SIR, NRC, நான்கு தொழிலாளர் சட்டங்கள்: உழைக்கும் வர்க்கத்தை நாடற்றவர்களாக்கும் திட்டமா?

செந்தளம்

SIR, NRC, நான்கு தொழிலாளர் சட்டங்கள்: உழைக்கும் வர்க்கத்தை நாடற்றவர்களாக்கும் திட்டமா?

"SIR, NRC, 4 தொழிலாளர் சட்டங்கள்: இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நேரடியாகக் குறிவைத்து, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் இந்துக்களையும் மறைமுகமாகப் பலிகொடுக்கும் கார்ப்பரேட் திட்டமா?

ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடியின் சுமையை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஈவிரக்கமின்றிச் சுமத்துவதற்காகவே கார்ப்பரேட்டுகளுக்கு இன்று 'மிக மலிவான, கேள்வியே கேட்க முடியாத' கொத்தடிமை உழைப்பு பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தப் பொருளியல் அடிப்படையிலிருந்து, ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட பாசிச அரசியல் ஆயுதங்கள்தான் SIR, NRC மற்றும் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்.

அதிகார வர்க்கம் "ஆவணங்களைக் காட்டு" என்று கேட்கும் இந்த ஒற்றைச் சொல்லாடலின் பின்னால் ஒளிந்திருப்பது வெறும் நிர்வாக நடைமுறை அல்ல; இது ஏகபோக நிதி மூலதனத்திற்குத் தடையற்ற ‘மலிவு உழைப்பை’ வழங்குவதற்காக, இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களைத் திட்டமிட்டு வேட்டையாடும் ஆளும் வர்க்கத்தின் நயவஞ்சகமான பாசிச நடவடிக்கையே ஆகும். CAA, NRC, SIR எனப் பெயர்கள் மாறினாலும், நோக்கம் ஒன்றுதான்: சொந்த மண்ணிலேயே இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குரிமையை பறித்து 'நாடற்ற அகதிகளாக' மாற்றுவது.

இஸ்லாமியர்களையும், ஒடுக்கப்பட்ட சாதியினரையும் எதிரிகளாக வரையறுத்து இந்தப் பாசிச சட்டங்கள் நேரடியாகத் தாக்குதல் தொடுக்கின்றன என்றால், சாதிவெறியையும் மதவெறியையும் ஊட்டி இதர பிற்படுத்தப்பட்ட சாதி உழைக்கும் மக்களையும் இச்சட்டம் வதை முகாம்களுக்குள் பலிகொடுக்கக் காத்திருக்கிறது.

பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

வறுமையால் துரத்தப்பட்டு, வடக்கிலிருந்து வந்து அத்துக் கூலிகளாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளிக்குத் தெரியாது, அவனது வாக்குரிமை அவனது சொந்த ஊரில் சத்தமின்றிப் பறிக்கப்பட்டுவிட்டது என்று. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) என்ற பெயரிலான பாசிச நடவடிக்கையின் மூலம், பீகாரில் மட்டும் 65.2 லட்சம் வாக்காளர்கள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். இதில் சுமார் 36 லட்சம் பேர் "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டறிய முடியாதவர்கள்" என்று குறிப்பிட்டு ஒற்றை வரியில் நீக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர் என்பதாலேயே இந்நாட்டு மக்கள் என்பது இல்லாமல் போய்விடுமா என்ன? எந்நாட்டிலும் போய் உழைப்பவர்களுக்கும்கூட NRI என்று பெயர் வைத்து அவர்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளதுதானே?? உள்நாட்டில் எங்கு சென்று உழைப்பினும் அவர்களுக்கான வாக்குரிமையை அவர்களின் “சொந்த ஊரிலேயே” உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ கடமையும் அதுவே. ஆனால், இதற்கு மாறாக, “கண்டறிய முடியாதவர்கள்” என முத்திரை குத்தி வாக்குரிமை பட்டியலிலிருந்து நீக்குவது ஆளும் வர்க்க நலன்களிலிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நயவஞ்சகமான பாசிச சதியன்றி வேறென்ன??

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 91 கோடி மொத்த வாக்காளர்களில் சுமார் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும், உழைப்பை விற்க உள்நாட்டில் இடம்பெயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக 2023 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டுள்ளது. யாரை நீக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்த பிறகே SIR பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த இடப்பெயர்வுக்கும் வாக்குரிமைப் பறிப்புக்கும் உள்ள வர்க்கத் தொடர்பை ஜூலை 2025-ல் SWAN அமைப்பு நடத்திய கள ஆய்வு அப்படியே தோலுரித்துக் காட்டுகிறது. பீகாரிலிருந்து பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த உழைக்கும் கூலிகளில் 90 சதவீதம் பேருக்கு இப்படி ஒரு திருத்தப் பணி நடப்பதே தெரியாது; 75 சதவீதம் பேருக்கு ஆன்லைன் பதிவேற்றம் பற்றித் தெரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் ஆணையம் துவக்கத்தில் கோரியிருந்த 11 ஆவணங்களில் ஒன்றுகூடக் கையில் வைத்திருக்காதவர்கள் 35 சதவீதம் பேர்! இந்த ஆவணமின்மையைச் சாக்காக வைத்துத்தான் இவர்களின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு 12-வது ஆவணமாக ஆதார் அட்டை சேர்க்கப்பட்டிருந்தாலும், உழைக்கும் வர்க்கத்திற்கு விரிக்கப்பட்ட வலை அப்படியேதான் இருக்கிறது. பிழைப்புக்காக 3 மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா என ஊர் ஊராக அலையும் இந்தக் கூலித் தொழிலாளர்களை "கண்டறிய முடியாதவர்கள்" என முத்திரை குத்துவது அதிகார வர்க்கத்திற்கு மிக எளிதான காரியமே. வாக்குச்சாவடி அலுவலர்கள் சரிபார்ப்புக்காக இவர்களின் வீட்டுக் கதவைத் தட்டும்போது, நிச்சயமாக இவர்கள் அங்கு இருக்கப் போவதில்லை. வறுமையால் இடம்பெயரும் தொழிலாளர்களின் இந்த எளிய வாழ்வியல் யதார்த்தத்தைத் திட்டமிட்டே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை நாடற்ற அகதிகளாக்குவது ஆளும் வர்க்கத்தின் நயவஞ்சகமான பாசிச நடவடிக்கையே ஆகும்.

‘ஊக மூலதன நெருக்கடி'யும் பாசிச முறையில் பறித்தெடுக்கப்படும் 'உபரி மதிப்பு'ம்

மோடியின் இந்து ராஜ்ஜியத்தில் கார்ப்பரேட்டுகள் எப்படிக் கோலோச்சுகிறார்கள் என்பதை இந்திய அரசின் 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையே நேரடியாக ஒப்புக்கொள்கிறது. நிஃப்டி 500 நிறுவனங்களின்(அதிலும் ஒரு சிறு பகுதியே ஒட்டுமொத்த லாபத்தையும் கைப்பற்றுகிறார்கள்) லாப-உற்பத்தி விகிதம் 2023-ம் நிதியாண்டில் 2.1 சதவீதமாக இருந்தது, அதுவே 2024-ம் நிதியாண்டில் 4.8 சதவீதமாக உயர்ந்து — 15 ஆண்டுகாலத்தில் இல்லாத உச்சத்தை — எட்டியுள்ளது. கார்ப்பரேட் லாபம் ஒரே ஆண்டில் 22.3 சதவீதம் எனப் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்தபோது, வேலைவாய்ப்பு வளர்ச்சி வெறும் 1.5 சதவீதமாகவும், நிறுவனங்களின் ஊதியச் செலவினம் 17 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகவும் குறைந்துவிட்டது! இதை முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்கூட வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி (jobless growth) என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள்

இதை PLFS (காலமுறை உழைப்பாளர் சக்தி கணக்கெடுப்பு) தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. 2022 முதல் 2024 வரையிலான காலத்தில் இந்தியாவின் மெய்யான GDP (Real GDP) சராசரியாக 8.2 சதவீதம் வளர்ந்ததாக கூறுகிறார்கள், ஆனால், ஊழியர்களின் உண்மையான ஊதியம் (Real Wages) -0.07 சதவீதம் எனச் சுருங்கியுள்ளதுடன், கிராமப்புறத் தொழிலாளியின் மாதச் சராசரி வருமானம் ரூ.9,107-லிருந்து ரூ.8,842-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு காட்டும் பொருளாதார வளர்ச்சியின் பலன் முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்திற்கு செல்கிறதே தவிர, உழைக்கும் மக்களுக்கு ஒரு துளிகூடச் சென்றடையவில்லை என்பதையும் உற்பத்தியில் நிலவும் அராஜகத்தையுமே இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த முரண்பாட்டின் பின்னணியில் இருப்பது என்ன? உற்பத்தித் துறையிலிருந்து மூலதனம் வெளியேறுகிறது; ஊக மூலதனமோ பெருகிக்கொண்டே செல்கிறது — 100 சதவீதம் சகல துறைகளையும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அகலத் திறந்துவிட்ட போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு நிலையான மூலதனம் உள்வரவில்லை. மார்ச்-2026ல் மட்டும் 13.7 பில்லியன் டாலர்கள் அந்நிய மூலதனம் பறந்தோடியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிஃப்டி 500 கார்ப்பரேட்டுகளின் லாபம் 15 ஆண்டுகால உச்சத்தைத் தொட்டபோதும், நாட்டின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF / GDP) 2024-25-ல் 29.6 சதவீதமாகச் சரிந்தது (முந்தைய ஆண்டின் 30.4 சதவீதத்திலிருந்து வீழ்ச்சி) — இது உற்பத்தித் துறையிலிருந்து மூலதனம் வெளியேறிக்கொண்டிருப்பதற்கான அப்பட்டமானச் சான்று. புதிய உற்பத்தியில் முதலீடு செய்தால் சந்தையில் சரக்குகள் தேங்கி, விலையும் லாப வீதமும் சரியும் என அஞ்சும் ஏகபோக நிறுவனங்கள் தங்களது உபரி லாபத்தைப் புதிய உற்பத்தியில் செலுத்தப்படாமல் பங்கு மறுவாங்கலுக்கும் (Share Buyback) நிதிச் சூதாட்டத்திற்கும் திரும்பின.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதே கார்ப்பரேட் சுரண்டல் வடிவம்தான் தலைதூக்குகிறது. 2025-ல் உலக செல்வம் 600 டிரில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது என்பதை கார்ப்பரேட் மேலாண்மைக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் ஆலோசனை வழங்கும் மெக்கின்சி (McKinsey) நிறுவனம் ஓர் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி கடன் மூலதனத்தைக் கொண்டு ஊதிப் பெருக்கப்பட்ட சொத்து விலை பெருக்கத்தால் ஏற்பட்டதே தவிர, புதிய உற்பத்தியால் வந்ததல்ல என்றே அந்நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகளாவிய மொத்தக் கடன் இப்போது உலக GDP-யைவிட 2.6 மடங்கு அதிகமாக உள்ளது. உற்பத்தித் துறை தொடர்ந்து சுருங்கி வருவதாகக் கூறும் IMF (2026), உலக வளர்ச்சி பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய சராசரியை விடத் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறது.

புதிய முதலீடு மூலம் மூலதனத்தை பெருக்க முடியாத நிலையில், ஏகபோக கார்ப்பரேட்டுகளின் அதீத லாபம் என்பது ஏற்கெனவே இருக்கும் உழைப்பாளர்களைக் கூடுதலாகப் பிழிந்து பெறப்படும் 'உபரி மதிப்பால்' மட்டுமே குவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. நேரடியாக வேலை நேரத்தை அதிகப்படுத்தி உறிஞ்சப்படும் 'நேரடி உபரி மதிப்பை' (Absolute Surplus Value) காட்டிலும், தொழில்நுட்பத்தின் மூலமாகவும் உழைப்பின் தீவிரத்தைக் கூட்டுவதன் மூலமாகவும் 'சார்பு உபரி மதிப்பை' (Relative Surplus Value) உறிஞ்சுவதே இன்றைய அறிவியல்பூர்வ நிர்வாக உத்தியாக உள்ளது. இதையே ஆசான் லெனின், “முதலாளித்துவ சமூகத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் ஒரு படி முன்னேறுகிறது என்றால், உழைப்புச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் ஒரு படி முன்னேறுகிறது“என்று கூறியிருப்பார். பிளின்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto) போன்ற கிக்-பொருளாதார நிறுவனங்கள் எப்படியெல்லாம் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தி இந்தச் சார்பு உபரி மதிப்பையும், நேரடி உபரி மதிப்பையும் உறிஞ்சுகின்றன என்பதைப் பார்த்தாலே லெனின் கூற்றில் உள்ள உண்மை விளங்கிவிடும்; அதேபோல எல் & டி (L&T), அதானி போன்ற பெருநிறுவனங்களின் கட்டுமானத் தளங்களிலும், திருப்பூர் ஜவுளித் துறையிலும் பன்னாட்டு ஏகபோகப் பிராண்டுகளின் லாபத்தைப் பாதுகாப்பதற்குத் தொழிலாளிகளின் கூலி விகிதம் பத்தாண்டுகளாகத் தேக்க நிலையில் வைக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் கடந்த ஆண்டுகளில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டியபோதிலும் லட்சக் கணக்கான ஊழியர்கள் ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தாலே இவர்களின் நெருக்கடியை புரிந்து கொள்ளலாம். இதே நிலைதான், சகல துறைகளிலும் தொடர்கிறது. தற்போது, 4 தொழிலாளர் சட்டங்கள், SIR போன்றவை அனைத்து வழிகளிலும் இந்த நெருக்கடியை உழைக்கும் மக்கள் சுமத்துவதற்காகவும், குறிப்பாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆவணமற்ற 50 கோடி உழைக்கும் மக்கள்: ஏகபோகங்களின் 'உபரித் தொழிலாளர் படை'!

இந்தியாவின் ஒட்டுமொத்த உழைப்புச் சக்தியில் சுமார் 90 சதவீதம் பேர் — அதாவது 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் — சமூகப் பாதுகாப்பற்ற அமைப்புசாராத் துறையிலேயே  உழல்கின்றனர் (e-Shram தளத்தில் மட்டும் 30.58 கோடிப் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்).

PLFS மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை (2024-25) தரவுகளின்படி, இந்த அமைப்புசாரா தொழிலாளர்களில் கீழ்மட்ட 27.5 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.100-க்கும் குறைவான சொற்ப வருமானத்திலேயே வாழ்கின்றனர். e-Shram தளத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களில் 94.11 சதவீதத்தினரின் மாத வருமானம் ரூ.10,000-க்கும் குறைவு. இந்த 50 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களில், தமது கூலி உழைப்பைச் சற்று மேலான விலைக்கு விற்பதற்காக, மாநிலம் விட்டு மாநிலமும், மாவட்டத்திற்கு மாவட்டமும் நாடோடிகளாக இடம்பெயர்பவர்கள் மட்டும் 13-14 கோடிப் பேர் என 2016-17 பொருளாதார ஆய்வறிக்கை (முன்பதிவற்ற ரயில் டிக்கெட் தரவு) மதிப்பிட்டுள்ளது. இதில் கட்டுமானத் துறையில் மட்டும் 4 கோடிக்கும் அதிகமானோர் உழைக்கின்றனர்; ஆனால் இவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாடோடிகளாகவும், அத்துக்கூலிகளாகவும் சிதறிக் கிடக்கும் உழைக்கும் மக்களும் உபரித் தொழிலாளர் படையில் கணிசமாக நிரம்பியுள்ளார்கள். எவ்வித பேரம்பேசும் சக்தியும் இல்லாமல், எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல், எந்த நேரமும் சுரண்டுவதற்கு தயாராக இருக்கும், மிக மலிவான உழைப்புச் சக்தியாக மாற்றுவதற்கே ஆளும் வர்க்கத்திற்கு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், SIR போன்ற பாசிச சட்டத்-திட்டங்கள் தேவைப்படுகிறது.

CAA-NPR-NRC-SIR: ஒரே சங்கிலியின் நான்கு கண்ணிகள்

SIR என்பது ஏதோ ஒரு தனித்த நிர்வாக நடவடிக்கை அல்ல; இது CAA–NPR–NRC போன்ற பாசிசத் திட்டங்களை பின்வாசல் வழியாக அனுமதிக்கும் ஆபத்தான ஆயுதமாகும். ஆவணமின்மையைக் காரணம் காட்டி, முதலில் இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் வாக்காளர் பட்டியலிலிருந்து தூக்குவது; அடுத்து, அதே ஆவணமின்மையைச் சாக்காக வைத்து அவர்களை 'சட்டவிரோதக் குடியேறிகள்' என முத்திரை குத்தி குடியுரிமையையே பறிப்பது என்ற இலக்கோடுதான் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்கள் இதன் மூலம் எவ்வாறு நேரடியாக வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை, பீகார் SIR திருத்தத்தின் போது வெளியான அதிகாரப்பூர்வத் தரவுகளே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. 'தி இந்து' நாளிதழ் மேற்கொண்ட ஆய்வின்படி, இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களிலேயே வாக்காளர் பெயர் நீக்க விகிதமும் அதிகமாக இருந்துள்ளது. 'தி வயர்' ஊடகம் பீகார் தேர்தல் ஆணையத் தரவுகளை ஆய்வு செய்து அம்பலப்படுத்திய உண்மை இன்னும் கொடுமையானது!

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என முதற்கட்டத்தில் குறிவைக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்கள் நான்கில் ஒரு பங்கினர் (24.7%) மட்டுமே. ஆனால், அனைத்துச் சரிபார்ப்புகளும் முடிந்து இறுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டபோது, அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (32.1%) இஸ்லாமியர்களாகவே இருந்துள்ளனர். குறிவைக்கப்பட்ட இஸ்லாமியரல்லாத ஒருவரின் பெயர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு 4.18% என்றால், ஒரு இஸ்லாமிய வாக்காளரின் பெயர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு 6.38% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய வாக்காளர்கள் 50% கூடுதல் தீவிரத்துடன் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

படிக்கவும்: CAA -NRC- SIR க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்!

சீமாஞ்சல் பிராந்தியத்திலுள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இஸ்லாமியர்-அல்லாதோரின் நீக்க விகிதம் 1.9% ஆக இருந்தபோது, இஸ்லாமியர்களின் நீக்க விகிதம் 3.7% என இருமடங்காக இருந்துள்ளது. பெருவாரியான இஸ்லாமியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து இதில் உள்ளது என ஐ.நா. சபையின் சிறப்பு விசாரணைக் குழு இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு, இது அப்பட்டமான இந்துத்துவ பாசிசத்தின் ஒரு அம்சமான மதவெறி வேட்டையாக அரங்கேறியுள்ளது.

இஸ்லாமியர்கள் நேரடியாக வேட்டையாடப்படும் அதேவேளையில், தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடியினரும் இப்பாசிச திட்டத்தின் ஆவணக் கெடுபிடிகளால் அதற்கு இணையாகக் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த நயவஞ்சகமான பாசிசத் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே, சொத்துடைமை வர்க்கத்திடம் மட்டுமே இருக்கும் 'பழைய ஆவணங்களை' (Legacy Data) உழைக்கும் வர்க்கத்திடம் பாசிச அரசு கோருவது வெளிப்படையான ஆவணப் பயங்கரவாதமாகும்.

2011-ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு (SECC) கூறுவது போல், கிராமப்புறங்களில் வாழும் 56 சதவீத குடும்பங்கள் ஒரு பிடி விவசாய நிலம் கூட இல்லாத தினக்கூலிகள்; இதுவே தாழ்த்தப்பட்ட (SC) குடும்பங்களில் 71 சதவீதமாக உள்ளது. நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பால் நிலவுரிமையும் ஆவணங்களும் வரலாற்றுரீதியாக மறுக்கப்பட்ட இந்த உழைக்கும் மக்களிடம் 'பூர்வீக ஆவணங்களைக்' கோருவது, அவர்களை திட்டமிட்டு நாடற்றவர்களாக்கும் சதிவலையேயன்றி வேறென்ன?

சாதி ரீதியாகப் பிரித்துப் பார்த்தால் இந்த 'ஆவண இடைவெளி' இன்னும் கூர்மையாக வெளிப்படுவதைக் காண முடியும். லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் 2025 (Lokniti-CSDS 2025) ஆய்வின்படி, தாழ்த்தப்பட்டவர்களில் 4-ல் ஒருவரிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் உள்ளது — எந்த சாதிப் பிரிவிலும் இப்படியொரு நிலை இல்லவே இல்லை. வீட்டிலுள்ள அனைத்து பெரியவர்களிடமும் பிறப்புச் சான்றிதழ் உள்ள தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வெறும் 10 முதல் 12 சதவீதம் மட்டுமே; 80 சதவீதத்திற்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தாய்மார்களிடம் எவ்வித பிறப்புச் சான்றிதழும் இல்லை. NFHS-4 தரவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன: தாழ்த்தப்பட்டவர்களில் 39 சதவீதத்தினரிடமும், பழங்குடியினரில் 44 சதவீதத்தினரிடமும் பிறப்புச் சான்றிதழ்களே இல்லை. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தாழ்த்தப்பட்டோரில் 5 சதவீதமும் பழங்குடியினரில் 4 சதவீதமும் மட்டுமே ஆவர்.

சிவில் பதிவு முறை (CRS) மற்றும் UNICEF தரவுகளின்படி, 2015-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 62.3 சதவீதத்தினருக்கு மட்டுமே பிறப்புச் சான்றிதழ் இருந்தது. 2000-ஆம் ஆண்டு வரை பிறப்புப் பதிவு முறையின் அமலாக்கம் மிக மோசமாகவே இருந்துள்ள சூழலில், 1990-களுக்கு முன்பு பிறந்த, அத்துக்கூலிகளாகத் தேயும் இன்றைய கிராமப்புறப் பெண்களிடமும் உழைக்கும் வர்க்கத்திடமும் 'பூர்வீக ஆவணங்களை' அரசு கோருவது, அவர்களைத் திட்டமிட்டு நாடற்றவர்களாக்கும் பாசிச வன்முறையாகும்.

தாழ்த்தப்பட்டவர்களையும் இஸ்லாமியர்களையும் நேரடி இலக்காக வைக்கும் அதேவேளையில், ஆவணங்களற்ற ஏழைப் பிற்படுத்தப்பட்ட (OBC) உழைக்கும் மக்களையும் இப்பாசிசத் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் பலிகடாவாக்குகிறது. லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் ஆய்வின்படி, தேர்தல் ஆணையம் கோரும் 11 ஆவணங்களில் ஒன்றுகூட இல்லாத ஆவணமற்ற குடிமக்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதர பிற்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுவது போல், பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் 33.16% பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் 33.58% பேரும் கடுமையான வறுமையில் வாழ்பவர்கள்.

நீதிமன்ற உத்தரவால் அடையாளச் சான்றாக ஆதார் சேர்க்கப்பட்டிருந்தாலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் தேய்ந்த விரல்ரேகைகளை பயோமெட்ரிக் முறைகள் அங்கீகரிக்கத் தவறுவதால், மாதந்தோறும் 2 கோடிக்கும் அதிகமான முறை அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன! இதன் விளைவாக, 12% முதல் 20% வரையிலான உழைக்கும் மக்கள் தங்களின் ரேஷன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கின்றனர். ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லை என்பது போல பல காரணங்களைக் கூறி 2013–2020 காலக்கட்டத்தில் மட்டும் 4.39 கோடி ரேஷன் அட்டைகளை 'போலியானவை' என ரத்து செய்து, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினிச் சாவிற்குத் தள்ளிய கும்பல்தானே இவர்கள். ஜார்க்கண்டில் "போலி" எனக் கூறி ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைகளில் 90% அட்டைகள் உண்மையான தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் அட்டைகளே என்று கள ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இந்துத்துவ அரசியலின் நேரடி எதிரிகளாக அடையாளப்படுத்தப்படுபவர்களையும், ஆவணங்கள் இன்றி இடம்பெயரும் கூலித் தொழிலாளர்களையும் நாடற்றவர்களாக்கி, அவர்களின் உழைப்பைக் கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வித உரிமையுமற்ற 'கொத்தடிமை உழைப்பாக' நிறுவனப்படுத்தி தருவதே CAA-NPR-NRC-SIR எனும் பாசிசச் சங்கிலியின் உண்மையான பொருளியல் அடிப்படையாகும்.

இந்துக்களுக்கு எதிரான இந்த ராஜ்ஜியம்

e-Shram தளத்தில் பதிவு செய்துள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமீபத்திய சாதிவாரித் தரவுகள் (மக்களவையில் முன்வைக்கப்பட்ட அறிக்கை) ஓர் முக்கிய உண்மையைச் வெளிப்படுத்துகின்றன. தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடி (ST) சமூகங்களின் மொத்த எண்ணிக்கையைவிட (32%) இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்க இந்துக்களும் (40%) இதில் கணிசமாக பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் முதன்மை எதிரிகளாக காட்டி, மதவெறி, சாதிவெறியூட்டி எந்த இந்துக்களை ஆகப் பெரும்பான்மையாக அணிதிரட்டுகிறார்களோ அதே உழைக்கும் வர்க்க இந்துக்கள்தானே இந்த பாசிச சட்டத்-திட்டங்களால் வதை முகாம்களில் அடைக்கப்படவிருக்கிறார்கள்?

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) நாடற்றவர்கள் எனத் தூக்கியெறியப்பட்ட 19.06 லட்சம் பேரில், குறைந்தது 7 லட்சம் பேர் (5 லட்சம் வங்காள இந்துக்கள், 2 லட்சம் அஸ்ஸாமிய இந்துக்கள்) இந்துக்களே என்பதை அசாம் அரசின் (2024) அதிகாரப்பூர்வத் தரவுகளே ஒப்புக்கொள்கின்றன. வர்க்க அடிப்படையிலான சுரண்டல் சாதி, மதம் போன்ற வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதையே இந்த அசாம் தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.

இந்தியாவில் ஒரே ஆண்டில் வறுமையாலும், வாழ்வாதார இழப்பாலும் தற்கொலைக்கு தள்ளப்பட்ட 1.70 லட்சம் பேரில், 45,185 பேர் (அதாவது 26.4 சதவீதம்) தினக்கூலித் தொழிலாளர்கள்தான். நாள்தோறும் உடலை உருக்கி உழைத்து, இறுதியில் கதியற்றுச் செத்து மடிந்த இந்தத் தினக்கூலிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்கள்தானே? பல மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று போலி கணக்கு காண்பித்த போதிலும், உலகமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் 3.94 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரங்களே கூறுகின்றன.

இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்துக்கள் பாதிக்கப்படுவதாக கூறி வீதியிலிறங்கி போராடும் இவர்கள் ஏன் சொந்த நாட்டு உழைக்கும் வர்க்க இந்துக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக குரல்கொடுப்பதில்லை? எத்தனையோ சேனைகளையும், முன்னணி அமைப்புகளையும் கட்டியமைத்து வைத்திருப்பது உழைக்கும் வர்க்க இந்துக்களுக்காக அல்ல என்பதைத்தானே இவை காட்டுகின்றன??

அன்று நிலம் பறிக்கப்பட்டது; இன்று நிலத்துடன் சேர்ந்து அரைகுறை உரிமையும் பறிக்கப்படுகிறது: ஆதி மூலதனத் திரட்டலின் புதிய முகம்

நாடெங்கும் அசாம் பாணியில் 'வதை முகாம்களை' உருவாக்க வேண்டிய அவசியம் இந்த ஆளும் வர்க்கத்திற்கு ஏன் வந்தது? தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி இந்தக் கார்ப்பரேட் ராஜ்ஜியம் சாதிக்கப் போவது என்ன?

காரல் மார்க்ஸ் இதற்கான பதிலை மிக எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளார்."ஆதி மூலதனத் திரட்டல்" (Primitive Accumulation) கட்டத்தில், நிலப்பிரபுக்கள், திருச்சபைகள் ஏழை உழவர்களை நிலத்திலிருந்து விரட்டியடித்தனர். நிலமிழந்து தெருவில் தள்ளப்பட்ட அந்த தொழிலாளர்களை "நாடோடிகள், குற்றவாளிகள்" என முத்திரை குத்தி, கசையடியும் மரணதண்டனைப் பயமும் காட்டி கொத்தடிமைகளாக மாற்றுவதற்கு அரசு பல சட்டங்களை இயற்றியது!

அதே கொடூரம்தான் இன்று இந்தியாவில் அரங்கேறுகிறது. நேற்று நிலத்தைப் பறித்தார்கள்; இன்று, "ஆவணமில்லை" என்ற சாக்கில் வாக்குரிமையும், அதைத் தொடர்ந்து குடியுரிமையையும் பறிக்க முனைகிறார்கள். 

மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல், சாதாரண சூழலில் அரசு நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியமே இல்லை — "கூலி இல்லாவிட்டால் பிழைக்க முடியாது" என்ற வெறும் பொருளாதாரச் சார்பே தொழிலாளியை அடக்கி வைக்கப் போதுமானது. நீதிமன்றம், தேர்தல், சட்டங்கள் என்ற "உடன்பாட்டின்" போர்வையிலேயே முதலாளித்துவ அரசு தன் ஆட்சியை நகர்த்திவிடும்.

ஆனால், நிதி மூலதன நெருக்கடி கூலியை ஏற்கெனவே ஒட்டச் சுரண்டிவிட்ட இன்றைய நிலையில், அந்தச் சாதாரணப் பொருளாதார அழுத்தமும், உடன்பாடு என்ற போர்வையும் மட்டும் தொழிலாளியைக் கட்டுப்படுத்தப் போதாது — தொழிலாளி கிளர்ந்தெழும் அபாயம் உருவாகிறது. நிதி மூலதனம் இந்த நிலையை உணரும் தருணத்திலேயே, அதுவரை அணிந்திருந்த ஜனநாயக முகமூடியை கிழித்தெறிந்துவிட்டு வெளிப்படையான பயங்கரவாதத்தைக்  கையிலெடுக்கிறது.

இதுவே பாசிசம் பிறக்கும் தருணம்!

பாசிசம் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம்; பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரம் என்று டிமிட்ரோவ் விளக்கம் அளித்தார்.

4 தொழிலாளர் சட்டங்கள் மூலம் ஒரு தொழிலாளியின் 8 மணி நேர உழைப்பை 12 மணி நேரமாக மாற்றுவது, 'அமர்த்து–துரத்து' (Hire and Fire) என்ற முறையில் வேலையிலிருந்து தூக்கியெறியும் உரிமையைக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குகிறார்கள். ஒரு சட்டப்பூர்வக் குடிமகனாக விளங்கும் தொழிலாளி, இதைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட முயல்வான்; நீதிமன்றம் செல்ல முயல்வான். ஆனால், SIR மூலமாகவோ, NRC மூலமாகவோ 'நாடற்றவன்' என முத்திரை குத்தப்படும் ஒரு தொழிலாளி என்ன செய்ய முடியும்? அவனுக்கு வாக்குரிமை கிடையாது. 'எந்த நேரத்திலும் குடும்பத்தோடு வதை முகாமில் அடைக்கப்படுவோம்' என்ற மரண பயத்திலேயே அவன் வாழ்கிறான்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (SIR/NRC) போன்ற நடவடிக்கைகள் வெறும் கூலிக் குறைப்போ அல்லது பொருளாதார ஒடுக்குமுறையோ அல்ல; தொழிலாளியின் அரசியல் இருப்பையே அழித்து, அவர்களை உரிமையற்றவர்களாக மாற்றி, பயங்கரவாதத்தின் மூலம் ஒடுக்கும் பாசிச ஆயுதங்களே. வழக்கமான ஏகாதிபத்திய/முதலாளித்தவ அரசுக்கும் பாசிச அரசுக்குமான வேறுபாடே இதுதான் — பொருளாதார நெருக்கடியை மறைக்க, சாதிவெறியையும் மதவெறியையும் தூண்டி, ஒரு பெரும் மக்கள் திரளைக் கொண்டே ஆளும் வர்க்கம் இந்த வெளிப்படையான பயங்கரவாத, மிகவும் பிற்பாக்கான நிதி மூலதன சர்வாதிகார அரசை கட்டியமைக்கிறது.

மதத்தையும் சாதியையும் காட்டிப் பிளவுவாத அரசியலுக்கு இட்டுச் செல்லும் இந்த உத்தி புதியதல்ல; யூதர்களை வேட்டையாடிய ஹிட்லரின் 'நூரம்பர்க்' சட்டங்களின் மறுபதிப்புதான் இன்றைய SIR-ன் 'ஆவணம் கோரும் அரசியல்'. மதத்தால் பிரித்து, சாதியால் கூறுபோட்டு, தேசிய இனங்களைச் சிறு சமஸ்தானங்களாகச் சிதைத்து, இறுதியில் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் நிரந்தரக் கொத்தடிமைகளாக்கும் இந்து ராஜ்ஜியத்தின் நீண்டகாலத் திட்டத்தின் இன்றைய கருவிகள்தான் CAA-NPR-NRC-SIR என்று சமரன் வைத்த நிலைப்பாடுகளே இன்றைய சூழலை மார்க்சிய அடிப்படையில் விளங்கி கொள்வதற்கு உதவுகிறது.

ஏன் இந்த வதை முகாம்கள்? இந்த அரசு யாருக்கானது?

இந்த புதிய காலனிய சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் கிளர்ந்தெழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற ஆளும் வர்க்கத்தின் அச்சமே SIR போன்ற சட்டங்களாக உருவெடுக்கிறது. அசாமின் கள நிலவரம் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அங்கு நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் முதலில் மாநிலத்தின் சாதாரணச் சிறைக்கூடங்களில்தான் அடைக்கப்பட்டனர். எந்தச் சட்டப் பாதுகாப்போ, கேள்வி கேட்கும் உரிமையோ அற்ற 'உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை'யைத்தான் சிறைக்கூடம் என்கிறோம். இந்த உரிமையற்ற சூழலைத்தான் ஆளும் வர்க்கம் இன்று 'வதை முகாம்களாக' நாடெங்கும் விரிவுபடுத்துகிறது.

அதாவது, 4 தொழிலாளர் சட்டங்கள் ஒரு தொழிலாளியின் பொருளாதாரப் பேரம் பேசும் சக்தியை ஒழிக்கின்றன என்றால், SIR திருத்தங்கள் அவனது அரசியல் இருப்பையே ஒழித்துக் கட்டுகின்றன. எந்த அரசியல் உரிமையுமற்ற, எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியக்கூடிய சிதறிக் கிடக்கும் 'நிரந்தர மலிவு உழைப்பு சக்தியை' ஏகாதிபத்திய ராமர்களுக்கு பலிகொடுப்பதுதான் இந்த வதை முகாம்களின் முக்கிய நோக்கமாக விளங்குகிறது.

'தேர்தல் பத்திரங்கள்' தரவுப்படி, ஆளும் பாஜக மட்டும் பெற்ற அப்பட்டமான சட்டப்பூர்வ லஞ்சம் ரூ. 8,251 கோடியாகும். 8 ஆயிரம் கோடி ரூபாயைக் கார்ப்பரேட்டுகளிடம் வாங்கிக்கொண்டு, உழைக்கும் மக்களைக் கொத்தடிமைகளாக்கும் தொழிலாளர் சட்டங்களையும், SIR-ஐயும் இயற்றிக் கொடுத்திருக்கிறது இந்த அரசு.

SIR நடவடிக்கை, நான்கு தொழிலாளர் சட்டங்கள் மட்டுமல்லாது பாசிச மோடி அரசும், அதற்கு முன்பு மென்-இந்துத்துவ கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் அரசும் கடந்த காலங்களில் இதையேத்தான் செய்து வந்துள்ளன.

எனவேதான் கூறுகிறோம், ஏகாதிபத்திய ராமர்களுக்காக அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளும் மூப்பனார்-வாண்டையார் நிலவுடைமையாளர்களும் அனுமார்களாக சேவை செய்யும் இந்த 'ராம ராஜ்ஜியம்' என்பது, உழைக்கும் மக்கள் மீதானச் சுரண்டலை மறைத்து, இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் நேரடியாகக் குறிவைப்பதோடு நில்லாமல், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் வதைமுகாம்களில் பலிகொடுத்து இந்தியாவைத் தேசிய இனங்களின் கொலைக்களமாக மாற்றும் அப்பட்டமான எதிர்ப்புரட்சிகரப் பாசிச ராஜ்ஜியமே!

- செந்தளம்