இந்தியப் பாசிசத்தின் அரசியல் அடிப்படை

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 4

இந்தியப் பாசிசத்தின் அரசியல் அடிப்படை

IV

இந்தியப் பாசிசத்தின் அரசியல் அடிப்படை

 

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 3

இந்துத்துவப் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்கள் மூலம் இந்து ராஷ்டிர (அ) இந்து ராஜ்ஜிய பாசிச அரசை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை ஆழப்படுத்துவதன் வாயிலாக தெற்காசிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் போர் வெறிக்கும், இனவெறி பாசிசத்திற்கும் இளைய பங்காளியாக செயல்படுவதுதான் இந்திய விஸ்தரிப்புவாத-அகண்ட பாரத-இந்து ராஜ்ஜிய-இந்துத்துவ பாசிசத்தின் இலட்சியமாகும்.

இந்த இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காகவே, வரலாறு காணாத நெருக்கடியைத் தீர்க்க வக்கற்ற; கார்ப்பரேட் நலன்களுக்குச் சேவை செய்கின்ற மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை (2020-21)யை தாக்கல் செய்துள்ளது மோடி ஆட்சி. இந்து ராஜ்ஜியம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு மோடி கும்பலின் நிதிநிலை அறிக்கையே நல்ல உதாரணமாகும். வேளாண்மை, தொழிற்துறை, கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதியை குறைத்து இராணுவத்திற்கு நிதியை கடந்த ஆண்டை விட கூடுதலாக 30,000 கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது; இந்தியா மீதான புதிய காலனியத்தை ஆழப்படுத்துவதன் மூலமாக அமெரிக்கா மேற்கொள்ளும் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான முயற்சிகளை நிறைவேற்றும் இந்தோ-பசிபிக் திட்டத்திற்காகவே இராணுவத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது மோடி அரசு.

மக்களின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அமெரிக்காவின் புதிய காலனியம் ஆட்சி செய்கிறது. பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கான ஆட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்தில் உழன்று வருகின்றனர். ஆட்சியாளர்களை எதிர்த்து ஆவேசத்துடன் மக்கள் போராடி வருகின்றனர். சாதி, மதம், இனம் கடந்து நடக்கும் இந்த வர்க்கப் போராட்டங்களை சீர்குலைக்கவும்-பிளவுபடுத்தவும் சாதிவெறி- மதவெறி- இனவெறி- தேசிய வெறியை ஊட்டக்கூடிய பாசிசத்தை ஆட்சியாளர்கள் கட்டமைக்கின்றனர். காங்கிரசு கும்பல் அமைத்து தந்த பெருந்தேசிய வெறி பாசிச மேடையில் (ஜீறீணீ௴யீஷீக்ஷீனீ) நின்று கொண்டுதான் பாஜக-ஆர். எஸ். எஸ் கும்பல் இந்துத்துவ பாசிசத்தைக் கட்டியமைத்து வருகின்றது.

காஷ்மீர் தேசிய இனத்தை 370 இரத்து மூலம் துண்டாடியது; கையில் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு இசுலாமிய பெண்களுக்காக முத்தலாக் தடை என நாடகமாடி இசுலாமிய வெறுப்பைக் கட்டியமைப்பது; மாட்டுக்கறி தின்றதாகவும், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லியும் இசுலாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை 'கும்பல்' படுகொலை செய்வது; பெண்கள் மற்றும் சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சீரழிப்பது; உபா (UAPA), என்.ஐ.ஏ (NIA) போன்ற ஆள் தூக்கி கருப்புச் சட்டங்களை ஏவுவது; சாதி-மதப் படுகொலைகளை அரங்கேற்றுவது; கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்றவர்களை படுகொலை செய்வது; குஜராத் படுகொலைகள்; டெல்லி கலவரங்கள், நூரம்பர்க் குடியுரிமைச் சட்டங்கள் என இந்துத்துவப் பாசிச ஆட்சியைக் கட்டியமைத்து வருகிறது மோடி அரசு.

அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்காக இந்தியாவில் கட்டியமைக்கப்படும் பாசிசம்:

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிலிருந்தும், அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளித்துவக் கும்பல்களின் நலன்களிலிருந்தும் 'இந்தியப் பாசிசம்' கட்டியமைக்கப்படுகிறது. காங்கிரசின் பெருந்தேசிய வெறிப் பாசிசமும், பாஜகவின் இந்துத்துவப் பாசிசமும் 'இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களாக' திகழ்கின்றன.

காங்கிரசு ஆட்சியில் போடப்பட்ட இந்திய-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் மற்றும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் இந்தியா மீது அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை நங்கூரமிட்டு நிலைநிறுத்தின. மேலும் அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கும், தெற்காசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஆசிய-பசிபிக் திட்டத்திற்கும் மன்மோகன் கும்பல் அடிபணிந்தது. தற்போது 'ஆசிய பசிபிக் திட்டம்' இந்தோ பசிபிக் திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தோ பசிபிக் திட்டத்திற்குச் சேவை செய்யும் "நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களில் (Foundation Agreements)" மோடி கும்பல் கையெழுத்திட்டுள்ளது. அவையாவன;

1. பாதுகாப்பு தொழிற்துறை ஒப்பந்தம்: [ISA-Industrial Security Annex]

இது முன்பு தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் என அறியப்பட்டிருந்தது. தற்போது பாதுகாப்பு தொழிற்துறை ஒப்பந்தம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் புதிய திருத்தங்களில் மோடி கும்பல் கையெழுத்திட்டுள்ளது. இது அமெரிக்காவுடன் இராணுவத் தகவல்களை இந்தியா பரிமாறிக் கொள்வதையும், பாதுகாப்பதையும் அனுமதிக்கிறது. இந்தியா அமெரிக்காவுடன் மட்டுமே இராணுவத் தளவாடங்களை வாங்க வேண்டும் என்பதை இவ்வொப்பந்தத்தில் மோடி கும்பல் புதிய நிபந்தனையாக ஏற்றுக்கொண்டது. இதன்படி 110 போர்ஜெட் விமானங்களையும், 111 ஹெலிகாப்டர்களையும் இந்தியா அமெரிக்காவிடம் 'போர் தந்திரக் கூட்டாளி பட்டியலின்' அடிப்படையில் வாங்கியுள்ளது.

2. இராணுவத் தளவாட பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம்: [LEMOA-Logistics Exchange Memorandum of Agreement]

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கும், அமெரிக்க இராணுவம் இந்தியாவில் எரிபொருள் நிரப்பவும், ஓய்வெடுக்கவும் அனுமதிக்கும் ஒப்பந்தமாகும்‌. துறைமுகத் தொடர்புகள் (port calls), கூட்டுப் பயிற்சி, கூட்டு நடவடிக்கை [Joint Training], மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால உதவி [Humanitarian assistance and Disaster Relief] போன்றவற்றை இந்திய பாதுகாப்புத்துறை அமெரிக்காவிற்கு உறுதிப்படுத்தவேண்டும்.

3. பரஸ்பர தொலைத் தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் [COMCASA-Communication, Compatibility and Security Agreement]

இவ்வொப்பந்தம் இரகசியமாகக் குறியிடப்பட்ட (Encrypted) அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பங்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் வேறு நாட்டு கப்பல், விமானம் பயணித்தால் அது பற்றிய தகவல் விரைவில் அமெரிக்காவிற்கு செல்லும் வகையில் 'இரகசியமாக குறியிடப்பட்ட' (Encrypted) அமெரிக்க தொழில் நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வொப்பந்தம் இரு நாடுகளின் பரஸ்பர இராணுவச் செயல்பாடுகளை (Inter-operability) உத்திரவாதப்படுத்துகிறது.

4. அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்: [BECA-Basic Exchange and Co-operation Agreement]

இந்த ஒப்பந்தம் குறிவைத்து தாக்கும் இலக்குகள் மற்றும் கப்பற் பயணம் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் உத்தரவாதப் படுத்துகிறது.

மோடி கும்பல் கையெழுத்திட்ட இந்த 'நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்கள்' என்பவை, காங்கிரசு ஆட்சியில் போடப்பட்ட 'பாதுகாப்புத் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம், [DTTI 2012-Defense Technology and Trade initiative 2012] எனப்படும் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் போடப்பட்டதே ஆகும். இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் மிச்ச சொச்ச இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்திற்கு தங்கு தடையின்றி திறந்து விட்டுள்ளன. இவற்றில் கையெழுத்திட்டதன் மூலம் காங்கிரசும், பாஜகவும் இந்திய பாதுகாப்புத் துறையை பென்டகனின் (pentagon) இந்தியக் கிளையாகவே மாற்றி விட்டன.

மோடி கும்பல் பின்பற்றி வரும் புதிய காலனிய-புதிய பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் காங்கிரசு கும்பலால் துவங்கப்பட்டதே ஆகும். உள்கட்டமைப்புத் துறை, நிதித்துறை, வர்த்தகம் மற்றும் சேவைத் துறை போன்றவற்றை ஒருங்கிணைத்து அந்நிய ஊக நிதி மூலதனத்திற்கு [Foreign Speculative Finance Capital] திறந்துவிட்டுள்ளது மோடி ஆட்சி. சமூக நலத் திட்டங்கள், காப்பீடு, வங்கிகள், விமானப் போக்குவரத்து, சில்லரை வர்த்தகம், ஊடகம் போன்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிப்பதற்கான அனைத்து தடைகளையும் மோடி அரசு அகற்றிவிட்டது. பங்குச்சந்தையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்தை அனுமதித்துள்ளது மட்டுமின்றி, தற்போது சர்வதேச நிதி மூலதனச் சேவை மையம் சட்டத்தை (IFSCA-International Financial Services Centre Act) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நியூயார்க், ஷாங்காய் போன்று மும்பை மாநகரத்தை சர்வதேச நிதி மூலதனத்தின் மையமாக மாற்றுகிறது. இது நிதித்துறை, வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் கட்டற்ற தங்குதடையற்ற நிதி மூலதனத்தை அனுமதிக்கும் சட்டமாகும்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் பற்றாக்குறை) சுமார் 24 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்காவின் சர்வதேச பற்றாக்குறை 800 பில்லியன் டாலர்களாகும். 2008-ல் அமெரிக்காவில் வெடித்த முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியானது உலகு தழுவிய நெருக்கடியாகப் பரிணமித்தது. உலகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியும் 3.02% சதமாக வீழ்ந்தது. உற்பத்திப் பொருட்கள் தேக்கத்தால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. உபரி உற்பத்தி (Surplus Production) யானது உபரி வர்த்தகத்திற்கு (Surplus Trade) இட்டுச் சென்றது. ஊக வாணிபம் பெருகி பன்னாட்டு முதலைகளின் செல்வம் பெருகியது. இந்த மூலதனம் மறு உற்பத்தியில் ஈடுபடாமல் வணிகத்திற்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்கா 'காப்புக் கொள்கைகளைக்' கடைபிடிக்க துவங்கியது. இதனால் நெருக்கடிகள் தீவிரம் பெற்று அமெரிக்கா சீனாவிற்கு எதிராக வர்த்தகப் போரை அறிவித்தது. இந்த வர்த்தகப் போர் அமெரிக்கா-நேட்டோ மற்றும் சீன-ரசிய முகாம்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போராக வடிவமெடுத்தது. இன்று இந்தப பனிப் போரின் யுத்தக் களங்களாக வெனிசுலா, ஏமன், சூடான், சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் திகழுகின்றன. பனிப்போரால் நெருக்கடிகள் தீவிரம் பெற்று நெருக்கடியிலிருந்து மீள காப்புக் கொள்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தியா போன்ற காலனிய நாடுகள் மீது மட்டுமின்றி ஜப்பான், துருக்கி, கத்தார், ஏமன், போன்ற தனது அணியில் இருந்த நாடுகள் மீதும் அமெரிக்கா வரிவிதிப்பை அதிகப்படுத்தியது. இது துருக்கி, கத்தார், ஏமன் போன்ற நாடுகளை இரசிய-சீன அணிக்குள் தள்ளிவிட்டது. இதனால் அமெரிக்க இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி போர் வெறியுடன் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு முயற்சி செய்து வருகிறது; அமெரிக்காவின் போர் வெறி; இனவெறிப் பாசிசம் மற்றும் தெற்காசிய மேலாதிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் வகையில் இந்திய ஆளும் வர்க்க நலனிலிருந்து மோடி கும்பல் இந்தியாவில் பாசிசத்தைக் கட்டியமைத்து இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. இந்த பாசிச அரசு வடிவத்திற்கு 'இந்து ராஜ்ஜியம்' எனப் பெயரிட்டுள்ளது மோடி அரசு.

கொரோனாவிற்குப் பிறகு பொருளாதார நெருக்கடிகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தெற்காசிய மேலாதிக்கத்திற்கான போட்டி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்துள்ளது. இது தெற்காசியாவில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள - அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பு வலிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமெரிக்காவின் நெருக்கடிகள் இந்தியா மீது சுமத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளுக்கு [Closed Door Policy-Protection policy] ஏற்றவாறு இந்தியச் சந்தையை வடிவமைக்க வேண்டியிருப்பதால் 'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' எனும் பெயர்களில் ஜி. எஸ். டி மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கான பணமதிப்பிழப்பு (de-monetisation) நடவடிக்கைகள் மூலம், சந்தைகள் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையப்படுத்தப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட இந்தியச் சந்தை சர்வதேச வர்த்தகச் சந்தையுடன் இணைக்கப்பட்டு அதன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா தனக்கு காப்புக் கொள்கையையும், போட்டி நாடுகளும் புதிய காலனிய நாடுகளும் உலகமயக் கொள்கைகளையும் அமல்படுத்த வேண்டும் என்று கருதுகிறது. அதனடிப்படையில் இந்தியா தனது சந்தையை தடையில்லாமல் திறந்துவிட [Open Door Policy] வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

அதாவது, அமெரிக்கா உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டு காப்புக் கொள்கைகளை [அமெரிக்காவின் சந்தை அமெரிக்காவுக்கே] கடைபிடிக்க வேண்டும் எனில் மற்ற நாடுகள் திறப்புக் கொள்கைகளை-புதிய பொருளாதாரக் கொள்கைகளை - கடைபிடிக்க வேண்டும் என்பதே அதன் உட்பொருளாகும். 'இந்திய பசிபிக் கூட்டமைப்பு திட்டம்' என்பது தெற்காசியாவில் அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்தின் வாயிலாக அரசியல் பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த இந்தியாவை கருவியாகப் பயன்படுத்தும் திட்டமாகும். இதன் பொருட்டே பாரத்மாலா, உதான், சாகர்மாலா போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் வாயிலாக இந்தியச் சந்தை மையப்படுத்தப்பட்டு சர்வதேச சந்தையுடன் இணைக்கப்படுகிறது.

44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றப்பட்டு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். 8 மணி நேர வேலை, நிரந்தர வேலை ஒழிக்கப்பட்டு ஒப்பந்தக் கூலி முறை, அமர்த்து-துரத்து (Hire and Fire) போன்ற கூலி அடிமை முறைகள் புகுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் தொழிற்துறை நெருக்கடியின் சுமைகளை நம் நாட்டுத் தொழிலாளர் மீது சுமத்துவதில் காங்கிரசு, பா.ஜ.க கட்சிகள் இரண்டும் ஒன்றே ஆகும். இவற்றை மாநில தரகு முதலாளித்துவக் (தி.மு.க.-அ.தி.மு.க) கட்சிகள் கேட்கத் திராணியற்றுக் கிடக்கின்றன. ஏனெனில் மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளும் மத்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தும் கட்சிகளே; இந்தியப் பாசிசத்தின் தொங்கு சதைகளே ஆகும்.

வேளாண்மைத் துறையை முற்றாக அரசு கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறது. மான்சாண்டோ, கார்கில், ரிலையன்ஸ், பில் கேட்ஸ் பவுண்டேசன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு உரம், நிலம், விதை, இடு பொருட்கள் என அனைத்தையும் தாரை வார்க்கிறது. 16 அம்ச திட்டம், ஒப்பந்த விவசாயம், குத்தகை விவசாயம் மற்றும் 'கிருஷி உதான்' போன்ற வாய்ச்சவடால் பெயர்களில் வேளாண்மையில் அந்நிய நிதி மூலதனத்தை கொட்டிக் குவிக்க இந்தாண்டு நிதிநிலை அறிக்கை வழிவகை செய்துள்ளது. வேளாண்துறையில் அரசாங்க முதலீடு குறைந்து வருவது; விவசாயிகளுக்கு வங்கி கடன் குறைந்து அவர்கள் கந்து வட்டிக் கடனில் சிக்கிக் கொள்வது; மானியங்கள் வெட்டப்படுதல்; இடுபொருட்களின் விலை உயர்வு; ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது; இந்திய உணவுக் கழகத்தை தனியார் மயமாக்குவது; ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு எனும் பெயரில் பொது விநியோகத் திட்டத்தை (PDS) ஒழித்துக் கட்டுவது போன்ற மத்திய மாநில அரசுகளின் புதிய காலனிய கார்ப்பரேட்-வேளாண் கொள்கைகளால் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இந்திய நாடு விவசாயிகளின் இடுகாடாக மாறி வருகிறது.

அண்மையில் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, மின்சார சட்டத் திருத்த வரைவு 2020, அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விலை உத்திரவாதம் வேளாண் சேவைகள் மீதான பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020, போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை-இந்திய விவசாயத்துறையில் உற்பத்தி முதல் விலை நிர்ணயம் வரை அனைத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் சட்டங்களை - பாசிச முறையில் ஏவியுள்ளது பாஜக ஆட்சி. இந்த புதிய காலனிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை மீதான மாநிலங்களின் உரிமையைப் பறித்து ஒரே வேளாண் சந்தை எனும் பெயரில் விவசாயத்துறை மையப்படுத்தப்படுகிறது. மேலும் உணவு தானியக் கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உணவு தானியக் கழகம் மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்துகிறது. இச்சட்டங்களை எடப்பாடி கும்பல் ஆதரிக்கின்றது.

இவை மட்டுமின்றி, இயற்கை வளங்கள்- மூலப்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதி திரட்டல் வடிவிலான காலனியச் சுரண்டலுக்கு வித்திடும் சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்ட வரைவை நிறைவேற்றியுள்ளது பாஜக ஆட்சி. இது இயற்கை வளங்கள் - மூலப்பொருட்கள் மீதான மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, மக்களின் சட்ட உரிமையைப் பறிக்கின்ற, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற, வரலாற்றுப் பொறுப்புடைமை என்கிற சர்வதேச தீர்மானத்தைக் கைவிடுகின்ற பாசிசச் சட்டமாகும்.

அமெரிக்காவின் கல்வித் துறையில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்க மோடி கும்பல் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. கல்வித்துறையை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் பங்குச் சந்தை சூதாடிகளுக்கு திறந்து விட்டதன் மூலம் அனைத்து சாதிகளிலுமுள்ள ஒடுக்கப்பட்ட-நடுத்தர வர்க்கத்து மாணவ-மாணவிகளின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் கார்ப்பரேட் மயமாக்கப்படுவதும்; அரசு மருத்துவமனைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதும் பெருந்திரளான உழைக்கும் மக்களை பொது மருத்துவத் துறையை விட்டு வெளியே துரத்தியுள்ளது. அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கும் மூடு விழா நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறியவாறு, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் அம்பானி-அதானி போன்ற அதன் தரகு முதலாளித்துவ நலன்களுக்காகவும்தான் அரசியல்- பொருளாதார- இராணுவக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இக் கொள்கைகளால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்த்த மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் பொருட்டு சாதி, மத, இன வெறிப் பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் பிரச்சினைக்கு தாழ்த்தப்பட்டவர்களே காரணம்; இந்துக்களின் வறுமைக்கு இசுலாமிய வந்தேறிகள் காரணம்; தமிழனின் வறுமைக்கு பீகாரியும், கன்னட மக்களும் காரணம் என்று பாசிசம் கட்டியமைக்கப்படுகிறது. நமது பிரச்சினைக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் இவ்வாறு தப்பித்து வருகின்றனர். இதில் காங்கிரசும் பா.ஜ.கவும் ஒன்றே ஆகும்.

பா.ஜ.கவின் இந்துத்துவப் பாசிசம் காங்கிரசின் பெருந்தேசிய வெறி பாசிசத்தின் தொடர்ச்சியே

1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்களைத்தான் அது பெற்றது. இத்தோல்விக்குப் பிறகு தனக்கென ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்காக இந்து மத வெறியைத் தூண்டும் தந்திரங்களை பா.ஜ.க வகுத்துக் கொண்டது.

1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க பெரும் எண்ணிக்கையிலான இடங்களைப் பெறுவதற்கு இந்து மதவெறியைத் தூண்டும் தந்திரங்கள் கைகொடுத்தன. இவ்விரு தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு பாராளுமன்றம் உருவானது. இந்த இரண்டு தேர்தலில் உருவான நாடாளுமன்றங்களிலும் பா.ஜ.க கணிசமான இடங்களைப் பெற்றிருந்தது. பா.ஜ.கவின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே அந்த நாடாளுமன்றம் இருப்பதா (அ) கலைக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பை அது பெற்றுவிட்டது. நாடாளுமன்றவாதக் கட்சிகள் தேர்தலில் தாம் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையற்று, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்பவுமில்லை. உடனடியாக மீண்டும் ஒரு தேர்தலில் மக்களை சந்திக்கவும் தயாராக இல்லை; ஆகையால், ஆளும் கட்சி உள்ளிட்டு எந்தவொரு கட்சியும் தன்னை பகைத்துக் கொள்ள தயாராக இல்லை என பா.ஜ.க மதிப்பீடு செய்தது. நாடாளுமன்றவாதக் கட்சிகளைப் பற்றிய இந்த மதிப்பீடே பா.ஜ.க வின் மதவெறி, அராஜக அணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தது. 1989ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. வி. பி. சிங் சந்தர்ப்பவாத முறையில் பா.ஜ.கவின் ஆதரவு பெற்று ஆட்சியை அமைத்தார். தனது ஆதரவு இல்லாமல் வி. பி. சிங் அரசாங்கம் நிலைக்க முடியாது என்ற இறுமாப்புடன் இந்துமத வெறியைத் தூண்டுவதற்காக அயோத்திக்கு அத்வானி இரத யாத்திரை நடத்தினார். அதேபோல 1991-ல் பி.வி.நரசிம்ம ராவும் பா.ஜ.கவின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். நரசிம்மராவ் ஆட்சி ஆதரவுடன் முரளி மனோகர் ஜோஷி காஷ்மீர் யாத்திரை நடத்தினார். இந்த அனுபவங்களிலிருந்து நாடாளுமன்றவாதக் கட்சிகளைப் பற்றிய தனது மதிப்பீடு சரியானது என பா.ஜ.க உணர்ந்தது.

சி.பி.எம், சி.பி.ஜ போன்ற திரிபுவாதக் கட்சிகள் கூட பாஜகவுடன் நேரடியாக ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக் கொள்ளவில்லை என்றாலும், அதனுடன் மறைமுகமாக நட்புறவை நாடின. வி.பி.சிங் அரசாங்கத்தின் கடைசி நாட்களில், அந்த அரசாங்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு, அத்வானியுடன் ஓர் உடன்பாட்டிற்கான முயற்சியில் ஜோதிபாசு ஈடுபட்டார்‌. அத்வானியின் இராம இரத யாத்திரைக்கு எதிராக சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் குரல் எழுப்பின. இருப்பினும் சி.பி.எம் கட்சியின் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்ற மேற்கு வங்கத்தின் பகுதிகளில் அத்வானியின் இரத யாத்திரை பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றவாதக் கட்சிகள் சந்தர்ப்பவாதமான முறையில் பா.ஜ.க.வுடன் உறவு கொண்டன. பா.ஜ.க. இந்துமத வெறியைப் பிரச்சாரம் செய்வதற்கும், அராஜகச் செயல்களில் ஈடுபடுவதற்கும் துணைபோயின.

காங்கிரசு கட்சி பெரும்பான்மை பெற்று, தொடர்ந்து ஒரு நிலையான ஆட்சியைத் தர முடியாதென்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தன. காங்கிரசு கட்சிக்கு மாற்றாக பா.ஜ.க ஆளும் கட்சியாக உருவாவதற்கு ஏகபோக தரகு முதலாளிகளில் ஒரு பிரிவினர் பா.ஜ.க விற்கு ஆதரவு தந்தனர்.

இந்திரா காங்கிரசு கட்சியும், நரசிம்மராவ் ஆட்சியில் "பொதுத் துறையைத் தனியார் மயமாக்குதல்" மற்றும் "சந்தைப் பொருளாதாரத்தைக் கடைபிடித்தல்" என்ற கொள்கைகளை ஏற்று அமல்படுத்த துவங்கியதும், இதன் விளைவாக காங்கிரசு கட்சிக்கும் பா.ஜ.கவிற்கும் இடையில் பெயரளவில் இருந்த சித்தாந்த வேற்றுமை ஒழிந்தது. போலி மதச்சார்பின்மையைக் கடைபிடித்து வந்த காங்கிரசு கட்சி இந்து மத வெறியைப் பின்பற்றுவோரின் வாக்குகளைப் பெறும் பொருட்டு கள்ளத்தனமாக இந்து மதவெறியைப் பயன்படுத்தியது. இது இந்து மதவெறிப் பாசிசம் வலுவடைவதற்கு பயன்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க உருவாவதை ஆதரித்தது.

பா.ஜ.க, காங்கிரசு கட்சி ஆகிய இரண்டுமே பாசிசக் கொள்கைகளைத் தான் பின்பற்றுகின்றன. நாட்டை அடகு வைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்துதல், அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் குவித்தல்; இந்தியாவில் ஒரு பாசிச ஆட்சி முறையை உருவாக்குவதற்கு வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி முறையை நிறுவுதல்; தேசிய இனங்களை ஒடுக்குதல் மற்றும் தேசிய வெறியைக் கடைபிடித்தல்; சாதி மத வெறியைத் தூண்டுதல்; இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தல்; காஷ்மீரை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தல்; வட கிழக்கு மாகாணங்களின் உரிமைகளை நசுக்குதல்; தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய இனத்து மொழிகளையும் ஒடுக்குதல் ஆகியவற்றில் இவ்விரு கட்சிகளிடையே உடன்பாடு உள்ளது. எனினும் காங்கிரசு கட்சி ஒரு போலி மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கிறது. இந்துத்துவம்-இந்து ராஜ்ஜியம் என்பது பா.ஜ.க மற்றும் அதன் சங் பரிவாரங்களின் சித்தாந்தமாக உள்ளது. போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு கட்சி இந்து மதவெறியை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் பயன்படுத்துவதுடன், சிறுபான்மையினர்- இசுலாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்டுவதற்கு முயற்சிக்கிறது. மதம் குறித்த காங்கிரசின் தத்துவம் ஒரு கதம்பவாதமாக இருக்கிறது. அது இந்து மத வெறியைக் காரியவாதமாக (Pragmatism) பயன்படுத்துகிறது. இந்துத்துவம், இந்து ராஜ்ஜியத்தை தமது அடிப்படையாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வும் பிற காவிச் சட்டை அமைப்புகளும் ஊசலாட்டமின்றியும், உறுதியுடனும் இந்து மதவெறியைத் தூண்டுவதை தனது செயல் தந்திரங்களுக்கு அடிப்படையாகக் கொள்கிறது. இதுவே இவ்விரு கட்சிகளுக்கிடையிலுள்ள வேற்றுமை. இவ்விரு கட்சிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமையே முதன்மையான அம்சமாக இருக்கிறது. இவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமை இரண்டாம் நிலையானது தான். ஆகவே காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் பிற காவிச் சட்டைகளுடன் நல்லிணக்கம் காண முயல்கிறார்கள்.

பாபர் மசூதி இசுலாமியருக்கு சொந்தமானது என்பதற்கு மாறாக "அது ஒரு சர்ச்சைக்குள்ளான கட்டிடம்" என்று காங்கிரசு கட்சி குறிப்பிட்டது. கி.பி. 1528 க்கு முன்பு பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது நிரூபிக்கப் படுமானால் மசூதியை விஸ்வ ஹிந்து பரிசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைபாட்டை காங்கிரசு கட்சி எடுத்தது. பின்பு, விட்டுக்கொடுத்து சாந்தப்படுத்தும் கொள்கைகளால் எதையுமே சாதிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதும் ஒரு திடமான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் வழக்கு மன்றங்களின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரசு கட்சி தீர்மானித்தது.

மசூதி இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அதிகாரங்களை காங்கிரசு பிரதமரிடம் பா.ஜ.க அல்லாத மற்ற நாடளுமன்றக் கட்சிகள் அளித்திருந்தும் மசூதிப் பிரச்சினையை பா.ஜ.கவைச் சேர்ந்த உத்திர பிரதேச முதல்வரிடம் விட்டுவிட்டது காங்கிரசு கட்சி. பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் 6 மணிநேரம் மத்திய ஆட்சி (காங்கிரசு) செயலற்று இருந்தது. இராமர் சிலை மீண்டும் அங்கே வைப்பதற்கும், அதே இடத்தில் இராமருக்கு ஒரு சின்ன கோவிலைக் கட்டுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து அனைவரையும் பாதுகாப்பு படைகள் வெளியேற்றிய பிறகும், மீண்டும் அந்தச் சிலைகளுக்கு வழிபாடு தொடர்ந்து நடப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இவை எல்லாம் எவ்வாறு நிகழ்ந்தன என்று கேட்டால் பா.ஜ.க நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என காங்கிரசு கட்சி காரணம் கூறியது. இது ஒரு நயவஞ்சகமான பதிலே தவிர, உண்மை அல்ல. காங்கிரசு ஆட்சியாளர்கள் பாசிசக் கொள்கைகளை அமல்படுத்த தீர்மானித்த காலத்திலிருந்தே காங்கிரசு ஆட்சியாளர்கள் இந்து மத வெறிச் சக்திகளுக்கு பல வழிகளில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் இணக்கம் காண முயற்சித்து வந்துள்ளார்கள். இந்து மதவெறியைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜம்மு தேர்தலில் இந்திரா காங்கிரஸ் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்துமத வெறிச் சக்திகளுடன் கூடிக் குலாவியது அனைவரும் அறிந்த உண்மையாகும். (கடந்த ஆண்டு பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து சங்பரிவாரங்களிடம் ஒப்படைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை காங்கிரசு கட்சி வரவேற்று இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு 1984-ல் நடைபெற்ற தேர்தலில் இந்துமத வெறியைப் பயன்படுத்துவது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தந்திரத்தின் அடிப்படையாக இருந்தது.

1985இல் ஷாபானு என்ற இஸ்லாமியப் பெண்ணின் ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 125 வது பிரிவு இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் எனவும், அதன்படி ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் எனவும் ஒரு தீர்ப்பையளித்தது. குற்றவியல் சட்டத்தின் 125 வது பிரிவு இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லி ஒரு புதிய சட்டம் இயற்றுமாறு இஸ்லாம் தலைவர்கள் [இஸ்லாமிய மதவாதிகள்] ராஜீவ் காந்தியை வலியுறுத்தினர். இஸ்லாம் மத வெறியர்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு ராஜீவ் காந்தி இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும்படியான ஒரு புதிய சட்டத்தை இயற்றினார். இவ்வாறு செய்த இராஜீவ் காந்தி இந்து மதவெறியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, 30 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியை இந்துக்களுக்கு திறந்துவிட்டார். இவ்வாறு இந்திரா காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இரண்டு மதவாத சக்திகளையும் தங்களுக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றனர். காங்கிரசு கட்சியின் இத்தகைய மதவாத ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், 1981ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இடங்களைப் பெற்று தோல்வியடைந்த பா.ஜ.க. தனக்கென ஒரு இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக துணிச்சலுடன் இந்து மத வெறியைத் தூண்டும் பாசிச செயல்களில் தீவிரமாக ஈடுபடத் துவங்கியது.

காங்கிரசின் மதவாத ஆதரவு செயல்களை பா.ஜ.க தனது இந்துமத பாசிசக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டது.

பா.ஜ.கவும், பிற காவிச்சட்டை அமைப்புகளும் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளும் நடவடிக்கைக்காக 1986 முதல் 6 ஆண்டுகளாக தயாரித்து வந்தன. இக்காலம் முழுவதிலும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திரா காங்கிரஸ் கட்சி இந்து மதவெறி சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கையே கடைபிடித்து வந்தது.

1989-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வி. பி. சிங் தலைமையின் கீழ் ஜனதா கட்சியும், தேசிய முன்னணியும், ஒருபுறம் இடதுசாரி முன்னணியுடன், வெளிப்படையான தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டன. மறுபுறம் சந்தர்ப்பவாதமாக பா.ஜ.கவுடன் மறைமுகத் தேர்தல் உடன்பாடு கொண்டது. இத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. நரசிம்மராவ் அமல்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை, பொதுத் துறையைத் தனியார் மயமாக்குதல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தைக் கடைபிடித்தல் ஆகியவற்றின் மூலம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அகலத் திறந்து விடுதல் மற்றும் நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடகு வைக்கும் கொள்கையை - அப்போதே வி.பி.சிங் அரசாங்கம் ஏற்று அதை அமல்படுத்த முயற்சி செய்தது. ஆனால் இந்த தேசத் துரோகக் கொள்கையை காங்கிரஸ் கட்சியோ, திருத்தல்வாதக் கட்சிகளோ (CPM, CPI) எதிர்த்துப் போராடவில்லை.

தனது ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கையை மூடி மறைப்பதற்காகவும் ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல் மற்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் வி. பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். இதனால் ஏற்பட்ட உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காகவும், இந்துமத வெறியைத் தூண்டுவதன் மூலம் உருவாக்கப்பட்ட தனது இந்து ஓட்டு வங்கியை திடப்படுத்திக் கொள்ளும் பொருட்டும், இந்த நெருக்கடியான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு தனது வலிமையைக் கூட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் பா.ஜ.கவின் அத்வானி இராம இரத யாத்திரை நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பா.ஜ.க ஈடுபட்டது. இவை அனைத்திற்கும் இந்திரா காங்கிரஸ் கட்சி துணை போனது.

மீண்டும் இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, நரசிம்மராவ் கும்பல் "கருத்துரிமை" என்ற பெயரால் தனது சிறுபான்மை ஆட்சியை நடத்தும் பொருட்டு பா.ஜ.கவுடன் கூடிக்குலாவியது. நாடாளுமன்ற அவைத் தலைவர் (சபாநாயகர்) தேர்தலில் பா.ஜ.கவுடன் உடன்பாடு கண்டது. நாட்டை அடகு வைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துவதற்கும் பா.ஜ.கவின் ஒத்துழைப்பைப் பெற்றது. பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் காஷ்மீர் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து தந்தது. 1992 ஜூலை மாதத்தில் கரசேவகர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து இறுதியாக காவிச்சட்டை அமைப்புகள் கரசேவையின் மூலம் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய போது, கைகட்டிக் கொண்டு அதை வேடிக்கைப் பார்த்தது. இந்து மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடி பாபர் மசூதியை இடிக்காமல் தடுத்து நிறுத்த நரசிம்மராவ் அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே, இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி காலத்திலிருந்தே காங்கிரசு ஆட்சியாளர்கள் இந்து மதவாத சக்திகளுடன் கூடிக்குலாவி வந்ததும், நரசிம்மராவ் அரசாங்கம் இந்து மதவெறி சக்திகளுடன் செய்த கூட்டுச் சதி தான் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதற்கு உண்மையான காரணம். இதை மூடி மறைப்பதற்காகத்தான் பா.ஜ.க துரோகம் செய்து விட்டது என்று கூறி காங்கிரஸ் திசை திருப்பியது.

பாசிச இந்திரா ஆட்சியில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்த போது ஒரே நாளில் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தது. ஜனநாயகத்தின் குரல் வளையை பாசிசம் கொண்டு அறுத்தது இந்திரா கும்பல். ஆனால் தடைசெய்யப்பட்ட இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யாமல் மசூதி இடிப்பை வேடிக்கைப் பார்த்தது பாசிச காங்கிரஸ் கட்சி.

இதையெல்லாம் பார்க்கும் போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுதும் தாண்டவமாடிய படுகொலைகள், கொள்ளைகள், தீ வைப்புச் சம்பங்களுக்கு காங்கிரசு கட்சி துணைபோனது என்றே சொல்லலாம். பம்பாயில் நடந்த மதக் கலவரங்களில் மகாராஷ்டிரா மாநில, காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட முறை இதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.

பாசிச காங்கிரசு ஆட்சி இந்துமத வெறி பாசிசக் கும்பலின் காவிச் சட்டை அமைப்புகளின் மதக் கலவரங்களுக்குத் துணை போனதுடன் நின்றுவிடவில்லை. அவர்களுக்கு விட்டும் கொடுத்தது.

·               வாஜ்பாய் உண்ணாவிரதம் இருந்தபோது முன் வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி ஏற்றது;

·               பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்ட இராமன் சின்னக் கோவில் வழி பாட்டுக்கு அனுமதி அளித்தது.

·               அயோத்தியில் பாபர் மசூதி இடத்தை மத்திய அரசு கையகப்படுத்திய போதிலும் அங்குள்ள இராமன் சின்னக் கோவிலை நிலை நிறுத்தும் முயற்சியில் அவசரச் சட்டம் பிறப்பித்தது;

·               அங்கேயே மசூதியைக் கட்டுவதென அளித்திருந்த வாக்குறுதியைக் கைவிட்டது;

·               "இந்துத்துவத்தை" தானும் ஏற்பதாக முடிவெடுத்தது;

·               சிவ சேனையை தடை செய்ய மறுத்தது;

இவையனைத்தும் நரசிம்மராவ் கும்பலின் ஆட்சி காவிச் சட்டை அமைப்புகளின் தாக்குதல்களுக்கு விட்டுக் கொடுப்பதைத் தான் காட்டுகிறது.

சோனியா - மன்மோகன் கும்பல் இலங்கை மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை திணிப்பதற்காக, ராஜபக்சே கும்பல் ஈழத் தமிழினத்தின் மீது நடத்திய இன அழிப்பு இறுதிப் போருக்கு துணைபோனது. அந்தப் போரில் இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது. இறுதிப் போரில் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிப்பதற்கு துணை போனது. ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய காங்கிரசு கும்பலுக்கு எல்லா விதத்திலும் தி. மு. க உடந்தையாக இருந்தது. இது அக்கட்சியின் அண்டை நாடுகள் மீதான இந்திய விரிவாதிக்கவாத வெறியைக் காட்டுகிறது.

இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு இந்தியா, அமெரிக்கா இரண்டு நாடுகளுமே உதவி செய்தன. இரசிய-சீன ஏகாதிபத்திய அரசுகளும் ராஜபக்சேவிற்கு உதவின. பிரிட்டனும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்தது. ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போர்க் குற்றங்களுக்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் பங்குண்டு. காங்கிரசை ஆதரித்த வகையில் தி.மு.க.விற்கும் பங்குண்டு. எனவே இவர்கள் போர்க் குற்றவாளிகளே.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதற்காக, இராஜபக்சே கும்பலைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகப் போர்குற்றங்களுக்கான விசாரணை தேவை என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது தமிழின அழிப்புப் போர் என்பதையே அங்கீகரித்து விடவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத்தமிழர்களுக்கு அற்பச் சலுகைகள் வழங்குவது பற்றி பேசியது. அமெரிக்காவின் ஐ.நா தீர்மானம் தமிழர் பகுதியிலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றக் கோரவில்லை. தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்கும் போக்கை எதிர்க்கவில்லை. காங்கிரஸ் அரசு இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து அந்த அளவிற்கு சிங்கள இனவெறி அரசுக்கு உற்ற துணைவனாக காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு ஈழத் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்தது.

மன்மோகன் கும்பல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமது சொந்த நாட்டுத் தமிழக மீனவர்களுக்கும் துரோகமிழைத்தது. வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமையை இலங்கை அரசு தடை செய்து வருகிறது; எல்லையை மீறினார்கள் என்று கூறி 1000 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. பல்லாயிரக் கணக்கானோரை அடித்து முடமாக்கியுள்ளது. அவர்களின் படகுகளை உடைத்துள்ளது. அதை காங்கிரஸ் கும்பல் ஆதரித்தது. தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத் தீவை திரும்பப் பெற மறுக்கிறது. அது இந்தியாவின் பகுதி அல்ல என்று நீதிமன்றத்தில் அடாவடி பேசுகிறது. இவ்வாறு தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையையும் காங்கிரசு கும்பல் அழித்தது. இதிலும் பாஜக-விற்கும், காங்கிரசுக்கும் ஒரே கொள்கையாகும்.

சங்பரிவாரத்தின் இந்து மதப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடுவதும் கூட பொய்யானதாகும். காங்கிரசு கட்சியின் ஆட்சியில், அக்கட்சியின் மதவாதத்துடன் சமசரப்படுத்திக் கொள்ளும் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு மதவாதச் சக்திகள் வலிமை பெற்றவையாகிவிட்டன. காங்கிரஸ் ஆட்சியில் அரசு எந்திரம் மதவாதமயமாக்கப்பட்டது. காங்கிரஸ் கும்பல் பயங்கரவாதத்தையும் மதவாதமாக்கியது. இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாகப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான இலக்குகளாகக் கருதுகிறது; அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் அமைப்புகளான பஜ்ரங் தளம், வி.ஹெச்.பி. ஆகியவையும் பா.ஜ.க.வின் தலைவர்களும் பாபர் மசூதியை தரை மட்டமாக்குவது போன்ற மதவாதக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கூடத் தப்பித்துக் கொள்ள காங்கிரஸ் ஆட்சியில் அனுமதிக்கப்பட்டனர். குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து மதவாத ஆர். எஸ். எஸ் காடையர்கள் காங்கிரசு ஆட்சியில் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

"இந்துத்துவமே மதச் சார்பின்மைக்கு மிகச்சிறந்த, சக்தி வாய்ந்த பாதுகாவலன்" என்று காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானம் கூறுகிறது.

அடிப்படையான கொள்கைகளைப் பொறுத்தமட்டில், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்டுசிகளுக்குமே வேறுபாடில்லை. பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளை மையமாகக் கொண்டு இரண்டு எதிரெதிரான தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் பெருமளவிற்கு வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தங்களின் நலன்களுக்குச் சேவை செய்யக் கூடிய பொருளாதாரத் திட்டங்களை நிரந்தரமாக அமல்படுத்தவும், நாடாளுமன்ற ஆட்சி முறையின் நெருக்கடியைப் பயன்படுத்தி இந்திய அரசை பாசிச மயமாக்கவும் முயல்கின்றனர். இன்று நாட்டிலுள்ள நாடாளுமன்ற ஆட்சி முறையை நீக்கிவிட்டு, ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சி முறையை உருவாக்க முயல்கின்றனர்.

எனவே, புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும், இந்து மதவாதப் பாசிசத்தை கட்டியமைப்பதிலும் காங்கிரசிற்கும் பா.ஜ.கவிற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. இக்கட்சிகளை ஆதரிக்கின்ற பிற நாடாளுமன்றவாதக் கட்சிகள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையிலும் எவ்வித வேறுபாடும் இல்லை.

இக்கட்சிகளுக்குள்ள வேறுபாடு என்னவென்றால், எந்த ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சார்ந்த கும்பல் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதிலும், எத்தகைய அரசாங்கம் அமைப்பது என்பதிலும் தான் மாறுபடுகின்றன. அதாவது இந்திய அரசை ஒரு இந்துத்துவப் பாசிச அரசாகக் கட்டியமைப்பதா அல்லது பெரும் தேசியவாத பாசிச அரசாகக் கட்டியமைப்பதா என்பது தான் பா.ஜ.க விற்கும் காங்கிரசிற்கும் உள்ள வேறுபாடு ஆகும். இந்த இரு பாசிசக் கட்சிகளை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலுள்ள வேறுபாடும் இதுவே ஆகும்.

நாட்டை நாசமாக்கி வரும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைளை செயல்படுத்துவதில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் வேறுபாடு இல்லை. நெருக்கடிகள் முற்றும் போது காங்கிரசும், பா.ஜ.க.வும் பரஸ்பரம் ஆதரவளித்துதான் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. மேலும் மிகவும் பிரச்சனை முற்றினால் ஒரு தேசிய அரசு அமைக்க இரு கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாஜ்பாய் காலத்திலேயே தேசிய அரசு என்ற திட்டத்தை பா.ஜ.க வினர் முன்வைத்தனர்.

இந்திய அரசை பாசிச மயமாக்குவதில் பா.ஜ.க இந்து மதவாதத்தைப் பயன்படுத்துகிறது எனில், காங்கிரஸ் கட்சி பெருந்தேசிய வாதத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி மதவாதத்தை காரியவாத அடிப்படையில் பயன்படுத்தும் கட்சியே. காங்கிரசும், பா.ஜ.க வும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே ஆகும். இந்து மதவாதப் பாசிசத்திற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியில் பங்கு பெறுவதற்கு தகுதி வாய்ந்ததுமல்ல. இவ்விரு கட்சிளை எதிர்த்து தான் இந்திய மக்கள் புதிய காலனியாதிக்கத்தையும் பாசிசத்தையும் முறியடிக்க முடியும். ஏகாதிபத்திய புதிய காலனிய எதிர்ப்பையும் பாசிச எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். எனவே காங்கிரசும், பா.ஜ.க வும் இந்தியப் பாசிசத்தின் முதன்மையான இலக்குகளாகும். இவ்விரு கட்சிகளையும் ஆதரித்த - ஆதரிக்கின்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் பாசிசத்தின் தொங்கு சதைகளாக விளங்குவதால் அவை இரண்டாம் நிலை இலக்குகளாகும்.

பாரதிய ஜனதா கட்சி என்பது சுதந்திரமாக இயங்கும் ஓர் அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரம் என்ற காவி சட்டை அமைப்புகளின் சித்தாந்தமான இந்துத்துவத்திற்கும், அவற்றின் 'இந்து ராஷ்டிரம்' என்ற அரசியலுக்கும் வடிவம் தரும் கட்சியே பாரதிய ஜனதா கட்சியாகும். பாஜக ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் தனது செயல் தந்திரங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டாலும் அது ஒருபோதும் 'இந்து ராஷ்டிரத்தை' கைவிடாது. அதன் செயல் தந்திரங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, அது இந்து மதப் பாசிசக் கொள்கைகளை கைவிட்டு விட்டது என்றோ, மாற்றிக் கொண்டது என்றோ நம்புவது அப்பாவித்தனம். உதாரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'வளர்ச்சி' என்ற தேர்தல் முழக்கத்தை முதன்மைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் வளர்ச்சியின்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மையை மூடி மறைக்க இந்து ராஷ்டிரத்தை நடைமுறைப்படுத்தத் துவங்கியது.

இந்தியாவை, இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஆர். எஸ். எஸ் திட்டத்தின்கீழ் பாஜக செயல்பட்டுவருகிறது. அதாவது ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய தாராளவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய இந்து ராஷ்டிரமாக இந்தியாவை மாற்றிவிட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் முழக்கங்களினால் தலைமை தாங்கப்படும் ஆளும் வர்க்கத்தினருக்கும், ஏகாதிபத்தியம், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தொண்டூழியம் செய்வதற்கு மதவாதம்தான் பாஜகவினுடைய மிக முக்கியமான கருவியாகும்.

பாஜகவினால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரத்தின் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இந்து ராஷ்டிரம் செயல்படுகிறது. நடைமுறையில் பிற்போக்கு ஆளும் அமைப்புக்கு சேவை செய்வதில் காங்கிரஸ் கும்பலும், பாஜக கும்பலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

பாஜகவின் 'வளர்ச்சி' முழக்கம் ஒரு பித்தலாட்டமே!

காங்கிரசின் 'பாரத் நிர்மான்' முழக்கத்திற்கும், பாஜகவின் 'வளர்ச்சி' முழக்கத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. பாஜகவின் 'குஜராத் மாதிரி வளர்ச்சியில்' வளர்ச்சி குறித்த சாரம் ஏதுமில்லை.

இவ்விரு கட்சிகளும் இந்த நாட்டை ஆட்சி செய்தபோது, இந்த இரண்டு கட்சிகளின் கொள்கைகள், குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றாகவே இருந்தன. இந்த இரண்டு கட்சிகளும் புதிய தாராளவாத கொள்கைகளையே பின்பற்றின. அதாவது புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளையும், விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளையும், ஏழை எளிய மக்களுக்கு எதிரான கொள்கைகளையும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளையும், சிறுபான்மை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான கொள்கைகளையே பின்பற்றின.

இந்த இரண்டு கட்சிகளின் குறிப்பான வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையில் வேறுபட்ட சாயல்களுக்கு (Shades) அழுத்தம் தரபட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த இரண்டு கட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் ஒத்ததன்மை வாய்ந்தவைதான். இந்த இரண்டு கட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள், தொழில் துறையிலும் வேளாண்மைத் துறையிலும் பெரும் கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்து தருவது, நேரடி அன்னிய மூலதனத்தை ஊக்குவிப்பது, பொது விநியோகத் துறை போன்ற மக்களின் நலன்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது போன்றவையே இவ்விரு கட்சிகளின் திட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

இருப்பினும், இந்தியாவிலேயே முதல் மாநிலம் மோடி ஆண்ட குஜராத் மாநிலம் எனவும், 'குஜராத் மாதிரி வளர்ச்சி' எனவும் பாஜக பீற்றுகிறது. இது சுத்தமான மோசடி பிரச்சாரம் என்பது டிரம்ப் வருகையின் போது எழுப்பப்பட்ட சுவர்கள் 'வளர்ச்சி'யை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. மேலும் பின்வரும் தகவல்களும் குஜராத் வளர்ச்சி என்பது பித்தலாட்டமே என்பதை நிரூபிக்கின்றன.

'குஜராத் மாதிரி வளர்ச்சி' என்பதை பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு பார்க்கும்போது அது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்நிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுதல் முதல் பொதுநலன் மற்றும் கல்வியறிவு கொடுத்தல் வரையிலான அளவுகோள்களில் மற்ற மாநிலங்களை விட குஜராத் பின்தங்கியே உள்ளது. 2011-2012ஆம் ஆண்டு தொழில் வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கையில் குஜராத்திற்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது. குஜராத்தில் தனிநபர் வருமானம் மற்ற மாநிலங்களை விட குறைவே. இந்தியாவின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் குஜராத் இந்தியாவிலேயே 17வது இடத்தில் உள்ளது. அந்நிய முதலீடுகளை குஜராத் மிக அதிகமாக ஈர்த்துள்ளது என்பதும்கூட உண்மை அல்ல. குஜராத் அதிலும் முதன்மை இடத்தில் இல்லை. தேசிய மாதிரி ஆய்வுக் கழகத்தின் (NSSO) ஆய்வின்படி சத்துணவு, கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், நுகர்வுப் பொருட்களின் விலை குறியீடு, கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியம் இவை அனைத்திலும் இந்திய அளவில் குஜராத் மிகவும் பின்தங்கியே உள்ளது. ஆனால் மோடி கும்பலோ "மிகப் பெரும் பித்தலாட்டங்களின்" மூலம் குஜராத் மாநிலம் முதன்மை மாநிலம் என்று வாய்ச்சவடால் அடிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்களின் மாபெரும் மோசடியே 'குஜராத் வளர்ச்சி' என்ற நாடகம். குஜராத்தின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியே.

1980 ஆம் ஆண்டுகளில், சங்பரிவாரம் இந்துத்துவம் என்ற முழக்கத்தின் மீது கவனத்தை குவிப்பதன் மூலமாகவும், ஒரு அகண்ட பாரத அரசியல் அடையாளத்தை உருவாக்குவதன் மூலமாகவும், பாஜகவிற்கு இந்து மதவாத ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பிரதேசத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டது.

'அயோத்தி ராமர் கோவிலுக்கான கிளர்ச்சி' என்ற ஒரு அரசியல் இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கம் 1992இல் பாபர் மசூதியை தரைமட்டம் ஆக்குவதற்கு இட்டுச்சென்றது. ஆனால் சங்பரிவாரங்கள் மசூதியை இடித்த பிறகு வந்த தேர்தல்களில் அது எதிர்பார்த்த அரசியல் இலாபத்தை அடைய முடியவில்லை. இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களின் அனுபவத்தை சங்பரிவாரம் ஆய்வு செய்தது.

1977 மற்றும் 1984 தேர்தல்கள் நீங்கலாக, அதாவது 1975-77ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலை பிரகடனம் செய்தபோது, அரசு நிறுவனங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்கள் நிகழ்ந்ததும், இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட போதும், முறையே பிரதான பிரச்சினைகளாக இருந்தன.

1952இல் இருந்து நடைபெற்ற ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் 'ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் வளர்ச்சி', 'வறுமையை ஒழிப்போம்' போன்ற பொருளாதார முழக்கங்கள் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் மையமான முழக்கமாக இருந்த இந்துத்துவா என்ற முழக்கத்தால் பெரும்பான்மையான இந்து மதவாதிகளைக்கூட கவர்ந்து இழுப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதை இந்துத்துவ வெறி கொண்ட அமைப்புகள் உணர்ந்தன.

மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சாதி, மதவாதம், வகுப்புவாத மற்றும் பிரதேசவாத அரசியலைப் பின்பற்றும் சுயநல அரசியல் சக்திகளுடன் கூட்டணி அமைத்தல் என்பதை செயல்தந்திரமாக பின்பற்றின. சங்பரிவாரம் மற்றும் பாஜகவின் அரசியல் செயல்தந்திரம் பற்றிய இத்தகைய நிலைபாடுதான், "வளர்ச்சியுடன் இணைந்த இந்துத்துவம்" (Development plus Hindutva) என்ற அரசியல் கொள்கைக்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் முதன்மை தருவது என்ற கொள்கைக்கும் இட்டுச்சென்றது.

குஜராத் மாதிரி மதக்கலவரங்கள், குஜராத் மாதிரி வளர்ச்சி என்ற இரண்டு செயல் தந்திரங்களையும் பின்பற்றி குஜராத்திலும், மத்தியிலும், பிற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க துவங்கியது பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல். இவ்வாறாக 'வளர்ச்சியுடன் இணைந்த இந்துத்துவம்' என்ற செயல் தந்திரத்தின் மூலம் 2014ல் ஆட்சியைப் பிடித்தது பாஜக. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலமும், ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலித் தலைவர்களை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டதன் மூலமும் தன்னுடைய பிராமணிய, உயர் சாதிக்கான கட்சி என்ற தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களின் வாக்குகளைப் பெற்றது. அதற்கேற்ற வகையில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சலுகைகளை அறிவித்தது. சாதிவாத, பிரதேசவாத கட்சிகளுடன் கூட்டணிக்கான இத்தகைய அறிவிப்புகளை அது வெளியிட்டது.

பாஜக, சாதி முறைகள் நிலவுவதற்கான அடித்தளமாக விளங்குகின்ற நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் மாற்றம் கொண்டு வராமலும், நிலப்பிரபுத்துவத்தின் மேற்கட்டுமானமாக உள்ள சாதிய படிநிலை முறை, பரம்பரை தொழில் பிரிவினை, அகமண முறைகளை ஒழிக்காமலும், சாதி சீர்திருத்தம் பேசியது - அதாவது பார்ப்பனிய வர்ணாசிரமத்தைப் பாதுகாத்துக் கொண்டே சாதிய சீர்திருத்தம் பேசுகிறது. காங்கிரஸ் கட்சியும் பார்ப்பனிய வர்ணாசிரமத்தைப் பேணி பாதுகாக்கும் கட்சியே ஆகும். இச்சீர்திருத்தம் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து ஆளும் வர்க்கங்களை பாதுகாப்பதற்காகவும், பார்ப்பனிய வர்ணாசிரமப் பிற்போக்கை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை வென்றெடுக்கும் பார்ப்பனிய பன்னாடைத் தனமேயாகும்.

இந்துத்துவ பாஜக எதிர்ப்பு பேசுகின்ற காங்கிரஸ் கட்சியும்; பாஜக எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு, சமூக நீதி, தலித்தியம் பேசுகின்ற அனைத்து நாடாளுமன்றவாதக் கட்சிகளும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் என்ற புதிய தாராளக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகள்தான். இதில் எந்த ஒரு கட்சியும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில்லை. இத்தகைய அந்நிய மூலதன ஆதரவு நிலைபாடுகளுடன் செயல்படுவதால் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டுப் போயின. இந்த கட்சிகள் எதுவும் பாஜக, காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் பேசவும் தயாரில்லை. அதற்கு பதிலாக சாதிவாத, பிரதேசவாத வாக்கு வங்கி அரசியலை முன்வைத்தன.

உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் செயல்பட்டுவரும் கட்சிகள் யாவும், இந்துத்துவ எதிர்ப்பு, சமூகநீதி பேசுகின்ற பிற்படுத்தப்பட்ட சாதி கட்சிகளும், தலித்தியம் பேசுகின்ற மாயாவதி, திருமாவளவன், பாஸ்வான் போன்றவர்களும் பாஜகவின் இந்து மதவாதத்தை எதிர்க்கின்றனரே ஒழிய பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. பார்ப்பனிய வர்ணாசிரம எதிர்ப்பில் கூட தலித்திய கட்சிகள் ஒடுக்கப்பட்ட சாதிகள் தரப்பிலிருந்து அடையாள அரசியலைத்தான் முன்வைத்தன. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு பற்றியோ, நிலச்சீர்திருத்தம் பற்றியோ இக்கட்சிகள் எதுவும் பேசவில்லை. நிலப்பிரபுத்துவ சாதி முறைகளான பரம்பரை தொழில் பிரிவினை, சாதிய படிநிலை முறை, அகமண முறை ஒழிப்பு பற்றி எந்த திட்டமும் இல்லாமல் பார்ப்பனிய எதிர்ப்பு சாதி சீர்திருத்தங்களை முன்வைக்கின்றன. காங்கிரசின் ஊழல் எதிர்ப்பு பேசி அரசியலுக்கு வந்த ஆம் ஆத்மி கும்பல் பின்னாளில் காங்கிரசுடனே கை கோர்த்தது. அக்கட்சியும் தரகு முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்குச் சேவை செய்து மக்களுக்கு துரோகம் செய்யும் அமெரிக்க எடுபிடி கட்சியே ஆகும்.

முலாயம் சிங்கின் 'சமாஜ்வாடி', லாலுவின் 'ராஷ்டிரிய ஜனதா தளம்', நிதிஷ்குமாரின் 'ஐக்கிய ஜனதா தளம்' போன்ற சமூக நீதி பேசும் மாநிலக் கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் ஒற்றுமை பேசி ஆட்சிக்கு வந்து பார்ப்பன உயர்சாதியினருடன் சமரசம் காண்பதன் மூலமும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலமும் மக்களைப் பிளவு படுத்துகின்றன. மனுவாத எதிர்ப்பு பேசி தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை தாழ்த்தப்பட்ட மக்கள்தான் வெல்ல முடியும்; பிற சாதியினருடன் சேர முடியாது என்று தலித்தியம் பேசுகின்ற மாயாவதி, திருமா போன்ற தலித் தலைவர்கள் 'அடையாள அரசியலைப்' பேசுகின்றனர். ஆனால் உ.பி.யில் மாயாவதி பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினருடன் சேர்ந்து சந்தர்ப்பவாதமாக ஆட்சி அமைத்தார். மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு தனிமைப் பட்டார். கிருஷ்ணசாமி போன்றவர்களோ, இட ஒதுக்கீடு மறுப்பு, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துமதவெறி ஆதரவு என பாஜக சங்பரிவார குண்டர்களின் அடிவருடிகளாகவே மாறிவிட்டனர்.

எனவே சாதிவாத, பிரதேசவாத குழு நலன்களை முன்வைத்து வாக்குவங்கி அரசியல் நடத்துவதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் உள்ளிட்ட பரந்துபட்ட மக்களிடம் வெறுப்பு தோன்றின. இந்த மாநிலக் கட்சிகள்மீது அதிருப்தி கொண்ட மக்கள் பாஜகவிற்கே வாக்களித்தனர். சாதி சீர்திருத்தம், சமூக நீதி, தலித் நீதி பேசிய இக்கட்சிகள் மறைமுகமாக இந்துத்துவப் பாசிச பாஜக வெற்றி பெறுவதற்கு துணை போயின. இக்கட்சிகளும் சரி, அடையாள அரசியலின் சாதியவாத கூட்டணிகளும்சரி மக்களை ஒன்றுபடுத்தவோ பாசிசத்தை எதிர்த்து முறியடிக்கவோ எந்நாளும் பயன்படாது. உ.பி., பீகாரில் இக்கட்சிகளின் தோல்விதான் 2014 தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியால் 2014 தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே மோடியின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி என்ற தோற்றம் துவக்கத்திலேயே உருவாகிவிட்டதற்கான காரணம் காங்கிரசின் முந்தைய பத்தாண்டு கால ஆட்சியின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வியும், பாசிச நடவடிக்கைகளுமே ஆகும்.

இடது, வலது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்துத்துவப் பாசிச பாஜக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று கூறி பாசிச காங்கிரஸ் கும்பலுக்கு ஆதரவளித்தன. இதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவு - புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்தும் மன்மோகன் கும்பலுக்கு ஆதரவளித்தன.

2014 தேர்தல்களில் ஒருபுறம் காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்து மூன்றாவது அணி என்று பேசிக்கொண்டே மறுபுறம் காங்கிரசுக்கு ஆதரவு என்ற அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைபாட்டை மக்கள் ஏற்கவில்லை.

இந்த திருத்தல்வாதக் கட்சிகளும், புதிய தாராளவாதக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகள் என்பதால்தான் மோடியின் 'வளர்ச்சி' என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை இவர்களால் பெறவும் முடியவில்லை.

மேலும் இக்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் "முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை" தீவிரமாகச் செயல்படுத்தின. மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை வெட்டுதல், ஐ.டி. மற்றும் அது சார்ந்த துறைகளில் வேலை நிறுத்தத்தை தடைசெய்தல், சிங்கூர்-நந்திகிராம் மக்களுக்கு எதிராக போலீசையும் ரவுடிகளையும் ஏவி அடக்குமுறை தொடுத்து நில பறிப்பில் ஈடுபட்டது போன்ற எண்ணற்ற துரோகங்களை திருத்தல்வாதிகள் செய்தனர். இக்கட்சிகள் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவத்துடன் சமரசம் என்ற திருத்தல்வாதக் கொள்கைகளையே அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளன. ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான கட்சி என்ற தன்மையை இக்கட்சிகள் இழந்துவிட்டன. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அடித்தளத்தை இழந்துவிட்டன. எனவேதான் இக்கட்சிகள் வெறும் ஒற்றை இலக்கத்தில் சுருங்கிவிட்டன.

பாபர் மசூதியை இடிப்பதற்கு கரசேவகர்களை அனுப்ப தயார் என அறிவித்த இந்து மதவெறி பாசிச சக்தியான ஜெயாவின் அஇஅதிமுக இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலின் தமிழக கிளையாக - மோடி கும்பலின் அடிவருடியாக மாறி நிற்கிறது. "தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் வாஜ்பாய்" என்று 'பகுத்தறிவு' பேசி பாஜகவை தோளில் சுமந்து தமிழகத்தில் காலூன்ற அனுமதித்தது கருணாநிதி-ஸ்டாலின் கும்பல். திமுக, அதிமுக, மதிமுக போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் காங்கிரசு மற்றும் பாஜகவுடன் மாறிமாறி கூட்டணி வைத்து பேரம் பேசிய கட்சிகள்தான். இவ்விரு பாசிசக் கட்சிகளின் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்து தமிழகத்தில் அமல்படுத்திய கட்சிகளே. இந்துத்துவப் பாசிசம் மற்றும் பெருந் தேசிய வெறி பாசிசத்திற்கு தொங்கு சதைகளாக மாறிப்போன கட்சிகளே.

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா போன்ற வெற்று வாய்ச்சவடால்கள் மூலம் ஆட்சிக்கு வந்தது மோடி கும்பல். ஆட்சிக்கு வந்தது முதல் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வக்கற்றுபோய் அவற்றை மூடி மறைக்க இந்துத்துவப் பாசிசத்தை அரங்கேற்ற துவங்கியது. சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மற்றும் பாஜகவினரின் தாக்குதல்கள், மதக்கலவரங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதக்கலவரங்களை நடத்தி முடித்துள்ளன. நாடெங்கும் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். சங்பரிவார குண்டர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மத வெறியை விஷம் போல கக்கி வருகின்றனர்.

அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிக்கும், போர்வெறிக்கும், ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பல் சேவை செய்து வருவதென்பது, கடந்த மோடி ஆட்சியிலேயே தீவிரம்பெறத் துவங்கிவிட்டது. அது குறித்து காண்போம்.

மோடி ஆட்சி,

1)            அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வது,

2)            புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவது,

3)            இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைத்து இந்திய அரசை பாசிச மயமாக்குவது, ஆகிய மூன்று பேரபாயத்தில் நாட்டை நிறுத்த துவங்கியது.

மோடிகும்பல், 2015 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தவெறியன் ஒபாமாவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து, குடைபிடித்ததன் மூலம், தாங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாசானுதாசர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டது. ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது, அமெரிக்கா தனது சரிவடைந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கும், ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் சேவை செய்கின்ற ஒரு நாடாக இந்தியாவை மாற்றுவதிலும்; தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அமெரிக்க முதலாளிகளை மீட்பதற்கு இந்தியாவைத் தனது புதிய காலனிய சுரண்டல் களமாக மாற்றுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் மோடி கும்பல்

அமெரிக்க ஏகாதிபத்தியம், சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு, தனக்குப் போட்டியாக எழுந்துவரும் சீனாவைக் கட்டுப்படுத்தி ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு மோடி கும்பலைப் பணிய வைத்தது. "தென் சீனக் கடலில் கப்பல்போக்குவரத்திற்கும், விமானங்கள் பறப்பதற்கும் இரண்டு நாடுகளும் சேர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்" என்று கூறிய ஒபாமா - மோடி டெல்லி கூட்டறிக்கை அதை உறுதிப்படுத்தியது. ஆசியாவில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் சேர்த்துக்கொண்டு அமெரிக்காவின் தலைமையில் ஒரு இராணுவக் கூட்டணி அமைப்பதற்கு ஒபாமா இந்தியாவைப் பணியச் செய்தது. இந்தக் கூட்டணியில் இந்தியாவைச் சேர்ப்பதை அமெரிக்கா மிகவும் முக்கியத்துவமாகக் கருதுகிறது. அது ஒபாமா பயணத்தின் மூலம் நிறைவேறியது.

அத்துடன் ஒபாமா தனது டெல்லி பயணத்தின் போது, அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்ற உடன்படிக்கையையும் நிறைவேற்றினார். அதன்படி, இரண்டு இராணுவங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் கடற் படைகளின் கூட்டுப் பயிற்சிகள் மூலம், பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்காக நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்குச் சேவை செய்கின்ற ஒரு எடுபிடி நாடாக இந்தியா தொடர்ந்து செயல்படுவதற்கு உத்தரவாதப் படுத்தினார். அத்துடன் இவ்வொப்பந்தத்தின்படி அமெரிக்காவிடமிருந்து பல இலட்சம் கோடி ரூபாய்களுக்கு ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கும், இரண்டு நாடுகளும் சேர்ந்து கூட்டாகப் பாதுகாப்பு சாதன உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் உடன்பாடு ஏற்பட்டது. இதன் மூலம் மோடி கும்பல் அமெரிக்காவின் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளுக்கு இந்தியாவின் பெரும் சந்தையைத் திறந்துவிட்டதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

மேலும் 2007 முதல் 2015 வரை, எட்டு ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் நிலவிய முட்டுக்கட்டைகளை நீக்கி செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டதாக மோடி கும்பல் பெருமை அடித்துக் கொண்டது. ஆனால் அமெரிக்கா வழங்கும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்தியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. இந்திய அணு உலை விபத்து சட்டத்துக்கு மாறாக, அமெரிக்கா அமைக்கும் ஒவ்வொரு அணு உலைக்கும் ரூ. 1500 கோடி நட்ட ஈட்டை இந்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்வது என்றும்; விபத்து நடந்தால் அதற்கு அமெரிக்க முதலாளிகளைப் பொறுப்பாக்கி எந்த விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்ற நிபந்தனை அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய ஒரு துரோக ஒப்பந்தம் இந்திய மக்களின் உயிர்ப்பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதோடு, சோதிக்கப்படாத அமெரிக்காவின் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கும் வழிவகுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டின் அணுசக்தித் துறையின் மீது அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிறுவுவது மட்டுமல்ல, இந்திய நாட்டின் "சுயேச்சையான" வெளியுறவுக் கொள்கைகளைக் கைவிட்டு, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் ரீதியான நிபந்தனைகளையும் உள்ளடக்கியதாகும்.

இவ்வாறு மோடிகும்பல் அமெரிக்காவின் ஆணைகளுக்கு அடிபணிந்து அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு இணங்கிப்போவது; அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வது என்ற முடிவுகளை அமல்படுத்த துவங்கியது. தற்போது இத்திட்டம் இந்தியாவை கேந்திரமாக மாற்றும் வகையில் இந்தோ-பசிபிக் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்திரா ஆட்சியில் அணிசேராக் கொள்கை கைவிடும் போக்கு துவங்கியது. மன்மோகன் ஆட்சியில் இந்திய அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களின் மூலம் நாடு அமெரிக்காவின் தேர்க்காலில் பூட்டப்பட்டது. மோடி ஆட்சியில் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் மூலம் அணிசேராக் கொள்கை முற்றிலும் கைவிடப்பட்டு இந்தியா அமெரிக்காவின் முழு புதிய காலனிய நாடாக மாற்றப்பட்டுள்ளது. தென் ஆசியாவிலும், ஆசியாவிலும் இந்தியாவின் அண்டை நாடுகளோடு பகைமைகளுக்கும், போர்களுக்கும் வழிவகுத்தது. ஆசியாவில் போர்மேகம் சூழ்கின்ற வகையிலான அமெரிக்காவின் சதிக்குத் துணைபோகத் துவங்கியது. மோடி கும்பல் அமெரிக்காவின் நாடுபிடிக்கும் கெடுபிடிப் போர்களுக்கு இந்தியாவைப் பகடைக்காயாக மாற்றியது. இது இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் செய்யும் ஒரு மாபெரும் துரோகமாகும்.

ஒபாமாவின் இந்தியப் பயணம் ஆசிய மேலாதிக்கத்திற்கான தனது இராணுவக் கூட்டணியில் இந்தியாவை இணைத்தது மட்டுமல்ல, இந்தியாவுடனான அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களின் மூலம் இந்திய நாட்டை அமெரிக்காவின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளதும் ஆகும். இராணுவத்தளவாட உற்பத்தி, அணு சக்தித் துறைகள் மட்டுமல்லாது, புதிய பசுமை மற்றும் பருவநிலை ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான ஒப்பந்தங்கள், அமெரிக்க-இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்துவதாக மோடிகும்பல் அறிவித்தது. அத்துடன் மோடி தனது அமெரிக்க சூறாவளிச் சுற்றுப் பயணத்தின்போது ஒபாமாவுடன் இணைந்து அமெரிக்காவைச் சார்ந்த போயிங், கே.கே.ஆர், பிளாக் ராக், ஐ.பி.எம், ஜெனரல் எலக்ட்ரிக், கோல்டுமேன் சாக்ஸ், கூகுள், பெப்சி, சிட்டிகுரூப், கார்கில், கேட்டர் பில்லர் போன்ற நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பேசினார். இந்தியாவில் முதலீடு செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவ்வாறு அழைப்பு விடுத்ததன் மூலம் மோடிகும்பல் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியக் களமாக மாற்றி வருகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடியும் ஊக வாணிபம் பெருகுதலும்

அந்நிய மூலதன வருகைதான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்று மோடிகும்பல் வாதிடுகிறது. கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடம் கற்க மறுக்கிறது. இன்றையை உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் தொடரும்போது, அந்நிய மூலதனம் குவிந்து நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதாகவும், இந்தியா ஒரு 'இனிப்புப் பிரதேசத்தில்' பிரவேசிப்பதாகவும் மோடிகும்பல் கூறியது. உண்மை நிலை என்ன? இத்தகைய வளர்ச்சியால் பயனடைவது யார்?

2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் பரவி அது ஒரு மந்த நிலையில் தொடர்கிறது. 2015-16க்கான உலகளாவிய ஒட்டு மொத்த உற்பத்தி 3.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. அதில் 0.3 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ஐ.எம்.எப். அறிக்கை கூறியது. வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, இரும்பு எஃகு உள்ளிட்ட முதலாளித்துவ பொருளுற்பத்திக்கு அவசியமான பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்தும் கூட பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை.

மக்களின் வாங்கும் சக்திக் குறைவால் ஏற்பட்டுள்ள மிகை உற்பத்தி நெருக்கடி மீள வழியின்றித் தொடர்கிறது

பொருளாதாரத்தில் மந்த நிலை தொடர்வது, உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதன் விளைவாக ஊக வாணிபமும் சொத்துக்களை ஊதிப்பெருக்கிக் காட்டுவதும் வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை எட்டத்துவங்கியது. ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை முதலீடுகள் போன்ற ஊக வாணிபத்தின் மூலம் நிதி மூலதனக் கும்பல்களின் சொத்துக்கள் பன்மடங்கு பெருகியுள்ளன. இத்துறைகளில் மொத்தச் சொத்துக்குவிப்பு என்பது 2013 மத்தியில் 20.1 டிரில்லியன் டாலர்களாக இருந்தது 2015 நடுப்பகுதி வரையிலான ஒரே ஆண்டில் 263 டிரில்லியன் டாலர்களாக பன்மடங்கு பெருகியுள்ளது. அது போலவே உற்பத்தியில் ஈடுபடும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் சொத்து மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளன. உலக அளவில் முதல் பெரும் 10 கம்பெனிகளின் வருமானம் மற்றும் நிகரலாபமானது 2011-ல் 1. 82 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 98. 32 பில்லியன் டாலர்களாக இருந்தது, 2014-ல் 2. 2 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 141. 04 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

உற்பத்தித் துறைகளைவிட ஊகவாணிபத் துறைகள்தான் பன்மடங்கு பெருகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில் உலக அளவில் உயர்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடம் ஒட்டு மொத்த செல்வத்தின் 50 சதவீதம் குவிந்தது.

உலகப் பொருளாதாரப் படி நிலையில் மேல் நிலையில் உள்ளவர்களின் கைகளில் இவ்வாறு செல்வம் குவிவதற்கான காரணம், இவர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது முறைகளில் ஊகவாணிபத்தின் மூலம், வெளிப்படையாகக் கொள்ளையடிப்பதோடு உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் பரந்துபட்ட மக்களுக்கான சமூக நலத்திட்ட நிதிகள், ஓய்வூதிய நிதிகள் வெட்டு, ஆட்குறைப்பு, ஆலை மூடல்கள், லே-ஆப், கட்டமைப்புத் துறைகளைப் புறக்கணிப்பது போன்ற முறைகளில் கொடூர தாக்குதல்கள் நடத்தி சூறையாடுவதன் மூலம் சொத்துக்களைக் குவிக்கின்றனர். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்ட ஈடு என்றும், ஊக்கத்தொகை என்றும் மக்களின் வரிப்பணத்தை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு, அந்த நிதிகளை பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கு மாறாக பங்குச்சந்தைகளில் போட்டு சூதாட்டம் நடத்துகின்றன. பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பண வர்த்தகம் போன்ற ஊக வாணிபத்துடன் மாபெரும் ஊழல்களும் சேர்ந்து கொண்டு நிதி மூலதனக் கும்பல்கள் தங்களது "ஆக்டோபஸ் கரங்களைப்" பரப்பி மக்களின் செல்வங்களை உறிஞ்சுகின்றன.

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால் பங்குசந்தை, ரியல் எஸ்டேட் போன்ற ஊகவாணிபத் துறைகள்தான் வளர்ச்சியடைந்துள்ளன. இதனால் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. இந்த வளர்ச்சி நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்படவில்லை. அந்நிய மூலதனம் பில்லியன் டாலர்களாகவும் டிரில்லியன் டாலர்களாகவும் குவிந்தாலும், அது தேசிய வருமானத்திலோ அல்லது வேலை வாய்ப்பிலோ (1947க்குப் பிந்தைய வளர்ச்சியோடு ஒப்பிடுகையில்) வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை. இதுநாள்வரை இந்தியாவில் அந்நிய முதலீடு ரூ. 47.6 லட்சம் கோடிகளாக இருந்தபோதும், தேசிய வருமானத்தில் கார்ப்பரேட்டுகளின் பங்கு வெறும் 15 சதவீதமாகத்தான் உள்ளது. இந்த அளவுக்கு மூலதனம் குவிந்தபோதும் 20 ஆண்டுகளில் வெறும் 20 லட்சம் பேர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் இத்தகைய வளர்ச்சியால் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள்தான் பெருமளவில் பயனடைந்தன. அவைகளின் சொத்து பன்மடங்கு பெருகின. பங்குச் சந்தையில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் அவர்களின் சொத்துமதிப்பு ரூ. 96 லட்சம் கோடிகளாக உயர்ந்தன. மத்திய புள்ளியியல் அமைப்பின் ஆய்வின்படி 2004-2005 முதல் 2010-2011 வரையில் ரியல் எஸ்டேட் துறை மட்டும் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்துவிட்டதன் விளைவாக அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு எதிரான உள்நாட்டுப் போட்டியாளர்களை அகற்றிவிட்டு இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இவ்வாறு இந்தியாவின் சொத்துக் களையும் நிறுவனங்களையும் கைப்பற்றுவது மென்மேலும் தொடர்கின்றது.

இதன் நேரடியான விளைவாகத்தான் நிதி மூலதனக் கும்பல்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் கருப்புப் பணம் குவிகின்றது. உலக கோடீஸ்வர நிறுவனங்கள் வரி ஏய்ப்பின் மூலம் கருப்புப் பணத்தை பதுக்கிவைத்தல் என்பது 2005இல் 11.5 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, 2013இல் 32 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது. (இந்தியாவில் நோக்கியா, வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு மூலம் பல்லாயிரக் கணக்கான கோடிகளைச் சுருட்டியதை உலகமே அறியும். ) இத்தகைய கருப்புப் பணங்களை பதுக்கி வைப்பதில் கிளாரிடன் போன்ற ஸ்விஸ் வங்கிகள் மட்டும் ஈடுபடவில்லை. ஜே.பி. மார்கன், டட்சு பேங்க், யு.பி.எஸ், ஏ.பி.என், அம்ரா போன்ற புகழ்பெற்ற வங்கிகளும் வரி ஏய்ப்பின் மூலம் சுருட்டப்பட்ட கருப்புப் பணங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன.

சர்வதேச நிதி மூலதனக் கும்பல்களும், கார்ப்பரேட்டுகளும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தைகளில் ஈடுபடுவதன் மூலம் ஊகவாணிபத்தில் ஈடுபடுவது அதிகரிக்க துவங்கியது. இத்தகைய முறைகள் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. மேலும் மூன்றாம் உலக நாடுகளை இத்தகைய ஊகவாணிபத்தின் மூலம் சுரண்டுவதோடு இந்நாடுகளின் செல்வங்களையும் மூலப்பொருட்களையும் சட்ட விரோதமாக ஆதித்திரட்சி வடிவில் சுரண்டுவதும் அதிகரிக்கின்றன. தற்போது ஊக வாணிபத்தால் உருவான நீர்க்குமிழிப் பொருளாதாரம் வெடித்துச் சிதறிவிடும் பேரபாயத்தை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் மந்தநிலை தொடர்வதும், ஊக வாணிபம் செழித்து வளர்வதுமான இன்றைய உலகச் சூழலில் வளர்ச்சி பற்றி ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களான ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற அமைப்புகளே நம்பிக்கை இழந்து விட்டன. ஏகாதிபத்திய நிதிமூலதனம் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சியைக் கொண்டுவரும் திறன் உடையது என்பதில் இவ்வமைப்புகள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. "அந்நிய நிதிநிலைமை மோசமாகிவரும் இன்றைய சூழலில், நிதி முதலீடுகள் சுருங்கிப்போன சவால் நிறைந்த இன்றைய சூழலில், உள்நாட்டைச் சார்ந்துதான் உற்பத்தியையும், போட்டியிடும் திறனையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்" என்று உலகவங்கியே கருத்துத் தெரிவித்தது.

இத்தகைய ஒரு சூழலில்தான் அதாவது ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி தொடர்வது; பன்னாட்டு நிதி நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும் ஊகவாணிபம் மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய முறைகளில் நாடுகளை சூறையாடுவது தீவிரமடைந்துவரும் சூழலில்தான் மோடி கும்பல் வளர்ச்சி என்றபேரில் அந்நிய மூலதனத்தின் வேட்டைக்கு இந்திய நாட்டை முழுமையாக திறந்துவிட துவங்கியது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகிறது. அந்நிய மூலதனம் என்ற மாயமானைத் தேடிப் பயணம் போகிறது.

அமெரிக்காவின் புதிய காலனிய களமாக இந்தியா

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த புதியதாராளக் கொள்கைகளை வெறித்தனமாக அமல்படுத்த துவங்கியது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மன்மோகன் தலைமையிலான ஐ. மு. கூட்டணி அரசாங்கத்தின் "கொள்கை முடக்கமே" காரணம் என்று கூறி அந்நிய மூலதனத்திற்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்சத் தடைகளையும் அகற்றியது. வீழ்ச்சியடைந்துள்ள உற்பத்தித் துறையை மீட்க வேண்டுமானால் கட்டமைப்புத் துறையில் ஆண்டிற்கு 1 டிரில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துச் செயல்பட்டது.

சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உலகின் உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவது எனும் பேரில் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவது என்று கூறி, "இந்தியாவில் உற்பத்தி செய்க" (விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ) என்ற திட்டத்தைத் துவங்கியது. அந்நிய மூலதனத்தைக் கவர்வது என்ற பேரில் மலிவான கூலி உழைப்பு, மூலப் பொருட்கள் என ஏராளமான சலுகைகளை வாரிவழங்கியது.

மலிவான கூலி உழைப்பு

அந்நிய மூலதனத்தைக் கவர்வது என்ற பேரில் மோடி கும்பல் தொழிலாளர்களின் உழைப்பைப் பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகள் மலிவான விலைக்கு கொள்ளையடிப்பதற்கு வசதியாக சட்டங்களைத் திருத்தியது. 1948 தொழிற்சாலை சட்டங்கள், 1961 தொழில் பழகுநர் சட்டங்கள், பெண்களை இரவுப் பணியில் அமர்த்துவதற்கான சட்டத் திருத்தங்கள், ஓவர்டைம் சட்டங்களைத் திருத்துவது மற்றும் காண்டிராக்ட் சட்டத்தைத் திணிப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தது. மேலும் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலேயே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் உரிமை 100 பேர் கொண்ட தொழிற்சாலைக்கு மட்டுமே என்றிருந்ததை 300 தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் என்று சட்டத்தைத் திருத்தியுள்ளது. இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளையும், பேரம் பேசும் உரிமைகளையும் பறிப்பது, நிரந்தர வேலையைப் பறித்து காண்டிராக்ட் வேலை முறையை நிரந்தரமாக்குவதன் மூலம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றியது. தொழிலாளர்களை 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலச் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு இந்திய தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மலிவான விலைக்கு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் ஒட்டச் சுரண்டு வதற்கும், தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவும் மோடி கும்பல் சட்டம் போட்டு வெளிப்படையாகக் கங்காணி வேலை செய்கிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுக்களைக் கவர்ந்திழுப்பது என்று கூறி மூலப் பொருட்களையும், கனிம வளங்களையும், நிலங்களையும், மலிவான விலையில் கைப்பற்றுவதற்கு வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும், சுற்றுச்சூழல் சட்டங்களையும் திருத்தியது மோடி கும்பல். மோடி கும்பல் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம், ஆங்கிலேயர்களின் காலனிய காலத்தில் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விட (1894) மிகவும் மோசமானதாகும். அது நிலத்தின் மீது விவசாயிகளுக்கு உள்ள உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

வளர்ச்சி என்ற பேரில் மோடி கும்பல் கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயிகளின் விளை நிலங்களை மலிவான விலைக்கு அபகரித்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தவும், நவீன நகரங்கள் உருவாக்குவதற்கும் பல இலட்சம் கோடிகளைக் கொள்ளையடிக்கவும் பயன்படும். இச்சட்டத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கும். பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் நிலப் பசியுடன் அலைகின்றன. அவர்களுக்கு நிலத்தை பிடுங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலையை மத்திய மோடிகும்பலின் ஆட்சி செய்கிறது. இதன் விளைவாகப் பல இலட்சம் விவசாயிகள் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவர்.

தீவிரப்படுத்தப்படும் தனியார்மயம்

வங்கிகள், காப்பீடு, பாதுகாப்புத்துறை போன்ற துறைகளில் கூடுதலாக 49 சதவீதம் அந்நிய முதலீட்டிற்குத் திறந்து விட்டுள்ளதோடு பாதுகாப்புத் துறையையும் தனியார் மயமாக்கியது. சுரங்கம் மற்றும் கனிம வளங்களை மலிவான விலைக்கு ஏலமிட்டு பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்தது. 64 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திட்டக்கமிஷனைக் கலைத்து திட்ட மிடுதலையே தனியார்வசம் ஒப்படைத்தது. 2015-2016 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இரயில்வே, விமானநிலையங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கியதுடன் நாட்டின் 11 துறைமுகங்களைக் கார்ப்பரேட் மயமாக்கியது. அவைகளை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்தது.

பாதுகாப்புத்துறையில் அமெரிக்க ஊடுருவல்

பாதுகாப்புத்துறையில் அமெரிக்காவில் திவாலாகி வருகின்ற இராணுவத்தளவாட உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அனுமதிப்பதுடன் காலாவதியாகிப்போன அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கான ஒப்பந்தங்களையும் ஒபாமா வருகையின் போது மோடி அரசு செய்தது. இதன்மூலம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு பெரும் சந்தையை உருவாக்கிக் கொடுத்தது.

ஒபாமா வருகையின்போது ரூ. 20,000 கோடிக்கு ஏவுகணைகள், இராணுவ ஹெலிக்காப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்துடன் உலகிலேயே இந்தியா அதிகமாக இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாகத் திகழ்கிறது. 2015-16ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 3. 1 லட்சம் கோடியை மோடி ஆட்சி ஒதுக்கியது. இதில் ரூ. 94,588 கோடி முதலீட்டுச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கன்சி, கே.பி.எம்.ஜி, பூஸ்டன் கன்சல்டேஷன், பிரைஸ் வெஸ்டிங் ஹவுஸ் கூப்பர் போன்ற நிறுவனங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த டாட்டா, எல்&டி, ரிலையன்ஸ், மஹிந்த்ரா, பாரத் போர்ஜ் போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கார்ப்பரேட்டுகளும் இணைந்து இராணுவத் தளவாட உற்பத்தியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இறங்கி வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங் ஹவுஸ், ஜி.இ. போன்ற அணு மின் உற்பத்தி நிறுவனங்கள் குஜராத்தில் மிதிவிர்தியிலும், ஆந்திராவிலும், கோவாவிலும் மொத்தம் 6 உலைகளை அமைக்கவுள்ளன. இத்திட்டங்களின் மதிப்பு மட்டும் 3 லட்சம் கோடியாகும். இவ்வாறு மோடிகும்பல் அமெரிக்காவின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றி வருகிறது.

இன்சூரன்ஸ் துறையைப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து சீரழிக்கும் மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா, சுரங்கங்களை மலிவான விலைக்கு கார்ப்ரேட்டு களுக்கு தாரைவார்க்கும் மசோதா போன்றவற்றை அவசரச் சட்டத்தின் மூலம் ஏதேச்சதிகாரமாக அமல்படுத்தியது. சாம, பேத, தான, தண்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் காப்பீடு, சுரங்கச் சட்டங்களை நிறைவேற்றியது.

சாலை போக்குவரத்திலும் அந்நிய ஆதிக்கம்

மோடி அரசாங்கம் சாலை விபத்துக்களைக் குறைப்பது என்ற பேரில் புதிய மோட்டார்வாகனச் சட்டத்தைக் கொண்டுவந்தது. பொதுப் போக்குவரத்தை முற்றிலும் தனியார்மயமாக்கி பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடும், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

போக்குவரத்து சம்பந்தமான சட்டங்களை இயற்றுவது, பேருந்துகளுக்கு பெர்மிட்டுகள் வழங்குவது, வரிவசூல் செய்யும் உரிமை போன்ற உரிமைகளை மாநில அரசிடமிருந்து பறித்து மத்திய அரசால் உருவாக்கப்படும் தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசுப் போக்குவரத்தே இருக்கக் கூடாது, அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட வேண்டும், தற்போது தேசியமயமாகியுள்ள பேருந்துப் பெர்மிட்டுகள் அனைத்தும் தேசிய ஆணையத்தின் கைகளுக்குப் போய்விடும். அவர்கள் பெர்மிட்டுகளை சர்வதேச அளவில் டெண்டர் விடுவார்கள். இதன்மூலம் பன்னாட்டு முதலாளிகள் போக்குவரத்துத் துறையை விழுங்குவதற்கு வழிவகுத்துள்ளது.

மோடி கொண்டுவந்த இச்சட்டத்தின்படி ஏற்கனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவர்கள் (இருசக்கர வாகனம் உள்ளிட்டு) மறுபடியும் உரிமம் பெறவேண்டும்; பழகுநர் உரிமம் பெற்றபின் 9 மாதங்கள் கழித்துத்தான் ஓட்டுநர் உரிமம்கோரி விண்ணப்பிக்க முடியும்; ஓட்டுநர் உரிமம் பெற இரண்டு முறை தேர்வு எழுதவேண்டும்; இந்தத்தேர்வுகளை தனியார் நிறுவனங்களே நடத்தும்;அவர்கள்தான் உரிமங்களையும் வழங்குவார்கள். இவ்வாறு மோட்டார் வாகனத் துறை முழுவதும் தனியார்மயமாக்கப்பட்டுவிடும்.

மோட்டார் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமாக இருந்தாலும் அதில் சிறிய, சாதாரணமான பழுது ஏற்பட்டாலும் கூட குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் சர்வீசுக்கு விட வேண்டும். குறிப்பிட்ட அந்தக் கம்பெனியின் உதிரி பாகங்களையே பயன்படுத்தவேண்டும். மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும். விபத்து ஏற்பட்டால் ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். நமது வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானதுதானா என்பதை அதை உருவாக்கிய கம்பெனிதான் தீர்மானிக்கும். இனி மோட்டார் வாகனம் தயாரிக்கும் கம்பெனிகள் வைத்ததுதான் சட்டம். இனி மாநில போக்குவரத்துக் கழகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிவந்த இலவச மற்றும் சலுகைக் கட்டண வசதிகளும், முதியோர், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்துவந்த சலுகைகளெல்லாம் பறிபோய்விடும். இவ்வாறு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் மோடிகும்பல் செயல்படுகிறது.

அறிவுசார் சொத்துரிமை

அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை குறித்த சட்டங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சட்டங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது. ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது "அறிவுசார் சொத்துரிமை குறித்து முடிவெடுப்பதற்கு ஓர் உயர் மட்டக் குழு அமைப்பது என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக" ஒபாமா-மோடி டெல்லி கூட்டறிக்கை அறிவித்தது. இரு நாட்டு முதலாளிகளின் நலன்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தீர்வு காணப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதிகாரப்பூர்வமல்லாத அதிகாரிகளின் கருத்துப்படி இந்தியா உடனடியாக இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டாலும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மூலம் இதற்குத் தீர்வு காணப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி விரைந்து முடிவெடுக்க மோடி அரசாங்கம் தொழிற்துறை மற்றும் கொள்கைகள் வகுக்கும் துறையில் தனிக்குழு அமைக்க ஆணையிட்டுள்ளது.

மோடி கும்பல் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் அமெரிக்க மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. ஆண்டுக்கு ரூ. 90,000 கோடி மதிப்புள்ள இந்திய மருந்துச் சந்தையைக் கைப்பற்ற அமெரிக்கக் கார்ப்பரேட் வல்லூறுகள் காத்திருக்கின்றன. அறிவுசார் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவதால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 300 சதவீதம் உயரும். இதன் விளைவாக ஏழைஎளிய மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் எட்டாக்கனியாக மாறும். இந்திய மக்கள் மட்டுமல்ல ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளிலும். ஐரோப்பாவிலும் வாழுகின்ற கோடானு கோடி மக்கள் இந்தியக் கம்பெனிகள் குறைந்த விலையில் வழங்கும் மருந்துகளை நம்பித்தான் வாழ்கின்றனர். இனி அவர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

வேளாண்மைத் துறையில் தொடரும் துயரம்

2015-16க்கான நிதிநிலை அறிக்கையில் மோடி அரசாங்கம் இராணுவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 10 சதவீதமாக அதிகரித்து ரூ. 2,46,727 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாகக் குறைத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வதற்காகவும், தெற்காசிய மேலாதிக்கத்திற்காகவும், ஈழத்தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவி செய்வதற்கும் இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கி விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தது.

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கான மானியத்தை நேரடியாக வழங்குவது எனும் பேரில் யூரியா மற்றும் பிற உரங்கள், பூச்சி மருந்துகளுக்கான மானியத்தை வெட்டியது. அதனால் இடுபொருட்களின் விலை உயர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 2013ஆம் ஆண்டில் ரூ. 17,778 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2015 ரூ.11,657 கோடியாக குறைக்கப்பட்டது. நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 2014ஆம் ஆண்டு ரூ.1,797 கோடி ஒதுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு வெறும் ரூ. 772 கோடியாகக் குறைக்கப்பட்டது. கங்கையைச் சுத்தப்படுத்தும் இந்துத்துவாத் திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் கோடியை ஒதுக்கிய மோடி கும்பல் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்து விவசாயிகளுக்கு துரோகமிழைத்தது.

ஏற்கனவே இந்திய அரசாங்கம் அமல்படுத்தி வரும் புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகளால் விவசாயத்துறை அழிக்கப்பட்டு வருகிறது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தை மீறி வேளாண்மைக் குழுமமயம் என்ற பேரால் பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் நிலங்கள் குவிக்கப்பட்டு 25 கோடி விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக வறுமையில் உழல்கின்றனர். தாராளமயக் கொள்கைகளின் விளைவாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலையில் வேளாண் விளை பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப்படுகிறது. மறுபுறம் இந்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்களை வெட்டுவதால் இடுபொருட்களின் விலை உயர்ந்து விளைபொருட்களுக்கு விலை குறைந்து சந்தையில் போட்டிபோட முடியாமல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். அத்துடன் நிலம் கையகப்படுத்தலும் சேர்ந்துகொண்டு விவசாயிகள் நிலங்களை இழந்து நாடோடிகளாக மாற்றப்படுகின்றனர். தற்கொலைகளும், பட்டினிச் சாவுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயிகளின் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

அன்று சாஸ்திரி ஆட்சியில் பாகிஸ்தானுடனான போரின் போது "சிப்பாய்கள் வாழ்க! விவசாயிகள் வாழ்க!" (ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!) என்று முழங்கினர். ஆனால் இன்று மோடியின் ஆட்சியில் அமெரிக்க மேலாதிக்கப் போருக்கான சேவைக்கும், அதன் தெற்காசிய விரிவாதிக்க நலன்களுக்காகவும் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விவசாயத்திற்கு நிதியைக் குறைத்து சிப்பாய்கள் வாழ்க! விவசாயிகள் ஒழிக! என்று முழங்குகின்றனர்.

சமூக நலத் திட்டங்களுக்கு மூடு விழா

மோடி கும்பல் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, மக்கள் நலத் திட்டங்களுக்கும் சமூக நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தது. 2015-2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகள் மீதான கார்ப்பரேட் வரியை 30லிருந்து 25 சதவீதமாகக் குறைத்ததன் மூலம் ரூ.8,315 கோடியை வரிச்சலுகையாக வழங்கியது. அத்துடன் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது என்ற பேரில் கார்ப்பரேட்டுகளுக்கு வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி போன்ற வரிச்சலுகைகளும், ஊக்கத் தொகையும் 2005-06 முதல் 2011 வரை காங்கிரஸ் ஆட்சி வழங்கியது மொத்தம் ரூ. 21,25,023 கோடியாகும். அது போலவே பாஜக ஆட்சியும் 2013-14இல் ரூ.5,49,784 கோடியையும், 2014-15இல் ரூ.5,89,285 கோடியையும் வாரி வழங்கியது. கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள் தொடர்கின்றன.

ஆனால் மோடி கும்பல் 2015-2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மறைமுக வரிகளை உயர்த்தியதன் மூலம் மக்கள் மீது ரூ. 23,000 கோடியைச் சுமத்தியது. அத்துடன் சிக்கன நடவடிக்கை என்ற பேரில் மக்களுக்கு வழங்கும் மானியங்களை 20 சதவீதம் வெட்டிவிட்டது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கும், உணவு மானியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. பணவீக்கத்தையும், பாக்கித் தொகையையும் சேர்த்தால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 42,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கியதோ ரூ. 34,000 கோடி மட்டுமே. நிதிக்குறைப்பு மூலம் இத்திட்டத்தை முடக்கியது மோடி ஆட்சி.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களைக் கூடுதலாக துவங்கப் போவதாக கூறிய அருண் ஜெட்லி மொத்தக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 2 சதவீதம் வெட்டியதன் மூலம் ஏழை மக்களுக்கான கல்வி உரிமையிலும் கைவைத்தது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்டத்திற்கு மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 6,000 கோடி குறைக்கப்பட்டது. இதன் விளைவாக சுகாதாரம் சீரழிந்து பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆட்பட்டு மக்கள் மடிந்து போவார்கள். 2015-2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டதால் தாய், சேய் நலன்கள் பாதிக்கப்படுவதோடு தாய், சேய் மரணங்கள் அதிகரிக்கும்.

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி ஒதுக்கீடு மொத்தம் ரூ. 17,000 கோடி குறைக்கப்பட்டது. இதன் மூலம் தனது மனுதர்ம நீதியை மோடி கும்பல் நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே இதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இந்த நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு என்பது அம்மக்களின் வாழ்வுரிமையைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

ஆதார் அட்டையின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் பல்வேறு மானியங்களையும், உதவிகளையும் நேரடியாக வழங்குவதாக அறிவித்தது. நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பண்டங்கள் வழங்குவதையும் இனி பணமாகக் கொடுத்துவிடுவது என்று முடிவெடுத்தது மோடி ஆட்சி. இதன் மூலம் நியாய விலைக் கடைகளையும், இந்திய உணவுக் கழகத்தையும் கலைத்துவிடுவது என்று முடிவெடுத்தது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர மறுப்பது மட்டுமல்ல இருக்கும் கட்டமைப்பையும் தகர்ப்பது என்று மோடி கும்பல் செயல்பட்டு வருகிறது. மேலும் ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் மானியங்களைக் கூட நீண்ட நாளைக்கு வழங்க முடியாது என்றும் அதை படிப்படியாக நிறுத்திவிடுவோம் எனவும் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளிப்படையாகவே அறிவித்தார்.

மோடி கும்பலின் ஆட்சி "வளர்ச்சி என்ற பேரில்" நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது; ஆண்டுக்குப் பல லட்சம் கோடிகள் வரிச் சலுகைகளை அவர்களுக்கு வாரிவழங்குவது; தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து மலிவான கூலி உழைப்பைக் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகச் சட்டங்களைத் திருத்துவது; வேளாண்மைத் துறையைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது ஆகியவை மூலமும் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியக் களமாக மாற்றி வருகிறது.

மறுபுறம் நாட்டின் "நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பேரில்" மக்கள் நலத் திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்து அவற்றுக்குப் படிப்படியாக மூடுவிழா நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகிறது. இரயில் கட்டண உயர்வு, எரிவாயு உருளை விலை உயர்வு, வரிச் சுமைகளை சுமத்துவது ஆகியவற்றின் மூலம் மக்களின் மீது பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்தி வருகிறது. அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய அனைத்திலும் தனியார்மயம், வணிகமயமாக்குவதைத் தீவிரப்படுத்தி வருகிறது. மொத்தத்தில் "சமூக நல அரசு" என்ற கோட்பாட்டை ஒழித்து விட்டு அதனிடத்தில் "சந்தை நலஅரசு" என்ற கோட்பாட்டைச் செயல்படுத்தி வருகிறது.

வரிச்சலுகைகள், கட்டமைப்பு வசதிகள், பொதுத் துறைகளைத் தாரைவார்த்தல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தல் ஆகியவற்றின் மூலம் மோடி கும்பல் இந்திய நாட்டை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் "இனிப்புப் பிரதேசமாக" மாற்றி வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும், சலுகைகளையும் பறித்து இந்திய நாட்டை பெரும்பான்மை மக்களின் "சுடுகாடாக" மாற்றி வருகிறது.

மோடி கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளால் அவர் மீது ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் குறுகிய காலத்திலேயே உடைந்து நொறுங்கிவிட்டது.

மோடி கும்பலின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்களின் போராட்டங்கள் பரவி வருகிறது. டெல்லி சட்ட சபைத் தேர்தலில் மோடி கும்பலை மக்கள் படுதோல்வி அடையச் செய்தது அதன் ஒரு பகுதிதான்.

மோடி கும்பல் மக்களின் இத்தகைய எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தவும் இந்துத்துவப் பாசிசத்தை திட்ட மிட்டுக் கட்டியமைக்கிறது. இந்திய அரசைப் பாசிச மயமாக்கி வருகிறது.

இந்துத்துவப் பாசிசம்

மோடி கும்பல் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே ஆர். எஸ். எஸ். பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு தங்களது இந்துத்துவாத் திட்டங்களை அமல்படுத்தத் துவங்கிவிட்டன. அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களே சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக விஷத்தைக் கக்கத் துவங்கினர்.

-              இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும்.

-              நாட்டில் உள்ள எல்லோரையும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும்.

-              இராமனை ஏற்காதவர்கள் அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள்.

-              நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் இராமர், விஷ்ணு சிலைகளை வைப்போம்.

-              கோட்சேவுக்கு சிலை வைப்பதில் தவறில்லை.

-              பகவத் கீதையை தேசிய, புனித நூலாக அறிவிக்க வேண்டும்.

-              இந்தியும் சமஸ்கிருதமுமே மேன்மையான மொழிகள் என்று கூறி பிறமொழி பேசுபவர்கள் மீது திணிப்பது.

-              "லவ் ஜிகாத்"என்ற பெயரில் இந்துப் பெண்கள் மதம் மாற்றப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது.

-              மராட்டிய மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து, மாட்டுக்கறி உண்ணுவதைத் தடை செய்ததுடன் மீறினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

-              அதை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்துவதற் கான மோடி அரசின் முயற்சி. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இராஜஸ்தான் அரசின் முயற்சி.

மேற்கண்டவாறு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மற்றும் பா.ஜ.க.வினர் தாக்குதல் தொடுத்து மதக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். 2015இல் மட்டும் நாடெங்கிலும் 600 மதக் கலவரங்களை நடத்தி முடித்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, மசூதிகள் என்பவை மதவழிபாட்டுத் தளங்கள் இல்லை அவை வெறும் கட்டிடங்கள்தான், எனவே எந்த நேரத்திலும் அவற்றை இடித்துத் தள்ளலாம் என்று மதக்கலவரத்திற்கான நெருப்பை விசிறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத்தோ இந்தியா இந்துக்களின் நாடுதான்; அதை ஏற்காதவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என மிரட்டல்விடுத்தார். கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள், கம்யூனிஸ்டுகள் அனைவரையும் விரட்டியடித்து தங்களது இந்துராஜ்ஜியக் கனவை நிறைவேற்றிடத் துடிக்கிறார்கள்.

ஆகவே, பாஜக- காங்கிரசின் மற்றும் திமுக அதிமுக வின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நமக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்துவது என்ன? அது காங்கிரசும் பாஜகவும் இந்திய பாசிசத்தின் இரு முகங்கள் என்பதும், தி.மு.க.-அ.தி.மு.க. போன்ற மாநில தரகுவர்க்கக் கட்சிகள் இந்திய பாசிசத்தின் தொங்கு சதைகளாகத் திகழ்கின்றன என்பதுமே ஆகும்.

 (தொடரும்)

இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 5

- சமரன்