் கொண்டே சமூக நீதி நாடகமாடுகிறது.

இந்த நிலையில் கொலை குற்றவாளிகளான தாளாளர் மற்றும் அவன் மகன்களை கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்யக்கோரி மஜஇக அமைப்பினர் தஞ்சை கபிஸ்தலம் பகுதியில் 24.07.2022 அன்றும் தருமபுரி, கடலூர் நகரங்களில் 01.08.2022 அன்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திடம் அனுமதி கோரியுள்ளனர். முதலில் வேறு பகுதிகளில் யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அனுமதி தருவதாக கூறிய தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறையினர் பின்பு காவல் நடைமுறை சட்டம் 30(2) அமலில் இருப்பதாக கூறி திட்டவட்டமாக அனுமதி மறுத்துள்ளதுடன் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளனர்.

இவ்வாறு போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது திமுக அரசு. 

தி.மு.க. அரசே! மாணவி ஸ்ரீமதியை வன்புணர்ந்து கொலை செய்த கும்பலை பாதுகாக்காதே! கொலை, போக்சோ வழக்கில் கைது செய்!

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்! பொய்வழக்கை திரும்பப்பெறு!

குற்றவாளிகளை கைது செய்யக்கோரும் ம.ஜ.இ.க. ஆர்ப்பாட்டத்திற்கு தடை!

தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்

என்ற முழக்கங்களை தாங்கி மஜஇக அமைப்பின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மாநில அமைப்பாளர் தோழர். மாயகண்ணன், கடலூர்-விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர்.சசிகுமார் மற்றும் தஞ்சை அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர். மணிவேல் மூவரையும் தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் இதனை உறுதி செய்து தடையை மீறி வரும் திங்கட்கிழமை 01.08.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகவும் பாசிசத்திற்கெதிராக தங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் கூறினர். 

- செந்தளம் செய்திப் பிரிவு